13.01.21
#மலை_நாட்டு_மங்கை_13
#வீரபாண்டியனுக்குப்_பட்டம்.
மார்கழித் திங்கள் கதிரவனின் வெப்பம் அன்று வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது. கதிரவனின் சூடானப் போக்கினைப் போலவே பாண்டிய நாட்டு மண்டலாதிபதிகள் இருவரும் சுந்தரபாண்டியனது போக்கால் கொதித்துப் போய் காணப்பட்டனர்.
ஜடாவர்ம சுந்தரபாண்டியரது மாளிகையின் நடுக் கூடத்தில் அமர்ந்திருந்த விக்கிரம பாண்டியரும், பாண்டிய நாட்டுத் துணையமைச்சர் தகியுதீனும் ஆழ்ந்த குழப்பத்தை முகத்தில் தேக்கியவர்களாய் , பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். சுந்தர பாண்டியரோ கைகளைப் பின்னுக்கு கட்டியபடி அறையின் குறுக்கிலும், நெடுக்கிலும் ஆக்ரோசமாய் நடைபயின்று கொண்டிருந்தார்.
" சுந்தரபாண்டியனுக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது..அதுதான் தலைகால் புரியாமல் ஆடுகிறான்..! " என்றார் கோபத்தில் பற்களை நறநறவெனக் கடித்தபடி ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.
" சகோதரரே..நாம் இனி இங்கு இருப்பதில் பயனில்லை..!
சுந்தரபாண்டியனது குணம் ஒரு நிலையில் இல்லாதது..! நம்மை அவையை விட்டு வெளிச் செல்ல அனுமதித்ததைப் போல் அனுமதித்து சிறைப் படுத்தவும் கூட ஆட்களைப் பின்னால் அனுப்புவான்." என்றார் விக்கிரம பாண்டியர்.
" நீங்கள் சொல்வதும், யோசிக்கக் கூடிய விசயந்தான்..! அரியணை மோகங் கொண்டு அலைகிறான்..! அவனிடத்தில் நேர்மையையும், அறத்தையும் எதிர்பார்க்க முடியாது..! " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.
" நல்லவேளை..மந்திராலோசனைக் கூட்டத்திற்கு வீரபாண்டியன் வரவில்லை..அவன் வந்திருந்தால் சுந்தரபாண்டியன் அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்திருப்பான்..நம்மாலும் அதை தடுத்திருக்க இயலாது..! இன்று பாண்டிய நாட்டுப் படைவீரர்கள் சுந்தரபாண்டியனது வசம்." என்றார் விக்கிரம பாண்டியர்.
" உண்மை தான்.. நான் கூட வீரபாண்டியன் கூட்டத்திற்கு வரவில்லை என்றதும் , சற்றே கோபம் கொண்டேன்..ஆனால் அவன் வராமல் போனது நல்லதாய் போயிற்று. நம்மை சிறை செய்யத் துணிந்த சுந்தரபாண்டியனோடு அவன் நேரிடையாக மோதவும் செய்திருப்பான்..ஒரு இக்கட்டான நிலை உருவாகியிருக்கும்..! ஆனால், வீரபாண்டியன் எங்கிருக்கிறான் என்பது தான் தெரியவில்லையே..! அவனைக் காப்பாற்றி மதுரையை விட்டு அப்புறப் படுத்துவதே நல்லது. " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.
" அந்தக் கவலையை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்..வாஸப் தான் அவனை பத்திரமாக மறைந்திருக்கச் செய்திருப்பான்..! " என்றார் தகியுதீன்.
" ஆமாம்..நடைபெற்ற குழப்பங்களில் பாராசீக வரலாற்று ஆசிரியனையும் மறந்து விட்டோம்..! துணையமைச்சரே, தாங்கள் ஒரு உதவி புரிய வேண்டும்." என்றார் விக்கிரம பாண்டியர்.
" சொல்லுங்கள் பாண்டியரே..செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன்..!" என்றார் தகியுதீன்.
" வாசப்பிடம் கூறி, வீரபாண்டியனை எப்படியாவது பத்திரமாக இந்த மதுரையிலிருந்து சுந்தரபாண்டியனது கண்களில் படாமல் வீரதவளப் பட்டணத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிடச் சொல்லுங்கள்.." என்றார் விக்கிரம பாண்டியர்.
" வீரதவளப் பட்டணத்திற்கு ஏன்..? " சந்தேகத்துடன் வினவினார் தகியுதீன்.
" என்ன செய்வது..? வேறு வழியில்லை..! பாண்டிய நாடு பிரிவினையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.." என்றார் சோகமாக விக்கிரம பாண்டியர்.
" தாங்கள் கூறுவது...? "
" மாறவர்ம குலசேகர பாண்டியருக்கு நான் வழங்கிய வாக்கு, வீரபாண்டியனை பாண்டியரது அரியணையில் ஏற்றுவதாகத் தான். ஆனால் இன்றோ..அது நடைபெறுவதில் எழுந்த பிரச்சனை என்னை இவ்வாறு சிந்திக்க வைத்துள்ளது.."
" என்ன அண்ணா..? சற்றுத் தெளிவாகக் கூறுங்கள். " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.
" வீரபாண்டியனை, வீரதவளப் பட்டணத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நான் பிரகடனப் படுத்தப் போகிறேன்.." என்றார் விக்கிரம பாண்டியர்.
" இது..பாண்டிய நாட்டில் குழப்பத்தை அல்லவா விளைவிக்கும்..! " என்றார் தகியுதீன்.
" துணையமைச்சரே, மக்கள் அனைவரும் வீரபாண்டியன் மன்னன் ஆவதையே விரும்புவர். சுந்தரபாண்டியனோ படைகளை தன் கட்டுப்பாட்டின் வசம் வைத்துள்ளான். அதைப் பற்றிய கவலை எனக்கில்லை. மக்களை விரோதித்துக் கொண்டு எந்த ஒரு மன்னனும் நாடாள முடியாது..வீரபாண்டியனை நான் மன்னனாக பிரகடனப் படுத்தினால் , மக்களின் ஆதரவு அவனுக்கு கிடைக்கும், மக்களின் செல்வாக்கு சரியத் துவங்கினால் சுந்தரபாண்டியனின் பதவி ஆட்டம் கண்டு விடும்." என்றார் விக்கிரம பாண்டியர்.
" விக்கிரம பாண்டியரே..இதில் இரண்டு வித ஆபத்துகள் இருக்கின்றன. உங்களது முடிவு வெளியே தெரிந்தால் , வீரபாண்டியனை மதுரையை விட்டு உயிருடன் சுந்தரபாண்டியன் அனுப்ப ஒப்ப மாட்டான். சுந்தரபாண்டியனுக்குத் தெரியாமல் வீரபாண்டியன் தப்பித்து வீரதவளப் பட்டணம் வந்து பாண்டிய அரியணை ஏறி மக்களின் செல்வாக்கைப் பெற்று, மக்களும் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்து கலவரங்களில் ஈடுபட்டால் , சுந்தரபாண்டியனது படைகளால் மக்கள் பாதிக்கப் படவும் வாய்ப்பிருக்கிறது. " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.
" இதில் மற்றொரு சிக்கலும் எழலாம்.இரண்டு மன்னர்கள் ஒரு நாட்டை ஆள்கிறார்கள் எனில் நாட்டை நிர்வகிப்பதில் பல குழப்பங்கள் எழலாம். வரி வருமானங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.." என்றார் தகியுதீன்.
" துணையமைச்சரே..கவலை வேண்டாம், பாண்டிய தேசத்திற்கு இரு மன்னர்கள் தான் இனி..நாடு பிரிவினையை சந்திப்பதை தவிர்க்க இயலாது. அவனவன் தன் பகுதியினை நிர்வகித்துக் கொள்ளட்டும். ஒருவனுக்கொருவன் தன் பலத்தைக் காட்ட மோதிக் கொள்ளவும் செய்வான். எவன் பலசாலியோ அவனிடத்தில் பாண்டிய நாடு இறுதியில் முழுமையாக வந்து விடும்." என்றார் விரக்தி நிரம்பியவராய் விக்கிரம பாண்டியர்.
அவரது இந்தப் பேச்சினை அவரே விரும்பவில்லை என்பது புரிந்தது இருவருக்கும், ஆனால் வேறு வழி..சுந்தரபாண்டியனால் நாடு அடையப் போகும் இன்னல்களை எண்ணி மூவருமே கலக்கமுற்றனர்.
" விக்கிரம பாண்டியரே..பிரிந்திருக்கும் பாண்டிய நாட்டின் மீது அயலவர் பார்வையும் பதியுமே..! " என்றார் தகியுதீன்.
" துணையமைச்சரே..அதுவும் நடக்கத்தான் செய்யும். ஆனால் பிரிவினையை இனி தவிர்க்க இயலாது. நான் வீரதவளப்பட்டணத்தில் வீரபாண்டியனுக்கு முடிசூட முடிவு செய்து விட்டேன்." என்றார் தீர்மானமாக விக்கிரம பாண்டியர்.
அப்போது..
" தங்களது முடிவினை நான் ஏற்றுக் கொள்ள மறுத்தால்..! " என்ற குரல் அறையின் வாசலில் கேட்க, மூவரும் சட்டென திரும்பி நோக்கினார்கள்.
அங்கு..வாசலை மறைத்தபடி வீரபாண்டியன் நிற்க, அவனுக்குப் பின்னால் அப்துல்லா வாஸப், நிலமங்கை, தேவப்பெருமாள் மூவரும் நின்றிருந்தார்கள்.
_ தொடரும்..
# அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக