08.01.21 #மலை_நாட்டு_மங்கை_8 #வாஸப்பின்_மாளிகையில் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 8 ஜனவரி, 2021

08.01.21 #மலை_நாட்டு_மங்கை_8 #வாஸப்பின்_மாளிகையில்

 


08.01.21


#மலை_நாட்டு_மங்கை_8


#வாஸப்பின்_மாளிகையில்


குலபதியிடம் இருந்து இளவரசன் வீரபாண்டியனை மீட்டிய அப்துல்லா வாஸப், அவனது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு மாளிகையின் பின்புற வழியாக வெளியேற, அங்கு தயார் நிலையில் காத்திருந்த மூன்று புரவிகளில் ஏறும்படி பணித்தான் . தன்னைக் காப்பாற்ற வந்தவன் முன்னெச்சரிக்கையுடன் தான் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட வீரபாண்டியன்.


" என்னைக் காப்பாற்ற முனையும் தாங்கள் யாரென்பதை இப்போது நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..! " 


" இளவரசே..தங்களைக் காப்பாற்றுவதிலேயே முனைப்புடன் இருந்த காரணத்தால் சுய அறிமுகம் செய்து கொள்ளவில்லை. மன்னிக்கவும். எனது பெயர் அப்துல்லா வாஸப். ஏனைய விபரங்களை தங்களுக்கு நான் பிறகு தெரிவிக்கிறேன். தற்போது புரவியில் என்னைத் தொடர்ந்து வாருங்கள்." என்றவனாய் பல வீதிகளையும், சிறிய குறுகலான பல பகுதிகளையும் கடந்து அழைத்துச் சென்றவன், இருள் அடர்ந்த  சந்தில் காணப்பட்ட ஒரு இல்லத்தின் மரக்கதவினை மெல்ல மூன்று முறைத் தட்டினான். இவனது அழைப்பினை ஏற்று,  சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட,  திறந்த  கதவுக்கு அப்பால் விரிந்தது பெரிய மைய வெளி. 


" தாங்கள் உள் நுழைந்தது ஒரு பெரிய மாளிகையின் புறக்கடை வழி என்பது புரிந்து போனது வீரபாண்டியனுக்கு..

ஆனால் ஏன் அப்துல்லா வாஸப் முன் வாசல் வழியாக தன்னை அழைத்து வராமல் ,  பின்கட்டு வழியாக அழைத்து வந்திருக்கிறான் என்பது புரியாமல் திகைத்தான் வீரபாண்டியன்.


அதை தெளிவு படுத்திக் கொள்ள, அவனிடமே கேட்கவும் முற்பட்டான்.


" வாஸப்..நான் ஏன் பின்புறமாக இந்த மாளிகைக்குள் நுழைய வேண்டும்."


" இளவரசே..தாங்கள் இங்கு வந்திருப்பதை நான் வெளிச்சம் போட்டு காட்ட விரும்பவில்லை..! " என்று இகழ்ச்சியாக பதிலளித்த வாஸப் ,


கதவினைத் திறந்தவனை , "மூன்று குதிரைகளையும் கொண்டு போய் கொட்டடியில் கட்டிவிடு.." எனக் கட்டளையிட்ட வாஸப்,   "இளவரசே..இந்த ஏழையின் மாளிகைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.." என்றவனாய் , உடன் வந்த  இளம்பெண்ணிடம் திரும்பி, " தங்களையும் தான் " என்றான் பணிவுடன்.


அந்த பெண்ணிடம் பேசும் போது வாஸப்பின் தலை தாழ்ந்ததையும், மரியாதையும் பணிவும் அவனது குரலில் தென்பட்டதையும் கவனிக்க தவறவில்லை வீரபாண்டியன்.


" வாஸப்பின் மரியாதைக்கு உரிய இந்த பெண் , யாராய் இருக்க முடியும்..? என்று மனதிலோடிய எண்ணங்களை , "ம்..இன்னும் சிறிது நேரத்தில் அதுவும் தெரிந்து விடப் போகிறது..அவசரம் கொள்வானேன்..! " என்று மனதில் எண்ணியவனாய் வாஸப்பை பின் தொடர்ந்தான்.


 மைய வெளியைக் கடந்ததும், மற்றொரு கதவு காணப்பட்டது. அதன் வழியாக இருவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற அப்துல்லா வாஸப் ,  பல கட்டுக்களைக் கடந்து ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தான். அது மிகப்பெரிய கூடம் போல் காணப்பட்டது. பல ஆசனங்களும் போடப்பட்டிருந்தன. 

அதன் சுற்றுத் தாழ்வரைகளின் மூலைகளில் எல்லாம் அறைகள் பல காணப்பட்டன. மாளிகையின் அமைப்பும், அங்கிருந்த ஆடம்பரப் பொருட்களையும் கண்ணுற்ற வீரபாண்டியன், வாஸப் வசதியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று எண்ணினான். 


இளவரசனின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்ட வாஸப்பும், " இளவரசே..நீங்கள் நினைப்பது போல, இது எனது மாளிகையல்ல..எனது நண்பருடையது." என்றான் பவ்யமாக.


இளவரசனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, தான் நினைத்ததை உடனே அறிந்து கொண்டு , அவன் பதிலளித்ததைக் கண்டு வியந்தவனாய்..


" வாஸப் மற்றவரது மனங்களை அறியும் கலையை நீ அறிந்து வைத்திருக்கிறாயா.?" 


" இல்லை இளவரசே..தங்களதுப் பார்வை சென்ற விதமே..நீங்கள் மனதில் நினைப்பதைப் புலப்படுத்தி விட்டது..! "


" வாஸப்..நீ உண்மையில் அதி புத்திசாலி.." 


"தங்களது பாராட்டுக்கு நன்றி இளவரசே..அமருங்கள் , இனி பயமில்லை."


" நன்றி.." என்றவனாய் ஆசனமொன்றில் அமர்ந்தவன், " தங்களைப் பற்றிய முழு விபரத்தை இப்போது நான் அறியலாமா..? " என்றான் வீரபாண்டியன்.


" இளவரசே..நான் பாரசீக தேசத்து ஸிராஸ் நகரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியன். பாரத தேசத்தைப் பற்றியும் தமிழக வேந்தர்களைப் பற்றியும் ஆய்வு செய்யவே வந்தேன். ஆனால் நான்  மூலிகை மருத்துவத்தில் சற்றே அனுபவம் வாய்ந்தவன் என்பதனால், சேர நாட்டுப் பயணத்தில் இருந்த பொழுது,  பாண்டிய நாட்டின் துணையமைச்சர் தகியுதீன் மதுரைக்கு வரவழைத்து மாமன்னர் குலசேகர பாண்டியரை குணப்படுத்த வேண்டுகோள் விடுத்தார். நானும் மன்னரை குணப்படுத்தும் பாக்கியம் பெற்றேன். இதற்கிடையில் மன்னரது நோயானது இயற்கையாய் உருவானதல்ல என்றும், அது வஞ்சகத்தால் செயற்கையாக உருவாக்கப் பட்டது என்றும் அறிந்தேன்.அது மட்டுமின்றி நோயை உருவாக்கிய காரணகர்த்தா யாரென்பதையும் கண்டு கொண்டேன். அதனாலேயே பல இன்னல்களுக்கும் ஆளானேன்.  மன்னருக்கு நோயினை உண்டாக்கியவனால்,  மன்னரது உயிருக்கும் ஆபத்தென்பதையும் அறிந்தேன்.." சொல்லிக் கொண்டு போன வாஸப்பினை இடையில் தேக்கி நிறுத்தியது வீரபாண்டியனின் குரல்.


" மன்னரது நோய் செயற்கையாய் உருவாக்கப் பட்ட ஒன்றா..உருவாக்கியதோடு, அவரைக் கொல்லவும் துணிந்த பாதகன் யார்..? "


" சொன்னால் அதிர்ச்சியடைய மாட்டீர்களே..! அவன் வேறு யாருமல்ல..தங்களது சகோதரன் சுந்தரபாண்டியன்."


" என்ன..அண்ணனா..! "


" ஆம்..தங்களது தந்தையாரைக் கொன்றதும் அவரே தான்..அது மட்டுமின்றி தங்களைக்  கொல்ல முயற்சிப்பதும் அவரே.."


" ஒன்று புரிகிறது. மயான பூமியில் என்னை எச்சரிக்கை செய்தது நீங்களாகத் தான் இருக்க வேண்டும் என என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனால் என்னைக் கொல்வதால்  

எனது அண்ணனுக்கு என்ன இலாபம் வந்து விடப் போகிறது..? "


" போட்டியில்லாத அரியணையில் அவர் அமரலாம் அல்லவா..! தற்போது தாங்கள் தானே இளவரசு பட்டத்தோடு அடுத்த மன்னருக்கான எதிர்பார்ப்பில் இருக்கிறீர்கள்."


" பதவியை நான் விரும்பவில்லை..இதை எனது அண்ணனே எடுத்துக் கொள்ளட்டும். அரியணைக்காக உறவில் ஏற்படும்  விரிசலை நான் விரும்பவில்லை.."

என்றான் சோகம் ததும்பியவனாய் வீரபாண்டியன்.


" இளவரசே..தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாண்டிய நாட்டின் அரியணையில் அமரும் பகுமான ராஜயோகம் தங்களுக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி சுந்தரபாண்டியனால் உங்களுக்குத் தொடர்ந்து இன்னல்கள் ஏற்படுவதும் தவிர்க்க இயலாத ஒன்று. இருவரில் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை அது தொடரவே செய்யும்.  தங்களது தந்தையின் ஆசைப்படி , சேர நாட்டு வேந்தர் ரவிவர்ம குலசேகரப் பெருமாள் தங்களைக் காத்து அழைத்து வரும்படி என்னிடம் கூறியதோடு இதோ இந்தப்  பாவையையும் உடன் அனுப்பி வைத்திருக்கிறார். "


" இவள்...? "


" சேரமான் புதல்வி நிலமங்கை."


" ம்.." என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்தான் வீரபாண்டியன்.


முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காதவளாய், வாஸப்பையே விழி விரிய கவனித்துக் கொண்டிருந்தாள் நிலமங்கை. வீரபாண்டியனை நோக்கி அவள் திரும்பக் கூட இல்லை.  கைவிரல்களால்  அவளது மேலாடையில் முடிச்சிட்டு அவிழ்த்தபடி பலத்த சிந்தனை வாய்ந்தவளாய் காணப்பட்டாள் நிலமங் கை.


" வாஸப்..நாம் இங்கு  மறைந்திருப்பதை சுந்தரபாண்டியன் அறிய மாட்டார் என்பது என்ன நிச்சயம்..? நாம் இங்கு எத்தனை நாட்கள் தான் மறைந்திருப்பது..? " என்றான் வீரபாண்டியன் குரலில் சற்றே வருத்தத்தைக் காட்டியவனாய்.


வீரனை ஒளிந்திருக்க செய்வதில் அவனுக்கு உடன்பாடில்லை. என்பதை அவனது குரல் தெளிவு படுத்தியது.


" இங்கு மறைந்திருப்பதனால் மட்டும் நிலைமை சீராகி விடுமா..? " என்றான் இகழ்ச்சியாக வீரபாண்டியன்.


" இளவரசே, எரிச்சலும், கோபமும் கொள்ளத் தேவையில்லை. தங்களது சிறிய தகப்பனார்கள் அடுத்த மன்னர் நியமனம் குறித்த கூட்டமொன்றை விரைவில்  நடத்தவிருக்கிறார்கள். அதில் எட்டப்படும் முடிவுகளுக்குப் பின் நீங்கள் இங்கிருந்து வெளியேறலாம்..ஏனெனில் வெளியில் உங்களது உயிருக்கு விலை பேசிக் கொண்டிருக்கிறான் சுந்தரபாண்டியன். அது வரையில் இங்கு மறைந்திருப்பதே உத்தமம்."


ஆனால்..வாஸப்பின் எண்ணத்தையும் தவிடு பொடியாக்கும் வண்ணமாய், சுந்தரபாண்டியனின் ஆட்கள் அடுத்த நாளே , வாசப்பின் மாளிகைக்குள்ளும்  நுழைய,  வீரபாண்டியன் வேறிடம் தேடும் சூழல் உருவானது.


_ தொடரும்..


#அனுராஜ்..


நன்றி : ஓவியம்  ம.செ.. — with ஜாய் சத்தியா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages