மீள்பதிவு புதிய உறுப்பினர்களுக்காக
அவன் வருவானோ.........
“அம்மா போயிட்டு வரேன்”
“ ரேவதி சாயங்காலம் சீக்கிரமா வந்துடுடி ஏழை பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க போனேன் அது இதுன்னு சொல்லாதே“
“என்ன பொண்ணு பாக்க வராங்க அப்படித்தானே !”
அம்மா முறைத்து பார்த்தாள்
“ அப்படி வெறுத்து பேசாதடி.எனக்கு தோணுது இந்த இடம் கண்டிப்பா அமையும்”
போனதடவையும் இதைதானேம்மா சொன்னே என்று கேட்க நினைத்து அம்மாவை நோகடிக்கக்கூடாது என்று அமைதியானாள்
அப்பா பக்கவாதத்தால் படுத்திருக்க, தம்பிக்கு இன்னும் நிலையான வேலை கிடைக்கவில்லை பக்கத்தில் இருந்த பள்ளியில் டீச்சராக வேலைசெய்வதால் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை
சொந்த வீடு வாடகை இல்லை. கேரளா மாநிலத்தில் ஒரு அழகான கிராமத்தில் அவர்களது வீடு அமைந்திருந்தது. அம்மா நான் கல்யாணமாகி போய்விட்டால் நீங்க என்ன பண்ணுவீங்க எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று ரேவதி எத்தனையோ முறை சொல்லிவிட்டாள்.
அம்மா எதாவது சொல்லி இவளது வாயை அடக்கி விடுவாள். பெண்ணை பிடிக்கிறது என்று சொல்லிவிட்டு போனவர்கள் மீண்டும் வருவதில்லை.
அதுவும் நல்லதுக்கு தான் என்று ரேவதி நினைத்துக்கொள்வாள். வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் அக்கா ஒருவனை காதலிச்சுக்கிட்டு இருக்கா எனக்கு வேலைகிடைச்சதும் அவனைத்தான் கல்யாணம்பண்ணிக்குவா அதனால நீங்களே வரன் வேண்டாம்னு சொல்லிடுங்க தயவு செய்து உண்மையை சொல்லிடாதீங்க அப்புறம் அக்காவுக்கு பிரச்சினை வந்துடும் என்று சொல்லி எல்லா வரன்களையும் தட்டி கழித்து வந்தான் முரளி.
குடும்ப பொறுப்பு தன் மீது விழுந்தால் பிடிச்ச வேலைக்கு போகாமல் கிடைச்ச வேலைக்கு போகவேண்டிவருமோ என்று நினைத்தான்.
ரேவதி ஏதோ நினைவில் நடந்து வந்துகொண்டிருக்க, தமிழ்நாட்டிலிருந்து காய்கறி லோடு இறக்கிக் கொண்டிந்தருந்த கண்ணன் மீது மோதி விட்டாள்.
விழப்போன அவளை, ஒருகையால் மூட்டை விழாமல் பார்த்துக்கொண்டே அவளை விழாமல் தாங்கிப்பிடித்துக் கொண்டான். ரேவதியை சிரித்தபடி
பார்த்துக்கொண்டிருந்தான். ரேவதி அவனை அப்போது பார்த்தாள்.
“ பளீர் “ என்று வெண்மையாக இருந்தான். அவனுக்கு கருநீல முண்டா பனியன் அழகாக இருந்தது. முன்பக்கம் நிறைய தலை முடி கொத்தாக சுருள் சுருளாக இருந்தது. அழகான பல்வரிசை வேறு. ஒருகணம் அவனை ரசித்தவள் உடனே வெட்கம் அடைத்து சுதாரித்துக்கொண்டு,
“ சாரி” என்றாள்.
அன்றிரவு கனவில் அவன் வந்து சிரித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ரேவதிக்கு மீண்டும் அவனை பார்க்க மாட்டோமா? யார் அவன் என்ற கேள்வி மேலோங்கி நின்றது . அடுத்தநாள் அந்த வேன் நின்ற கடையில் அவன் இருக்கிறானா என்று கடைக்கண்ணால் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள். அடுத்த வாரமே அவனது தரிசனம் கிடைத்தது. லோடு முடித்து அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான்.
வழக்கம் போல ஓரக்கண்ணால் பார்த்தபோது அவன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. “ குப் “என்று அவளுக்கு வேர்த்தது.
அதே சமயம் அவனை திரும்பிப்பார்க்க ஆசை எழுந்தது. தன் நிலை உணர்ந்து அடக்கிக்கொண்டாள். வெட்கத்தை கொஞ்சம் விட்டுக்கொடுத்து கொஞ்சம் நின்று பார்த்து இருந்தால் என்ன அல்லது கடையில் எதாவது வாங்குவதுபோல அவனை பார்த்திருக்கலாமே என்று எண்ணினாள்.
அவனை பார்த்த சந்தோசம் முகத்தில் இருக்க, அவனை விட்டு செல்ல விருப்பம் இல்லாமல் மெதுவாக நடந்தாள்.
“மேடம்”
மெதுவாக அருகில் வந்து கூப்பிட்டான். அவனைப் போலவே அவனது குரலும் அவளை மயக்கியது.
திரும்பி பார்த்தாள். அவனைப் பார்க்க துடித்தவள் தான் ஆனால் அவனை பார்த்தவள் தலையை குனித்துக்கொண்டாள்.
“ சொல்லுங்க”
“ மேடம் நானும் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். என்னோட மாமா தோட்டத்தில் இருந்து பொழுது போகாம காய் இறக்க வந்தேன். வந்தது நல்லதா போச்சு.உங்களை பார்க்க முடிஞ்சிது. உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. என்னை பிடிச்சிருக்கா ? ஜாதி அது இதுனு பார்க்காம என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கா?
எடுத்த எடுப்பில் கொஞ்சமும் தயங்காமல் நேர் பார்வை பார்த்து அவன் கேட்டது அவளுக்கு அவன் மேல் மதிப்பை கூட்டியது.
“அவசரம் இல்லை அடுத்த வாரம் நான் வரும்போது சொல்லுங்க”
ஏதோ ஒரு மந்திர சக்திக்கு கட்டுப்பட்டவள் போல தலையை ஆட்டி விடை பெற்றாள்.
கொஞ்சதூரம் போனதும் மெதுவாக திரும்பி அவனைப் பார்த்தாள் அவன் இவளை பார்த்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தான்.
வெட்கம் அவளை தின்ன,அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.
தயங்கி ,தயங்கி வீட்டில் சொல்ல அம்மாவும்,அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
“ நீ நல்லா இருந்த போறும்டி எங்களுக்கு முரளி இருக்கான் அவனை அடுத்தமுறை பார்த்தா வீட்டுக்கு கூட்டிட்டு வா“
எங்கே எதிர்பார்களோ என்று நினத்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்றிரவு அவள் தூங்க ரொம்ப நேரம் ஆனது .அவனிடம் தம்பிக்கு வேலை கிடைக்கும் வரை சம்பளம் முழுவதும் வீட்டுக்கு கொடுக்க சம்மதம் வாங்க வேண்டும் என்று நினைத்தவள் அவன் பெயரைக்கூட தெரிந்து கொள்ளவில்லையே என்று வெட்கப்பட்டாள்.
அடுத்த வாரம் கண்ணன் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் பேசி சம்மதம் வாங்கி, அப்பா அம்மாவுடன் முறைப்படி வந்து பெண் கேட்கிறேன் என்று சொல்லிப் போனான்.
கண்ணனுடன் தனியே பேசியபோது வீட்டுக்கு உதவுவது பற்றிச்சொல்ல இனி உன் வீடு என் வீடுன்னு இல்லை நம்மவீடு ரேவதி என்றான்.
முரளி சந்தோஷமா இருப்பது போல காட்டிக்கொண்டாலும் புழுங்கி தவித்தான்.
முரளி கண்ணனை தேடி அவனது மாமாவின் தோட்டத்திற்கு போனான். அங்கே அவனது மாமா மட்டும் இருந்தார். விஷயம் தெரிந்து கொதித்து போனார்.
“என்னோட பொண்ணை கட்டிக்குடுக்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன் வரட்டும் ஒரு முடிவு எடுக்கறேன்“
முரளி மாமாவின் கோபத்தை சாதகமாக்கி கொண்டான்.
'
“தயவு செய்து கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க. அக்கா இறந்திட்டதா நான் செய்யறேன்.கண்ணனை ரெண்டு மூணு மாசம் வரவிடாம அடிச்சு போட்டுடுங்க அது போதும். கல்யாணத்தை நிறுத்திடலாம்.”
கண்ணன் வராதது ரேவதிக்கு ரொம்ப கவலையை தந்தது.நான் போய் பாத்திட்டு வரேன்னு சொன்ன முரளி கண்ணனை காணோம்னு அவங்களும் தேடிகிட்டு இருங்காங்க என்று சொன்னான். இந்த காலம் என்றால் செல்போன் இருக்கு. ரேவதி தம்பியை முழுமையாக நம்பினாள்.
ஒரு மூன்று மாதம் கழித்து கண்ணன் ரேவதி வீட்டைநோக்கி நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து முரளி திடுக்கிட்டான். நல்லவேளை அம்மா கோயிலுக்கு போயிருந்தாள்.
அப்பாவை மிரட்டி வாயில் துணியை கட்டினான். ஒரு ரூமில் போட்டு வெளி கதவை தாழிட்டான். சாமிக்கு போட்டிருந்த மாலையை எடுத்து ரேவதி படத்திற்கு மாட்டினான். கண்ணன் வந்தபோது ரேவதி பள்ளிக்கூடம் சென்றிருந்தாள் .
துக்கம் கேட்க கண்ணன் நேரே வீட்டுக்கு வந்துவிட்டான். முரளியின் நடிப்பை நம்பி விட்டான். அப்பா அம்மா எங்கே என்று கேட்க, அம்மா வெளியூர் போயிட்டாங்க. அப்பாவை பார்க்காதீங்க அவரு அழுது அழுது ரொம்ப முடியாமல் ஆகிவிட்டார் என்று சொல்லி அவன் பஸ் ஏறி செல்லும்வரை கச்சிதமாக நடித்தான்
. அதன் பிறகு கண்ணன் வரவே இல்லை. அப்பாவிடம் ஏதாவது உளறினால் உங்க மூணு பேரையும் கொன்னு போட்டிடுவேன் என்று மிரட்டி வைத்தான்.
ரேவதி திருமணம் பற்றி பேசுவதே இல்லை .கவலையில் பெற்றோர்கள் உருகி, உருகி இறந்துவிட ,முரளிக்கும் வேலை கிடைத்தது. திருமணமும் ஆனது. ரேவதிக்கு செய்த துரோகமோ என்னவோ இரண்டு பெண்குழந்தைகளை பெற்று கொடுத்துவிட்டு முரளியை விட்டு வேறு ஒருவனும் அவன் மனைவி சென்றுவிட, அவமானத்தால் குமைத்தான் முரளி.
பெண்களை ரேவதி வளர்த்து அவனது இரு பெண்களுக்கும் திருமணம் செய்துவைத்தாள்.
குடிக்கு அடிமையான முரளி ஒருமுறை ரேவதியிடம் உண்மையை உளர, அதிர்ந்தாள் ரேவதி. பெண்களுக்கு திருமணம் ஆனதும் எங்கோ போய் விட்டான் முரளி . ஆனால் கண்ணன் என்ன ஆனான் என்று மட்டும் அவுளுக்கு தெரியவில்லை.
அவளது உள் மனது அவன் என்றாவது வந்து அவளைப் பார்ப்பான் என்று நம்பினாள்.
கண்ணன் அவளது வீட்டுக்கு வந்து போனது முதல் தினமும் இரண்டு கிருஷ்ணன் பாதம் வரைந்து வைப்பாள் ரேவதி.
எல்லோரும் என்ன தினமும் க்ரிஷ்ணஜெயந்தியா? என்று கேட்டால் சிரித்துக் கொள்வாள்.
யார் வரவை எதிர் நோக்கி காத்திருக்கிறாள் பாட்டி என்று அவர்களுக்கு என்ன தெரியும்?
ஓணம் அன்று பூ கோலம் வரைந்து மகாபலியை வரவேற்க காத்திருப்பதைப்போல காத்திருந்தாள்.
ஒருநாள் அவள் வழக்கம் போல வாசலில் அமர்ந்திருந்த போது ஒரு இளைஞன் பைக்கில் வந்தான். பைக்கில் இருந்து இறங்கி ரேவதியின் அருகில் வந்து ஹெல்மெட்டை கழற்றினான். அவளைப் பார்த்து சிரித்தான்.
ரேவதி தன் நிலை மறந்தாள். கண்ணன் நேரில் நின்று கொண்டிருந்தான்.
'அவனை அப்படியே ஆரத் தழுவினாள். அவன் தன்னை விடுவித்து கொள்ளவில்லை. அவள் காதலில் தழுவியபோது, மனதிற்குள் அவன் தாய்மையை உணர்ந்தான்.
தனக்குத்தான் வயதாகிவிட்டதே ! கண்ணன் அப்படியேவா இருப்பான்? உள்ளுணர்வு விழித்துக்கொள்ள, “ சட்” என்று விலகினாள் .
அவன் அவளது தலையை தடவி,
“அம்மா நான் கண்ணனோட மகன் அப்பா தன் டைரியில் உங்களைப்பத்தி எழுதி இருந்தார். சரி நீங்க வாழ்த்த வீட்டை பார்க்கணும்னு வந்தேன். நீங்க உயிருடன் இருக்கீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷ பட்டேன். அதுதான் பாக்க வந்தேன்.”
“ அப்பா எப்படி இருக்காரு?”
அவன் கண்கள் கலங்க ரேவதி புரிந்து கொண்டாள்.
“ உன் வாயால எதுவும் சொல்லாதே ! அவர் இருக்கார் என்னை பார்க்க வருவார்னு இத்தனை வருஷம் காத்திருக்கேன்.”
“ அம்மா அவரு முடியாம படுத்திருக்காரு! உங்க காதலை நெனைச்சுத்தான் கண் கலங்கிடிச்சு . நான் பைக்கில் வந்திட்டேன். நாளைக்கு நான் கார் கொண்டு வரேன். அதில் உங்களை கூட்டிட்டு போறேன்.”
விடை பெற்று சென்றான்.
அப்பா இறந்திட்டாங்கனு சொல்ல விரும்பாமல்..
அடுத்தநாள் வழக்கம் போல கிருஷ்ணன் பாதம் வரைந்து ரேவதி வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு இருந்தாள்.
“கண்ணா...... வருவாயா .......
மீரா.... கேட்கிறாள்..........
மன்னன் வரும் பாதை.........
மங்கை பார்க்கிறாள்......
என்ற பாடல் காற்றில் மிதந்து வந்தது
அவன் வருவானோ?



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக