24.08.21-மொழி முதல் எழுத்துகள்...என்றால் என்ன...?- பாகம் : 2 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 25 ஆகஸ்ட், 2021

24.08.21-மொழி முதல் எழுத்துகள்...என்றால் என்ன...?- பாகம் : 2





அகன்


தமிழ் தெரிந்து கொள்வோம்.


தமிழ் தெரிந்து கொள்வோம்.


0 = 0 = 0 = 0 = 00 =0 = 0 = 0 = 0



கொஞ்சம் தமிழ்….. கொஞ்சும் தமிழ்…

^^^^++++^^^^+++++^^^^++++^^^^


.....................மொழி முதல் எழுத்துகள்

................................என்றால் என்ன...?

...............................👁☆👁☆👁☆👁☆👁☆👁


.....................................பாகம் - 02.


பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மொழி முதல் எழுத்துகளாக வரும் என்று எடுத்துக் காட்டுகளுடன் கண்டோம்.


அடுத்து மெய் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகளாக வருமா என்று பார்ப்போம்.


02. மெய் எழுத்துகள்.


உயிரெழுத்துகளுக்குச் சொன்னது போல மெய் எழுத்துகளுக்குத் தனித் தனியாக மொழி முதல் எழுத்துகளுக்கான அட்டவணை தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் அனைத்தும் இயல்பாகவே  மெய் எழுத்தில் தான் தொடங்கும்.


உயிர்மெய் எழுத்து என்பது மெய் எழுத்தை முதலாகக் கொண்டு அடுத்து வரும் உயிர் எழுத்தோடு புணர்ந்து(க் + அ = க) உயிர்மெய் எழுத்தாகிறது.


எனவே, மொழி முதல் எழுத்தாக மெய் எழுத்துகள் தான் வரும். மெய் எழுத்துகள் தனித்து மொழி முதல் எழுத்துகளாக வாரா என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் புணர்ந்து உருவாகும் எழுத்துகளை அந்தந்த மெய் எழுத்துகளின் வருக்க எழுத்துகள் என்று கூறுவர்.


உதாரணமாக, க் - உடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் புணரும் போது க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள என உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை ககர வருக்கம் என்பர்.


02. 01. ககர மெய் எழுத்து பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடனும் புணர்ந்து மொழிக்கு முதலில் வரும்.


01. கழனி, 02. காலம், 03. கிண்ணம், 04. கீற்று, 05. குதிரை, 06. கூற்றம், 07. கெஞ்சு, 08. கேள்வி, 09. கைதி, 10. கொடி, 11. கோழி, 12. கெளரவம்.


02. 02. ஙகர உயிர்மெய் எழுத்துகள்.


ஙகர வருக்க எழுத்துகள் அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும் என்று நன்னூல் நூற்பா சொல்லுகிறது.


அங் ஙனம் - அப்படி எனப் பொருள் தரும்.

இங் ஙனம் - இப்படி எனப் பொருள் தரும்.

எங் ஙனம் - எப்படி எனப் பொருள் தரும்.

யாங் ஙனம் - எப்படி எனப் பொருள் தரும்.


இவை மொழிக்கு இரண்டாம், மூன்றாம் எழுத்துகளாக வருவதாலும் ஙனம் என்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்பதாலும் நான் ஙகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டையும் மொழி முதல் எழுத்தாகக் கருதவில்லை.


02. 03. சகர உயிர்மெய் எழுத்துகள்.


சகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

ச, சை, செள மூன்றும் வடமொழி சொற்களான சக்கரம், சைகை, சைத்தன்யா, செளக்கியம், செளபாக்கியம் பொன்ற சொற்களில் மொழி முதல் சொல்லாக வரும் தமிழ் மொழி இவற்றை வட சொற்கள் என்று ஏற்றுக் கொள்கிறது.


01. சலவை, 02. சாத்தன், 03. சிகரம், 04. சீப்பு, 05. சுமங்கலி, 06. சூலம், 07. செயல், 08. சேவல், 09. சைவம், 10. சொல், 11. சோறு, 12. செளரி.


02. 04. ஞகர உயிர்மெய் எழுத்துகள்.


ஞகர வருக்க எழுத்துகளில் ஞ, ஞா, ஞெ, ஞொ என நான்கு எழுத்துகள் மட்டுமே மொழி முதலில் வரும். மீதமுள்ள எட்டு எழுத்துகள் மொழி முதலில் வாரா.


ஞ - ஞமலி(நாய்), ஞலவல்(மின்மினிப் பூச்சி),

ஞா - ஞாயிறு(கதிரவன்), ஞாலம்(உலகம்) 

ஞெ - ஞெகிலி(தீப்பொறி), ஞெலிகோல்(தீக்கடையும் கோல்)

ஞொ - ஞொள்ளுதல்(இளைத்தல்)


இவற்றில் ஒரு சில சொற்களைத் தவிர மற்ற சொற்களை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை.


அவை இலக்கியங்களில் மட்டுமே காணப் படுகின்றன.


02. 05. டகர உயிர்மெய் எழுத்துகள்.


டகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 06. ணகர உயிர்மெய் எழுத்துகள்.


ணகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 07. தகர உயிர்மெய் எழுத்துகள்.


தகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

01. தங்கம், 02. தாயகம், 03. திட்டம், 04. தீவனம், 05. துணிவு, 06. தூறல், 07. தெரு, 08. தேனீ, 09. தைலம், 10. தொடர், 11. தோசை, 12. தௌவை.


02. 08. நகர உயிர்மெய் எழுத்துகள்.


நகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.


01. நயம், 02. நாணயம், 03. நிம்மதி, 04. நீலம், 05. நுங்கு, 06. நூதனம், 07. நெய், 08. நேர், 09. நைகை, 10. நொடி, 11. நோட்டம், 12. நௌவி.


02. 09. பகர உயிர்மெய் எழுத்துகள்.


பகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.


01. பயணம், 02. பாட்டு, 03. பிஞ்சு, 04. பீழி, 05. புன்னகை, 06. பூக்கள், 07. பெயர், 08. பேச்சு, 09. பையன், 10. பொறி, 11. போட்டி, 12. பௌவம். 


02. 10. மகர உயிர்மெய் எழுத்துகள்.


மகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

01. மரம், 02. மாங்காய், 03. மிளகு, 04. மீசை, 05.முகப்பு, 06. மூங்கில், 07. மெய், 08. மேடு, 09. மைனா, 10. மொய், 11. மோதகம், 12. மௌனி.


02. 11. யகர உயிர்மெய் எழுத்துகள்.


யகர வருக்க எழுத்துகள் அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடு மட்டும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.


யவனர், யவை(ஒருவகை நெல்),

யானை, யாழ், யாது,

யுகம், யுதிட்டிரன், யுக்தி,

யூகி, யூதர்,

யோகம், யோசனை, யோக்கியர்,

யெளவனம்

என ஆறு எழுத்துகள் மொழி முதல் எழுத்துகளாக வருகின்றன.


இவற்றில் சில வட மொழி எழுத்துகள் என்ப்தைக் காண்க.


02. 12. ரகர உயிர்மெய் எழுத்துகள்.


ரகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 13. லகர உயிர்மெய் எழுத்துகள்.


லகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 14. வகர உயிர்மெய் எழுத்துகள்.


வகர வருக்க எழுத்துகள் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகள் மட்டும் மொழிக்கு முதலில் வரும்.


01. வட்டம், 02. வாசல், 03. வில்வம், 04. வீரம், 05. வெகுளி, 06. வேலி, 07. வையகம், 08. வௌவால்.


02. 15. ழகர உயிர்மெய் எழுத்துகள்.


ழகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 16. ளகர உயிர்மெய் எழுத்துகள்.


ளகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 17. றகர உயிர்மெய் எழுத்துகள்.


றகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.


02. 18. னகர உயிர்மெய் எழுத்துகள்.


னகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.

ஆனால், ஙகரம், டகரம், ணகரம், ரகரம், லகரம், ழகரம், ளகரம், றகரம், னகரம் என்று எழுத்தைக் குறிப்பிடும் போது மட்டும் இந்த ஒன்பது எழுத்துகளும் மொழி முதல் எழுத்துகளாக வரும்.


அடுத்து இதுவரைச் சொன்னவற்றைத் தொகுத்து அடுத்த பதிவு செய்கிறேன்.


..............- "அகன்" @ அனுராதா கட்டபொம்மன்.

...................................................................................24.08.2021.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages