16.02.21- தலைப்பு :அவள் -சிறுகதை - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

16.02.21- தலைப்பு :அவள் -சிறுகதை





"சக்திஅருளானந்தம்


16.02.21


அவள்

*******

"ம்மே..ஏ..ஏ..ஏ..அலறல் அவள்  காதைத் துளைத்து தூக்கத்தைக் கலைத்தது.திடுக்கென்று விழித்துக் கொண்டாள்.எதனால் தூக்கம் கலைந்த்தென்று அவதானிக்க முடியாமல் ஏதாவது பயங்கர கனவு கண்டோமோ என்று தடுமாறினாள்.மீண்டும் இதயத்தைக் கசக்கிப் பிழியும் அலறல்.காதைப் பொத்திக் கொண்டாள்.


தூக்கம் கண்களைக் கட்டிப்போட்டது.இரவு படுக்கையில் விழ பனிரெண்டு மணிக்கு மேலாகிவிட்டது.

பாழாப்போன பொழப்பு அப்படி.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி நாலே முக்கால் தான்.இனி விடியும் வரை இப்படித்தான்.நன்றாகத் தூக்கம் அரும்பும் நேரம் மீண்டும் ஏதோ ஒர் ஆட்டின் ஜீவ மரணப் போராட்டத்தில் எழும் உச்சகட்ட அலறல் அடிவயிற்றில் கத்திக் குத்தாய் இறங்க தூக்கம் தொலைந்து போகும்.தூங்கவும் முடியாமல், விழித்துக் கொண்டிருக்கவும் முடியாத அவஸ்தை.ஞாயிற்றுக்கிழமை என்றாலே இந்தக் கொடுமைதான்.ச்சே...ஒன்றும் செய்ய முடியாத ஊமைக் கோபத்தில் தலையணையைக் குத்தினாள்.


" ம்மே..."பரிதாபமாய் ஆடொன்று குரல் கொடுக்க அதற்கு எதிரொலி போல குட்டி ஆட்டின் பயங்கலந்த குரல் கம்மி ஒலித்தது.மனம் பொறாமல் எழுந்து வந்து ஜன்னல் வழியே பார்த்தாள்.குட்டி ஆடு ஒன்று கட்டப்பட்டிருக்க தாய் ஆடு அவன் கால்களுக்கிடையில் அகப்பட்டுக் கொண்டிருந்தது. அது திமிற முடியாது துடித்தது.அதன் வலி அலறலாய் வெளிப்பட..என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள முடியாதக் குட்டி..பூங்குட்டி விடியற் காலை நிசப்தத்தைக் கலைத்தபடி தொடர்ந்து கத்த ஆரம்பித்தது.


"த்தே..கம்முன்னு கெட" அந்தக் குட்டியைப் பார்த்து உறுமியவன் எதிரே வந்து நின்ற அவளை ஆச்சர்யமும் அருவருப்பும் கலந்த பார்வையில் அளந்தபடி "என்னம்மா கறி வேணுமா" கேலியாக கேட்டான்.அவன் கேலியைப் பொருட்படுத்தாமல் "ஏம்ப்பா கறி வெட்டறது ஒன்னோட பொழப்பு..ஒத்துக்கறேன்.அதுக்காக பால் கொடுக்கற ஆடு,பால்குடி மறக்காத குட்டி இதெல்லாம் வெட்டணுமா.ஏதாச்சும் கெடாயாப் பத்து வெட்டு.சென ஆடு, பூங்குட்டி,பால்குடி மறக்காத குட்டி ஆட்டையெல்லாம் வெட்டறது பாவம்னு சொல்லுவாங்க.பாவம் இதுங்க ரெண்டையும் வெட்டாத..விட்டுடு" என்று கெஞ்சினாள்.


இதுங்களப் புடிச்சதே பெருசு.இனிமே புதுசா எங்க போய் ஆட்ட பத்திக்கிட்டு வந்து கசாப்பு போடறது.ஒம் பேச்சக் கேட்டு அவ்வளவுதான்.சரி..சரி..காலங்காத்தால வந்து பொழப்பக் கெடுக்காத.வூட்டுக்குப் போ"கறாராக சொல்லிவிட்டு கத்தியை எடுத்துப் பதம் பார்த்தான்.


அவள் விடாப்பிடியாக "இந்தப் பூங்குட்டியப் பாரு.இத வெட்டுனா எத்தனக் கிலோ கெடச்சிரப்போவுது..."

"யம்மா,பூங்குட்டின்னு எளக்காரமா பேசாத.நம்ம தங்கமணி ஐயாவுக்கு எளங் கறின்னா உசுரு.கறிக்காசு போவ அசால்ட்டா நூறூரூவா தூக்கிப்போடுவாரு".


" காசு கெடைக்குதுன்னா என்னா வேணும்னாலும் செய்வியா.தொழில் தர்மம்னு இல்லியா.."ஆவேசமாய்க் கேட்டால்.


"என்னாது தொழில் தர்மமா!நீ தர்மம் பாத்துதான் தொழில் பண்றியா...பரிகாசமாய்க் கேட்டான்.நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டதுபோலக் குன்றிப் போனாள்.அவன் குத்தல் பேச்சில் உடல் நடுங்கினாலும்," ஆமாய்யா..நா ஒடம்ப

வித்துப் பொழைக்கிறவதான்.ஆனா அந்தத் தொழில்லேயும் தர்மத்தோடுதான்நட்க்கறேன்.ரெண்டு நாளைக்கு முன்னால ஒம்பையன்..இன்னும் சரியா மீச கூட மொளைக்காத சின்னப்பையன் ஐநூறு ரூவா காச வச்சிக்கிட்டு வந்து நின்னான்."இந்த வயசுல கெட்டழியாதேன்னு புத்தி சொல்லி அனுப்புனேன்."


முத்து நாயக்கன் பட்டி சந்தையில் ஆடு பிடிக்க வச்சிருந்த பணத்துல ஐநூறக் காணோம்னு தேடியதும்,கட்டிலின் கீழ்க் கிடந்த்தாக அவன் மகன் வந்து கொடுத்ததும் நினைவுக்கு வர "தாயி..." மேலே பேச முடியாமல் அவளைக் கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.

-சக்தி அருளானந்தம்.


#சிறுகதை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages