05.01.21 #மலை_நாட்டு_மங்கை_5 #சுந்தரபாண்டியனின்_இரகசியத்திட்டம் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 5 ஜனவரி, 2021

05.01.21 #மலை_நாட்டு_மங்கை_5 #சுந்தரபாண்டியனின்_இரகசியத்திட்டம்


05.01.21


#மலை_நாட்டு_மங்கை_5


#சுந்தரபாண்டியனின்_இரகசியத்திட்டம்


நெடிய வரலாறு கொண்ட பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் நால்வகை படைகளோடு மன்னனின் மெய்க்காவல் படைப் பிரிவாக முனையெதிர் மோகர் என்றும் தென்னவன் ஆபத்துதவி படை என்றும் ஓர் அமைப்பு செயல்பட்டது.  மன்னரின் மெய்க்காவல் பொறுப்பினை ஏற்று நடத்திய இவர்கள் மிகுந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாய், தனித்த பல அதிகாரங்களோடு விளங்கினார்கள்.  இவர்களுக்கென தனிபட்ட பல அதிகாரங்களையும் பாண்டிய மன்னர்கள் வழங்கியிருந்த காரணத்தால் மன்னரை சந்திக்க விரும்பும் எவரும் இவர்களிடம் முன்னரே அனுமதி பெற்றே சந்திக்க இயலும் என்ற நிலை கூட இருந்திருக்கிறது. எனவே செல்வாக்கு பெற்ற இவர்களைப் பற்றி மார்க்கோபோலாவும், அப்துல்லா வாஸப்பும் தங்களது பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். விழாக்களில் மன்னரைச் சூழ்ந்தபடி அரணாக பாதுகாத்துச் செல்வது மற்றும்  போர்க்காலங்களில் மன்னருக்கு முன் அரணாக நின்று போரிடுவதோடு, மன்னரை அகலாதிருந்து பாதுகாப்பது என மன்னரின் நிழலாகத்  திகழ்பவர்கள் இவர்கள்.


தென்காசிக்கு அருகில் பாகூர் சத்திரிய சிகாமணி நல்லூர் என்று அந்நாளிலும், இந்நாளில் பாவூர், கீழப்பாவூர், மேலப்பாவூர் என்று வழங்கப் படும் நகர்களில் இவர்கள் தங்களுக்கென கோவில், ஏரிகளை வெட்டுவித்து பராமரித்து வந்தார்கள். மன்னரின் மெய்க்காவல் பணி புரிந்தவர்கள் என்பதனால், பாண்டிய மாமன்னர் மாறவர்ம குலசேகர பாண்டியர் மர்மமான முறையில் கொலையானதற்கு தங்களின் அசிரத்தையே காரணமெனக் கருதி வருந்தியவர்களாய்,   தங்களது பணியில் ஏற்பட்ட கவனக் குறைவினால் தான் மன்னரை இழக்க நேரிட்டது எனக் கருதியவர்கள் , குலசேகரரை அடக்கம் செய்த மயான பூமியில் , அக்னியை உருவாக்கி **தென்னவன் ஆபத்துதவிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள். இந்த தகவலை வீரன் ஒருவன் வந்து தெரிவித்ததும் மனம் பதைபதைத்த ஜடாவர்ம சுந்தரபாண்டியரோடு, விக்கிரம பாண்டியரும், தகியுதீன் , வாஸப் ஆகியோரும் அதிர்ச்சியில் உறைந்தவர்களாய், உடனே மயான பூமிக்கு விரைந்தார்கள். ஆனால் இவர்கள் செல்லுமுன் தென்னவன் ஆபத்துதவி வீரர்கள் வீர மரணத்தை தழுவியிருந்தார்கள். அங்கிருந்த மக்களிடையே சுவர்க்கத்திலும் மன்னரை பாதுகாப்பதற்காக தாங்களும் மரித்து உடன் சென்று விட்டார்கள் என்ற பேச்சே எழுந்தது.


               *                      *                      *


மயான பூமியில் இருந்து கலையும் பொழுது தன் கைகளில் திணிக்கப் பட்ட ஓலையினை தன்னிடம் திணித்தது யாரென அறிய முற்பட்ட வீரபாண்டியனுக்கு அங்குத் தோல்வியே கிடைத்தது. ஏனெனில் கலைந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தில் யார் தந்திருக்க முடியும் என முடிவு செய்வது அவ்வளவு  எளிதான காரியமாய் தெரியவில்லை.


ஓலையை குறித்து சிந்தித்தவனாக தான் தங்கியிருந்த மாளிகையை அடைந்தவன்,  பலத்தரப்பட்ட எண்ணங்களினாலும், குழப்பங்களினாலும் சிக்கித் தவித்தான். தனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவன் நமது தேசத்தில் யாராக இருக்க கூடும்..? அதையும் ஒருவன் கண்டறிந்து நம்மை எச்சரித்து ஓலையை  தருகிறான் என்றால் அவன் யார்..? அதையே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு தலைவலி தான் எழுந்தது..!  எனவே நீராடும் எண்ணம் கொண்டவனாய், மாளிகைக் காவலன் இதமான சூட்டில் வைத்திருந்த நீரில் நீராடி வேறு ஆடையை தரித்துக் கொண்டவனாய், தன் சிறிய தந்தையான விக்கிரம பாண்டியரை சந்திக்க விரும்பி அவர் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றான். அவரிடம் கலந்து ஆலோசிக்க எண்ணினான். ஏனெனில் அவனது நலனில் அக்கறை கொண்டவர்களில் அவர் முதன்மையானவர்.


ஆனால் அங்கும் அவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இவனைக் கண்டதும், அவரது மாளிகைக் காவலன்,


" இளவரசே..பாண்டிய மண்டலாதிபதி அவசரமாய் மாலையே வெளியே சென்று விட்டார்..எப்போது திரும்புவார் எனத் தெரியவில்லை." என்றான் .


" சரி..நான் வந்து சென்றதாக அவர் வந்ததும் தெரிவித்து விடு." என்றவனாய் அங்கிருந்து விடைபெற்றான் வீரபாண்டியன்.


வீரபாண்டியன் அங்கிருந்து திரும்பிய அதே வேளையில்..பாண்டியரது அரண்மனையில் சுந்தரபாண்டியன் தனது அறையில்..கோபத்தில் கொந்தளித்தவனாய் எதிரே நின்றிருந்த குலபதியை நோக்கியவனாய் ,


" என்ன சொல்கிறாய்..? தகியுதீன் மாளிகையில் பாண்டிய மண்டலாதிபதிகள் ரகசியக் கூட்டம் நடத்துகிறார்களா..? "


" ஆம்..பிரபு..தங்களது சிறிய தந்தைகள் இருவரும் தகியுதீன் மாளிகைக்குள்  செல்வதை என் கண்களால் கண்டேன்."


" உன் கண்களில் இருந்து அவர்களால் தப்பமுடியுமா..?  சரி..அவர்கள் அங்கு கூடியது எதற்காக என்று அறிந்தாயா..? "


" அது தான் தெரியவில்லை பிரபு..! "


" ம்..எது தேவையோ அதை சரியாக தெரிந்து வைத்திருக்க மாட்டாய்..மாறாக தேவையில்லாதவற்றை எல்லாம் மிகச்சரியாக  அறிந்து வைத்திருப்பாய்.." என்றான் இகழ்ச்சி ததும்பிய குரலில் சுந்தரபாண்டியன்.


" பிரபு..மாளிகைக்குள் அவர்கள் பேசுவதை நான் எப்படி அறிவது..? "


" இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை..நன்கு பேசக் கற்றிருக்கிறாய்..! ஒற்றர்கள் வாயிலாக நீ அறிந்திருக்க வேண்டும்.."


" அறிந்திருப்பேன் பிரபு..ஆனால் துணையமைச்சர் மாளிகையில் காவல் பலமாய் இருந்தது..முறையாக அனுமதி பெற்றவர் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. " 


" அங்கு என்ன பேசியிருப்பார்கள் என்றறிய முயற்சித்தாயா..? "


" பிரபு..அதை செய்யாமல் இருப்பேனா..? பாண்டிய நாட்டின் எதிர்கால மன்னர் எவர் என்று குறித்து விவாதிக்க நடந்த கூட்டமாக இருக்கலாம்.."


" குலபதி..இது உன் அநுமானமா அல்லது கற்பனையா..! "


" என்ன பிரபு...இப்படி கூறிவிட்டீர்கள்..? நானாக எதையும் கற்பனை செய்தெல்லாம் கூறுவதில்லை..!  அங்கு கூடியவர்கள் எதை ஆலோசித்திருப்பார்கள் என்ற எனது அநுமானமே அது..! " என்றான் பரிதாபமாய்.


" விசயங்கள் வெளிவராமல் போகாது..எப்படி இருந்தாலும் பாண்டிய நாட்டின் அரியணைக்கு உரியவன் நான் தான்..எனது தந்தையின் முட்டாள் தனத்தால் வீணாக அவர் தனது உயிரை இழந்தது போல் எனது சிற்றப்பன்களும் எனக்கெதிராக சூழ்ச்சி செய்தால் மண்ணுலகை விட்டு விண்ணுலகு செல்ல வேண்டியது தான்..! " என்றான் குரூரமாய் சிரித்தபடி சுந்தரபாண்டியன்.


" பிரபு..தங்கள் தம்பி...வீரபாண்டியர் அல்லவா இளவரசு பட்டத்துடன் உங்களுக்கு எதிராக..."


" முட்டாளே..நிறுத்து உன் பிதற்றலை..! வீரபாண்டியன் எனது தம்பியல்ல.. அவன் எனது தந்தையின் காதல் கிழத்தியின் மகன்..! பட்ட மகிஷி மகனோடு சமதையாக போட்டியிட அவனுக்கென்ன தகுதி இருக்கிறது..? " என்றான் கோபம் தெறித்த குரலில் சுந்தரபாண்டியன்.


" என்ன இருந்தாலும் , உங்களின் தந்தையாரால் இளவரசுப் பட்டம் சூட்டப் பட்டவரல்லவா..! உங்களுக்கு எதிராக அரியணைப் போட்டிக்கு வீரபாண்டியர் வருவது உறுதி..அவரை நீங்கள் அப்புறப் படுத்தினால் ஒழிய உங்களுக்கான இடம் என்றும் சந்தேகமே..! " என்றான் குலபதி.


" குலபதி..இதை நானும் யோசிக்காமல் இல்லை..அவனை தீர்த்து விடவும் ஏற்பாடு செய்து விட்டேன்..எனக்கெதிராக எவரையும் வரவிடமாட்டேன்..சற்றே அருகில் வா.." என்றவனாய் குலபதியை அருகில் அழைத்து அவனது காதில் இரகசியமாய் சில விசயங்களைச் சொன்னதோடு..


" குலபதி..இன்றிரவு எவரும் அறியாமல் வீரபாண்டியனது மாளிகைக்கு செல்..அவனைச்  சிறைப்பிடித்து நிலவறைச் சிறைச்சாலைக்கு கொண்டு வந்துவிடு." 


" பிரபு..வீரபாண்டியரைச்  சிறைசெய்து நிலவறைச் சிறையில் அடைப்பதை தங்களது சிறிய தந்தையர்கள் அறிந்தால் நிலைமை என்னாவது..? " என்றான் திகிலுடனும், கவலையுடனும்.


" அதைப்பற்றி கவலை கொள்ளாதே..ஆனால் நீயும் உனது ஆட்களும் எவரும் அறியாமல் இதை செய்து முடிக்க வேண்டும்..இது மட்டும் நடந்து விட்டால், அரியணை பாரத்தை சுமக்கப் பயந்தவனாய் வீரபாண்டியன் ஓடி ஒளிந்துவிட்டான் எனக்  கதைகட்டி விடலாம்..கவலை கொள்ளாதே.." என்றவனாய் விஷமத்துடன் நகைத்தான் சுந்தரபாண்டியன்.


ஆனால்..நினைப்பதெல்லாம் நடக்கவா செய்கிறது..! சுந்தரபாண்டியனின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கும் வேறொருச் சூழலை அப்துல்லா வாஸப் ஏற்கனவே உருவாக்கி முடித்துவிட்டான் என்பதை பாவம்..சுந்தரபாண்டியன் அறிந்திருக்கவில்லை.


_ தொடரும்..


** மார்க்கோபோலாவின் பயணக் குறிப்பு  இதனை பதிவு செய்திருக்கிறது.. மேலும் நமது வரலாற்று ஆசிரியர்  நீலகண்ட சாஸ்திரி அவர்களும் அதை உறுதி படுத்துகிறார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages