17.01.21 #மலை_நாட்டு_மங்கை_17 #திடுமென_முளைத்த_கரம் - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

17.01.21 #மலை_நாட்டு_மங்கை_17 #திடுமென_முளைத்த_கரம்



17.01.21

#மலை_நாட்டு_மங்கை_17


#திடுமென_முளைத்த_கரம்


பாண்டியரது அரண்மனையில் சுந்தரபாண்டியனுக்கு எதிரில் கைகளைக் கட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருந்த அரபு தேசத்துக் குதிரை வணிகன் ஜமாலுதீனை தனது குரூரமான விழிகளில் ஆழ்ந்து உற்று நோக்கிய சுந்தரபாண்டியன்.


" குதிரை வணிகர், திடீரெனக்  காயலை விட்டு மதுரை வந்திருப்பதன் காரணத்தை அறியலாமா..? " என்றான் குதர்க்கமான குரலில்.


" பிரபு.. தாராளமாக அறியலாமே, இதில் என்ன ஒளிவு மறைவு..! யவன தேசம் செல்வதற்காக ஒரு மரக்கலம் காயலில் கிளம்பத்  தயாராக உள்ளது. அதில் எனது தேசத்திற்கு  ஏற்றி அனுப்புவதற்காக மிளகினை வாங்குவதற்காக மதுரை நகர் வந்தேன்." 


" தலைநகர்  வந்தால் இங்கு முதலில் வருவது தானே அரசுப் பணியாளர்களின் கடமை..இது நீ அறிந்தது தானே..! அவ்வாறிருக்க நீ் ஏன் அரண்மனைக்கு நேரடியாக வரவில்லை..!" சுந்தர பாண்டியனது கேள்வியோடு, பார்வையும் ஜமாலுதீனை நேரடியாக ஊடுருவியது.


" இது அரசு முறைப் பயணமல்லவே..! எனது சொந்தப் பணியின் காரணமாகவே மதுரை வந்தேன். எனவே தான் இந்த முறை பிரபுவைச் சந்திக்க வரவில்லை. வந்த இடத்தில் உபதளபதியாரை சந்திக்க நேர்ந்தது, அவர்  அழைத்த காரணத்தால் உடனே வந்தேன்." என்றான் பவ்யமாய் ஜமாலுதீன்.


" ஜமாலுதீன்..ம்..போகட்டும்..குதிரைகளின் பயிற்சி நிறைவடைந்து விட்டதா..? அவற்றைப்  படைப்பிரிவில் எப்போது சேர்ப்பது..? "


" இன்னும் ஒரு மாத காலத்தில் தயாராகி விடும். ஐநூறு புரவிகள் இம்முறை படைப்பிரிவில் இணைந்து விடும். வரும் ஆண்டுக்கான புரவி இறக்குமதியும் பின்பனிக் காலம் முடிந்ததும் துவங்கி விடும்." 


" நல்லது.. காயலின் புது அரசாங்க பிரதானிகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது..? மாற்றங்களை அறிவாய் அல்லவா..? "


" சரியாகவே செயல்படுகிறார்கள் பிரபு..! நன்கு அறிவேன்..! "


" உனது நண்பனைச் சந்தித்தாயா..? " சாதாரணமாக கேட்டுவிட்டு ஜமாலுதீனை உன்னிப்பாய் கவனித்தான்.


" யாரைக் கேட்கிறீர்கள் பிரபு..? "


" உனது நண்பன் இங்கு யாரு..? " சுந்தரபாண்டியன் விடுவதாக இல்லை.


" இங்கு யாரும் எனது நட்பில் இல்லையே..! " ஜமாலுதீனும் இலேசுப் பட்டவன் இல்லையே..! பிடிகொடுக்காமல் நழுவினான்.


" இங்கு யாரும் இல்லை தான்..காயலில் ..? " விஷமத்துடன் எழுந்தது கேள்வி சுந்தரபாண்டியனிடம் இருந்து.


" யார்..இளவரசரைக் கேட்கிறீர்களா..? அவர் அரண்மனையில் இங்கு தானே இருக்கவேண்டும்..எங்கே..இருக்கிறாரா.?  வரச்சொல்லுங்கள் பார்த்து விட்டுச் செல்கிறேன்..! " ஜமாலுதீனின் பதில் சுந்தரபாண்டியனையே திக்குமுக்காடச் செய்தது.


" நானே வீரபாண்டியனைப் பார்க்கத் தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். மன்னரை அடக்கம் செய்த அன்று மயான பூமியில் பார்த்ததோடு சரி.!.அதன் பின் அவனை கண்ணில் காண இயலவில்லை..! அது தான் நீ சந்தித்தாயா..! "எனக் கேட்டேன். "


" அப்படியா..! நானும் இளவரசரை இதுவரை சந்திக்கவில்லையே..சந்தித்தால் தாங்கள் சந்திக்க விரும்பியதை தெரியப்படுத்துகிறேன்."


" ம்..சரி..நீ்..சென்று வரலாம்.."


" நன்றி..பிரபு..வருகிறேன்."

சுந்தரபாண்டியனிடம் விடைபெற்று  ஜமாலுதீன் வெளியேறிச் சென்ற பின்,


" குலபதி..குதிரை வணிகன் இலேசுப்பட்டவனில்லை..! எதற்கும் அவன் பேரில் ஒரு கண் வைத்துக் கொள்..! காயலில் இருந்து சோனக தேசத்திற்கோ, யவன தேசத்திற்கோ ஏதாவது மரக்கலங்கள் இந்த வாரத்தில் கிளம்புகிறதா என்பதையும் விசாரித்து அறிந்து கொள்..ஜமாலுதீனின் வார்த்தைகள் எந்தளவு உண்மை என்பது புரிந்து விடும். சோனகனை விட தமிழன் புத்திசாலி என்பதை நான் காட்டுகிறேன்..!  என்னையே ஆழம் பார்க்கிறான்..! " என்றான் கோபத்துடன் சுந்தரபாண்டியன்.


" ஆகட்டும் பிரபு..! "

என்றவனாய், சுந்தரபாண்டியனிடம் விடைபெற்றவனாய் குலபதியும் வெளியேறினான்.


பாண்டியரது அரண்மனையை விட்டு வெளியேறி தனது மாளிகையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் ஜமாலுதீன். அவனது மனதில் எண்ணற்ற குழப்பங்களும், சிந்தனைகளும் எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன. "சுந்தரபாண்டியனின் வார்த்தையில் இருந்து மன்னர் குலசேகரரை அடக்கம் செய்ததில் இருந்து வீரபாண்டியனை காண முடியவில்லை என்றால், அவருக்கு இந்நகரில் ஏதோ ஆபத்து ஒன்று புதிதாக உருவாகியிருக்க வேண்டும். நாட்டின் இளவரசரே மறைந்து திரிகிறார் என்றால், ஆபத்தின் தீவிரம் என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறது..!  நமது மாளிகைக்கு வந்திருந்த பொழுது குலபதியால் வீரபாண்டியனையும், வாஸப்பையும்  சிறைசெய்ய முயற்சி நடந்ததாக பணியாளன் தெரிவித்தான் அல்லவா..! அவ்வாறெனில் சுந்தரபாண்டியனால் வீரபாண்டியனுக்கு மிகப் பெரும் ஆபத்து ஒன்று சூழ்ந்துள்ளது என்பதை உணர முடிகிறது. ஆனால் இவ்வளவு இக்கட்டான நேரத்தில் வீரபாண்டியர் எங்கே மறைந்திருக்க கூடும்..? அவரை எப்படி சந்திப்பது..? வணிக கிட்டங்கியில் இப்போது இல்லை..பிறகு வர வாய்ப்புள்ளது..! அங்கு தான் மீண்டும் அவரைச் சந்திக்க வேண்டும்..! சுந்தரபாண்டியன் என்னை முழுதும் நம்பியவனாய் தெரியவில்லை..! எனவே எனது நடவடிக்கைகளை ஆராய்வதற்கு ஆட்களை அனுப்புவான். இனி, நாம் சற்றே கவனத்துடன் எந்த காரியத்தையும் செய்வது நல்லது..! " இவ்வாறான பல சிந்தனைகள் மனதில் எழ பலத்த யோசனையுடன் நடந்து வந்து கொண்டிருந்தவனை சட்டென ஒரு கரம் பற்றி இழுத்ததோடு மட்டுமின்றி, அவனை ஒரு குறுகிய சந்தில் தள்ளவும் செய்தது.


_ தொடரும்..


# அனுராஜ்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages