16.01.21
#மலை_நாட்டு_மங்கை_16
#ஜமாலுதீனின்_சாமார்த்தியம்
வணிகக் கிட்டங்கியின் வாயிலில் நின்றிருந்த சுந்தரபாண்டியனின் வீரர்களைக் கண்டதும் எச்சரிக்கையடைந்த வாஸப், தனக்குப் பின் வந்து கொண்டிருந்த வீரபாண்டியனையும், நிலமங்கையையும் தேக்கி நிறுத்தியதோடு, தேவப் பெருமாளுக்கு எச்சரிக்கையும் செய்யவே, அவனும் சட்டென நின்று விட்டதோடு, அனைவரும் அருகில் இருந்த மாளிகைகளில் தனித்தனியாக பிரிந்து நின்று கொண்டு, வணிக கிட்டங்கியின் வாசலையே கவனிக்கத் துவங்கினார்கள்.
சில நாழிகைப் பொழுதில் , குலபதி ஜமாலுதீனை அழைத்துக் கொண்டு வெளிவரவே, சற்றே கோபத்தோடு திகைப்பும் சூழ்ந்தவனாய் வீரபாண்டியன், " ஜமாலுதீன் எப்போது இங்கு வந்தான்..? " என்றான்.
" தெரியவில்லை..நாம் பாண்டிய மண்டலாதிபதிகளைச் சந்திக்க சென்றிருக்கும் போது இங்கு வந்திருக்கலாம்..! " என்றான் வாஸப்.
" வாஸப், நாம் உடனே ஜமாலுதீனைத் தப்புவிக்கச் செய்ய வேண்டும்..நம்மால் வீணாக அவன் பலியாகி விடக் கூடாது..!"
" இளவரசே..அவசரம் கொள்ளாதீர்கள்..ஜமாலுதீன் பாண்டிய நாட்டிற்குப் புரவிகளை விற்பனை செய்யும் அரபு நாட்டு வணிகன், புரவிகளின் பயிற்சியாளனும் ஆவான். அவனை சிறைப் படுத்திவிட முடியாது. அதுவுமின்றி ஜமாலுதீன் சுந்தரபாண் டியனை எளிதில் ஏமாற்றி வெளி வந்து விடுவான்.. ! அவனைக் காப்பாற்றப் போய் நாம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது..! நம்மை பிடிக்கவே ஜமாலுதீனை பயன் படுத்த எண்ணுவான் சுந்தர பாண்டியன். ஆகவே, இப்போது ஜமாலுதீனை அழைத்துச் சென்றாலும், உடனே விடுவித்து வெளியே அனுப்பி வைப்பது உறுதி...! ஜமாலுதீன் குறித்து நாம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. " என்றான் பலத்த யோசனையுடன் அப்துல்லா வாஸப்.
" அவ்வாறெனில், நாம் இந்த வணிக வளாகத்தில் தொடர்ந்து தங்குவது குறித்து மேற்கொண்டு என்ன முடிவு செய்வது..? "
" நாம், சுந்தரபாண்டியனின் ஆட்கள் இவ்விடம் விட்டு நகர்ந்ததும், இங்கேயே தங்கலாம். ஏனெனில் உங்களது சிறிய தகப்பனார்களின் மேல் சுந்தரபாண்டியனது பார்வை இருக்கவே செய்யும், நாளை அவர்கள் தங்களது மண்டலங்களுக்கு பயணப் பட்டுவிட்டால், அவர்களது மாளிகையை சுந்தரபாண்டியன் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கி விடுவான். நாம் அங்கு தங்கினால் நமது நடமாட்டத்தை அவனால் எளிதில் ஊகித்தறிந்து விட முடியும். ஆனால் ..வணிக மையத்தில் இப்போது நாம் இல்லை எனும் தகவல் சுந்தரபாண்டியனைச் சென்றடைந்து விடும், எனவே இங்கு அவனது பார்வையைச் சற்றுத் தளர்த்தவே செய்வான். எனவே நமக்கு இப்போதைக்கு பாதுகாப்பான இடம் வணிகக் கிட்டங்கி ஒன்று தான்." என்றான் வாஸப்.
நாழிகைகள் கழிய, ஜமாலுதீனை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டகன்றான் குலபதி.
அவர்கள் சென்றபின் சற்றுத் தாமதித்தே உள் நுழைந்தனர் நால்வரும்.
இவர்களைக் கண்டதும் வரவேற்ற முதியவர், " நல்லவேளை சற்று நேரத்திற்கு முன் குலபதி இங்கு வந்திருந்ததோடு, உங்கள் அனைவரையும் விசாரித்தான். நான் நீங்கள் இங்கு வரவேயில்லை எனக் கூறி விட்டேன்.ஆனால் ஜமாலுதீனைக் கண்டதும் குலபதியின் சந்தேகம் வலுத்தது. ஆனால் ஜமாலுதீனோ சமயோஜிதமாக நான் வணிகத்திற்காக மிளகு வாங்க வந்தேன் என்று கூறி, குலபதியினை திசை திருப்பி விட்டான். இருப்பினும், ஜமாலுதீனை சுந்தரபாண்டியன் அழைப்பதாக அழைத்துச் சென்றிருக்கிறான். நீங்கள் மேல் தளத்திற்கு சென்று விடுங்கள், எவரும் வந்தால் நான் எச்சரிக்கிறேன். நீங்கள் இங்கிருக்கும் வரை கவலை கொள்ளத் தேவையில்லை..! " என்றார் முதியவர்.
" ம்..நல்லது ஐயா..நாங்கள் மேல் தளத்திற்குச் செல்கிறோம்..! " என்றவனாய் வீரபாண்டியன் உள்ளே நடக்க, அவனைத் தொடர்ந்தனர் மூவரும்.
* * *
வணிகக் கிட்டங்கி முதியவர் ஜமாலுதீனை வரவேற்றதோடு, "வீரபாண்டியனோடு அனைவரும் வெளியில் சென்றுள்ளனர், சற்று நேரத்தில் வந்துவிடலாம் அதுவரையில் ஆசனத்தில் அமருங்கள்..! " என்றார் மெதுவான குரலில்.
" நல்லது ஐயா..நான் காத்திருந்து அவர்களைச் சந்தித்துச் செல்கிறேன்.." என்றவனாய் அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்த சிறிது நேரத்தில் தனது காவலருடன் திடுமென உள்ளே நுழைந்தான் குலபதி.
" முதியவரே..வீரபாண்டியனும் அந்த பாரசீக வரலாற்றாசிரியனும் இங்கு தானே தங்கியிருக்கிறார்கள்..? அவர்கள் இப்போது எங்கே..மரியாதையாக உண்மையைச் சொல்லி விட்டால் , உயிராவது மிஞ்சும்..ம்..எங்கே அவர்கள்..? " குலபதியின் குரலில் அதிகாரம் தொனித்தது.
" ஐயா..தாங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்..? நீங்கள் கூறும் எவரையும் நான் அறிந்திருக்கவில்லை..! இது வணிகக் கிடங்கு, வத்தல், மிளகு, மல்லி வேண்டுமானால் எனக்குத் தெரியும்..! "
" முதியவரே.. ஏளனம் செய்கிறீரா..? உங்களுக்கா தெரியாது..! தெரியாமல் தானா இப்போது சற்று முன் நுழைந்த அரபு நாட்டு குதிரை வணிகன் ஜமாலுதீனை வீரபாண்டியனைப் பார்க்க அனுமதித்திருப்பீர்..! "
" யாரைக் குறிப்பிடுகிறீர்கள். இவரையா.!
இவர் பெயர் ஜமாலுதீனா.. எனக்குத் தெரியாது..! மிளகு வேண்டும் என்றார்..! அமர வைத்திருக்கிறேன்..! " என்றவராய், தனக்கு முன்னால் சற்று உள்வாங்கியிருந்த அறையில் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஜமாலுதீனைக் காட்டினார் .
அதுவரையில் ஜமாலுதீனையோ, அவன் அமர்ந்திருந்த முன்பக்க அறையையோ கவனிக்கத் தவறிய குலபதி, சட்டெனத் திரும்பி நோக்க, அவனைப் பார்த்துச் சிரித்த ஜமாலுதீன் குலபதியை நோக்கி எழுந்து வந்தவனாய், "சுந்தரபாண்டியரது உபதளபதியாருக்கு வணிக கிட்டங்கியில் என்ன வேலை, பருப்பு வாங்க வந்தீரா..? " என்றான் இகழ்ச்சியாக.
" நான் வந்தது இருக்கட்டும்..நீ இங்கு எதற்கு வந்தாய்..? " கோபத்துடன் எழுந்தது குலபதியின் குரல்.
" பெரியவர் தான் கூறீனாரே, சரியாக கேட்கவில்லையா..! நான் மிளகு வாங்க வந்தேன்..! "
" குதிரைகள் கொள்ளு அல்லவா தின்னும்..! எப்போது மிளகு தின்று பழகியது..! " என்றான் விஷமத்துடன் குலபதி.
" குதிரைகள் மிளகு தின்னும் என்று யார் உமக்கு தெரிவித்தது..? "
" நீங்கள் தானே, மிளகு வாங்க வந்தேன் என்றீர்..! "
" ஆம்.."
" நீங்கள் தானே குதிரையைப் பராமரிப்பதோடு, பயிற்சியும் தருகிறீர்..? "
" ஆம்..இதிலென்ன சந்தேகம்..பாண்டிய நாடு முழுதும் அறிந்த விசயம் தானே இது..! "
" குதிரையைப் பராமரிக்கும் உங்களுக்கு எதற்கு மிளகு..? "
" உபதளபதியாரே.. மிளகு வாங்கினால் அதை குதிரைக்குத் தான் வாங்க வந்து விட்டேன் என்ற எண்ணமா உங்களுக்கு..!
நானோ வணிகன், எதை செய்தால் வரும்படி கிடைக்கும் என எண்ணிக் கொண்டிருப்பவன், மிளகினை வாங்கி யவன தேசத்திற்கு அனுப்ப உத்தேசித்து உள்ளேன்..போதுமா..உங்களது சந்தேகம் தெளிவடைந்ததா..?! "
" நீங்கள்..இங்கு வீரபாண்டியரை சந்திக்க வரவில்லையா..? "
" வீரபாண்டியரை சந்திக்க வேண்டுமென்றால் அரண்மனைக்கு அல்லவா வருவேன்..! ஏது..நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வீரபாண்டியரும் வணிகத்தில் இறங்கி விட்டார் போல தெரிகிறதே..! "
" வீரபாண்டியரும் வணிகத்தில் தான் இறங்கியிருக்கிறார்..அரசியல் வணிகத்தில்.! அதனால் தான் வணிகக் கிடங்கில் ஒளிந்து கொண்டு திரிகிறார்.." என்றான் இகழ்ச்சியாக குலபதி.
" இலாபம் பெற விரும்புவோர் தான் வணிகத்தில் இறங்குவர்..எனக் கேள்விப் பட்டுள்ளேன்.." என இழுத்தான் ஜமாலுதீன்.
ஜமாலுதீனின் பேச்சு சுந்தரபாண்டியனை நோக்கித் திரும்புவதைக் கண்ட குலபதி, " சரி வாருங்கள்..அரண்மனைக்குச் செல்லலாம். தங்களைச் சந்திப்பதில் சுந்தரபாண்டியர் மகிழ்வார்.." என்றபடியே ஜமாலுதீனை அழைத்துக் கொண்டு வணிகக் கிட்டங்கியின் வாசலுக்கு அழைத்து வந்தான் குலபதி.
" பெரியவரே, நான் கேட்ட சரக்கினை எனது மாளிகைக்கு அனுப்பி வைத்து விடுங்கள் ...நான் அரண்மனைக்குச் சென்று வருகிறேன்.." என்றவனாய் குலபதியோடு வெளியேறினான்.
இருவரும், காவலர்களோடு அங்கிருந்து நகர்ந்த பின் , உள்ளே நுழைந்தார்கள் வீரபாண்டியனும் அவனது நண்பர்களும்.
_ தொடரும்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக