22.01.21 மலை_நாட்டு_மங்கை_22 பறிபோன_கோஹினூர்_வைரம் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 22 ஜனவரி, 2021

22.01.21 மலை_நாட்டு_மங்கை_22 பறிபோன_கோஹினூர்_வைரம்

 


கவிஞர் அனுராஜ்


22.01.21


#மலை_நாட்டு_மங்கை_22


#பறிபோன_கோஹினூர்_வைரம்


ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்களும், ஆங்காங்கே  சலசலத்து ஓடிக் கொண்டிருந்த  நீரோடைகளும், காணுமிடமெங்கும் மரகதக் கம்பளத்தை விரித்தது போலிருந்த பச்சைப் புல்வெளிகளும், மலைக் கானகத்தின் பருத்த, நெடிய பலத்தரப்பட்ட மர வகைகளும், கொடிய விலங்குகளோடு, அரிய வகைப் பறவைகளும் காணப்பட்ட அவ்விடம் ரம்மியத்தோடு கூடவே ஒருவகையான அச்சத்தையும் சேர்த்தே விளைவித்துக் கொண்டிருந்தது. நாசியை வருடியக் காற்றிலும் பலவகையான மணங்களின் கலவை போட்டி போட்டுக் கொண்டு உள்நுழைந்தது.   காகதீய வீரர்களோடு, மலைஜாதி மக்களும் இணைந்து  சிறு சிறு குழுவாக தொடர்ந்த பயணம் உயர்ந்த மலைத் தொடர்களின் உச்சியில் சென்று நிறைவடைந்தது.


மலைகளுக்கு கீழாக ஓடிய படுபயங்கர பள்ளத் தாக்குகள் பாறைகளினாலும், மண்ணால் சூழ்ந்து காணப்பட்டாலும், ஆங்காங்கு வைரப் படிவங்கள் மழைக்கால வெள்ளங்களில் அடித்துவரப் பட்டு, அவைகள் மண்ணில் படிந்தும் கதிரவனின் ஒளியில் பிரகாசித்தும் தங்களது இருப்பை புலப்படுத்திக் கொண்டிருந்தன.


பிரதாப ருத்ரதேவனின் ஆட்கள் வந்து சேர வேண்டிய இடத்தினை அடைந்ததும், மலை ஜாதியினரின் தலைவனான மலையன், தங்களோடு கொண்டு வரப்பட்ட எருமைகளின் கழுத்தினில் மாலைகளை அணிவித்ததோடு, ஏதேதோ மந்திரங்களை முழங்கியவனாய் இறைவனை வழிபாடு செய்துவிட்டு எருமைகளை பலியிட்டான். எருமைகளின் குருதி தனியாக பாண்டங்களில் பிடித்து வைக்கப் பட்டது. பின், எருமையின் தோலினை உரித்ததோடு, பெரியபெரிய துண்டுகளாக அவைகள் வெட்டப் பட்டன. வெட்டப் பட்டத் துண்டுகளில் குருதியினை மேலும் தோய்த்தவனாய் , அந்த மலை பிரதேசமெங்கும்

அம்மாமிசத் துண்டுகளை பள்ளத்தாக்குகளில் வீசியெறியச் செய்தான். பின் அவர்கள் கொண்டு வந்த கழுகினை, அம்மாமிசத் துண்டுகளை எடுத்துவரப் பணித்தார்கள். மலைப் பிரதேசமெங்கும் பறந்த கழுகுகள் வீசப்பட்டிருந்த மாமிசத் துண்டுகளை தங்களது கூரிய நகங்களால் பற்றியபடி மலை உச்சிக்கு கொண்டு வர, பிரதாப ருத்ரதேவனின் வீரர்கள் மாமிசத்தில் ஒட்டப் பட்டிருந்த வைரப் படிவங்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அம்மாமிசத் துண்டுகளை குருதியில் தோய்த்து வீசியெறிந்தார்கள். தொடர்ந்து அப்பணி மீண்டும் மீண்டும்  நடந்தேறிக் கொண்டிருந்தது.


அரசருக்கென தனியான கூடாரம் அமைக்கப் பட்டிருந்தது. 

அனைத்து வீரர்களுக்கும், மலைஜாதியினருக்குமான உணவு அங்கேயே தயாராகிக் கொண்டிருந்தது.


வைர வேட்டை நடந்து முடிய ஒரு வார காலமாகலாம், அல்லது ஒரு மாத காலமும் ஆகலாம். அது பள்ளத்தாக்கில் படிந்திருக்கும் வைரப் படிவங்களைப் பொறுத்தே அமையும்.


வைர படிவங்கள் கிடைப்பதைப் பொறுத்து, மலைஜாதியினருக்கு பொன்னும், பொருளும் மன்னன் வாரி வழங்குவான். வைரப்  படிவங்கள் சேகரிக்கும் காலம் வரை அனைவரும் அம்மலையிலேயே கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்கி விடுவார்கள்.


பிரதாப ருத்ரதேவன் மற்றும் அவனது வீரர்கள் வைர வேட்டைக்காக வந்து ஒரு வார காலத்திற்கும் மேலாகி விட்டது. அன்று அதிகாலை, மலை உச்சியில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்த பிரதாப ருத்ர தேவனின் கண்களில் தோன்றிய அந்த காட்சி பலத்தக்  கலக்கத்தை உண்டு பண்ணியது. தூரத்தில் தெரிந்த புழுதிப் படலம், வானில் எழுந்ததோடு, அம்மலை பிராந்தியத்தில் பெரிய அதிர்வலையை எழுப்பியபடி நெருங்கிக் கொண்டிருக்க, காகதீய பேரரசன் பிரதாப ருத்ரதேவன் புரிந்து கொண்டான். தூரத்தில் தெரிவது மாலிக்கபூரின் படைகள் என்று..!  உடனே தனது வீரர்கள் அனைவரையும் பாசறைக்கு திரும்பும் படி பணித்தவன். வைர வேட்டையை முடித்துக் கொண்டவனாய் தனது தலைநகரை நோக்கி விரையத் துவங்கினார்கள். ஏனெனில் நான்கைந்து நாட்களில் மாலிக்கபூரின் படைகள் வாராங்கல்லை அடைந்து விடும் என்பது திண்ணமாகத் தெரிந்தது.


எதிரிகள் தலைநகரை அடைவதற்குள் தான்  அடைந்து விட வேண்டுமென்ற பதட்டமும், வேகமும் தொற்றிக்கொள்ள பிரதாப ருத்ரதேவனும், அவனது வீரர்களும்  வேகமாய் தங்களது புரவியை விரட்டிக் கொண்டு  தலைநகர் வந்து சேர்ந்தனர்.


முதலமைச்சருக்கும், படைத்தளபதிக்கும்  மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. வைர வேட்டையை விரைவில் முடித்துக் கொண்டு மன்னன் திரும்பியது அவர்களுக்கு திகைப்பைத் தந்தது எனினும் ஆனால் அதைத் தொடர்ந்து மன்னனின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அயர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.


" முதலமைச்சரே..தளபதியாரே நம்முடைய படைகளை அணிவகுத்து நிறுத்துங்கள், மாலிக்கபூரின் படைகள் நமது எல்லைக்குள் பிரவேசித்து விட்டன.."


படைத்தளபதியும், முதலமைச்சரும் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள்.அங்கு அதன்பின் ஒரே களேபரமாய் இருந்தது. சரியாக இரண்டு ஜாமப் பொழுதில் காகதீயப் பேரரசின் வீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, அணிவகுப்பினை தனது புரவியில் அமர்ந்தபடி பார்வையிட்டுக் கொண்டிருந்தான் பிரதாப ருத்ரதேவன்.


" வீரர்களே..நமக்கு இன்று நேர்ந்திருப்பது சோதனை. பணத்தாசையும், கொலைவெறியும் கொண்ட ஒரு கிராதகனின் பார்வை , செல்வ வளம் கொழிக்கும் நமது தேசத்தின் மீது படிந்திருப்பது நமது துர்பாக்கியமே..! ஆனாலும் அவனை நமது தேசத்தை விட்டு ஓடோட விரட்டியடிக்க வேண்டும்..!  கோயில்களை கொள்ளை அடிப்பதையும், பெண்களை கைப்பற்றித் தூக்கிச் செல்வதுமாய் அராஜகம் புரிந்து கொண்டிருப்பவனை நாம் துவம்சம் செய்து அனுப்ப வேண்டும்.நமது வீரத்தினை அவன் உணர வேண்டும்..! " தொடர்ந்து உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டே போனான் பிரதாப ருத்ர தேவன்.


ஆனால்.. மாலிக்கபூரின் படைகள் சூறாவளியாய் சுழன்றடித்து நுழைந்த போதும், போர்முறைகளை முற்றிலும் புறந்தள்ளியவனாய் அவன் முதியவர், பெண்கள், குழந்தைகள் என ஈவிரக்கமற்று அனைவரையும் வெட்டிச் சாய்த்த போது,  பிரதாப ருத்ரதேவனுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.


தன் முன் தலைவணங்கி, சோகம் ததும்பியவனாய் நின்றிருந்த பிரதாப ருத்ரதேவன் நோக்கி பயங்கரமாய் நகைத்தான் மாலிக்கபூர். அவனது நகைப்பு நாராசமாய் காதில் விழுந்தது பிரதாப ருத்ரதேவனுக்கு.


" ருத்ர தேவா, நாடுகளைக் கைப்பற்றுவதும், அங்குள்ள மக்களைக் கொண்டு அரசினை நிர்வகிப்பதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எனக்கு உடன்பாடில்லாத விசயங்கள். நான் பல தேசங்களை வெல்லப் பிறந்திருக்கிறேன். ஆனால் ஆள்வதற்கு பிறக்கவில்லை..!  ஆட்சி அதிகாரங்களை ஒரு தேசத்திலிருந்து செய்து கொண்டிருப்பது எனக்கு உடன்பாடில்லாத விசயம்..! எனக்குத் தேவையானவை ஒவ்வொரு தேசத்தின் செல்வங்கள் மட்டுமே..! பொன்னும், மணியும், நவரத்தி்னங்களும் 

கொண்டு தில்லி சுல்தானியகத்தை அலங்கரிக்க வேண்டும். உனது நாட்டினை நீயே ஆட்சி செய்து கொள்..! ஆனால் அதற்கு முன் வைரச் சுரங்கங்கள் நிறைந்ததல்லவா உனது தேசம். கோல்கொண்டா, ஓர்க்கல் சுரங்கங்களில் இருந்து நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் வைரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டால், உன்னையும் உனது நகரையும் சேதாரமில்லாமல் விட்டு விட்டு, இங்கிருந்து நகர்ந்து விடுவேன். ஆனால் என்னை ஏமாற்ற முனைந்தாலோ,  நான் கேட்டதை தரமறுத்தாலோ  உனது உடலில் இருந்து தலைத்  தனியே தரையில் உருளும்..!அதற்கு முன் உனது தேசத்தின் அழிவினை முழுதும் நீ கண்குளிரக் கண்டபின் மரணத்தைத் தழுவலாம்..!  இரண்டில் ஒன்றினை நீயே முடிவெடுத்துக் கொள்ளலாம்..".! என்றபடியே பயங்கரமாய் நகைத்தான்.


மாலிக்கபூரின்  வஞ்சக நகைப்பும், தீயினை உமிழ்ந்த கண்களும், அச்சத்தை விளைவிக்க, பிரதாப ருத்ரதேவன் தனது வீரர்களை அழைத்தவனாய், கருவூலத்தில் இருந்த வைரங்களை கொண்டு வந்து மாலிக்கபூரின் காலடியில் கொட்டும்படி பணித்தான்.


தன்முன் கொட்டப்பட்ட வைரப் குவியல்களைக் கண்டு பலமாய் நகைத்த மாலிக்கபூர், 


" பிரதாப ருத்ரா..

ஆண்டுதோறும் நீ சுல்தானுக்கு திறைச் செலுத்தி விடு..உனது தேசத்தை நீயே அரசாட்சி செய்து கொள்ளலாம்..! ஆனால் ..ஒன்றை மறைத்து விட்டாயே..! "


" எதையும் நான் மறைக்கவில்லை..! "


மீண்டும் பலமாய் நகைத்தவனாய் மாலிக்கபூர் , " எங்கே அந்த 

**கோஹினூர் வைரம்..? " என்றான் கொதிப்படைந்தவனாய்.


" அது..அது.."


" அதுவே தான்..! எங்கே அது..? "


" எனது குலதெய்வத்தின் சன்னிதானத்தில் இருக்கிறது..! தயவுகூர்ந்து அதை மட்டும் கேட்காதே..! "


" வைரம் முக்கியமா..! அல்லது உனது குலதெய்வம் முக்கியமா..! விரைவில் முடிவெடு..! உனது தெய்வத்தை சிதைத்து விட்டு, வைரத்தைக் கைப்பற்ற எனக்கு அதிக பொழுதாகாது..! "


கவலையும், சோகமும் பீடித்தவனாய் , தனது குலதெய்வத்தின் சன்னிதானத்தில் இருந்த பெரிய அளவிலான பிரசித்திப் பெற்ற கோஹினூர் வைரத்தையும் மாலிக்கபூரிடம் ஒப்படைத்தான் பிரதாப ருத்ர தேவன்.


கோஹினூர் வைரத்தை கையில் தூக்கிப் பிடித்த மாலிக்கபூரின்  கண்களில் இருந்து எழுந்தது பல குரூர ஒளிச்சிதறல்கள்.


_ தொடரும்..


** இந்தியாவின் பிரசித்திப் பெற்ற கோஹினூர் வைரம் முதன்முறையாக மாலிக்கபூர் வழியாக கொள்ளை போனதோடு, முகலாயர்களின் அரியணையை அலங்கரித்து, ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் மகுடத்தினை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது.


#அனுராஜ்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages