24.08.20-ரேவா: 10-தொலைந்தது_மீண்டது - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

24.08.20-ரேவா: 10-தொலைந்தது_மீண்டது



24.08.20


ரேவா.


தொலைந்தது_மீண்டது_10


டோன்லே சாப் நதியில் படகினை மெல்ல துடுப்பால் துழாவிக் கொண்டு போனவன், மரங்கள் அடர்ந்த தோப்பினுள் நுழைந்து ஒரு குடிசையினுள் நுழைந்ததோடு,  இடுப்புப் கச்சையில் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த ஓலை ஒன்றையும், தங்கத்தால் ஆன சிம்ம இலச்சினையையும் எவரும் அறியாமல் தொங்கிக் கொண்டிருந்த மண்கலயத்தில் வைத்து பத்திரப்படுத்தி விட்டு வெளியேறிய பின், அவனது செய்கைகள் ஒவ்வொன்றையும் மறைந்திருந்து கவனித்த பியூஷா, அவன் அங்கிருந்து நகர்ந்ததும், மண் கலயத்திற்குள் கைகளை விட்டு , முதியவன் எதை ஒளித்து வைத்தான் எனப் பார்வையிட்டாள்.


 ஓலையில் எழுதப்பட்டிருக்கும் மொழி பல்லவருக்கு உரித்தான பிராகிருத மொழியாக இருந்தது..காம்புஜ தேசத்தின் மன்னர் ஹிரண்யவர்மருக்கு எழுதப்பட்டிருந்த அவ்வோலை பல்லவ தேசத்தின் இன்றைய சூழலை விளக்கி அதற்கு உதவுமாறு விரிவாகக் கேட்கப்பட்டிருந்தது . அத்துடன் தங்கத்தாலான சிம்ம இலச்சினையைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டாள் அது பல்லவரது அரச முத்திரை என்பதை.


நேற்றையப் பொழுது கடைவீதியில் நாம் சந்தித்த பல்லவ தேசத்தைச் சேர்ந்தவனுக்கு உரிமையாக இது இருக்குமோ..? இது எப்படி நம் தந்தையிடம் வந்தது..? ஒருவேளை திருடி எடுத்து வந்து விட்டாரா..? புரியவில்லையே..இது ஏன் இவருக்கு..? இதில்லாமல் அந்த தமிழர் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லையே..? எனப் பலவாறு குழப்பமுற்றவள்., அவ்விரண்டையும் ஒரு பட்டுத் துணியில் முடிந்து கொண்டவளாய் , குடிசையை விட்டு வெளியேறினாள்.


தன்முன் நின்றிருந்த அந்த இளம்பெண்ணை ஏறெடுத்த சத்திரத்துக் காவலன், " இதோ பார் பெண்ணே..இங்கு பாரத தேசத்து யாத்ரீகன் ஒருவன் தங்கியிருந்தது உண்மை..நேற்று மாலையில் வெளியே சென்றவன் அதன் பின் திரும்பவே இல்லை..இன்று காலையில் அரண்மனையில் இருந்து காவலர்கள் வந்து அவனது உடமைகளை கேட்டு வாங்கிப் போனார்கள்..இப்போது அவனைத் தேடி  நீ வந்து நிற்கிறாய்.." என்றான் ஒரே மூச்சில்.


" நன்றி ஐயா..தங்களின் தகவலுக்கு, எனக்கு செய்த உதவிக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றவள், பலத்த யோசனையுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.


அரண்மனைக் காவலர் வந்து, தமிழக வீரனின் உடமைகளை எடுத்துப் போயிருக்கிறார்கள் எனில், ஒன்று அவன் ஏதாவது சிக்கலில் அகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது அவன் அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்..ஒருவேளை தமிழக வீரன் உயிருடன் தான் இருக்கிறானா..இல்லையா ? என்பதும் புரியவில்லையே..அல்லது  அவனை அரண்மனைச் சிறையில் அடைத்திருப்பார்களோ..இப்போது என்ன செய்வது..? எப்படியும் தமிழக வீரனை சந்தித்தாக வேண்டுமே..?" எனக் கவலை கொண்டவளாய்..பலத்த யோசனையோடு வீதிகளில் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.


கதிரவன் மேற்கு வானில் கீழிறங்கி விட்டதோடு, டோன்லே சாப் நதியினை பொன்னிறத்தில் மாற்றி அழகுப் பார்த்துக் கொண்டிருந்தான். பறவைகள் கூட்டம் கூட்டமாய் தங்களது இருப்பிடத்தைத் தேடிப் போய்க்கொண்டிருந்தன..அது மட்டுமல்லாது தன் குஞ்சுகளுக்கு உணவாக சிறு மீன்களைப் பிடித்துச் செல்ல விரும்பிய பறவைகள் நதிக் கரை ஓரங்களில் தாழப் பறப்பதும், சட்டென மேலெழுவதுமாய் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. பரதவர்கள் தங்களது வலைகளை வீசி மீன்களைப் பிடித்ததை அந்த நதிக் கரை ஓரத்திலேயே கூவிக் கூவி  விலைபேசிக் கொண்டிருந்தார்கள். நகரமெங்கும் அலைந்து திரிந்தும்  தமிழக வீரனைக் காணாது தவித்த பியூஷா, உறுதியாக காம்புஜ தேசத்துப் படைவீரர்களிடம் தான் அவன் அகப்பட்டிருக்க வேண்டுமென முடிவிற்கு வந்தாள்.. குற்றவாளிகளை காம்புஜ தேசத்தில் கையாளும் விதம் பற்றி அறிந்திருந்த காரணத்தால் எவ்வித கவலையுமின்றி இரவு வேளைக்காக காத்திருந்தாள்.


*காம்புஜ தேசத்தில் குற்றவாளிகளை அரண்மனைக்கு பின்புறம் கட்டப் பட்டுள்ள சிறு அறைகளில் அடைத்து வைத்து விடுவார்கள்..ஒரு வார காலத்தில் அறைகளில் அடைபட்டுக் கிடப்பவர் ஏதாவது நோய்வாய் பட்டால், அவர்கள் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படும், அவ்வாறின்றி அறைகளில் அடைபட்டவர் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவாராயின்  அவரை அரசர் மன்னித்து விடுதலை செய்து விடும் வழக்கம் காம்புஜ தேசத்தில் நடைமுறையில் இருந்தது. அங்கு அடைக்கப்பட்டுள்ள  நடைமுறையைப் பற்றி அவளுக்கு ஏற்கனவே  தெரியுமாதலால் , உதயச்சந்திரனை எப்படியும் காப்பாற்றி விடமுடியும் எனும் நம்பிக்கையும் பியூஷாவிற்கு எழுந்தது.


இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கியதும்..காம்புஜ தேசத்து நகர வீதியெங்கும் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தது.

வீதிகளில் ஏற்றப் பட்டிருந்த ஒன்றிரண்டு விளக்குகளும் நெடுநேரம் எரிந்து அணையும் தருவாயில் காணப்பட்டது. ஆங்காங்கே தென்பட்ட அடர்ந்த இருளில் தலைமுழுவதும் போர்த்திய ஒரு உருவம் மெல்ல அடிமேல் அடியெடுத்து அரண்மனையின் பின்பகுதியை அடைந்ததோடு, வரிசையாக கட்டப் பட்டிருந்த அந்தச்  சிறிய கூண்டு அறைகளில் எந்த அறையினில் வெளிச்சம் தென்படுகிறது என உன்னிப்பாக கவனித்துக் கொண்டே 

வந்தது.   பல அறைகள் இருளில் மூழ்கியிருக்க, ஒரு அறையில் மட்டும் மிணுக் மிணுக்கென ஒளி இலேசாய் எரிந்து கொண்டிருக்க, அந்த அறையை நோக்கி சத்தமில்லாமல் நகர்ந்த உருவம், சுற்றும் முற்றும் கவனித்தபடி மெல்ல சாளரத்தின் அருகே போய் நின்றதோடு, தன் மடியில் வைத்திருந்ததை எடுத்து, சாளரத்தின் வழியே உள்ளே வீசியெறிந்து விட்டு விடுவிடுவென திரும்பி பார்க்காமல் நடக்கத் துவங்கியது.


சிறிய அறையொன்றின் தரையில் படுத்து நித்திரையில் ஆழ்ந்திருந்தவனது முகத்தில் ஏதோ பொருளொன்று வந்து விழ, சட்டென விழித்துக் கொண்டவனாய், தன் மீது விழுந்த பொருள் என்னவென்பதை ஆராயத் துவங்க, அதை கைகளில் எடுத்தான். பட்டுத் துணியில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த அதனைப் பிரித்ததும், உதயச் சந்திரனுக்கு அளவில்லாத ஆனந்தம் உருவாயிற்று. தனது பட்டுப் பையை விட்டு எப்பொருள் காணாமல் போனதோ, அது இப்போது அவனது கைகளில் இருந்தபடி அவனைப் பார்த்து நகைத்தது.


உதயச் சந்திரன்  அதன்பின் நித்திரையை தொலைத்தான். சத்திரத்தில் தான் வைத்திருந்த ஒரு மூட்டையில் இருந்து களவாடப்பட்ட ஒரு பொருள், மீண்டும் தன்னிடம் பத்திரமாக வந்து சேர்ந்தது குறித்து ஆச்சர்யம் அவனைத் தொற்றிக் கொண்டது. மன்னன் கொடுத்த ஒரு வார கால அவகாசத்தில் எப்படி நம்மை நிரூபித்து இந்த அறையில் இருந்து வெளியேறுவது எனக் குழம்பிக் கொண்டிருந்த அவனுக்கு, இந்நிகழ்வு அதிசயமாய் இருந்தது.


 பட்டுப்பையைப்  பத்திரமாக இடையில் செருகி கொண்டவன், விடியலை எதிர்பார்த்து மெல்ல கண்களை மூடினான்.


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு : *காம்புஜ தேசத்திற்கு வந்த சீனத் தூதர் சவ் தா குவான் பயணக் குறிப்புகளில் இருந்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages