14.01.21 #மலை_நாட்டு_மங்கை_14 #ஜடாவர்மரது_மாளிகையில்.. - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 15 ஜனவரி, 2021

14.01.21 #மலை_நாட்டு_மங்கை_14 #ஜடாவர்மரது_மாளிகையில்..



14.01.21


#மலை_நாட்டு_மங்கை_14


#ஜடாவர்மரது_மாளிகையில்..


எதிர்பாராதவர்களை திடீரெனக்  கண்டாலோ, நாம் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தேறினாலோ நாம் ஒரு கணம் திகைத்துப் போவது இயற்கை. அப்படித்தான் எவனைக் காணோமென்று ஜடாவர்ம சுந்தரபாண்டியரும், விக்கிரம பாண்டியரும் எண்ணிக் கொண்டிருந்தனரோ,  அவனே அவர்கள் இருக்குமிடம் தேடி வந்ததோடு, விக்கிரம பாண்டியர் கூறிய வார்த்தையினை மறுதலித்தும் பேச முற்பட்டானெனில் அறைக்குள் இருந்த மூவரும் திகைப்பில் ஆழ்ந்து போனதில் வியப்பென்ன இருக்க முடியும்..!


மூவரில் விக்கிரம பாண்டியரே முதலில் சுயநினைவு பெற்றவராய், " வீரபாண்டியா..உள்ளே வா..உன்னைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.." என்றார் கனிவான குரலில்.


" சிறிய தந்தையே..வருகிறேன்..! நானும் தாங்கள் கூறியதைக் கேட்டேன்.."


" வீரபாண்டியா..அது குறித்த  உனது அபிப்ராயத்தை தெரியப்படுத்தலாம்." என்றார் கம்பீரமாக இது வரை நின்றபடியே  பேசிக் கொண்டிருந்த ஜடாவர்ம சுந்தரபாண்டியர் , விச்ராந்தியாக ஒரு ஆசனத்தில் அமர்ந்தபடி.

மேலும் வந்த நால்வரையுமே பார்வையால் ஆசனத்தில் அமரும் படி பணித்தார்.


அப்துல்லா வாஸப்பைத் தவிர மற்ற இருவரையும் அறியாத விக்கிரம பாண்டியர், தனது புருவத்தை உயர்த்தி, யாரவர்கள் ..? என்பதை பார்வையிலேயே வீரபாண்டியனிடம் கேட்டார்.


" இவள், நிலமங்கை சேரமான் புதல்வி..! "


" யார்..ரவிவர்ம குலசேகர பெருமானின் புதல்வியா..! "


" ஆம்.."


" நன்று..மிக நன்று..சேரமானின் உதவியைப் பெற எண்ணியிருந்தேன், ஆனால் அவரே எனக்கு முன் முந்திக் கொண்டு விட்டார்.." என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.


" தம்பீ..அண்ணன் மாறவர்மன் குலசேகர பாண்டியரே சேரமானின் உதவியை முன்னரே கேட்டிருந்தார்..அத்தோடு, ஒரு ஒப்பந்தமும் போட்டிருந்தார்..

ஒப்பந்தத்தின் விளைவு தான் இங்கு அரங்கேறியிருக்கிறது என எண்ணுகிறேன்..! "


" ஒப்பந்தமா..என்ன அது..? " என்றார் ஐயத்துடன் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.


" மணவினை ஒப்பந்தம்.." என்றவராய், நிலமங்கையையும், வீரபாண்டியனையும் ஓரக்கண்ணால் கவனித்தார்.

நிலமங்கையோ தலையைக் குனிந்து கொள்ள, புரியாதவனாய் திகைப்புடன் அமர்ந்திருந்தான் வீரபாண்டியன், அவன் அது குறித்த விபரம் எதுவும் அறிந்திருக்க வில்லை. எனவே பேச்சினை வேறு திசையில் திருப்பியவராய் விக்கிரம பாண்டியர்,


" வீரபாண்டியா..அறைக்கு உள்ளே நுழைகையில் எதையோ கூறினாயே..அதை அறிந்து தான் கூறினாயா..? " என்றார் கவலை தொனிக்க விக்கிரம பாண்டியர்.


" ஆம்..தந்தையே, தாங்கள் பேசியதைக் கேட்டு விட்டே கூறினேன்.."


" ஏன்...உனக்கு வீரதவளப் பட்டணத்தில் முடிசூடிக் கொள்ள விருப்பமில்லையா..? " என்றார் திகைப்புடன் ஜடாவர்ம சுந்தரபாண்டியா்.


" இல்லை..நான் மன்னனாக விரும்பவில்லை. சுந்தரபாண்டியனே அரசாளட்டும், நான் வழக்கம் போல் காயலின் பொறுப்பினைக் கவனித்துக் கொண்டு அங்கேயே இருக்கிறேன்.."


" வீரபாண்டியா, அறிந்து தான் பேசுகிறாயா..? காயலில் நீ இப்போது நுழையக் கூட முடியாது. உன்னைக் கண்டதும் சிறைச்செய்ய உத்தரவினை பிறப்பித்திருப்பான் சுந்தரபாண்டியன்." என்றார் விக்கிரம பாண்டியர்.


" நான் என்ன தவறு செய்தேன்..? அரியணை தான் தேவையில்லை என்கிறேனே..! "


" நீ தேவையில்லை எனலாம்..! ஆனால் தனக்குப் போட்டியாக ஒருவன் இருக்கும் வரை சுந்தரபாண்டியன் நித்திரை கொள்ள மாட்டான். அது மட்டுமின்றி மக்களின் செல்வாக்கு உனக்கு உண்டு என்பதையும் அவன் அறிவான்."


" அதனால்..! "


" அதனால் தான் கூறுகிறேன்..நீயே மறுத்தாலும் பாண்டிய நாட்டு அரியணை உன்னை விடப்போவதில்லை..! வீரதவளப் பட்டணத்தின் மன்னனாக முடிசூடிக் கொள். கொங்கு மண்டலமும், சோழ மண்டலமும் உன் கட்டுப் பாட்டில் இயங்கும்.."


" தென்பாண்டி மண்டலமும் உனது தலைமையை ஏற்கும் நிலை பின்னர் வரலாம்..! ஏன்..சுந்தர பாண்டியன் படையைத் திரட்டிக் கொண்டு உன்னோடு போரிடவும் வரலாம்..!  எதுவரினும் எதிர்த்து நிற்க கற்றுக் கொள்..! உனது தந்தையின் விருப்பத்தை நீ நிறைவேற்று..! சுந்தரபாண்டியன் பாண்டிய மண்டலத்தின் செல்வத்தையும், பெருமையையும்  பறிகொடுத்து விடுவான்..! " என்றார் கவலை தோய்ந்த குரலில் விக்கிரம பாண்டியர்.


இதுவரை பேசாதிருந்த அப்துல்லா வாஸப் முதன் முறையாகப் பேசத் துவங்கினான், " இளவரசே தங்களது கிரகநிலை மிகச் சரியாக வேலை செய்கிறது. தங்களுக்கு பகுமான ராஜயோகம் உண்டு என்பதை நான் முன்னரே தெரிவித்திருந்தேன். எனவே நீங்கள் பாண்டிய அரியணையை ஏற்பதே முறை..! " என்றான்.


" அனைத்தும் சரி..வீரபாண்டியனை சுந்தரபாண்டியனது கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, இங்கிருந்து வீரதவளப் பட்டணம் அழைத்துச் செல்வது எப்படி..? " என்றார் குரலில் கவலையோடு ஜடாவர்ம பாண்டியர்.


" பாண்டியரே கவலை கொள்ள வேண்டாம்..அப் பொறுப்பினை வாஸப்பிடம் ஒப்படைத்து விடுங்கள். அவன் வீரபாண்டியனை இங்கிருந்து அழைத்துச் செல்லும் வழிமுறையையும் இந்நேரம் வகுத்திருப்பான்..!" என்றார் பெருமையாக தகியுதீன்.


அமைதியாகவும், அடக்கத்துடனும் அமர்ந்திருந்த வாஸப், "துணையமைச்சர் கூறியதைப் போல், இளவரசரை வீரதவளப் பட்டணத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை நான் ஏற்கிறேன். அதற்கான செயல் திட்டமும் என்னிடம்  தயாராக உள்ளது. " என்றான் அமைதியாக.


" அட..பரவாயில்லையே.!.உனது திட்டத்தைக் கூறு..! " என்றார் விக்கிரம பாண்டியர்.


" இளவரசரை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேலனின் வெறியாட்டநாள் தான் உகந்த நாள் என்பது எனது எண்ணம்."


" எப்படி கூறுகிறாய்..? "


" சுந்தரபாண்டியன் , அந்த நாளில் தான் நகருக்குள் பாதுகாப்பினைச்  சற்று தளர்வடையச் செய்திருப்பான். சுந்தரபாண்டியனது கவனம் முழுதும் குன்றத்தில் குடி கொண்டிருக்கும் வேலனின் பால் இருக்கும், அப்போது நாங்கள் நகரினை விட்டு வடக்குத் திசை நோக்கி மெல்ல  நகர வாய்ப்பாய் அமையும்."


" உண்மை தான்.."


" பாராட்டுகிறேன்..! பாரசீக வரலாற்று ஆசிரியனுக்கு பாண்டிய நாட்டு நடைமுறை தெரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி..! " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.


" வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்து கொண்டிருப்பதனால் வந்த புரிதல்  வாஸப்பிற்கு.." என்றார் தகியுதீன்.


" வாஸப்பின் விருப்பபடியே வேலனின் வெறியாட்ட நாளன்றே வீரபாண்டியன் இங்கிருந்து அகலட்டும், நாங்கள் நாளையே அவரவர் மண்டலங்களுக்குச் செல்லவிருக்கிறோம். துணையமைச்சர் அவ்வப்போது மதுரை நிலை குறித்து எங்களுக்கு தகவல் தந்து கொண்டிருக்கட்டும். " என்றவராய் ஜடாவர்ம சுந்தரபாண்டியர் மந்திராலோசனைக் கூட்டத்தைக் கலைத்தார். ஆனால்..


வேலனின் வெறியாட்ட நாளன்று வீரபாண்டியன் மதுரையை விட்டு நகர்வது அவ்வளவு எளிதாய் இல்லை.


_ தொடரும்..


# அனுராஜ்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages