- தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 18 ஜனவரி, 2021



18.01.21

#மலை_நாட்டு_மங்கை_18


#பிரதாப_ருத்ரதேவன்


கி.பி.1294


இன்றைய ஆந்திரத்தின் வடபகுதியில் அந்நாளில் செல்வ செழிப்பான வளமிக்க பூமியாகத் திகழ்ந்தது தான் காகதீயப் பேரரசு. வைரச் சுரங்கங்கள் நிறைந்த வளமான மலைகளடர்ந்த பள்ளத்தாக்குகள். காகதீயப் பேரரசின் தலைநகராக "ஓர்க்கல்" விளங்கியது. அதனை தான் இன்று வாரங்கல் என்கிறோம்.


செழிப்பில் சிறந்த அரண்மனையின் உப்பரிகையில் நின்றபடி தனது பரந்த தேசத்தினை பார்வையால் பருகி கொண்டிருந்தான் காகதீயப் பேரரசின் மன்னன் பிரதாப ருத்ர தேவன். அஜானுபாகுவான தோற்றத்தோடு, தன் சிவந்த மேனியில் ஆங்காங்கே தீற்றியிருந்த சந்தனத்தின் மணத்தோடு, நெற்றியில் துலங்கிய திருநீற்றின் மணமும் அவனை ஒரு சிறந்த பக்தனாகவும் காண்பித்துக் கொண்டிருந்தது.


தன்னருகே நின்றிருந்த அமைச்சரை நோக்கியவனாய், " அமைச்சரே, கார்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கி விட்டது..நமது வைரச் சுரங்களில் வைரங்களை எடுக்கும் காலமல்லவா இது..! "


" ஆம்..அரசே..! "


" மலையனுக்கு தகவல் அனுப்பியாகி விட்டதா..?"


" நமது படைத்தலைவர் அதை முறையாய் செய்திருப்பார் என எண்ணுகிறேன்..! "


" அமைச்சரே..எண்ணுகிறேன் என்பது அரசு  நிர்வாகிகளுக்கு அழகல்ல. தீர்மானமான முடிவினைப் பதிலாய் தருவதே தங்களைப் போன்றோருக்கு அழகு..! "


" உண்மை தான் அரசே..ஆனால் கடந்த இரண்டு தினங்களாக நான் படைத்தலைவரைச் சந்திக்கவே இல்லை..! "


" ஏன்..? "


" நான் கேள்விப்பட்ட ஒரு விசயம் மனசஞ்சலத்தை உண்டு பண்ணியிருந்தது..அதனால் தான்..! "


" தங்களது மனம் சஞ்சலப்படும்படியாக என்ன விசயம் கேள்விப் பட்டீர்கள்..? " புரியாமல் அவரை கூர்ந்து நோக்கினான் பிரதாப ருத்ரதேவன்.


" அரசே, தில்லி சுல்தானியகத்தில் இருந்து அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்கபூர் என்பவன் **யாதவர்களின் தேவகிரியைக் கைப்பற்றியதோடு அங்கிருந்த கோயில்களையெல்லாம் இடித்து தரைமட்டமாக்கி பெரும் செல்வத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு, தேவகிரியின் மன்னன் இராமச்சந்திரனை கில்ஜிக்கு,  திறைச் செலுத்தும்படியும் செய்து விட்டானாம்..! "


" யார்..? யாதவ சிங்கண்ணனின் மகன் இராமச்சந்திரனையா..? "


" ஆம்..அரசே..! அது மட்டுமின்றி அந்த கொடுங்கோலன்  மாலிக்கபூரின் பார்வை, அடுத்தபடியாக  நம் தேசத்தின் மீது படிந்திருப்பதாகவும் கேள்விப் பட்டேன்..அதிலிருந்து சற்றே கலக்கமாகவே உள்ளது. எனது மனநிலை மாற்றம் கொண்டுள்ளது அதனால் தான் அரசே..! "


" தாங்கள் கூறியது சிந்திக்க வேண்டிய விசயம் தான். கில்ஜியும் , அவனது படைத்தலைவன் மாலிக்கபூரும் சற்றும் இரக்கமற்றவர்கள் என்றும் , பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள் என்றும் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்..! வட தேசத்து இராஜபுதனப் பேரரசு களில் இருவரும் விளைவித்த பல கொடுஞ்செயல்கள் என் செவியிலும் விழுந்தது. பல தேசத்தில் இராஜபுதனப் பெண்மணிகள் கில்ஜி யின் கைகளில் சிக்காமல், தீ வளர்த்து அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதையும் கேள்வியுற்று இருக்கிறேன்..!  இவனைப் போன்ற கொடியவனது பார்வை நம் தேசத்தின் மீதெனில் நாம் கவலை கொள்வதோடு மட்டுமல்ல, நமது தேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், படைகளை துரிதப்படுத்தி தயார்நிலைப் படுத்துவதும் மிக அவசியம்..! "


" ஆம்..அரசே..நாம் படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது மிக முக்கியம்.." என்றார் கவலை தோய்ந்த முகத்தோடு அமைச்சர்.


அப்போது அவர்களை நோக்கி விரைவாய் வந்தான் காகதீயப் பேரரசின் படைத்தலைவன்.


" வாருங்கள் படைத்தலைவரே..! "


" வணக்கம் அரசே..! "


" படைத்தலைவரே..வைரங்களை தேடியெடுக்க மலையன் வசம் தகவல் தெரிவிக்கப் பட்டு விட்டதா..? "


" ஏற்பாடு செய்து விட்டுத் தான் வருகிறேன் அரசே..! மலையனும் தங்களைச் சந்திக்க சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவான்..! இன்னும் இரண்டு தினங்களில் அமாவாசை திதி பிறக்கிறது..! அதன் பின் வைர வேட்டைக்குச் செல்ல

முடிவு எடுத்தாகி விட்டது.." என்றான் உற்சாகமாய் படைத்தலைவன்.


" நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்..! படைத்தலைவரே, அத்தோடு மிக முக்கியமான மற்றொரு விசயமும் இருக்கிறது." என்றான் பிரதாப ருத்ரதேவன்.


புரியாமல் மன்னனை ஏறெடுத்த படைத்தலைவனை நோக்கிய பிரதாப ருத்ர தேவன், " மாலிக்கபூர் எனும் பெயரொன்று இப்போது பலமாய் அடிபடுகிறதே..கேள்விப் பட்டிருக்கிறீரா.?"


" ஆம்..அரசே.. அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சோமநாத புரத்தை தரைமட்டமாக  சிதைத்து விட்டு, யாதவர்களின் தேவகிரியிலும் நுழைந்து விட்டான் என நமது ஒற்றர்கள் தகவல் கொண்டு வந்தனர்." என்றான் படைத்தலைவன்.


" உண்மையான தகவல்கள் தான்..! அதுமட்டுமின்றி மாலிக்கபூரின் பார்வை நம் தேசத்தின் மீதும் திரும்பியிருப்பதாகவும் கேள்விப் பட்டேன்..! அதற்கான முன்னேற்பாட்டுடன் நாம் இருக்க வேண்டியது அவசியமாகிறது..! கொடுங்கோலன் அவன், அவன் காலடி பட்ட மண்ணில் புற்கள் தழைப்பதில்லை..! " என்றார் சோகமாய்.


" அரசே..மாலிக்கபூரைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்..நாம் எதற்கும் முன்னேற்பாடுகளை செய்து விடுவோம்..படைகளை ஆயத்தப் படுத்தி விடுகிறேன்..! "


" ம்..நாம் முன்னெச்சரிக்கையாய் இருப்பது நல்லது..! " என்றான் யோசனையுடன் பிரதாப ருத்ரதேவன்.


அப்போது, அவர்களை நோக்கி, தனது கனமான சரீரத்தோடு, கரிய நிறங்கொண்டவனாய், தலையில் பறவை இறகுகளை மகுடமாய்  கட்டிக் கொண்டும், கழுத்தில் புலி நகத்தினை ஒரு கயிற்றில் பிணைத்தும் கட்டிய ஒருவன், தனது தோளில் பருத்த கழுகு ஒன்றினை சுமந்தபடி, பலமாய் நகைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். 


_ தொடரும்..


#அனுராஜ்


** யாதவர்கள் ஆட்சி புரிந்த தேவகிரி என்பது துங்கபத்திரைக்கும் நர்மதை நதிக்கும் இடைப்பட்டப் பகுதி. தற்கால மஹாராஷ்டிரம், வடக்கு கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள் அடங்கியது. தேவகிரியே இந்நாளில் தௌலதாபாத் என வழங்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages