கவிஞர் அனுராஜ்
21.01.21
#மலை_நாட்டு_மங்கை_21
#வகுக்கப்_பட்டது_தப்பிக்கும்_திட்டம்.
வானில் பனிக் காலத்து நிலவு தன் அரைகுறை வெளிச்சத்தை பூமிக்கு வழங்கிக் கொண்டிருந்தது. இரவுக் காவலர்கள் மதுரை நகர வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். இரவு வேளையிலும் மதுரை நகரின் வணிக அங்காடிகளில் சுறுசுறுப்பான வணிகம் நடந்தேறிக் கொண்டிருந்தது. தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற நகரமல்லவா..மதுரை..!
யவனக் காவல் வீரர்கள் கனத்த கவசங்களைத் தரித்துக் கொண்டும், கனமான காலணிகளை அணிந்து கொண்டும் டக்..டக்கென நிலமதிர நடந்து கொண்டிருந்தார்கள். புரவிகளில் வீதிகளின் வழியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தவர்களும் நிறைய காணப்பட்டார்கள். வீதிகளின் விளக்குக் கம்பங்களுக்கு இரண்டாவது முறையாக எண்ணெய் விட்டபடி சென்று கொண்டிருந்தார்கள் இரவுப் பணியாளர்கள். மாறவர்ம குலசேகரரது காலத்தில் கூட இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் நகரத்தினுள் காணப்பட வில்லையே, இப்போது ஏன் திடீரென பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது என்பது மக்கள் எவருக்கும் புரியவில்லை.
மூன்றாம் ஜாமத்திற்கான ஆலயத்தின் மணி ஓசை எழுந்து அடங்கியது. தனது மாளிகையை விட்டு பின்புற வழியாகவே வெளியேறிய ஜமாலுதீன், சுற்றும் முற்றும் வாசலில் நின்றபடியே உன்னிப்பாய் கவனித்தான். எவரும் சுற்றுப் புறங்களில் காணப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவனாய், மெல்ல நடக்கத் தொடங்கி, சிறிய சந்துகளையே தேர்ந்தெடுத்து நடந்து கொண்டிருந்தான். பிரதான வீதிகள் குறிக்கிட்டாலும், அதைத் தவிர்த்தவனாய் சிறிய சந்துகளிலும், இருளடர்ந்த தெருக்களிலுமே நடந்து சென்றவன், ஒரு வழியாக வணிக வீதியை அடைந்ததோடு, வீரபாண்டியனை சந்திக்க விரும்பிய வணிகக் கிட்டங்கியின் பின்புற வாசலை இருள் சூழ்ந்த மாளிகை ஓரங்களிலேயே நடந்து சென்றடைந்தவன், வணிக கிட்டங்கியின் பின்புற வாசலை அணுகியதோடு, அதனை மெல்ல தட்டவும் செய்தான். சில நாழிகைப் பொழுதில் உள்ளிருந்து ஒரு வெளிச்சம் கதவினை நோக்கி நகர்ந்து வருவதை கதவின் இடைப்பட்ட பகுதியில் கண்டு கொண்டவனாய், கதவினைத் திறந்ததும் உள்ளே நுழைய ஆயத்தமாய் நின்றான்.
கதவினை நோக்கி வந்த வெளிச்சம், சட்டென அணைந்ததோடு, கதவிற்கு அப்பால் இருந்து, " யாரது..? " என்ற கேள்வியும் கடுமையாக எழுந்தது.
" நான் ஜமாலுதீன்..காயலில் இருந்து வந்திருக்கிறேன்..! "
இவனது பதில் கதவிற்கு அப்பால் நின்றிருந்தவனுக்கு திருப்தியை தந்திருக்க வேண்டும், கதவானது சட்டெனத் திறக்கப் பட்டது.
ஆனால்..ஜமாலுதீனே எதிர்பாராத ஒருவன் எதிரே நின்றிருந்தான்.
திறந்த கதவுக்கு அப்பால் தேவப்பெருமாள் நின்றிருப்பதைக் கண்டதும், சற்றே திகைத்த ஜமாலுதீன்,
"வணிகரே, தங்களது ஊருக்குச் செல்வதாக என்னிடம் புரவியைப் பெற்றுக் கொண்டு வந்தீர்கள்..இங்கு இருக்கிறீர்களே..? ஊருக்குச் செல்லவில்லையா..? "
என்றான் ஜமாலுதீன் தன் குரலில் இகழ்ச்சியைக் காட்டியவனாய்.
" குதிரை வணிகரே..ஊருக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்..இளவரசரை எப்போதும் சந்திக்க இயலுமா..? " என்றான் அவனும் விஷமம் தோய்ந்த குரலில்.
" உண்மை தான்..ஏற்றுக் கொள்கிறேன்.."
" குதிரை வணிகரே..இன்றையச் சூழல் அபாயகரமானது..! சற்று எச்சரிக்கையுடனேயே நாம் நடந்து கொள்வது நல்லது..! "
" மறுக்கவில்லை..என்னால் உணரவும் முடிகிறது..! அதனால் தான் இங்கு வரும்போது மறைந்தும், இருளடர்ந்த பகுதிகளிலேயே நடந்தும் வந்தேன்..! "
" நல்ல காரியம் செய்தீர்கள்..! ஆனால் இதுபோல் வாசலில் நின்று அனைத்தையும் பேசிக் கொண்டிருப்பது ஆபத்தல்லவா..! வாருங்கள் ..உள்ளே செல்லலாம்." என்றபடி தேவப்பெருமாள் முன் செல்ல, அவனைத் தொடர்ந்தான் ஜமாலுதீன்.
மாடிப்படிகள் வழியாக முதல் தளத்தை அடைந்த இருவரும், இரண்டாவதாக காணப்பட்ட அறைக்குள் நுழைந்தனர். அங்கு ஏற்கனவே ஆசனத்தில் அப்துல்லா வாஸப்போடு, வீரபாண்டியனும், நிலமங்கையும் வீற்றிருந்தார்கள். மூவரையும் சுற்றிச் சுழன்ற ஜமாலுதீனின் கண்கள் இறுதியாக நிலமங்கையின் மீது வந்து நிலைத்தது.
காற்றிலாடும் கொடியானது பற்றிக்கொள்ள எதையோ தேடி படபடத்துக் கொண்டிருப்பதைப் போல,
இமைகள் துறுதுறுக்க வைத்த விழி வாங்காமல் புதிதாய் நுழைந்த தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் அவ்விளம்பெண் அதீத அழகில் இருக்க, அவள் அமர்ந்திருந்த தோரணை அலட்சியமாகவும் தென்பட்டது, அதே வேளை அதிகாரத் தோரணையாகவும் காணப்பட்டது. இதழோரம் இலேசாய் அரும்பிய புன்னகை கூட அவளது அழகினைப் பன்மடங்கு கூட்டிக் காண்பித்தது. தனது இடது கரத்தை தொடையிலும் வலது கரத்தை ஆசனத்தின் கைப்பிடியிலும் வைத்தபடி அவள் அமர்ந்திருந்த கோலம் அவள் நாடாளப் பிறந்தவள் என்பதைப் புலப்படுத்த, தான் இதுவரை சந்தித்த பெண்களுக்கெல்லாம் மேலான அழகில் எதிரே அமர்ந்திருப்பவள் பார்வையில் பட, ஆச்சர்யமும் திகைப்பும் கொண்டவனாய் அறைக்குள் நுழைந்தான் ஜமாலுதீன்.
அவனது பார்வையின் பொருளுணர்ந்து கொண்ட அப்துல்லா வாஸப், " ஜமாலுதீன் , வேணாடு வேந்தரின் செல்வ மகள், நிலமங்கை.." என்றான் புன்சிரிப்புடன்.
" ஓ..மலை நாட்டு மங்கையோ..! "
" ஆம்..மலை நாட்டு மங்கை தான் , ஆனால் பெண் தானே என எளிதாய் எண்ணி விடாதே..! சில நொடியில் எதிராளிகளை எமனிடம் அனுப்பும் திறன் வாய்ந்தவள்..! " என்ற வாஸப்பின் அறிமுகம் , அவளிடம் சற்று எச்சரிக்கையாகவே இரு, என ஜமாலுதீனிடம் கூறுவதைப் போலவும் இருந்தது.
" அவர் அமர்ந்திருக்கும் தோரணையிலேயே புலப்படுகிறது அது..! " என்றபடி சிரித்தான் ஜமாலுதீன்.
இருவரும் உரையாடுவதைப் பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த வீரபாண்டியன்.
" நாம் இங்கு கூடியிருப்பதன் காரணம் எதனால் என்று பேசலாமா..? " என்றான் சற்று எரிச்சலுடன். நிலமங்கை குறித்து இருவரும் உரையாடியது பிடிக்காதவனாய்.
" ம்..ம்..பேசலாம்..! என்றான் ஜமாலுதீன்.
" அனைவரும் கவனியுங்கள், இப்போது மதுரை நகர் மட்டுமின்றி, பாண்டிய நாடே சுந்தரபாண்டியரின் கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறது. சுந்தரபாண்டியர், தான் மன்னனாக முடிசூடிக் கொள்வதற்காக தனது உறவுகளையே எதிர்க்கவும் , பகைக்கவும் துணிந்து விட்டார். அதுமட்டுமின்றி அவரது சகோதரரான வீரபாண்டியரை சிறைசெய்து சிறையில் தள்ள துடித்துக் கொண்டிருக்கிறார். அவரது சிறிய தந்தையர் இருவரையும் கூட சிறைப்படுத்த முயற்சித்ததாக அரண்மனைக் காவலன் ஒருவன் தெரிவித்து விட்டுப் போனான். ஆகவே பதவி மோகம் பிடித்தலையும் சுந்தரபாண்டியர் தனது சகோதரன் என்றும் பாராமல் இளவரசர் வீரபாண்டியரை சிறைசெய்ய துடித்துக் கொண்டிருப்பதனால், இவரை இங்கிருந்து தப்புவிக்கும் பெரும் பொறுப்பை விக்கிரம பாண்டியர் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். "
அப்போது இடையில் குறிக்கிட்ட ஜமாலுதீன், " இளவரசரை தப்புவித்து எங்கு கொண்டு செல்வது..! காயல் உட்பட பாண்டிய நாடே சுந்தரபாண்டியரின் கூலிப்படைகளால் தான் நிரம்பி வழிகிறது."
" ஜமாலுதீன், இளவரசரை வீரதவளப் பட்டணத்திற்கு அழைத்துச் செல்லும் படி உத்தரவு..அதை நாங்கள் கவனித்துக் கொள்வோம்..! உன்னால் ஆக வேண்டிய ஒரு பணியும் உள்ளது..! " என்றான் வாஸப்.
" சொல்லுங்கள் செய்யக் காத்திருக்கிறேன்..! "
" நாங்கள் இங்கிருந்து விழா நாளில் தப்பிக்க வேண்டுமானால், வீரதவளப் பட்டணத்திற்குச் செல்ல மதுரை நகரின் பிரதான வீதியான ராஜவீதியை கடந்தாக வேண்டும். அதை கடந்து விட்டால் வடமேற்கு திசை நோக்கி நகர எங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை..! இந்த இடத்தில் தான் உனது உதவி தேவைப்படுகிறது..! " சொல்லி நிறுத்தினான் அப்துல்லா வாஸப்.
" என்ன மாதிரியான உதவி..? "
இதுவரை பேசாமல் இருந்த வீரபாண்டியன் பேசத் தொடங்கினான்.
" ஜமாலுதீன்..நான் இந்த மது்ரை நகரை விட்டு வெளியேற வேண்டும், ஆனால் நாற்புறமும் காவலைப் பலப்படுத்தி எப்படியாவது என்னைச் சிறைப்படுத்தி விட வேண்டுமென்ற எண்ணத்தில் துடித்துக் கொண்டிருக்கும் சுந்தர பாண்டியனது கண்களில் மண்ணைத்தூவி விட்டு, இங்கிருந்து நான் அகல உத்தேசித்து உள்ளேன். அதற்கு உகந்த நாளாக வேலனின் வெறியாட்டத் திருநாள் அன்று மதுரையை விட்டுச் செல்வது
என நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களது பயணத்தை தடைச் செய்ய சுந்தரபாண்டியன் பலவழிகளில் முயற்சிக்கலாம். எனவே தான் அன்றைய நாளில் உனது உதவியும் தேவைப்படுகிறது." என்றவனாய், ஜமாலுதீனை தன்னருகே அழைத்து, அவனது காதில் ரகசியமாக சில விஷயங்களைக் கூறியதோடு,
" ஜமாலுதீன்..இதை சரியாக செய்து விடு.. மறந்து விடாதே..! " என்றான் கண்டிப்பான குரலில் வீரபாண்டியன்.
" இளவரசே, தங்களின் திட்டம் மிகச் சரியானது..நானும் ஆமோதிக்கிறேன்.. என்னை வேலனின் வெறியாட்டத் திருநாளன்று எதிர்பார்க்கலாம்..தாங்கள் எதிர்பார்த்த உதவியோடு..! " என்றான் கம்பீரமாய் ஜமாலுதீன்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக