#ரேவா
#வீரமல்லனின்_கவலை_06
வானில் கதிரவன் மெல்ல மேலேறிக் கொண்டிருந்தான். மரக்கல மாலுமிகள் அவரவர் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரை அழைத்து மரக்கலத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த கொள்ளையர்களைக் கடலில் தூக்கி வீச உத்தரவிட்ட உதயச்சந்திரன், அதே வேளையில் இலேசான காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிலரை மரக்கலத்தின் அடித்தள அறைக்கு தூக்கிச் செல்ல ஆணையிட்டதோடு, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளையும் வழங்கச் செய்து விட்டு, மரக்கலத்தின் மேல்தளத்திற்கு வந்தான்.
உதயச்சந்திரனைக் கண்டதும் வெகு வேகமாய் ஓடி வந்தான் மரக்கலத் தலைவன்..நடந்து முடிந்த போரில் இருந்து உதயச்சந்திரன் மேல் அபாரமான மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுப் போயிருந்தது மரக்கலத் தலைவனுக்கு.
" படைத்தலைவரே..."
" ம்...சொல்லுங்கள்.."
" தங்களுக்கு கடற்போர்களில் அனுபவம் உண்டா..? கடற்பயணமே இது தானே முதல்முறை..? " என்றான் ஆச்சர்யம் தொனித்த குரலில்.
" ஆம்.."
" அப்படியிருக்கையில் கொள்ளையர்களை எவ்வாறு எதிர் கொள்ளத் துணிந்தீர்கள்..? "
" வணிகர்கள் பலர் கூறிய கொள்ளையர்களின் செய்திகள், கொள்ளையர்கள் வணிகர்களின் கப்பல்களைக் கண்டதும் என்னென்ன செய்வார்கள் என்பதை நான் ஏற்கனவே கேட்டு அறிந்திருக்கிறேன்..அவை நினைவில் வரவே அதற்கான முன்னெச்சரிக்கையை நானும் கையாண்டேன்.."
" உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை..நாம் தான் வெற்றி பெற்றோமா..? இது ஒன்றும் கனவில்லையே..?! " என்றான் மரக்கலத் தலைவன்.
" ஏனிந்த சந்தேகம்..மரக்கலத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஒன்றிரண்டு காயங்களைக் கண்டுமா, உங்களுக்கு இது கனவு போல் தோன்றுகிறது..?! " என்றான் சிரித்தபடியே உதயச்சந்திரன்.
" கனவில்லை..தான்..ஆனாலும் நாம் தானா வென்றோம் என்பதை நினைக்கும் போதே பிரமிப்பாய் இருக்கிறது..?!" என்றான் ஆச்சர்யம் தணியாத குரலில் மரக்கலத் தலைவன்.
" இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது..? நாம் தான் வென்றோம்..கொள்ளையர்களை அவர்களது மனநிலையில் இருந்து மாற்றத்தைக் கொணர்ந்து வெற்றியை நம் வசப்படுத்தியிருக்கிறோம்."
" புரியவில்லை.."
" ஓடுபவனைக் கண்டால் விரட்டுபவனுக்கு கொண்டாட்டமாகத் தான் இருக்கும்..ஆனால் ஓடுபவனே ஒரு கணம் எதிர்த்து நிற்க முற்பட்டால் துரத்துபவன் தயங்கி நின்று விடுவான். அந்த தயக்கத்தையே நமது வெற்றிக்கு வழியாக மாற்றியமைத்துக் கொண்டேன்.
நமது மரக்கலத்தின் வேகத்தை குறைத்ததும், எதிரி காரணம் புரியாமல் தவித்தான்..நமது மரக்கலத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப் பட்டதும், ஏற்கனவே குழப்பத்தில் இருந்த அவர்கள் நமது மரக்கலத்திற்கும், அவர்களது மரக்கலத்திற்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட சரியாக மதிப்பிடாது முதலில் போரினைத் துவக்க எரியம்புகளை வீசி அதை வீணாக்கவும் செய்தார்கள், மேலும் அவர்களது குழப்பம் தான் நாம் அவர்களுக்கு நடுவே உட்புகவும் வழி செய்தது, அது மட்டுமின்றி நமது இறக்கப் பட்ட பாய்களை அவர்களது எரியம்புகளிடமிருந்தும் காப்பாற்றியது..கொஞ்சம் நிதானித்திருந்தாலோ, குழப்பமின்றி தெளிவாக இருந்திருந்தாலோ, நாம் ஏன் பாய்களை இறக்கினோம், ஏன் தேவையின்றி அவர்களது இரு மரக்கலத்திற்கு நடுவே நுழைகிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்..ஆத்திரக் காரனுக்கு புத்தி மந்தம் தான். கொள்ளைக் காரர்களிடம் ஆத்திரம் இருந்தது அதுவே அவர்களது அறிவை திரையிட்டு விட்டது." என்றான் உதயச்சந்திரன்.
உண்மை தான் படைத்தலைவரே..நீங்கள் பாய்களை இறக்கச் சொன்னதும், நானும் பயந்தேன்..எங்கே கொள்ளையர்களிடம் விரைவில் அகப்பட்டுக் கொள்ள நேரிடுமே என்று..ஆனாலும் பாய்களை நீங்கள் இறக்கச் சொன்னது அவர்களது எரியம்புகளில் இருந்து மரக்கலத்தைக் காப்பதற்கே என்பதை காலதாமதமாகவே உணர்ந்தேன், அது மட்டுமின்றி அவர்கள் அதை செய்யாத காரணத்தால் தான் அவர்களது மரக்கலங்கள் தீயின் பாதிப்பிற்குள்ளாகி வெடித்து சிதறியதையும் கண்டேன். கொள்ளையர்களது மரக்கலங்கள் தீப்பற்றி எரியாமல் இருந்திருந்தால் , மூர்க்கமாய் நம்முடன் போராடிக் கொண்டுதான் இருந்திருப்பார்கள், அவர்களது கவனத்தை நீங்கள் சாமார்த்தியமாக திசை திருப்பி விட்டீர்கள்..அது மட்டுமல்லாது, அவர்கள் பிரிந்து சட்டென விலகி செல்லவில்லை எனில் இரண்டும் ஒன்றோடொன்று மோதி பலத்த சேதத்தை விளைவித்திருக்கும் என்பதையும் புரிந்து கொண்டேன்..அவர்களும் தங்களது மரக்கலத்தை காப்பாற்றுவதற்காக நம்மை விட்டுவிட்டு சென்று விட்டார்கள்..என் வாழ்நாளில் கொள்ளையர்களின் இது போன்ற ஓட்டத்தை இப்போது தான் பார்க்கிறேன்.." என்றான் ஆச்சர்யமும், பிரமிப்பும் கலந்த குரலில் மரக்கலத்தலைவன்.
" நமது கைகளில் ஒன்றுமில்லை..மரக்கலத் தலைவரே, போர்களின் போது தயக்கம் கொள்வதென்பது ஆபத்தை விளைவிக்கும், நம்மால் முடியும் வரை முயற்சிப்பதே நல்லது.
முயற்சிக்காமல் வெற்றியைப் பெறவியலாது..கொள்ளையனைக் கண்டு நாம் ஓடத் துவங்கியிருந்தால், விரட்டி நம்முடைய மரக்கலத்தை அழித்திருப்பார்கள். நமது மரக்கலத்தை இழக்க எனக்கு விருப்பமில்லை..அது தான் துணிந்து இறங்கினேன்..
அதற்கான பலனும் கிடைத்தது." என்றான் பெருமிதத்துடன் உதயச்சந்திரன்.
" உண்மை தான் படைத்தலைவரே..உங்களது முன் யோசனைகளையும், வீரத்தையும் மெச்சுகிறேன்..."
" என்னைப் பாராட்டுவது இருக்கட்டும், நமது மாலுமிகளில் காயம் பட்டோரை கண்டு, தகுந்த சிகிச்சையினைத் தர ஏற்பாடு செய்யுங்கள்..காலதாமதமின்றி மரக்கலம் செல்லட்டும்.."
"நல்லது படைத்தலைவரே..வருகிறேன்.." என்றவன் , மரக்கலத்தின் அடித்தளத்திற்குச் செல்லும் படிகளில் இறங்கிக் போக, அமைதியாக காட்சியளித்தபடி வெண்ணிற அலைகள் பக்கவாட்டுப் பலகைகளில் மோத விரைந்து முன்னேறிக் கொண்டிருந்த மரக்கலத்தின் மேல் தளத்தில் நின்றவாறு நீலவானை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.
இன்னும் எத்தனை ஆபத்துகளைக் கடந்து பல்லவ தேசத்தின் அரச பீடத்திற்குரியவரை அழைத்து வர போகிறேனோ தெரியவில்லை..என மனதிற்குள் எண்ணியவனாய் கண்ணெதிரே தெரிந்த நீலக்கடலையே
வெறிக்கப் பார்த்தபடி நின்றிருந்தான்
உதயச்சந்திரன்.
* * * * * * * * * * *
பல்லவக் காஞ்சி.
அரண்மனையின் விசாலமான அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஏதோ சிந்தனையில் நடந்தபடியிருந்தவனுக்கு நடுத்தர வயதிருக்கும், ஆங்காங்கு தலையில் ஒன்றிரண்டு நரைகள் தெரிந்தது. சற்றே பருத்த தேகத்துடன் காணப்பட்ட உடல்வாகு நெடிய உயரத்துடனிருந்த அவனுக்கு விகாரமாய் தெரியவில்லை. அவனது கண்கள் சதா சந்தேகத்தின் சாயலில் மிதந்து கொண்டிருப்பதையே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது.
சட்டென நின்றவன், எதிரே ஆசனத்தில் அமர்ந்திருந்தவனை ஏறெடுத்து நோக்கினான்.
"சித்ரமாயா..உதயச்சந்திரன் தனியாக நாகையிலிருந்து மரக்கலமொன்றில் செல்கிறானாமே ..எங்கு செல்வான்..?
ஏதாவது ஊகிக்க முடிகிறதா உன்னால்.."
" மாமா..உங்களுக்கு இதே வேலையாக போயிற்று..அவன் என்ன செய்கிறான்..? இவன் என்ன செய்கிறான்..? என கவனித்துக் கொண்டிருப்பது தான் உங்களது வேலையா..? வாழ்க்கையில் ரசிக்க எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன..அதை விட்டுவிட்டு வேண்டாத வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே..?!" என்ற சித்ரமாயனுக்கு இப்போது தான் மீசை அரும்பத் துவங்கியிருந்தது.. பல்லவ வேந்தன் பரமேஸ்வரவர்மனின் செல்வப் புதல்வனாய் வளர்க்கப் பட்ட வனப்பு அவனது உடலில் தென்பட்டது. அரச வாழ்க்கையின் சுகபோகங்கள் மட்டுமே போதுமென வாழ்பவனாய் காணப்பட்டான். வீரத்திற்கான அடையாளம் எதுவும் அவனது முகத்தில் துலங்கவில்லை, கண்களில் மதுவின் போதையே நிரம்பி வழிந்தது.
" சித்ரமாயா..சர்வசதா காலமும் குடிமயக்கத்திலேயே இருக்கிறாய்..உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள முயற்சி செய்..உன்னை அரியணையில் அமர்த்தி விட்டுப் போன சாளுக்கிய விக்கிரமாதித்தன் எப்போதும் ஓடி வந்து உனக்கு உதவி செய்து கொண்டிருக்க மாட்டான்.." என்றான் கோபத்தில் பயங்கரமாய் இரைந்தபடி சித்ரமாயனின் மாமன் வீரமல்லன்.
" அவன் இல்லாவிட்டால் என்ன..? நீங்கள் இருக்கிறீர்களே மாமா.. எனக்கு உதவி செய்ய எங்கிருந்தாலும் உடனே ஓடி வருவீர்கள் தானே..?" என்றான் உளறியபடி.
" முட்டாள்தனமாக பேசாதே..நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்.."
" என்ன கேட்டீர்கள்..?"
அவனைப் பார்வையால் முறைத்த வீரமல்லன், " உதயச்சந்திரன்...." என முடிக்குமுன் குறிக்கிட்டான் சித்ரமாயன்.
" ஆங்..நினைவு வந்து விட்டது..உதயச்சந்திரன் நாகையிலிருந்து மரக்கலத்தில் செல்கிறான்..எங்கு செல்வான் எனக் கேட்டீர்கள் இல்லையா..? நம்மைக் கண்டு பயந்து தப்பியோட முயற்சிக்கலாம்..." என்று விட்டு பயங்கரமாய் நகைத்தான்.
" உதயச்சந்திரன் பயந்தோடுபவன் அல்ல.." என்றான் சீற்றம் சற்றும் தணியாத குரலில் வீரமல்லன்.
" அப்படியில்லை எனில், காம்புஜ தேசம் செல்கிறானோ என்னவோ..?!"
" என்ன சொல்கிறாய்..? காம்புஜ தேசத்திற்கு எதற்குச் செல்கிறான்..? "
" தந்தையார் என்னிடம் சொல்லியிருக்கிறார்.."
" என்ன சொல்லியிருக்கிறார்..?"
" அங்கு நமது பல்லவ வம்சம் தான் அரசாள்கிறது என்று.."
சட்டெனப் பொறிதட்டியது வீரமல்லனுக்கு. " என்ன சொன்னாய்..?" என்றான் அதிர்ச்சியுடன்.
" காம்புஜ தேசத்தில் பல்லவ வம்ச அரசாட்சி நடைபெறுகிறது என்கிறேன்..இது கூடவா உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும்.."
" சித்ரமாயா..விளக்கம் எனக்குத் தேவையில்லை..நீதான் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறாய்..? உனக்கு தான் புரியவில்லை..உதயச்சந்திரன் ஏன் காம்புஜ தேசம் செல்கிறான் என்று.." எனச் சீறினான் வீரமல்லன்.
" புரிந்தால் சொல்லுங்களேன்.."
" உனது தந்தையாரின் அபிமானிகள் எவரும் இப்போது காஞ்சியில் இல்லை..திடீரென உதயச்சந்திரனோ பல்லவரது அரசவம்சம் அரசாளும் காம்புஜ தேசம் செல்கிறான் எனில் , நிச்சயமாக உனக்கெதிராக பயங்கர சதி நடக்கிறது..உன்னை அரசுக் கட்டிலில் இருந்து நீக்க பெரும் முயற்சி நடக்கிறது.."
சொல்லிக் கொண்டுப் போனவனைச் சட்டென இடைமறித்தான் சித்ரமாயன்..அரசுக்கட்டிலில் இருந்து நீக்க என்ற வார்த்தையைக் கேட்டதுமே அவனது மதுவின் போதை சட்டென மாறி அவ்விடத்தில் அச்சம் தொற்றிக் கொள்ள.." மாமா என்ன சொல்கிறீர்கள்..?" என்றான் திகிலுடன்.
" உண்மையைச் சொல்கிறேன்..எனது ஊகம் சரியானதெனில், உன்னை இந்த பல்லவ பீடத்திலிருந்து நீக்கி விட மாற்று ஏற்பாட்டைச் செய்யவே உதயச்சந்திரன் காம்புஜ தேசம் செல்கிறான்."
" அதை தடுத்தாக வேண்டுமே.."
" எப்படி தடுப்பாய்..?! அவன் போன பிறகா..! ஒன்று செய்யலாம்.."
" என்ன..? "
" உதயச்சந்திரன் என்ன மாற்று ஏற்பாடு செய்து கொண்டு வருகிறான் என கவனிக்க வேண்டும்.."
" பிறகு.."
" அதை நமக்கு சாதகமானதாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.."
" மாமா..இதிலெல்லாம் என்னைத் தலையிடச் செய்யாதீர்கள்..நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்..நான் வருகிறேன்.."
" சித்ரமாயா..மது அருந்த தானே போகிறாய்..? மதுவை அருந்தியே மதிகெட்டு அலைகிறாய்..
நில்..போகாதே.."
வீரமல்லனின் வார்த்தைகளை செவிமடுக்காமல் வெளியேறினான் சித்ரமாயன்.
ஒற்றர்களை அழைத்து கடற்கரை துறைமுகங்களில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடந்தால் உடனே வந்து தெரியப் படுத்த வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்ததோடு, சித்ரமாயனின் பொறுப்பற்ற செயல் குறித்து வருந்தவும் செய்தான்.
உதயச்சந்திரனால் சித்ரமாயனின் பதவி்க்கு எவ்வித ஆபத்து நேரப் போகிறதோ என்ற கவலை வீரமல்லனைத் தொற்றிக் கொண்டது.
_ தொடரும்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக