அகன்
தமிழ் தெரிந்து கொள்வோம்.
தமிழ் தெரிந்து கொள்வோம்.
0 = 0 = 0 = 0 = 00 =0 = 0 = 0 = 0
தமிழ் தெரிந்து கொள்வோம்.
0 = 0 = 0 = 0 = 00 =0 = 0 = 0 = 0
கொஞ்சம் தமிழ்….. கொஞ்சும் தமிழ்…
^^^^++++^^^^++++^^^^++++^^^^
............................மொழி முதல் எழுத்துகள்
......................................என்றால் என்ன...?
.....................................👁☆👁☆👁☆👁☆👁
...................................................பாகம் - 03.
நிறைவாக, இதுவரைப் பார்த்ததைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
உயிர் எழுத்துகளில்
பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
மெய்யெழுத்துகளில்
ககரம் பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
சகரம் பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
தகரம் பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
நகரம் பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
பகரம் பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
மகரம் பன்னிரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
வகர வருக்க எழுத்துகள் எட்டு - வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள - மொழிக்கு முதலில் வரும். வு, வூ, வொ, வோ நான்கு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வராது.
யகர வருக்க எழுத்துகள் ஆறு - ய, யா, யு, யூ, யோ, யெள - மொழிக்கு முதலில் வரும். யி, யீ, யெ, யே, யை, யொ ஆறு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வாரா.
ஞகர வருக்க எழுத்துகள் மூன்று - ஞா, ஞெ, ஞொ - மொழிக்கு முதலில் வரும். ஞ, ஞி, ஞீ, ஞே, ஞு, ஞூ, ஞை, ஞோ, ஞெள ஒன்பது எழுத்துகளும் மொழிக்கு முதலில் வாரா.
ஙகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
டகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
ணகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
ரகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
லகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
ழகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
ளகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
றகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
னகர வருக்க எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வாரா.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், உயிர்மெய் எழுத்துகள் இருநூற்று பதினாறும் ஆக மொத்த எழுத்துகள் இருநூற்று இருபத்தியெட்டு ஆகும்.
அதில், மொழி முதல் எழுத்தாக நூற்றியோரு எழுத்துகள் வரும்.
மீதமுள்ள நூற்று இருபத்தேழு எழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா.
விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்குகளும் கூடவே இருக்க வேண்டும் அல்லவா… இருக்கிறது.
இந்த விதிவிலக்குகளைப் பற்றி வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அதை இங்கு எழுதுகிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு பிற மொழி வணிகர்களின் மொழித் தாக்கம் இருந்திருக்கிறது. அவ்வாறு பிற மொழிகளில் இருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தப் பிற மொழிப் பெயர்ச் சொற்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகின்றோம். பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போலப் பிறமொழி வினைச் சொற்களையும் பிற சொற்களையும் பயன்படுத்தக் கூடாது.
முதலில் ரகர, லகரத்தைப் பார்ப்போம்.
இவை இரண்டும் மொழி முதல் எழுத்தாக வரலாகா என்றாலும் பிற மொழிப் பெயர்ச் சொற்களில் மொழி முதல் எழுத்தாக வருகின்றன.
அவ்வாறு வரக் கூடாது என்பதனால் தான் நாம் இந்த இரு எழுத்துகளுக்கு முன்பும் ‘அ, இ, உ’ போன்ற எழுத்துகளைப் போட்டு எழுதுகிறோம்.
உ - ம்:
ரங்கம் - அரங்கம்
ரங்கோலி - இரங்கோலி.
ரகோத்தமன் - இரகோத்தமன்
ரத்தினம் - இரத்தினம்.
ராதை - இராதை.
ராமன் - இராமன்.
ராவணன் - இராவணன்.
ராசா - இராசா.
லதா - இலதா.
லலிதா - இலலிதா.
லட்சியம் - இலட்சியம்
லக்ஷ்மணன் - இலக்குவன்.
ரொட்டி - உரொட்டி.
ரோமம் - உரோமம்.
ரோம் - உரோம்.
இந்த மாதிரிச் சொற்களை உச்சரிக்கும் போது இடது புறம் எழுதியதைப் போல் உச்சரிக்க வேண்டும்.
எழுதும் போது இடத்துக்குத் தக்கவையாக அ, இ, உ போன்ற எழுத்துகளைச் சேர்த்து வலது புறம் உள்ளதைப் போல எழுத வேண்டும்.
கவிதைகளில், பாடல்களில் இயன்றவரை இவை போன்ற ரகர, லகர பெயர்ச் சொற்களைத் தவிர்த்தல் நலம்.
ஆங்கிலத்தில், Knowledge என்ற சொல்லை க்னாலட்ஜ் என்று படிப்பதில்லை. அங்கு K Silent என்பர்.
அது போலத் தான் இந்த அ, இ, உ எல்லாம் தமிழில் Silent.
அரங்கம் என்று எழுதினாலும் ரங்கம் என்றே உச்சரிக்க வேண்டும். இங்கு அ Silent.
இலதா, இராசா என்று எழுதினாலும் லதா, ராசா என்றே உச்சரிக்க வேண்டும். இங்கு இ Silent.
பெயர்ச் சொற்களிலேயே ரகர வருக்க எழுத்துகளில் தொடங்கும் மற்ற எழுத்துகளுக்கு முன்பு ‘அ, இ, உ’ வருவதில்லை.
ரீங்காரம், ரோதனை போன்ற சொற்களைப் பாருங்கள்.
அதே போல சில ‘ல’ எழுத்து மற்றும் லகர வருக்க எழுத்துகளில் தொடங்கும் மற்ற எழுத்துகளுக்கு முன்பு ‘அ, இ, உ’ வருவதில்லை.
லட்டு, லலல்லா, லீலா, லூட்டி போன்ற சொற்களைப் பாருங்கள்
இதுவரை புரிகிறது அல்லவா…?
இன்னொரு விதிவிலக்கையும் பார்ப்போம்.
இதனை ஒலிக் குறிப்புச் சொற்கள் என்று சொல்வோம்.
ஒலிக் குறிப்புச் சொற்கள்.
சில ஒலிக் குறிப்புச் சொற்களை நாம் நமது அன்றாட பேச்சில் பயன்படுத்துவது உண்டு. அவை,
பூனை, மியாவ்… மியாவ் என்று கத்தும்.
சேவல், கொக்கரக்கோ… கொக்கரக்கோ என்று கொக்கரிக்கும்.
காக்கை, கா… கா… என்று கரையும்.
நாய், லொள்… லொள்… என்று குரைக்கும்.
மாடு, ம்மா… ம்மா… என்று கத்தும்.
தாத்தா, கொர்… கொர்… என்று குறட்டை விட்டார்.
இவற்றில் வந்துள்ள மியாவ்… மியாவ்…, கொக்கரக்கோ…. கோக்கொரக்கோ…, கா… கா…, லொள்… லொள்… ம்மா… ம்மா… கொர்… கொர்… என்பவை ஒலிக் குறிப்புகள்.
இந்த ஒலிக் குறிப்புகளில் மொழி முதல் வராத எழுத்துகளும் வருவதுண்டு.
ஆலய மணி, டாண்… டாண்… என்று ஒலித்தது.
சுவற்றில் ஏறிய சிறுவன் டமால் என்று கீழே விழுந்தான்.
டமார்… டமார்… என்று ஓசை எழுப்புவதாலேயே தமுக்குக்கு டமாரம் என்றொரு பெயர் உருவானது.
ஒலிக் குறிப்புச் சொற்களில் மொழி முதல் இல்லாத எழுத்துகள் வருவதுண்டு.
ர, ல எழுத்துகளுக்கும் மட்டும் தான் அ, இ, உ போன்ற எழுத்துகளை சொல்லின் முன்னால் சேர்க்க வேண்டும்.
மற்ற மொழி முதல் வாரா எழுத்துகளுக்கு இந்த ஆ, இ, உ எழுத்துகளைச் சேர்ப்பதில்லை.
…………….....- “அகன்” @ அனுராதா கட்டபொம்மன்.
……….....………………………………………………………….18.08.2021.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக