20.01.21 #மலை_நாட்டு_மங்கை_20 #மாலிக்_கபூர். - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 20 ஜனவரி, 2021

20.01.21 #மலை_நாட்டு_மங்கை_20 #மாலிக்_கபூர்.

 



20.01.21



#மலை_நாட்டு_மங்கை_20


#மாலிக்_கபூர்.


தேவகிரி நகரின் கோட்டையின் மேலே நின்று கொண்டு, மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த கதிரவனை வெறிக்கப் பார்த்தான் மாலிக்கபூர். மேற்கு வானில் தோன்றிய  கதிரவனின் செங்கதிர் வீச்சினைப் போல் அவனது கண்களும் சிவந்து போய் காணப்பட்டது. தேவகிரியின் மன்னன் இராமச்சந்திரனை அடிபணியச் செய்ததோடு, தேவகிரி மன்னன் ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும் விதமாய், தேவகிரிக்கும் தில்லி சுல்தான் கில்ஜிக்கும் இடையே ஒரு திறைச் செலுத்தும் ஒப்பந்தமொன்றையும்  

மாலிக்கபூர் ஏற்பாடு செய்திருந்தான்.


கோட்டையின் மேலே நின்றபடி, கோரமாக ஆங்காங்கே இடிந்தும், உக்கிரமாய் தீயில் எரிந்தும் கொண்டிருந்த நகர் பகுதிகளைக் கண்டவனது உள்ளம்  கடந்த காலங்களை நோக்கித் தாவியது.


குஜராத் தேசத்தின் காம்பத் நகரை அலாவுதீனின் படைகள் நிர்முலமாக்கிய அன்றைய தினம் அவனது மனக்கண்ணில் விரிந்தது., காம்பத் நகர மன்னனைக் கொன்று விட்டு ராணி கமலா தேவியை சிறைசெய்து கில்ஜியின் முன் நிறுத்த, அவளது அழகில் மயங்கிய கில்ஜி அவளை முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதோடு, அவளை மணம் புரிந்தும்  கொண்டான். அன்று கமலாதேவியோடு சேர்த்து சிறைசெய்யப்பட்ட பல பணிப்பெண்களில் ஒருத்தி , 

**பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரவாணி, அவளது அழகு பெண் பித்தனான  கில்ஜியை மயக்கம் கொள்ளச் செய்யவே,   அரவாணியையும் தனது  மஞ்சத்தில் புரள , கில்ஜி தனது  அந்தப் புரத்திற்குள் இழுத்துச் சென்றதோடு, அரவாணியின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்தான்.  கில்ஜியின் அந்தரங்க ஆசைகள் பலவற்றை தீர்த்துவைத்த அரவாணிக்கு, அலாவுதீன் கில்ஜி, மாலிக்கபூர்  எஜமானனுக்கு உகந்தவன் எனும் பொருளில் பெயரிட்டு தனது படைப் பிரிவிலும் சேர்த்துக் கொண்டான். ஏனெனில் அரவாணியான மாலிக்கபூர்  கற்றிருந்த போர்த்திறமையும்,  போர்ப்பயிற்சியும், அவனது அசாத்திய வீரமும், கில்ஜியைக. கவர,  மாலிக்கபூரை விரைவிலேயே கில்ஜியின் முதன்மை தளபதிகளில் ஒருவராக உயர்த்தி விட்டது.  இதற்கு மாலிக்கின் வீரம் மட்டும் காரணமல்ல, அவன் கில்ஜியோடு கொண்டிருந்த நெருக்கமும் தான் என்பது பல முதன்மை தளபதிகளின் கருத்தாகவும் இருந்தது. அந்தக் கருத்தே ஒரு சிலரை மாலிக்கபூர் மீது போட்டியும், பொறாமையும் கொள்ள வைத்ததோடு, இன்று வந்தவனுக்கு உடனேயே படைத் தளபதிக்குரிய பதவியும், செல்வாக்குமா என  உள்ளுக்குள் ஒரு வஞ்சகத்தையும் உருவாக்கியிருந்தது.


சுல்தானை மயக்கி சுகபோக வாழ்வில் திளைத்தான் மாலிக்கபூர். தன்னை சிறுவயதில் பழித்த சமுதாயத்தின் பேரில் ஏற்பட்டிருந்த வஞ்சம், கில்ஜி கைகளைக் காட்டும் தேசங்களையெல்லாம் துவம்சம் செய்வதில் கழிந்து கொண்டிருந்தது. இதோ..இன்று தேவகிரி..நாளை..எதுவோ..?!


"மாலிக்..இங்கு தனியாக நின்று கொண்டு என்ன சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய்..? " கேட்டபடியே வந்து கொண்டிருந்தான் மெஹமூத். கில்ஜியின் படைத்தளபதிகளில் ஒருவன்.


சட்டென தனது நினைவலைகளில் இருந்து விடுபட்ட மாலிக் கபூர், திரும்பி நோக்கினான். பெண்ணாக இருந்து ஆணாக மாறினாலும் அவனிடத்தில் எழுந்த நளினம் சற்றும் மாறவேயில்லை என்பதை,  எதிரே வந்து கொண்டிருந்த மெஹமூத்தின்  கண்கள் உணர்ந்து கொண்டன.


" கில்ஜி, இவனிடத்தில்  மயங்கியதில் வியப்பே இல்லை..! " என மனதிற்குள் நினைத்தவனாய் மாலிக்கபூரை நெருங்கினான், கில்ஜியின் முதன்மைப் படைத்தளபதிகளில் ஒருவனான மெஹமூத்.


" மெஹமூத்..வரவேற்கிறேன்..நம்முடைய தேவகிரி யுத்தம் சுல்தானின் விருப்பப்படி நிறைவேறிவிட்டது. எனவே, எப்போது தில்லி செல்வது என எண்ணிக் கொண்டிருக்கிறேன்." என்றான் பலத்த யோசனையோடு மாலிக்கபூர்.


" மாலிக்..நமது சுல்தானுக்கு தேவகிரியில் கிடைத்தது பெண்கள் மாத்திரமே, பொன்னோ, மணியோ அல்ல..ஆனால் சற்றே தூரத்தில் இருக்கும் காகதீயப் பேரரசினை வீழ்த்தினால் வைரங்களாலேயே நமது சுல்தானை நீராட்டலாம்.."


" மெஹமூத்..என்ன சொல்கிறாய்..? "


" ஆம்..மாலிக்..! புகழ்பெற்ற வைரச் சுரங்கங்கள் நிறைந்த மண் தான் காகதீயப் பேரரசு, நமது படைகளை தில்லிக்கு கொண்டு செல்வதை விட இப்படியே காகதீயப் பேரரசை நோக்கிச் செலுத்தினால் , நமது கருவூல  நிலவறை வைரங்களாலேயே  நிறையும்.!.நமது சுல்தானின் மனமும் குளிரும்..! "


" நல்ல யோசனை தான்..ஆனாலும், தொடர்ந்து படைகளை நடத்திச் செல்வது வீரர்களது உற்சாகத்தைத் தணிக்கும் செயலாயிற்றே..? " என்றான் சந்தேகத்துடன் மாலிக்.


" அந்தக் கவலையே வேண்டாம்..வீரர்கள் திரட்டும் கொள்ளையில் ஒரு பகுதியினை அவர்களுக்கே பரிசளிப்பதாக அறிவித்தால் போதுமானது..காகதீயப் பேரரசின் வைரங்கள் எல்லாம் நமது வசமாகி விடும்." என்று பேராசை காட்டினான் மெஹமூத்.


" தளபதியாரே நல்லதொரு யோசனையைக் கூறியிருக்கிறீர்..இரண்டொரு தினங்கள் ஓய்வுக்குப் பின் காகதீயப் பேரரசின் தலைநகரான வாரங்கல்லை நோக்கி நமது படை நகரட்டும் என்றான் "..! 

மாலிக் கபூர்.


                  *                   *                   *


தனது தேசத்திற்கு நேரப் போகும் இன்னல்களின் விளைவினை அறியாத காகதீயப் பேரரசின் மன்னன் பிரதாப ருத்ரதேவன் வைரங்களைத் தேடி தனது படைகளுடன் மலைத் தொடர்களில் பயணித்துக் கொண்டிருந்தான்.


 எருமைகள், ஆடுகள் சகிதம் மலையனின் மலைஜாதியினர் தாங்கள் வளர்த்த கழுகுகளை, அவற்றின் கூரிய நகங்கள் தங்களது கரங்களைக்  காயப்படுத்தா வண்ணம், கனத்தத்  துணிகளை தங்களது இரு கைகளில் சுற்றிக்கட்டிக்  கொண்டவர்களாய், இடையில் அணிந்த கச்சையோடு, திறந்த மார்பில் காட்டு விலங்குகளின் பல்லையும், நகங்களையும் அணிகலனாய் அணிந்து கொண்டு, அவர்களுக்கே உரித்தான மலைஜாதியினர்  பாடலொன்றைப் பாடியபடியே, மலைகளில் தங்களது பயணத்தை உற்சாகமாகத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.


_ தொடரும்..


** எனது இந்தியாவில் எஸ்.இராமகிருஷ்ணன். 


மற்றும் பல வடதேசத்து கதாசிரியர்கள் மாலிக்கபூரை அரவாணி என்றே பதிவு செய்திருக்கிறார்கள்.  அத்தோடு மாலிக்கபூர் கில்ஜியோடு  உறவு பூண்டிருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


# அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages