25.12.20- கதையின் பெயர் : ஊன்றுகோல் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 25 டிசம்பர், 2020

25.12.20- கதையின் பெயர் : ஊன்றுகோல்

 


சுந்தரம்


ஊன்றுகோல்.... சுந்தரம்.R


அப்பா விடாது இருமுவது கேட்கவே, படுத்துக்கொண்டிருந்த ராகவன் எழுந்தான்.


தண்ணீர்  வைத்து இருந்த சொம்பு இடரவே,  சப்தம் கேட்டு பாமா எழுந்தாள்.


“என்னங்க, என்னாச்சு?”


“ ஒண்ணுமில்லை, அப்பாக்கு முடியலை போலிருக்கு. பார்திட்டு வரேன்.”


பாமா மணியை பார்த்தாள். ஐந்தரை ஆகி இருந்தது.


“ அதெல்லாம் ஒண்ணுமில்லை! அவருக்கு அஞ்சுமணிக்கு காப்பி வேணும்-  நான்

படுத்துகிட்டு இருக்கறது பொறுக்கலே”


“அப்படி சொல்லாதே ,நான் போய் என்னானு பார்திட்டுவரேன்.”


“கிழவி போனதுக்கு பதில் கிழவன் போயிருக்கலாம்” 


என எண்ணியபடி திரும்பி

படுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.


‘ என்னப்பா! என்ன வேணும்?


“ ராகவா......... ராத்திரி தலை ரொம்ப சுத்திடிச்சு..... உன்னை கூப்பிடலாம்னுகூட

நெனச்சேன்.”


“ கூப்பிட்டுருக்க வேண்டியதுதானேப்பா!”


“ போடா!  நீயே நேரம் கழிச்சு வந்தாய். உன்னை எதுக்கு தொந்தரவு செய்யணும்?

சுவத்தில சாஞ்சு உட்கார்ந்துவிட்டேன்.  இப்போ பசிக்கிதுன்னு தண்ணி அவசர

அவசரமா குடிச்சப்ப இருமல் வந்திடுச்சு.”


“ அப்பா நான் போய் காபி போட்டு கொண்டு வரேன்”


“ பாமாவுக்கு உடம்புக்கு முடியலையா? ஐஞ்சுமணிக்கு வழக்கமா

எந்திரிச்சிடுவாளேயே!”


பாமாவிற்கு மாமனார் பேசுவது தெளிவாக கேட்டது. 


மருமகள் எழுந்து காபி போடணும். இந்த வயசிலும் கிழத்துக்கு என்ன “திமிர்” என்று நினைத்துக்கொண்டாள்.


“அவளுக்கு தலைவலிக்குதுன்னு சொன்னாப்பா! அவதான் என்னை கூப்பிட்டு பார்திட்டு வரச்சொன்னா!”


“ பாவம் பாமாவுக்கும் எத்தனை வேலை. அவளுக்கும் சூடா காபி கொண்டு கொடு ராகவா”


“சரிப்பா!”


அப்பா காபி ஆற்றியபோது கைகள் நடுங்கின. ராகவன் வாங்கி ஆற்றிக் கொடுத்தான் ..

கோப்பையை ரெண்டுகைகளாலும் பற்றிக்கொண்டு ஆசையுடன் வாங்கி குடித்தார்.


“உன் அம்மா போடும் காபி போல இருக்கு ராகவா !”


ராகவன் எட்டாவது படிக்கும்போதே அம்மா இறந்துவிட, ஆவனுக்கு அப்பாதான் எல்லாம்.  அவ்வப்போது அப்பாவுக்கு சமையலில் உதவிசெய்துவந்ததால், சமையலும் ரொம்ப நன்றாக வந்தது ராகவனுக்கு...


 அப்பாவுக்கு எழுபத்தொன்பது ஆகிவிட்டது. வர வர உடம்புக்கு முடியறதுஇல்லை.  அரவிந்துக்கு இந்த வருடம் பூணல் போட்டுவிடவேண்டும் என்று  நினைத்தான் ராகவன்.


“ என்னடா சொல்றே?


 குழந்தைக்கு ஏழு வயது தானே ஆகிறது!” 


அப்பா கோபப்பட்டார்.


தனது முதுமையை நினைத்து மகன் முடிவெடுத்துள்ளான் என்பதை உணர்ந்தவர் மேற்கொண்டு விவாதம் பண்ண விரும்பாமல்,  சரிடா உன் விருப்பம் என்று  சொன்னார்.


 பாமாவிற்கு துளியும் விருப்பம் இல்லை. அவளும் எவ்வளவோ சொல்லி பார்த்தாள்.

“ ஏங்க அரவிந்துக்கு ஒன்பது வயசுலே போட்டுக்கலாம்.  அக்கா போனவருஷம் நியூஜெர்ஸியிலேர்ந்து வந்துட்டுப்போனா..

இரண்டுவருஷம் கழிச்சுன்னா அவளும் வருவா


“ நாம போட்டோஸ் அனுப்பி கொடுத்திடலாம்”


ராகவன் முடிவு எடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒரே வேகம்.


“ அப்பா வர மார்ச் மாசம் ஆறாம் தேதி பூணூல் போட்டுவிடலாம் என்னப்பா சொல்றீங்க?”


“சரிப்பா”


எல்லா ஏற்பாடுகளும் வேக வேகமாக நடந்தன. சொந்த பந்தங்கள் நிறையபேர் மதுரைல இருந்ததால பத்திரிகை வைக்க,  ராகவன் மட்டும் மதுரை கிளம்பினான்.


“அப்பா போய்ட்டுவரேன்!”


காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் மகனை தொட்டு தூக்கினார்.


நடுங்கும் கரங்களால் மகனின் முகத்தை வருடி, “ போயிட்டுவாப்பா’ என்றார்.


மதுரை போய் சேர்த்ததும் போன் பேசினான். கதை கேட்டபடி குழந்தை

தூங்கினான். சின்ன வயசு ராகவன் போல இருந்தான் அரவிந்த். 


கஞ்சியும்,

மாத்திரைகளும் கொண்டுவந்து கொடுத்த பாமா அரவிந்தை எழுப்பி கூட்டிச்சென்றாள். அவர் மெதுவாக எழுந்து மெல்ல நடந்து கதவு எல்லாம் சாத்தப்பட்டுருக்கிறதா? என்று சரிபார்த்து வந்து படுத்துக்கொண்டார்.


 நடுநிசிவரை தூக்கம் வராமல் தவித்தார். பின்மெதுவாக உறங்கிபோனார்


திடீரென பாமா அலறுவது கேட்டது. தட்டுத்தடுமாறி வந்தார்.


“ என்னம்மா! என்னாச்சு?


பாமா அழுதபடி சொல்ல ஆரம்பித்தாள்.


“அப்பா அவரு ராத்திரி பத்திரிகை வச்சு திரும்பும்போது நேரமாயிடிச்சாம். அதனால வேகமா வண்டியில திரும்பி வந்திருக்காரு. ஒரு திருப்பத்துல வேகமா வந்த லாரி அவர்மேல...... மேற்கொண்டு பேசமுடியாமல் அழுதாள் . பெரியவருக்கு உடம்பு நடுங்கின.

.

“அவன் எப்படி இருக்கான் பாமா?”


“ அவரு! அவரு! போயிட்டார்! “


அரவிந்தை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். விபரம் தெரிந்ததும் அக்கம் பக்கத்தவர்கள் கூடினார்கள். சொந்த பந்தங்கள் மதுரைல இருப்பதால்  அங்கேயே  தகனம் செய்யலாம் என தீர்மானித்து பேசிக்கொண்டார்கள்.


 பாமாவுக்கு அவளது அண்ணண் எல்லா ஏற்பாடும் செய்வதாக தெரிவித்து, அவர்களை உடனேயே கிளம்பி வரச்சொன்னான் . 


 கார் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருவர் துணைக்குவர,  பாமாவும், அரவிந்தும் காரில் ஏறினார்கள். பெரியவர் பிடிவாதமாக வர மறுத்தார்.


“ நான் வரலை! என் குழந்தையை அப்படி பார்க்கற சக்தி எனக்குஇல்லை”

 கதறினார்.


“ஏங்க  அடம் பிடிக்கிறீங்க? நேரமாகுது,வாங்க.”


அவரை கட்டாயப்படுத்தி ஏற்றிவிட்டனர். பாமாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் போலீசில் இருந்ததால் வேலை உடனே நடந்தது. பாமாவிற்கு அப்பா அம்மா இல்லாததால் பெரிய அண்ணண் வீட்டுக்கு அனைவரும் சென்றனர்.


 அழுகையும் பல்வேறு எண்ணங்களுமாக சென்றதால் தலைவலியும் பசியும் வாட்டியது. பாமாவை கண்டதும் சொந்த பந்தங்கள் அனைவரும் கதறி அழுதனர். பாமா சத்தமாக அழ ஆரம்பித்தாள். 


அவளது அண்ணிகளும், தங்கையும் அவளை தேற்றினார்கள். தனித்து விடப்பட்ட பெரியவர் ஒரு ஓரமாக திண்ணையில் அமர்ந்தார். 


“கப” “கப” வென வயிறு பசியால் எரிந்தது. அப்போது ஒரு மாமி வந்து  காபி கொடுத்தார். வேண்டாம் என்று சொல்ல தோன்றவில்லை

வாங்கிக்கொண்டார்.


 வாய் அருகில் கொண்டு போவதற்குள் ஆம்புலன்ஸ் வந்தது.  காபியை ஒரு ஓரமாக வைத்தார். தனக்கு என்று இருந்த ஒரே மகன் போய் விட்டான். தனது உயிர் எதற்கு? என்று நினைத்துக்கொண்டார்.


 மதுரைக்கு செல்ல மகன் கிளம்பியபோது மகனின் முகத்தை வருடியது நினைவுக்கு வந்தது .வீட்டினுள் ராகவன் உடலை வைத்து விட்டு அவர்கள் சென்றுவிட,  மகனின் முகத்தை கொஞ்சமாவது பார்க்க முடியாத என்று தடுமாறி, வீட்டினுள் சென்றார். 


உடம்பின் எந்தப்பகுதியும் தெரிந்துவிடாமல் சுற்றி தந்திருந்தனர்.


அவரை பார்த்த பாமா,


“ எல்லாம் இவரால வந்தது. இவரு போயிடுவாருனு அதுக்குள்ள பூணூல் போட்டு பார்க்கணும்னு அவரு அசைபட்டாரு. ஆனா இப்ப அவரு போயிட்டாரு!

இவர் கல்லாட்டம் இருக்கார்!”


என்று கதற, அவளை சுற்றி உட்கார்ந்து இருந்தவர்களின் பார்வையின் வெப்பம் தாங்கமுடியாமல் வெளியே வந்தார். 


 நெஞ்சு பலமாக வலித்தது. நெஞ்சைப்பிடித்தபடி  திண்ணையில் சாய்ந்தார்.


காபியில் ஒரு  ஈ  விழுந்து இறந்து கிடந்தது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages