01.09.20
#ரேவா..
#நாகைக்கடற்கரையில்_18
மரக்கலத்தின் மேல்தள அறையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த பியூஷா , விடியலின் அறிகுறியை உணர்ந்தவளாய் அறையை விட்டு வெளியே வந்தாள். வானம் இப்போது தான் வெளிறத் துவங்கியிருந்தது. கதிரவனின் முகம் மெல்ல ஒரு ஒளிக்கீற்றாய் கீழ்வானில் கடலுக்குள் இருந்து எழுந்து வருவது போல் காட்சி தர, அந்த அழகிய காட்சியில் மனம் லயித்தவளாய் பார்த்துக் கொண்டிருந்தவளது நாசியை வருடியது, புதுவகையான ஒரு மணம், அது மட்டுமின்றி மரக்கலத்தில் புதிதாய் ஏதோ க்ளாக்..க்ளாக் என்ற சத்தமும் கேட்கத் துவங்க, ஆச்சர்யமாய் சத்தம் வந்த திசையை நோக்கினாள், அழகிய ஒரு பறவை மரக்கலத்தின் பாய்மரத்தண்டில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தது. உதயச்சந்திரனைத் தேடினாள், பியூஷா.
உதயச்சந்திரனோ சுக்கானுக்கு அருகிலேயே படுத்திருந்தான்..சற்று நேரத்தில் கண்களை கசக்கியவாறு வந்த பல்லவ மல்லனும், மரத்தண்டில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்த பறவையினை பிரம்மிப்பாய் பார்த்தான். "இது இந்நாள் வரை வரவில்லையே..? இப்போது எங்கிருந்து வந்தது..? "என்றான் ஆச்சர்யம் கலந்த குரலில்.
" கடற் பறவைகள் மரக்கலத்தில் வந்து அமரத் துவங்குகிறது எனில் மரக்கலம் கரையை நெருங்கி விட்டது எனபதாகும்." என்றான் இருவரும் ஆச்சர்யமாய் பறவையைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட உதயச்சந்திரன் எழுந்து இருவரையும் நோக்கி வந்தபடியே.
" படைத்தலைவரே, இந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது..? " என்றான் பல்லவ மல்லன்.
" நாகையின் கரையை நெருங்குகிறதல்லவா மரக்கலம், நாகலிங்க மரத்தின் மலர்களில் இருந்து எழும் மணத்தை காற்று சுமந்து வருகிறது..இது தான் நமது நாசியை வந்தடைந்திருக்கிறது." என்றான் உதயச்சந்திரன்.
" ஆஹா..தமிழகத்தின் மண்ணில் கால் பதித்து விடலாமா இன்று..? "
" இன்று முடியாது..நம்மை வரவேற்க ஆட்களை வரவழைக்க வேண்டி உள்ளது..நாம் இன்னும் இரண்டு தினங்கள் இந்த மரக்கலத்தை விட்டு இறங்கக் கூடாது..." என்றான் உதயச்சந்திரன்.
" படைத்தலைவரே..நம்மை ஏன் வரவேற்க ஆட்கள் வரவேண்டும்..நாமே செல்லலாம் அல்லவா..!" என்றான் ஏக்கம் தொனித்த குரலில் பல்லவ மல்லன்.
" பல்லவ தேசத்து எதிர்கால மன்னனை சாதாரணமாக எப்படி அழைத்துச் செல்வது..? பல்லவ மல்லா ..நீயே சொல்..? " என்றான் குறும்புடன் உதயச்சந்திரன்.
"மரக்கலத் தலைவனை வரச் சொல், " என்றான் மரக்கலத் தளத்தில் நின்றிருந்த ஒரு மாலுமியைப் பார்த்தவனாய் , கூடவே பியூஷாவையும், பல்லவ மல்லனையும் பார்த்து , " நீங்கள் இருவரும் அறைக்குச் செல்லலாம்..நீராடி தயாராகுங்கள்.." என்றான். உதயச்சந்திரன்.
இருவரும் செல்ல..சிறிது நேரத்தில் கீழ் தளத்தில் இருந்த மரக்கலத் தலைவன் வந்து சேர்ந்ததும், அவனிடம் சில ஓலைகளைத் தந்தவனாய்,
" ஒரு படகினை நீரில் இறக்கி, கடற்கரைக்குச் செல், இதனை நாகை துறைமுகத்தின் தலைமைக் காவலனிடம் சேர்த்து விடு.. அவனுக்குத் தெரியும் , இதை எவரெவருக்கு அனுப்ப வேண்டுமென்று..உன்னுடன் ஒரு மாலுமியையும் அழைத்துச் செல்..வீணாக வேறு எங்கும் சுற்றாதே..வேறு எவரிடமும் பேசாதே, நாளை மறுதின மாலையில் நான் கரையிறங்குவதாக கூறிவிடு..
தகவலைத் தந்து விட்டு உடனே வந்து விடு.." என்றான் உதயச்சந்திரன்.
அடுத்த இரண்டு நாழிகைப் பொழுதில் , மரக்கலத்தில் இருந்து ஒரு படகு நீரில் இறக்கப் பட்டது, நூலேணி வழியாக மரக்கலத் தலைவனும், மாலுமி ஒருவனும் அப்படகில் இறங்கித் துடுப்பினை வலிக்க படகானது மெல்ல கரையை நோக்கி நகரத் துவங்கியது.
நாகையின் கடற்கரை அந்த அதிகாலை வேளையிலேயே சுறுசுறுப்பாக காணப்பட்டது. கடலுக்குள் செல்லும் பரதவர்களின் கூச்சல்களும், சுங்கச் சாவடியிலிருந்து நடுக்கடலில் தத்தளித்தபடி நின்று கொண்டு இருக்கும் பல தேசத்துப் கப்பல்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல காத்திருக்கும் வணிகர்களும், அவர்களது அடிமைகளும் , வணிகர்களின் சரக்குகளை சிறு படகுகளில் ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தனர்.
படகினை மெல்ல நகர்த்திக் கொண்டு வந்த உதயச்சந்திரனது மரக்கலத் தலைவன், கரையை அடைந்ததும், அவ்வளவாக கூட்டமில்லாத இடமாகப் பார்த்து தனது படகின் துடுப்பினை வலித்துக் கொண்டு போனதோடு, கரையை அடைந்ததும் , நீரில் குதித்து படகினை இழுத்து அங்கு மணலில் ஊன்றப் பட்டிருந்த ஒரு கட்டையில் இறுக்கித் தளையிட்டான்.
மரக்கலத் தலைவன் அவனது மாலுமியை நோக்கியவாறு, " இங்கேயே இரு..நான் சென்று சுங்கக் காவலர் தலைவரிடம் இதைக் கொடுத்து விட்டு வருகிறேன்.." என்று கூறுவிட்டு, அவனது பதிலுக்கு கூடக் காத்திராமல், மணலில் தனது பாதத்தை அழுந்தப் பதித்து நடந்து சென்றான்.
சுங்கச்சாவடியை அணுகியதோடு, அங்கிருந்த சுங்கக் காவலர் தலைவரிடம் உதயச்சந்திரன் தந்தனுப்பிய ஓலைகளை எடுத்து நீட்டியதோடு,
"இவை படைத்தலைவர் உதயச்சந்திரன் வழங்கியது...உங்களுக்கு விசயம் விளங்குமென்று எண்ணுகிறேன்.." எனக் கூறி நீட்டிய மறுகணம் அதை சட்டென வாங்கி இடையில் செருகிக் கொண்ட சுங்கக் காவலர் தலைவனோ,
" ஏற்பாடுகளை செய்து விடுகிறேன், எனச் சொல் ," என்றான்.
" நான் வருகிறேன்.."
" கவனம்..சித்ரமாயனின் ஆட்கள் சுற்றித் திரிவதைக் கவனித்திருக்கிறேன்.." என்றான் எச்சரிக்கும் தொனியில் சுங்கச் சாவடி காவலர் தலைவன்.
" சரி..நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.."
என்றுவிட்டு, தனது படகினை நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து வந்தான் மரக்கலத் தலைவன்.
தூரத்தில் இவன் வருவதைக் கண்ணுற்றதும் , இருவர் வேகமாக இவனது படகின் அருகிலிருந்து ஓடுவது தெரிய, விரைந்து தனது படகினை நெருங்கினான் மரக்கலத் தலைவன்.
அங்கு, அவனுடன் வந்த மாலுமி படகினுள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் குறுவாளால் மார்பில் குத்தப்பட்டு அரை மயக்கத்தில் கிடந்தான்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக