10.01.21 #மலை_நாட்டு_மங்கை_10 #மங்கையின்_வர்மக்கலை - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 15 ஜனவரி, 2021

10.01.21 #மலை_நாட்டு_மங்கை_10 #மங்கையின்_வர்மக்கலை



10.01.21

#மலை_நாட்டு_மங்கை_10


#மங்கையின்_வர்மக்கலை


கதிரவனின் சூடான வெப்பம் உடலுக்கு இதமாய் இருந்தது. பனியின் தாக்கம் பகல் பொழுதின் இரண்டாம் ஜாமம் தொடங்கி இரண்டரை நாழிகை வரை தொடர்ந்து கொண்டிருந்தது. காலை வேளையின் நீராட்டத்தையும், ஆகாரத்தையும் ஜமாலுத்தீன் மாளிகையிலேயே முடித்து விட்டிருந்தான் தேவப்பெருமாள். உடலுக்கு இதமான வெந்நீர் குளியலும், வயிற்றுக்கு இதமான பாண்டிய நாட்டு பிட்டும், வெகு நாட்களுக்குப் பின் மனநிறைவைத் தந்தது தேவப் பெருமாளுக்கு.


காயலை விட்டுக் கிளம்பி, மதுரை நோக்கி விரைந்து கொண்டிருந்த புரவியின் சீரான வேகமும், முகத்தில் மோதிய இளஞ்சூடான காற்றும், கண்ணுக்கு குளுமையாய் பனியில் பூத்த மலர்களும், சோலைகளும், ஆங்காங்கே பச்சைப்பசேல் என விரிந்த வயற் பரப்புகளும், எல்லையில்லா இன்பத்தை வாரி வழங்குவதைப் போலிருக்க, மணற்பாங்கான பாலை பூமியில் போய் கடந்த ஒராண்டுக்கும் மேலாய் வெம்மையில் கழித்து வர நேரிட்ட தன் நிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டான்.


சீராக விரைந்து கொண்டிருந்த புரவியின் வேகம் திடீரென மட்டுப்பட, புரவியானது தனது கால்களை எடுத்து வைக்க மிகுந்த சிரமத்திற்குள்ளானதைப் போலிருந்தது தேவப் பெருமாளுக்கு.


சட்டென புரவியில் இருந்து குதித்தவனாய், புரவியின் முகத்தினை தடவிக் கொடுத்ததோடு, அதன் முதுகைதடவியும், கால்களை நீவியும் விட்டவனாய் அதனை நீர்நிலைக்கு அழைத்துச் சென்று நீர் பருகவும் செய்தான். பின் நிதானமாக புரவியின் கால்களைத் தூக்கி ஆராய்ந்தவன் , ஒரு கணம் திடுக்கிட்டான். " இது என்ன..யவன தேசத்துப் புரவிகளின் குளம்படியில் காணப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், இப் புரவியில் காணப்பட வில்லையே..! " என நினைத்துக் கொண்டவனாய் மேலும் புரவியின் கால்களை நன்கு ஆராய்ந்தவன், புரவியின்  கால் குளம்புகளுக்கிடையில் கல் ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, ஓ..இதனால் தான் வேகம் தடைப்பட்டதா ..? என எண்ணிக் கொண்டவனாய், அதனை இலாவகமாக எடுத்ததோடு, புரவியின் கால்களை நன்கு நீரில் நனைத்து அதனைச் சற்று ஆசுவாசப்படுத்தவும் செய்தான். சிறிது  நேரத் தாமதத்திற்குப் பின் மீண்டும்  புரவியில் ஏறியவன், தீர்மானமான எண்ணத்துடன் மதுரை செல்லும் பாதையில் புரவியை விரட்டினான்.


            *         *          *


பெரிய வீதிகளையும், குறுகலான பல சந்துகளையும் கடந்தவாறு சென்று கொண்டிருந்த வீரபாண்டியனை பின்பற்றி தொடர்ந்தனர், வாஸப்பும், நிலமங்கையும்.


வீரபாண்டியனை நெருங்கியே வந்தாள் மலைநாட்டைச் சேர்ந்த நிலமங்கை.


" மங்கை..ஆச்சர்யமாக இருக்கிறது..! உனது தாக்குதல் வித்தியாசமாக இருந்தது. அது எப்படி விரைவில் நால்வரையும் செயல் இழக்கச் செய்தாய்..! அது என்ன பயிற்சி முறை..? " என்றான் வீரபாண்டியன் ஆச்சர்யத்துடன்.


" இளவரசே..அதற்கு **மலைநாட்டில் வர்மம் என்றும் நரம்படி என்றும் சொல்வார்கள். மனிதனின் உடலில் உள்ள நரம்புகளை இலேசாய் தட்டுவதன் வாயிலாக அவர்களை செயலிழக்கச் செய்யலாம்.கழுத்து, கை, மணிக்கட்டு போன்ற இடங்களில் உள்ள நரம்புகளை இலேசாய் சுண்டுவதன் வாயிலாக எவரையும் செயலிழக்கச் செய்து விடலாம்.  சில வர்மங்கள் ஆபத்தானவை..! எளிதில் குணப்படுத்த முடியாதவைகளும் உள்ளன. ஆனால் அவர்களை நான் இலேசாய் தான் தட்டினேன். "


" பரவாயில்லை..நல்ல பயிற்சி முறை தான்.." என்றான் சிரித்தபடியே.


பேசிக் கொண்டே வந்தவர்கள்..ஒரு பெரிய மாளிகையினை அடைந்தனர். முன்புற வாசலில் பலரும் கூட்டமாய் நின்று கொண்டிருப்பதை கவனித்தவர்களாய், அம்மாளிகையைச் சுற்றிக் கொண்டு சென்ற மூவரும்,  பின்புற வழியாக உள்ளே நுழைந்தனர்.

குறுகலாகச்  சென்ற பாதையின் இருமருங்கும் , பெரிய பெரிய மூட்டைகள் வரிசையாக  அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அங்கு நுழைந்தவுடனே வீரபாண்டியனோடு வந்த இருவருக்கும் புலப்பட்டு விட்டது. அது மளிகை மற்றும் நவதானியங்களை சேமித்து வைக்கும் கிடங்கு என்பதும், வழியெங்கும் காணப்பட்ட பெரிய மூடைகளில் இருந்து எழுந்த மணம் நானாவித  மளிகைப் பொருட்கள் கலந்த கலவையாக இருப்பதையும் உணர்ந்தவர்கள். உணவுச்  சரக்குகளை கையாளும் கிடங்கு ஒன்றிற்கு தங்களை வீரபாண்டியன் அழைத்து வந்திருப்பதை உணர்ந்து கொண்டார்கள். குறுகிய பாதை வழியாக சென்று, பின் விரிந்த கூடத்தில் நுழைந்தவனாய், எதிர்பட்ட சிலரின் சிரக்கம்பத்தை ஏற்றுக் கொண்டு மேல் தளம் செல்லும் படிகளை சென்றடைந்தான்.

இருவரும் தன்னை தொடர்கிறார்களா என ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டவன், மளமளவென படிகளில் ஏறினான். ஆங்காங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்கொளியில்  மாடியின் விஸ்தீரணம் புலப்பட, எதிர்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்தான். மஞ்சத்தில் அமர்ந்தபடி ஓலைகளில் எதையோ எழுதிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், அறையின் வாசலில் தெரிந்த நிழல்களைக் கண்டவராய் , நிமிர்ந்து நோக்க..வீரபாண்டியனைக் கண்டதும், " இளவரசே.. வாருங்கள்..வாருங்கள்.." என முகமலர்ந்து வரவேற்றதோடு எழுந்து வந்தவராய், வீரபாண்டியனை ஆரத்தழுவிக் கொண்டார்.


வீரபாண்டியன் வாஸப்பை நோக்கியவனாய், " வரலாற்று ஆசிரியரே, என் தாய்க்குப் பின்,  இவரது அரவணைப்பில் தான் நான் நெடுங்காலம் வளர்ந்தேன். மிகப் பெரும் வணிகர். பல தேசங்களுக்கு வணிக சாத்துகளில் இவரது சரக்குகள் தான் செல்கிறது. " என்றான் பெருமை பொங்கும் விழிகளோடு.


" வணக்கம் ஐயா..தங்களைச் சந்தித்தில் மகிழ்ச்சி. நான் அப்துல்லா வாஸப், பாரசீக தேசத்தைச் சேர்ந்தவன், வரலாற்று ஆராயச்சியாளன், இதோ இவள் என் சிஷ்யை , பெயர் நிலமங்கை. " என்ன காரணத்தினாலோ, நிலமங்கை உண்மையில் யாரென்பதை அவரிடம் மறைத்து விட்டான் வாஸப். வீரபாண்டியனும் அதை விரும்பவே செய்தான். உண்மையைக் கூறி முதியவரைக் கலவரப் படுத்த அவனும் விரும்பவில்லை.


" ஐயா..நான் சில காலங்கள் மதுரையில் மறைந்து உறைய வேண்டியுள்ளது.."


" உனது தேசத்திலேயே மறைந்து வாழும் நிலையா..? " என்றபடி சிரித்த முதியவரை நோக்கிய வீரபாண்டியன்.


" ஆம் ஐயா..சூழல் அப்படி..! "


" ம்..ம்...சரி.."


" நானும், எனது நண்பர்களும் இங்கிருப்பது சுந்தரபாண்டியனின் கவனத்திற்குச் செல்லக் கூடாது. நம் பணியாட்களுக்கும் தெரியப் படுத்தி விடுங்கள்." என்றதோடு, அவரிடம் வணங்கி விடைபெற்றவனாய் , வாஸப்பையும், நிலமங்கையையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த வேறொரு அறைக்குள் நுழைந்தான். 


அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் ஒரு பணியாளனும், பணிப்பெண்ணும் அந்த அறைக்குள் நுழைய, பணிப்பெண்ணிடம், " இவர்களை நல்லதொரு அறைக்கு அழைத்துச் செல்." என்றவனாய், தாங்கள் நுழைந்த அறையில் வாஸப்பை தங்கும் படி செய்ததோடு, அந்த அறைக்கு எதிரில் இருந்த அறைக்குள் வீரபாண்டியனும் நுழைந்தான்.


இரவு நேரச் சந்திரன், வணிகக் கிடங்கியின் மேல் தள அறைகளின் சாளரத்தின் வழி தன் கரங்களை எட்டி நுழைந்ததோடு, அப்துல்லா வாஸப்பும், வீரபாண்டியனும் மஞ்சத்தில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு , தனது குளுமையான கதிர்களை மேலும் ஊடுருவச் செய்தவனாய், அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செவிமடுக்க ஆசைப்பட்டவனாய் முனைப்புடன் உள் நுழைந்தான்.


" வாஸப் ..நாம் இன்னும் இங்கு எத்தனை நாட்களுக்கு இங்கு தங்கியிருக்க நேரிடும்..? 


" இளவரசே..இப்போதைக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.

இருப்பினும் ஒன்றைச் சொல்ல என்னால் இயலும்..! "


" எதை சொல்ல இயலும்..? "


" நாம் மதுரையை விட்டு வெளியேற உகந்த நாள் வேலனின் வெறியாட்ட திருநாள் தான். அன்று தான் சுந்தரபாண்டியன் நகரத்தின் பாதுகாப்பினை சற்றே தளர்வடையச் செய்திருப்பான். அது வரை நாம் மதுரையை விட்டு நகரவியலாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கும்.." என்றான் வாஸப்.


பாரசீகத்தை சேர்ந்தவனாய் இருந்தும் , கடந்த ஒரு ஆண்டு காலமாய் பாண்டிய மண்ணிலும், சேர மண்ணிலும் உலவும் அப்துல்லா வாஸப்  நகரின் பிரதான விழாவினையும், நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூட மிகத் தெளிவாய் அறிந்து  வைத்திருப்பது குறித்து , மிகுந்த ஆச்சர்யமும்  திகைப்பும் கொண்ட வீரபாண்டியனுக்கு,  வாஸப்பின் மீது மிகுந்த நல்லெண்ணமும்  மரியாதையையும்  உண்டாகியிருந்தது.


அப்போது முதுகை காட்டியபடி அமர்ந்து வாஸப்போடு பேசிக் கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு பின்னால் மெல்ல மெல்ல நிதானித்து வந்த அவன், வீரபாண்டியனை நெருங்கி தனது கைகளை உயர்த்திய அதே வேளையில்..அவனுக்குப் பின்புறமாய்  அறைக்குள் நுழைந்த நிலமங்கை, புதியவன் ஒருவன் வீரபாண்டியனை அணுகியதோடு, வீரபாண்டியனை  நெருங்கியதும் கைகளை உயர்த்தவே, சட்டெனப் பாய்ந்தவளாய்,  அப்புதியவனின், கழுத்தையும்,  மணிக்கட்டையும்  பிடித்து ஒரு தட்டுத் தட்டியவளாய் விலக, வீரபாண்டியனை நெருங்கியவன் " ஐயோ.." என்ற அலறலுடன் தொப்பென கீழே விழுந்தான்.


திடுமென எழுந்த சத்தத்தைத் தொடர்ந்து திரும்பிய வீரபாண்டியன், கீழே தேவப் பெருமாள் விழுந்து கிடப்பதையும், அவனருகே நிலமங்கை நின்றிருப்பதையும் கண்டவனாய்,


" நிலமங்கை...என்ன காரியம் செய்து விட்டாய்..? இவன் எனது நண்பன் தேவப் பெருமாள்..! உனது நரம்படி வித்தையை இவனிடமும் பிரயோகித்தாயா..? உடனே இவனைக் காப்பாற்ற வேண்டுமே..! " என பதைபதைத்தான்.


" இவர் உங்களது நண்பர் என்று எனக்கென்ன தெரியும்..! கைகளைத் தூக்கிக் கொண்டு உங்களை நெருங்கினார்..உங்களுக்கு ஏதேனும் ஆபத்தினை விளைவிக்கப் போகிறாரோ என்ற எண்ணத்தில் எனது பயிற்சியைக் காண்பித்தேன்.."


" சரி..சரி.. பேசிக் கொண்டிராமல்,  இவனைக் காப்பாற்ற முயற்சி செய்..! "


" இதோ.." என்றவளாய், தான் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தவள் , கைகளில் ஒரு பேழையோடு திரும்பி வந்தாள்.


கீழே விழுந்து கிடந்த தேவப்பெருமாளின் அருகில் அமரந்தவளாய், தனது பேழையில் இருந்து , புரச மர இலையில் மடிக்கப் பட்ட ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தவள், அவனது நாசியில் பொட்டலத்தில் இருந்த சூரணப் பொடியை ஊதியதோடு, அருகம்புல்லின் நுனியால் அவனைத் தட்டிய இடத்தில் இலேசாய் வருடத் துவங்க..மெல்ல மெல்ல கண்விழித்தபடி மலங்க மலங்க விழித்தான் தேவப்பெருமாள்.


_ தொடரும்..


** வர்மக்கலை அகத்திய மாமுனிவரால் பயிற்றுவிக்கப் பட்ட ஒரு அரிய கலை என நம்பப் படுகிறது. தமிழரின் பழங்கலையான இது பல தேசங்களுக்கும் பின்னாளில் பரவியது.

சேர நாட்டிலும், பாண்டிய நாட்டின் தென்பகுதியிலும் இது பலரால் கற்றுக் கொள்ளப் பட்டது.


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages