ரேவா-கடற்போர்_05 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 19 ஆகஸ்ட், 2020

ரேவா-கடற்போர்_05

 








#ரேவா


#கடற்போர்_05


ஸ்ரீவிஜயத்தின் கடற்கரைப் பகுதியில் கடற்கொள்ளையர்களால் எந்த நேரமும் ஆபத்து சூழ்ந்திட வாய்ப்பிருப்பதாக மரக்கல மாலுமி கூறியதில் இருந்து,  அந்தக் கடற் கொள்ளைக் காரர்களை நேரடியாக சந்தித்து விடுவது என்றும், அவர்களுக்கு தகுந்த பாடமொன்றை கற்றுத்தர வேண்டுமென்றும் மனதிற்குள் எண்ணமிட்ட உதயச்சந்திரன், நீரைக் கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த மரக்கலத்தின் முகப்பில் நின்று கொண்டு நீலக்கடலையே வெகுநேரமாய் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தான்.


அந்திப் பொழுது மறைந்து, இரவு கவியத் துவங்கியதும் சுக்லபட்சத்து நிலவு தன் வெண்ணொளியை பரப்பியபடி வானில் காட்சி தரத் துவங்கியது.வானும் கடலும் ஒன்றெனத் திகழ்ந்த அந்த பேரெழில் காட்சியில் சிந்தையை பறிகொடுத்தவனாய் மாறிப் போய் நின்றிருந்த உதயச்சந்திரன் கொள்ளையர்களைப் பற்றியச் சிந்தனையை அறவே இழந்ததோடு, கண்முன் எழுந்த இயற்கையின் எழிலில் தன்னையே மறந்தவனாய் ஆழ்ந்த லயிப்பில் காணப்பட்டவனை, சட்டெனக் கலைத்தது..மரக்கல மாலுமியின் குரல்.


" படைத்தலைவரே..அதோ..நமது மரக்கலத்திற்கு பின் பக்கம் பாருங்கள்..தூரத்தில் இரண்டு புள்ளிகள் தெரிகிறதா..? அதை என்னவாய் இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்..? " என்றான் அச்சமும் திகிலும் கலந்த குரலில்.


இயற்கையின் அழகில் மெய்மறந்து நின்றிருந்தவனை சட்டென மரக்கலத் தலைவனின் குரல் கலைத்ததோடு, மரக்கலத் தலைவன் குறிப்பிட்ட திசையில் தோன்றியக் காட்சியை தானும் பார்க்க முற்பட்டான்..தூரத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள் நன்கு புலப்பட்டதோடு, அவை நெருங்கி வரவர வெளிச்சப் புள்ளிகள் சற்றே பெரிதாகவும் துவங்கியதில் இருந்து, வருபவை கொள்ளையர்களது மரக்கலங்கள் என்பது புலனாகியது..அதுமட்டுமின்றி  அந்த இரு வெளிச்சப் புள்ளிகளும் சந்தேகத்திற்கிடமின்றி தங்களது மரக்கலத்தை நோக்கி தான் வேகமாய் வருகின்றது என்பதும் புலப்பட்டது.


" அவை நம்மை நோக்கி தான் வருகின்றன.." என்றான் குரலில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் உதயச்சந்திரன்.


" ஆம்..கடற்கொள்ளையர்களின் மரக்கலங்கள்.." என்றான் பீதியுடன் மரக்கல மாலுமி.


" விரைந்து வருவதைப் பார்த்தால் இரண்டு நாழிகைக்குள் நம்மை நெருங்கி விடுவார்கள் போலிருக்கிறதே.." என்றான் உதயச்சந்திரன் ஆச்சர்யம் தொனித்த குரலில்.


" உண்மை தான் படைத்தலைவரே..ஆனால் அவர்கள் நமக்கு பின்னால் இருந்து துரத்துவது ஒரு வகையில்  நமக்கு நன்மையே...

அவர்கள் நமக்கு பின்னால் இருப்பதனால் நாம் துடுப்பினை வேகமாகத் துழாவச் செய்து, விரைந்து தப்பி விட முயற்சிக்கலாம்..."


" தவறு..கொள்ளையனைக் கண்டு ஓடுவதா..அவர்கள் இரண்டு மரக்கலங்களில் வருகிறார்கள்..துரத்திப் பிடிக்க முயற்சிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? " என்றான் கோபமாய்.


" துரத்திப் பிடிக்க முயற்சிப்பார்கள்..ஆனால் நாம் ஓடத் துவங்கினால் ஒருவேளை நாம் தப்ப வாய்ப்பிருக்கிறது.." என்றான் மரக்கலத் தலைவன்.


" கோழையின் செயலை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்..நான் சொல்வதை செய்..துடுப்புகள் துழாவுவதை நிறுத்தி விடு..நமது மரக்கலத்தின் பாய்களை இறக்கி விடு.." என்றான் ஏதோ யோசனையுடன் உதயச்சந்திரன்.


" படைத்தலைவரே, வேறு வினையே வேண்டாம்..கொள்ளையர்கள் நம்மை பூண்டோடு கைலாசம் அனுப்ப..துடுப்பு துழாவுவதை நிறுத்தினாலும், பாய்களை கீழே இறக்கினாலும் நமது மரக்கலத்தின் வேகம் மட்டுப்பட்டு விடும்..விரட்டி வந்து கொண்டிருப்பவன் கையில் எளிதாக சிக்கிக் கொள்வோம்.." என்றான் திகிலுடன் மரக்கலத் தலைவன்.


" கவலை கொள்ளாதே..சொன்னதைச் செய்..பாய்மரத் தண்டில் மாலுமிகளை ஏறச் சொல் ..ஒரு பாயை மட்டும் நிறுத்தி விட்டு, மற்றவைகளை கீழிறக்க ஆணையிடு..மரக்கலத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடச் சொல்..துடுப்பு வலிப்பவர்களை சற்று நேரம் அமைதியாக இருக்கச் சொல்..அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்கட்டும்.." என மளமளவென உத்தரவுகளைப் பிறப்பித்தான்.


உதயச்சந்திரனை மனதிற்குள் திட்டியபடியே நகர்ந்த அந்த மரக்கலத் தலைவன், இன்று நமது மரக்கலத்தின் கதி அதோகதி தான் என்ற புலம்பலுடன் அந்த இடத்தை விட்டு உதயச்சந்திரனது கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு மீண்டும் மரக்கலத்தின் பின்பகுதியில் நின்றிருந்த உதயச் சந்திரனுடன் வந்து நின்று கொண்டு தூரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளிகளையே கவனித்துக் கொண்டிருந்தான்.


உதயச் சந்திரனது மரக்கலம், ஒரு பாயின் புடைப்பில் தனது வேகத்தை இழந்து நீரில் நீந்தும் அன்னமென மெல்ல நகர்ந்து கொண்டு இருக்க, துரத்தி வந்து கொண்டிருந்த கொள்ளையர்களின் மரக்கலங்கள் இப்போது கண்ணுக்கு நன்கு புலனாயிற்று..ஆனால் துவக்கத்தில் அவர்களது மரக்கலம் காட்டிய வேகம் இப்போது சற்றே மட்டுப்பட்டிருந்தது.


உதயச் சந்திரனது மரக்கலம் ஏன் வேகத்தை குறைத்துக் கொண்டதோடு, வீணாக  ஆபத்தையும் விலைக்கு வாங்க முற்படுகிறது எனப் புரியாத காரணத்தால் இரண்டு மரக்கலங்களும் , சற்றே தயங்கியவாறே உதயச் சந்திரனது மரக்கலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.


தப்பிஓட வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது, வலிய ஆபத்தை விலைக்கு வாங்க முற்பட்ட உதயச் சந்திரனது செய்கையை மரக்கலத்தில் துரத்தி வந்த கொள்ளையர்களும் உணரத்தான் செய்தார்கள் , எனினும் ஏன் எதிரி ஓடாமல் ஆபத்தை எதிர்கொள்ள விரும்புகிறான் எனப் புரியாமல் , தங்களது மரக்கலத்தின் வேகத்தை மட்டுப் படுத்தியதோடு..சற்றே தயக்கத்தோடு உதயச்சந்திரனது மரக்கலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது கொள்ளையர்களின் மரக்கலம்.


தான் எண்ணியது போலவே கொள்ளையர்களது மனதைச்  சற்றுக் குழப்பியாகி விட்டது குறித்து திருப்தியாய் தலையசைத்துக் கொண்டவன், தனது எண்ணம் 

செயல்படத் துவங்கியது குறித்து மனதிற்குள் மகிழவும் செய்தான்.


" கொள்ளையர்களின் மரக்கலத்திலிருந்து ஒரு எரியம்பு உதயச்சந்திரனது மரக்கலத்தை நோக்கி பறந்து வந்தது..ஆனாலும் அது பயனின்றி கடலிலே விழுந்தது.


உதயச்சந்திரனது மரக்கலத் தலைவன் எரியம்பு பறந்து வரவும் " ஐயோ.." எனக் கதறியவன்..எரியம்பு கடலில் விழுந்ததோடு, உதயச்சந்திரனிடத்தில் இருந்து அப்போது எழுந்த பலத்த நகைப்பொலிக்கும் கோபம் கொண்டவனாய்.. " படைத்தலைவரின் நகைப்பிற்கான காரணத்தை நான் அறியலாமா.." என்றான் இகழ்ச்சி கலந்த குரலில்.


" மரக்கலத் தலைவரே..கொள்ளையனை குழப்பியாகி விட்டது..இனி குழம்பிய குட்டையில் நாம் மீன் பிடிக்க வேண்டியது தான்.." என்றான் சிரிப்பினைச் சற்றும் குறைக்காமல் .


" புரியவில்லையே.."


" வேடிக்கையை மட்டும் பாரும்.." என உதயச் சந்திரன் சொல்லி வாய் மூடும் முன்பாக இரண்டு கொள்ளையர்களின் மரக்கலங்களும் இரண்டு எரியம்புகளை இவர்களது மரக்கலத்தை நோக்கி வீசின. ஆனாலும் அவையும் இவர்களது மரக்கலத்தை எட்டுமுன் கடலில் விழுந்து அணைந்தது..அப்போது எழுந்தது உதயச் சந்திரனது குரல் , சுக்கானை அந்த இரண்டு மரக்கலங்களை நோக்கித் திருப்புங்கள்..துடுப்புகளை வேகமாக துழாவுங்கள்..நாம் அந்த இரண்டு மரக்கலத்தையும் ஊடறுத்து உள் நுழைய வேண்டும் என கத்தினான்.."


உதயச் சந்திரனது கட்டளையில் உள்ள ஆபத்தினை முழுதும் உணர்ந்த மரக்கலத்தலைவன், " படைத்தலைவரே, இரண்டு மரக்கலங்களுக்கு நடுவே நாம் போய் சிக்கினால் ..வேறுவினையே வேண்டாம்..பாக்குவெட்டியில் சிக்கிய பாக்கின் கதி தான் நமக்கு..தங்களது செய்கை..." என்று வார்த்தைகளை முழுதும் முடிக்காமல் வெளியானது பீதியும் அச்சமும் கலந்த குரலில் மரக்கலத் தலைவன்.


" எனது செய்கை மூளைபிசகு உள்ளவன் செயல் போல் தெரிகிறதா..?!

பரவாயில்லை..சொன்னதை செய்..விரைவாக..ம்.." என அதட்டினான் உதயச்சந்திரன்.


உதயச்சந்திரனை எதிர்த்துப் பேசுவது இயலாது என்ற காரணத்தால் அரைமனதுடன் அவனது ஆணையை நிறைவேற்ற விரைந்தான்.


உதயச்சந்திரனது மரக்கலம் தனது பெரும் உடலை அப்படியே திருப்பியதோடு, விரட்டிக் கொண்டு வந்த கொள்ளையர்களின் இரண்டு மரக்கலத்திற்கும் நடுவே வெகுவேகமாக தன் மூக்கை நுழைக்கத் துவங்கியது.


துவக்கத்தில் இருந்தே, கொள்ளையர்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.எப்போதும் இவர்களது மரக்கலத்தை கண்ணில் கண்டதும் பயந்தோடும் மரக்கலங்களையே பார்த்துப் பழகியவர்கள், துணிச்சலாய் வேகத்தைக் குறைத்து எதிர் கொண்ட முதல் மரக்கலம் உதயச்சந்திரனுடைய மரக்கலமே..அது மட்டுமல்லாது..தனது மரக்கலத்தை எந்த துணிவில் நமது இரண்டு மரக்கலங்களுக்கு நடுவே உட்புகுத்த முயற்சிக்கிறான்  என்பதும் புரியாத கொள்ளையர்கள் சற்று நேரம் திகைத்து நின்று விட..உட்புகுந்த உதயச் சந்திரனது மரக்கலம் திடீரென சீன வெடி அம்புகளை எடுத்து இரு பக்கமும் நின்றிருந்த கொள்ளையர்களின் மரக்கலத்தின் பாய்களை பொசுக்கி எரியச் செய்தது..அது மட்டுமல்லாது கொள்ளையர்களின் மரக்கலத்தின் பக்கவாட்டுப் பலகைகளையும் வேல்களினால் உடைத்து பலத்த சேதத்திற்கு ஆட்படுத்தியது.


கோபம் தலைக்கேறிய கொள்ளையர்களின் தலைவன் ஒருவன் தனது குறுவாளை எடுத்து உதயச்சந்திரனது மார்பினை நோக்கி எறிந்தான்..அது மட்டும் தனது பணியை சரியாக செய்திருந்தால் இந்தக் கதை இங்கேயே நிறைவு பெற்றிருக்கும்..

ஆனால் விதியின் செயல் வேறுவிதமாக அல்லவா இருந்தது..பறந்து வந்த குறுவாளை உதயச்சந்திரனது ஹேலடி ஆயுதம் மிக எளிதாக தட்டி விட்டதோடு, பக்கப் பலகையைப் பற்றித் தாவி ஏறிய கொள்ளையர்கள் சிலரையும் பரலோகத்திற்கு அனுப்பி வைத்தது.


சட்டென சுதாரித்த கொள்ளையர்கள்  தங்களது பாணங்களையும், வாளிகளையும் உபயோகப் படுத்த முயற்சிக்கும் போது, இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. உதயச் சந்திரனது மரக்கலம் சட்டென வேகமாய் நகர்ந்ததோடல்லாமல், கொள்ளையர்களின் மரக்கலத்தைத் தாண்டிப் போய் விட, கொள்ளையர்கள் விட்ட பாணங்களும், வாளிகளும் எதிரெதிர் நின்றிருந்த அவர்களின் மரக்கலங்களிலேயே விழுந்து கொள்ளையர்களின் மரக்கலத்திற்கு மேலும் பயங்கர சேதத்தினை விளைவித்து விட்டது..

நடைபெற்றுக் கொண்டிருந்த போரினை மிகுந்த ஆச்சர்யத்துடன் கவனித்துக் கொண்டிருந்த உதயச்சந்திரனது மரக்கலத் தலைவனைப் போலவே, கொள்ளையர்களுக்கும் பிரமிப்பினை ஊட்டுவதாக இருந்தது, உதயச்சந்திரனது போர்முறை.


அது மட்டுமின்றி, வளையங்களாலும், கொக்கிகளாலும் கயிற்றை வீசித் தாவி , உதயச்சந்திரனது மரக்கலத்தை எட்டிய ஒன்றிரண்டு கொள்ளையர்களையும், அவன் வைத்திருந்த வித்தியாசமான ஆயுதத்தால் சரமாரியாக  வெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட கொள்ளையர்கள்..பலத்த தீக்காயங்களுடனும், பற்றி எரிந்து கொண்டிருந்த தீயுடனும்  தங்களது மரக்கலத்தை விரைந்து நகர்த்தவில்லை எனில் , வீணில் இரண்டு மரக்கலங்களும் வெடித்து சிதறி நீரில் மூழ்கி விடும் என்பதை உணர்ந்தவர்களாய்..தங்களது உத்தரவுகளை வேகமாய் பிறப்பித்தார்கள் கொள்ளையர்கள்..

மரக்கலத்தில் பற்றி எரிந்த நெருப்பை அணைக்கவும், மரக்கலத்தை நகர்த்தி செல்லவும் உத்தரவுகளைப் பிறப்பிக்க,  கொள்ளையர்களின் மரக்கலத் தளத்தில்  பெரும் கூச்சலும், குழப்பமும் பலமாய் நிலவியது..


தங்களுக்கு முன் தலைதெறிக்க ஓடும் கொள்ளையரை வெற்றிப் புன்னகை மிளிரக் கண்டு ரசித்த உதயச்சந்திரன், தனது மரக்கலத்தின் சேதத்தினை பார்வையிட்டான்..ஒன்றிரண்டு பக்கப் பலகையில் ஏற்பட்டிருந்த தீக்காயங்களைத் தவிர மரக்கலத்திற்கு பெரிதான பாதிப்பு ஒன்றுமில்லை. நடந்து முடிந்த போரின் விளைவுகள் குறித்து மரக்கலத் தலைவன் வியந்து வியந்து பேசிக் கொண்டிருந்தான் நெடு நாட்களாய்.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages