03.01.21-போய் வா .....நதி அலையே ..... - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

03.01.21-போய் வா .....நதி அலையே .....


சுந்தரம்


போய் வா .....நதி அலையே .....


“பாட்டி”  என்று கத்தியபடி வீட்டிற்கு  ஓடி வந்த அரவிந்த், வாசலில் பள்ளியிலிருந்து  தன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரைக்  காணாமல்  திடுக்கிட்டான் . அம்மா வந்து கதவை திறந்தார்.


“ வாடா அரவிந்த் “


“அம்மா  பாட்டி  எங்கேம்மா? பாட்டிக்கு முடியாம   மறுபடியும் ஹோச்பிடலில்  இருக்காங்களா?”


“ இல்லடா கண்ணா....”


“பின்னே எங்கம்மா?”


“அவங்க... அவங்க ஊருக்கே  போய்ட்டாங்கடா”


“ பொய் சொல்லாதே...  போன  வாரம் நீயும் அப்பாவும் பேசிகிட்டு இருக்கறதை நான் கேட்டேன்.  அவங்களுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியறது இல்லை. அதனால  அவங்களை  அவங்க  ஊருக்கே  அனுப்பலாம்னு நீ சொன்னப்ப..  அப்பா வேண்டாம்னு தானே சொன்னாரு!  நீ  அப்ப சண்டை போட்டு அப்பாவை சம்மதிக்க வச்சே!”


“ கண்ணா  முதல  நீ  யூனியன்பாரம்  கழட்டி வச்சு கை  கால்  கழுவிட்டு வா...”


“அம்மா பேச்சை  மாத்தாதே”


“ஆமாம்டா...  நான் தான்  சொன்னேன். அவங்க உன்னோட சொந்த பாட்டியா? சமையல்  செஞ்சுகிட்டு இருந்தாங்க.  இப்ப  அவங்களுக்கு முடியலை அதுதான்....” 


“அம்மா இன்னிக்கு கூட அவங்கதாம்மா  எனக்கு  டிபன் செஞ்சு கொடுத்து, கதை சொல்லி, ஊட்டி விட்டாங்க  நீங்க ரெண்டு பேரும்  காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே எனக்குத்தான் தாத்தாவோட பாசமும், பாட்டியோட அரவணைப்பும் இல்லாம போச்சு...  இந்த பாட்டியைத்  தான்  என்னோட பாட்டியா  நினைச்சுகிட்டு இருந்தேன்.”


“ அரவிந்த் இப்படி  எல்லாம் பேசக்கூடாது அடம்  பிடிக்க கூடாது  அவங்க நம்ம வீட்டில பத்து  வருஷமா இருந்தாங்க தான்... எனக்கு உதவியா  இருந்தாங்க.. நீ இப்ப  வளர்ந்திட்டியே.   நாளைக்கு அவங்களுக்கு பெரிய தொந்தரவு வந்தா  காசு செலவு  பண்ணி பாத்துக்க முடியுமா?” சரி வா  இந்த  ஸ்னாக்ஸ் சாப்பிட்டு பால்  குடி”


“ எனக்கு ஒண்ணும்  வேண்டாம் போ” 

 வாசலுக்கு போய் நின்று கொண்டான்.


சமையல் கட்டுக்கு போனவள் இரவுக்கு என்ன பண்ணுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, 


“வாங்க! வாங்க!” என்று அரவிந்த் யாரையோ அழைத்துக் கொண்டிருந்தான்.  யார்? என்று பார்க்க வந்த பத்மா  திடுக்கிட்டாள். சமையல்கார பாட்டி.    அவரை அரவிந்த் கட்டிக்கொண்டு இருந்தான்.  அவரது கையைப் பார்த்தாள்.  அவரது உடைமைகள் இருக்கவில்லை.  


பத்மாவின் பார்வையைப் புரிந்து கொண்டவள்,

“பத்மாம்மா  நீங்க என்னை டிக்கெட் எடுத்து  கொடுத்து பஸ் ஏத்தி  விட்டுடீங்க  பஸ் போக போக என்னால அழுகையை அடக்க முடியல அரவிந்தத்தை பார்க்காம இருக்க முடியாதுனு தெரிஞ்சுது உடனே பஸ்சை  நிறுத்தி  ஆட்டோவில் வந்திட்டேன்  உங்க வீட்டுக்கு வந்தேன் கதவை  தட்டலை  திரும்பி கோயிலே வந்து உட்கார்ந்துக் கிட்டேன்    கடைசி வீட்டில் இருக்கற ருக்கு என்னை   கோவில்ல பார்த்து அவங்க வீட்டு  சமையல் வேலைக்கு கூப்பிட்டாங்க எப்படியும் சாயங்காலம் அரவிந்த் வரும்போது அவன்கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு வந்தேன்”


“ அம்மா என்னை மன்னிச்சிடுங்க!  நீங்க இனி  எங்கையும் போக வேண்டாம்.  உங்களால  என்ன முடியுமோ  அதை செய்யுங்க.  அரவிந்துக்கு  பாட்டியாவும், எனக்கு அம்மாவாகவும் எப்பவும் நீங்க  இங்க  இருங்க”   


அரவிந்த் ஓடி வந்து பத்மாவைக் கட்டிக்  கொண்டான்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages