24.1.20-கதையின் பெயர் : தப்பில்லை - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 24 டிசம்பர், 2020

24.1.20-கதையின் பெயர் : தப்பில்லை


சுந்தரம்


தப்பில்லை....

“ கீர்த்தி... நீ ஆபீஸ் போர்த்த இந்த மாலையை உன்னோட ஆபீஸ் கிட்ட இருக்கற பெருமாளுக்கு போட்டுடு “

“ அம்மா  நான் ஏற்கனவே டைம் ஆயிடிச்சுனு பறந்திட்டு இருக்கேன் நீ வேற ....”

“ டேய் ! என்னோட பிராத்தனைடா !”

“ கொண்டா! ஆமாம் பஸ்சில கூட்டம் இருந்தா நான் எங்க வச்சுக்குவேன்?”

“ லஞ்ச் பேக்ல வைச்சுக்கோ “

“ கொண்டா”

பஸ்சில் கூட்டம் கொஞ்சம் கம்மி தான் என்றாலும் மூணாவது ஸ்டாப்பில் ஒருத்தன் ஏறி கீர்த்தி பக்கம் உட்கார்ந்தான்.  உடனே அவன் கூடையில் இருந்து மீன் நாற்றம் குடலைப் பிரட்ட,  எழுந்து கொள்ளலாமா என்று கீர்த்தி நினைத்தான்.  ஒரு மணி நேர பயண தூரத்தை நினைத்து ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்ட,  கண்டக்டர் திட்டினான்.

“ என்னய்யா சின்ன பிள்ளை மாதிரி... தலையை வெளில விட்டுட்டு வரே அறிவில்லை “

நான் ஆஃபிஸில் மேனேஜர் என்று சொல்லலாமா என்று நினைத்தான் . பொறுக்க முடியாமல் கீர்த்தி எழுந்து கொண்டான். மீன் கொண்டு வந்தவன் கூடையை கொஞ்சம் நகர்த்தி கொடுத்தான். நின்றுகொண்டாலும் நாற்றம் மூக்கில் இருந்தது.  கொஞ்சமாக சாமிக்கு வைத்திருந்த பூவில் இருந்து இரண்டு இதழ்கள் பறித்துக் கொண்டு முகர்ந்து பார்த்துக் கொண்டே வந்தான்.

சாமிக்குனு வச்ச பூவில் கொஞ்சம் எடுத்துக் கொண்டோமே இது சரிதானா என்று எண்ண,  கோதை அவள் சூடிய பூவைதானே கடவுளுக்கு படைத்தாள் தப்பில்லை என்று நினைத்துக் கொண்டான்.  கீர்த்தி ஸ்டாப் வந்ததும் இறங்க முற்பட்டபோது,  அவனுக்கு முன்னமே கூடைக்காரன் கீர்த்தியை தள்ளிக்கொண்டு  கூடையுடன் வந்தவன் கஷ்டப்பட்டு கீழே இறங்கினான்.

பஸ் கிளம்பிவிட , கூடைக்காரன்,

“சாமி கொஞ்சம் தலையில் வச்சிவிடு” என்றான். ஐயர் என்று தெரிந்தே நம்மை கிண்டல் பண்ணுகிறானோ என்று நினைத்தான் ஆனால் முகத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.  முடியாது என்று சொல்ல மனம் வராமல்  கூடையை  ஒரு பக்கமாக  தூக்கி  கொடுத்தான் . கையில் ஈரம் ஒட்டியது. மனசு மறுபடியும் கஷ்டப்பட்டது. சாமிக்கு வைத்த பூவை எடுத்துக் கொண்டது.  இப்போது மீன் கூடையின் ஈரம் கையில் பட்டது. கண்ணப்ப நாயனார் ஈசனுக்கு வேட்டையாடிய மாமிசத்தை தானே வைத்தான். அதை ஈசன் ஏற்றுக் கொள்ளவில்லையா?  ஐயோ அது சிவன் ... இது பெருமாள் அல்லவா ?  கடவுள் ஒன்றே என்று மனம் கூறியது.

தன்னை புலம்ப வைத்த அம்மா மேல் கோபம் வந்தது .

அர்ச்சகரிடம் தன்னுடைய மனக் குமுறலை வெளியிட,

“ஒண்ணும் தப்பில்லை.. நானே சின்ன வயசில் வீட்டுக்கு தெரியாம கறி சாப்பிட்டு இருக்கேன்”

மனம் சமாதானமாகி அமைதியாக கடவுளை தரிசித்தான் கீர்த்தி. அவனை சமாதானப்படுத்த தான் சொன்ன பொய்க்கு பெருமாளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் நாராயண சர்மா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages