25.08.20-ரேவா : 11- கடவுளின் நீதி - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

25.08.20-ரேவா : 11- கடவுளின் நீதி



25.08.20


ரேவா..


கடவுளின்_நீதி_11


உதயச்சந்திரனை அடைத்து வைத்திருந்த அரண்மனைச் சிறை கூண்டில் அவனுக்குரியப் பொருள்களை சாளரத்தின் வழி வீசி விட்டு , வேகமாக நடந்து சென்ற பியூஷா, பெரும்பாலும் எவரது கண்ணிலும் படாமல் இருளடர்ந்த பகுதியிலேயே சென்றவள், டோன்லே சாப் நதிக்கரையை அடைந்ததும், தான் நிறுத்தி வைத்திருந்த சிறு படகில் ஏறி துடுப்பினைத்  துழாவி தோப்பின் மறைவில் கட்டப்பட்ட  குடிசை வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.


இவளது வருகையை எதிர்பார்த்து வாசலிலேயே அமர்ந்திருந்த முதியவன், அவள் குடிசைக்குள் நுழைந்ததும், " பியூஷா, வரவர உன் போக்கு எனக்குப் பிடிக்க வில்லை..இரவுப் பொழுதில் வெளியில் உனக்கென்ன வேலை..? " என்றான் கோபத்தில் இரைந்து.


" வேலையில்லாமலா வெளியில் இருந்து காலந்தாழ்ந்து வருவார்கள்.."


" உன்னை ஒன்று கேட்க வேண்டும்..இந்த மண் கலயத்தில் ஒரு பொருளை வைத்திருந்தேன்..இப்போது காணவில்லை..நீ பார்த்தாயா..? " என்றான் கோபமாய் முதியவன்.


" என்ன பொருள்..? "


" " அதை உனக்குச் சொல்லத் தேவையில்லை..பார்த்தாயா..? இல்லையா..? என்பதை மட்டும் சொல்." என்று சீறினான் முதியவன்.


" அங்கு நீங்கள் வைத்திருந்தால், அங்கு தான் இருக்கும்..அதை விடுத்து என்னிடம் கேட்டால் எப்படி..? " என்றாள் அவளும் கோபமாய். 


முதியவன் அவளிடம் இனி பேசுவதில் பயனில்லை எனப் புரிந்து கொண்டதோடு, அவள் தான் எடுத்திருக்க வேண்டும் என முடிவும் செய்தான். ஏனெனில் முதியவன் அவ்வப்போது இது போல் திருடிக் கொண்டு வருவது பியூஷாவிற்கு பிடிக்காது. என்றாவது ஒரு நாள் அரண்மனைக் காவலர்கள் உன் உடல் அவயங்களை வெட்டப் போகிறார்கள் என எச்சரித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

ஆனால் அவனோ , நான் அவர்களிடம் சிக்கினால் தானே..என்னைப் பிடிக்க இனி தான் புதிதாக ஒருவன் பிறக்க வேண்டும் என்பான். அவன் திருடிக் கொண்டு வந்த பொருள் யாருடையது எனத் தெரிந்தால் அவனுக்குத் தெரியாமல் அதை எடுத்து, உரியவர் அறியாமல் அவர்களது இல்லத்தில் கொண்டு போய்  சேர்த்து விடுவாள் பியூஷா.


" ஏன் இவ்வாறு திருட்டு வாழ்க்கை வாழ்கிறாய்..? " எனக்  கோபமாய் பியூஷா கேட்கும் போதெல்லாம், " உன்னை மணமுடித்து தர வேண்டுமல்லவா..? என்பான் ஒரு சமயம், பிறிதொரு சமயம் உன்னை பாரத தேசம் அனுப்பப் போகிறேன் என்பான்..ஆனால் எதையும் விபரமாக கேட்டால் சொல்லாமல் நழுவி விடுவான் முதியவன்.


பியூஷா வின் வாழ்க்கை இவ்வாறே கழிந்து கொண்டு இருந்தது.


காலை நேரத்து  பட்சிகளின் சப்தமும், காம்புஜ தேசத்து ஆலயத்தின் மணியோசையும் உதயச்சந்திரனுக்கு புதுவிதத் தெம்பை வழங்குவதாய் இருந்தது. காவலர்களைச்  சத்தமிட்டு அழைத்தான், தான் மன்னரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தான்.


" நீ மன்னரை இப்போது சந்திக்க முடியாது.." என்றான் காவலன்.


" ஏன்..? "


" இன்னும் இரண்டு தினங்கள் நீ சிறையில் தான் இருந்தாக வேண்டும்.."


" நான் நிரபராதி என நிரூபிக்க உதவும் ஆவணங்களை என்னால் இப்போது மன்னரிடம் காட்ட இயலும்.."


" நீ நிரபராதி என நிரூபிக்க உதவும் ஆவணங்கள் உன்னிடம் இருக்கலாம்..ஆனால் உனது சிறைக் காலம் இன்னும்  நிறைவடையவில்லை.."


" நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்.."


" உனக்கு ஏற்கனவே ஒரு முறை வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது.. மீண்டும் வாய்ப்பானது மன்னர் வழங்கிய உனது சிறைவாச காலம் முடிந்தபின் தான் வழங்கப் படும். "


" இது என்ன கொடுமை..? நான் குற்றவாளி அல்ல என்பதற்கான ஆவணங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறேனே..பின் ஏன் நான் இந்த சிறையில் அடைபட்டு இருக்க வேண்டும்..?"


" உனது ஆவணங்களை  முதலில் தொலைத்த குற்றத்திற்காக..பொறுப்பற்ற உனது செய்கையின் விளைவு தான் இந்த சிறை தண்டனை..வாழ்நாளில் இதனை நீ என்றும் மறக்க கூடாது என்பதற்கே இறைவன் பெயரால் அரசாட்சி புரியும் மன்னரால் இந்த தண்டனை உனக்கு வழங்கப் பட்டிருக்கிறது." என்றான் காவலன் குதர்க்கமாய்.


இனி..அவனிடம் பேசுவதில் யாதொரு பயனுமில்லை என எண்ணியவனாய் தனது விதியை நினைத்தவனாய் அந்த சின்ன அறைக்குள் கோபமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கத் துவக்கினான் உதயச்சந்திரன்.


காவலன் குறிப்பிட்ட இரண்டு தினங்களுக்குப் பின்..காம்புஜ தேசத்து நீதி சபையில் மன்னன் முன் நிறுத்தப் பட்டிருந்தான் உதயச்சந்திரன்.


" தமிழக வீரனே..என்ன சொல்ல விரும்புகிறாய்..? "


" மன்னருக்கு எனது பணிவான வணக்கம், இதோ நான் தமிழகத்தின் பல்லவ தேசத்தில்  இருந்து தங்களுக்கு  கொண்டு வந்த ஓலை..இதோ பல்லவரது அரச இலச்சினை " என்று எடுத்து நீட்டினான்.


உதயச்சந்திரன் எடுத்து நீட்டிய பல்லவ இலச்சினையை நிதானமாகப்  பார்வையிட்டதோடு, ஓலையையும் வாசித்து முடித்த மன்னர் கடவேசஹரிவர்மர் ,

" வீரனே..இவை எப்படி உன்னை வந்து சேர்ந்தது..? " என்றார் கம்பீரமாக.


" இரண்டு தினங்களுக்கு முன் , சாளரத்தின் வழியே எனது அறைக்குள் வந்து விழுந்தது.."


" காம்புஜ தேசத்தில் கடவுளின் நீதி எப்போதும்  சரியாகவே இருக்கும்.."


" இதை கடவுள் கொண்டு வந்து போடவில்லை..எவனோ மனிதன் தான் போட்டிருப்பான்." என்றான் சலிப்புடன் உதயச்சந்திரன்.


" போட்டவன் மனிதனாய் இருந்தாலும், உன் விசயத்தில் அவன் தான் கடவுள்..உன்னை தண்டனையிலிருந்து காப்பாற்றியிருக்கிறான் அல்லவா..?! " என்றார் விஷமத்துடன் கடவேச ஹரிவர்மா.


" அவன் கடவுளாய் இருந்தால் , என்னைச் சிறையில் தள்ளும்படி ஏன் முதலில் திருடிக் கொண்டு போனான்.."


" உனது விதி பயன் அது..திருடியவனே கொண்டு வந்து போட்டான் என எண்ணாதே..திருடியவன் வேறு, உன்னிடத்தில் சேர்ப்பித்தவன் வேறு. இருவரும் ஒருவராய் இருக்க முடியாது என்பது எனது ஊகம். காரியங்கள் அனைத்தும் காரணமின்றி நடைபெறுவதில்லை.இங்கு காம்புஜத்தில் நாங்கள் அதை பூரணமாய் நம்புகிறோம்..இதோ பார் பல தேசங்களைக் கடந்து பல்லவ தேசத்திற்கு ஒரு மன்னனைத் தேடி நீ இங்கு வரவில்லையா..?

சிம்மவிஷ்ணுவின் பரம்பரை இனி பல்லவ அரச பீடம் ஏறப் போவதில்லை..பீமவர்மனது பரம்பரை இனி தமிழக பல்லவ தேசத்தின் அரசபீடத்தை ஆளப்போகிறது எனில் அதுவும் இறைவனது சித்தமே..இறைவனது எண்ணங்களை மாற்றியமைக்க உன்னாலும்  இயலாது..என்னாலும் இயலாது.." என்றார் கம்பீரமாய் கடவேச ஹரிவர்மர்.


" யாரெங்கே..இவரை அரண்மனை விருந்தினர் மாளிகையில் தங்கச் செய்யுங்கள்.." எனக் காவலரிடம் தெரிவித்த கடவேச ஹரிவர்மன், " வீரனே உன்னை இரவு சந்திக்கிறேன்." என விடைகொடுத்தனுப்பினார்.


ஆனால் இரவில், உதயச் சந்திரனே எதிர்பாராத ஒரு  நிகழ்வே நடைபெற்றது.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages