04.09.20
ரேவா
திட்டங்கள்_இரண்டு_21
பல்லவ மல்லனை அழைத்துக் கொண்டு உதயச்சந்திரன் நாகைக் கடற்கரையை வந்தடைந்த இரண்டு தினங்களுக்குப் பின்..
திருவத்திபுர அரண்மனையின் ஆலோசனை அறையில் அமர்ந்திருந்த அனைவரது முகத்திலும் ஆழ்ந்த சிந்தனை காணப்பட்டது. பல்லவ மல்லன் தொண்டை மண்டலத்தில் கால் பதித்து இரண்டு நாட்களாகி விட்டது. காஞ்சி அரண்மனைக்கு, காம்புஜ தேசத்திலிருத்து பல்லவ அரச பீடத்திற்கு ஒரு சிறுவனை அழைத்து வந்த விசயம் எட்டியிருக்கும் என்பதை பிரம்மஸ்ரீ ராஜன் உட்பட அனைவரும் அறிந்து தானிருந்தார்கள்.
சித்ரமாயனிடம் இருந்தோ, வீரமல்லனிடம் இருந்தோ எவ்வித எதிர்ப்புகளோ, நடவடிக்கைகளோ இதுவரை காணப்படாதது குறித்து உதயச்சந்திரன் தரப்பில் அனைவருமே ஆச்சர்யத்தில் இருந்தார்கள்.
சமீபத்தில் தான் சாளுக்கிய சக்கரவர்த்தியான விஜயாதித்தன் இறைவனடி சேர்ந்திருந்தான் எனவே சாளுக்கிய சக்கரவர்த்தியாக விக்கிரமாதித்தன் பதவியேற்றுக் கொண்டதோடு தனது மகனான கீர்த்திவர்மனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டியிருந்தான். எனவே பல்லவ தேசத்தில் நடைபெறும் விசயங்கள் குறித்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாலும், சித்ரமாயனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்ததில் இருந்து, அவன் சரிவர திறைகளைச் செலுத்தத் தவறியதாலும், சாளுக்கிய பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதையை செலுத்தத் தவறியதாலும் சித்ரமாயனுக்கு தகுந்த பாடம் புகட்ட விக்கிரமாதித்தன் விரும்பினாலும், தந்தை இறந்ததும் தனது பதவியேற்பு வைபவமும் அதைத் தொடர்ந்த பல அரசாங்கப் பணிகளும் அதிகரித்து விட்ட காரணத்தால், பல்லவ தேசத்தை சாளுக்கிய விக்கிரமாதித்தனது பிடியில் இருந்து சற்று விலக்கியே வைத்திருந்தது எனலாம்.
இச்சூழலில் தமிழகத்திற்குள் நுழைந்த பல்லவ மல்லனும் , உதயச்சந்திரனும், பல்லவ தேசத்தின் நலம் விரும்பிகளோடு கை கோர்த்துக் கொண்டு சித்ரமாயனை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றவும், பல்லவ மல்லனை பல்லவ ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவும் இந்த மந்திராலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். திருவத்திபுர அரண்மனையின் மந்திராலோசனைக் கூடத்தில் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமைதியாக வீற்றிருக்க, அந்த அமைதியை கலைக்க விரும்பியவராய்..
பல்லவ தளபதி பல்லவடி அரையனே முதலில் பேச்சைத் துவக்கினார்.
" இன்று சாளுக்கியன் விக்கிரமாதித்தன் கல்யாணபுரத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருக்கிறான். சித்ரமாயனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் உறவுநிலை இப்போது சற்று மட்டுப் பட்டிருக்கிறது. வீரமல்லன் தான் , தனது மருமகன் சித்ரமாயனுக்காக அரசாங்க காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். நமக்கு இதை விட சிறப்பான தருணம் வாய்ப்பது துர்லபம். எனவே திடீர் புரட்சி மூலம் சித்ரமாயனை சிறைசெய்து விட்டு பல்லவ மல்லனை பல்லவ பீடத்தில் அமர்த்துவது நல்லது என எண்ணுகிறேன்.." என்றார் பலத்த யோசனையுடன்.
" பல்லவ தளபதியின் கருத்தினை நானும் ஏற்கிறேன். நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது.." என்றார் மூலப் பிரகிருதியார்.
" அரசுக்கு எதிராக நடைபெறும் புரட்சி எனில் அதை தலைமையேற்று நடத்துவது யார்..? " என்றார் பலத்த சிந்தனையுடன் முதலமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன்.
" உதயச் சந்திரனே புரட்சியைத் துவக்கட்டும், தலைநகரில் கூச்சலும், குழப்பமும் ஒருங்கே நடைபெற்றால் சித்ரமாயன் என்ன செய்வான்..? மக்களின் எழுச்சியை எந்த மன்னனால் சமாளிக்க முடியும்..? என்றார் கோபத்துடன் மூலப்பிரகிருதியார்.
" சித்ரமாயன் பேரில் ஏற்கனவே பலத்த அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு தலைநகரில் வெடிக்கும் புரட்சி மகிழ்ச்சியையே விதைக்கும்." என்றார் கடிகையார்.
"நம்முடைய ஆதரவு படைகளுடன், தலைநகரில் குழப்பத்தை விளைவிப்போம், அரசாங்கப் பணிகளை செய்ய விடாது முடக்குவோம், தலைநகருக்கு வணிகப் பொருட்களை அனுமதிக்காது நடுவழியில் தடைசெய்வோம், இதனால் மக்களின் சீற்றம் மன்னனின் பேரில் திரும்பும்..நாமே அதை சரி செய்வது போல நாடகமாடி மக்களுக்கு உதவுவோம்..இடையில் நமது புரட்சியின் மூலம் குழப்பம் விளைவிக்கும் வீரர்கள் மீது சித்ரமாயன் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அதையும் நமது படைவீரர்களைக் கொண்டு முறியடிப்போம்.." என்றான் உதயச்சந்திரன்.
" அருமை..அவ்வாறே செய்யலாம்..இரண்டு வார காலத்தில் மன்னனின் பேரில் மக்களது எதிர்ப்பை உருவாக்கி விடுவதோடு, நமது எண்ணத்தையும் நிறைவேற்றி விடலாம்.." என்றார் பல்லவடி அரையன்.
" இதைவிட சிறப்பானத் திட்டத்தை இந்நிலையில் செயல்படுத்த இயலாது, புரட்சி ஒன்றே புதிய அரசை கொண்டுவர உதவும், நானும் வரவேற்கிறேன் " என்றார் பல்லவ தேசத்தின் முதன்மையமைச்சர் பிரம்மஸ்ரீராஜன்.
" உங்களின் தலைக்கு சித்ரமாயன் தரப்பில் விலை வைத்திருப்பதாக சீராளன் கூறினானே.." என்றார் , உதயச்சந்திரனைப் பார்த்த வண்ணம் காடவ முத்தரையர்.
" அது வெளிப்படையான அறிவிப்பில்லை..ஒற்றர்களுக்கு வழங்கப்பட்ட தகவல், நமது தலைகளுக்கு விலை வைத்தால் மக்களின் சீற்றத்திற்கு ஆளாக மாட்டார்களா..? வீரமல்லன் கொஞ்சம் புத்திசாலி, இம்மாதிரியான முட்டாள்தனமான காரியங்களைச் செய்து அவனது மருமகனை சிக்கலில் ஆழ்த்த மாட்டான்.." என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.
அனைவரும் பல்லவ தேசத்தில் ஒரு புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்து , இறுதியாக அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்ற தீர்மானத்திற்கு வந்ததோடு, அதை செயல் படுத்தும் முனைப்பிலும் இறங்கி விட்டார்கள்.
மந்திராலோசனைக் கூட்டம் முடிந்து கலைந்த வேளையில் , உதயச்சந்திரனது தோளின் மீது கைகளை வைத்து அழுத்தி நிறுத்திய பல்லவடி அரையன்,
"உதயச் சந்திரா உன்னிடம் சிறிது பேச வேண்டும் " எனக் கூறி அவனை தேக்கி நிறுத்தினார்.
காஞ்சி நகர். கற்றவர் பலரும் கருத்தாய் வாழும் கவின் மிகு நகர். அகலமான பெரு வீதிகள், நகரெங்கும் ஆலயங்கள், புத்த விகாரைகளும் * புத்த சைத்யங்களும் , சமணப் பள்ளிகளும் நிறைந்து காணப்பட்டதோடு, பல கலைகளைக் கற்பிக்கும் கடிகைகளும் நிரம்பி வழிந்த பெரு நகர். வணிகர் வீதி, விருந்தினர் வீதி, பெருந்தனக் காரர் வீதி, அரசாங்க பிரதானிகள் வீதி யென கோட்டைக்குள் விரிந்த பல வீதிகளும், மாட மாளிகைகளோடு காட்சி தந்து கொண்டிருந்ததோடு, அரண்மனையை ஒட்டி அமைந்த ராஜ வீதியும் பேரெழில் வாய்ந்ததாய் அமைந்திருந்தது. கோட்டையின் முகப்பில் யௌவன காவலர்கள் இரும்புக் கவசங்களை அணிந்தபடி கோட்டைச் சுவரெங்கும் பலத்த காவலில் ஈடுபட்டிருந்தனர். ஆறடி அகலத்திலும் நல்ல ஆழத்திலும் காணப்பட்ட அகழி கோட்டைச் சுவரை ஒட்டி நாற்புறமும் ஓடியபடி இருக்க, அதில் பசித்த முதலைகள் வாயை பிளந்தபடி காட்சி தந்து கொண்டிருந்தன. நான்கு திசைகளிலும் கோட்டை வாசலை அடைவதற்கு அகழிக்கு மத்தியில் பல பலகை அடுக்குகளைக் கொண்ட மரப்பாலம் கனமான இரும்புச் சங்கிலியுடன் பிணைத்தபடி காட்சி தந்து கொண்டிருந்தது. அதிகாலை இறக்கப் படும் பாலமானது, பொழுது இறங்கியதும் இரவின் முதலாம் ஜாமத்தில் தூக்கிக் கட்டப் பட்டு விடும். எனவே இரவினில் எவரும் நகருக்குள் நுழைவதென்பது முடியாத காரியமேயாகும்.
ராஜ வீதியின் இறுதியில் காணப்பட்ட எழில் மிகுந்த அரண்மனை இரண்டு மேல்தள அடுக்குகலோடு, வேலைப்பாடுகள் அமைந்த மேல் விதானமும், நீண்ட உப்பரிகைகளோடும், வளைந்த கோபுரக் கூடங்களையும், சித்ர வேலைப்பாடமைந்த அழகிய தூண்களையும் ஆங்காங்கே கொண்டு காட்சி தந்து கொண்டிருந்தது.
அரண்மனையின் வாயிலைத் தாண்டியதும் , அடுக்கடுக்காய் பல கட்டுக்கள் கண்ணுக்குள் விரிந்தன. முதல் தளத்தைத் தாங்கிய தலைத்தளத் தூண்கள் ஒவ்வொன்றும் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் காட்சி தந்து கொண்டிருந்தது. சிற்பக்கலையை வளர்த்த பல்லவரது அரண்மனை அல்லவா..! சுவர்களிலும் அஜந்தா வர்ணச் சேர்க்கையோடு கூடிய அழகிய ஓவியங்கள் பெரும் காப்பியங்களான இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தது.
மூன்று கட்டுக்களைக் கடந்து விரிந்த கூடத்தில் போடப்பட்டிருந்த பல ஆசனங்களில் இரண்டு ஆசனங்களில் ஒன்றில் சித்ரமாயனும், மற்றொன்றில் வீரமல்லனும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரே தலைகுனிந்தபடி பவ்யமாய் நின்றிருந்த இருவரை நாம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறோம். நாகையில் மரக்கலத்தில் ஏறி, கடலில் குதித்து நீந்தி வந்த இருவர் தான் அவர்கள்.
" உங்கள் இருவரால் உதயச்சந்திரனை நாகையிலேயே தீர்த்துக்கட்ட முடியவில்லை..அதை சொல்ல இங்கு வேறு வந்து விட்டீர்கள்..?! " என்று கோபத்தில் இரைந்தான் வீரமல்லன்.
" ஐயா..மரக்கலத்தில் அவனை தீர்த்துக் கட்ட எண்ணியே சென்றோம்..இரவின் மூன்றாம் ஜாமத்தில் மனிதர்கள் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் தான் இருப்பார்கள்., ஆனால் அவனோ பிசாசாக இருப்பான் போலிருக்கிறது..
அறைக்கதவை திறந்து கொண்டு ஆயுதத்துடன் வந்து விட்டான். அது மட்டுமின்றி மரக்கலத்தில் இருந்தவர்களும் எங்களை எதிர்பார்த்து விழித்தே இருந்திருக்கிறார்கள்.. கடலில் குதித்து தப்பி வந்தோம்..
இல்லையெனில் அங்கு நாங்கள் பிடி பட்டிருக்க வேண்டியது தான்.." என்று கூறி ஒருவன் முடிக்க..
மற்றொருவன் ஆரம்பித்தான், " நாங்கள் சென்ற வேளையில் அவர்கள் மட்டும் உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தால் உதயச்சந்திரனையும், அவன் அழைத்துக் கொண்டு வந்தவர்களையும் குறுவாளால் காலனிடம் அனுப்பியிருப்போம்.." எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே குறிக்கிட்ட சித்ரமாயன்.
" நிறுத்து உன் பிதற்றலை..நடைபெறாத காரியத்தைப் பற்றிப் பேசி ஏன் நேரத்தை விரயம் செய்கிறாய்..இறுதியாக கடற்கரையில் என்ன நடந்தது அதைச் சொல்..? " என்றான் எரிச்சலோடு சித்ரமாயன்.
" பல்லவமல்லன் என்றொரு சிறுவனை அழைத்து வந்திருக்கிறான் உதயச்சந்திரன்."
" சிறுவனா..?!"
" ஆம்..பனிரெண்டு வயதாகிறது அவனுக்கு.."
" பல்லவ பீடத்தில் அமர்த்த எனக்குப் போட்டி ஒரு சிறுவனா..?! நல்ல வேடிக்கை..! " என்றவாறு பலமாய் நகைத்தான் சித்ரமாயன்.
" சித்ரமாயா சிரித்தது போதும்..சிறுவன் என எள்ளி நகையாடாதே, உதயச்சந்திரனது எண்ணமும், அந்த பூணூல் அணிந்த பிராமணன் பிரம்மஸ்ரீ ராஜனது எண்ணமும் என்றுமே நமக்கு ஆபத்தை தான் விளைவிக்கும். இருவருமே சிந்தித்து செயலாற்றுவதில் வல்லவர்கள்..தளபதி பல்லவடி அரையனுக்கோ வாளைச் சுழற்றத் தெரிந்த அளவு புத்தியைச் சுழற்றத் தெரியாது..ஆனால் உதயச்சந்திரனை, பிரம்மஸ்ரீ ராஜனோ இருவரும் விஷநாகங்கள்..சற்று கவனமாக இருந்தால் தான் உனது ஆட்சி தப்பும்..உனக்கு இப்போது சாளுக்கியனின் நட்புறவும் குறைந்து போய்விட்டது..இதையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்..படைவீரர்கள் உதயச்சந்திரனுக்கு சாதகமாகத் திரும்பக் கூடியவர்கள்..இருப்பினும் ஒரு சிறுவனை அழைத்து வந்திருப்பதனால் , மக்களை திசைத் திருப்ப நமக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறான் உதயச்சந்திரன்." என்றான் பலத்த சிந்தனையோடு வீரமல்லன்.
" சிறுவனால் நமக்கு வாய்ப்பா..? புரியவில்லையே மாமா..?! "
" சித்ரமாயா, உன்னை வெறுக்கும் மக்கள் பீமவர்மனது வாரிசு என்று பல்லவ மல்லனை நேசிக்கலாம், ஆனால் நாம் செய்யப் போகும் பொய் பிரச்சாரங்களால் உதயச்சந்திரனையும் அவனது கூட்டாளிகளையும் மக்கள் விரோதப் போக்கிற்கு ஆளாக்க வேண்டும்.." என்றான் விஷமத்துடன் வீரமல்லன்.
" என்ன மாமா சொல்கிறீர்கள்..? எதிரிகளை மக்கள் விரோதப் போக்கிற்கு ஆளாக்க வேண்டுமா..! எப்படி..? "
" ஆம்..கவனமாக கேள்..எங்கிருந்தோ ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு வந்து பீமவர்மன் வாரிசு எனக் கூறுவதோடு, அவனை அரசுக் கட்டிலில் அமர வைத்து விட்டு, உதயச்சந்திரனும், அவனது கூட்டாளிகளும் , தங்கள் விருப்பத்திற்கு பல்லவ தேசத்தை ஆள விரும்புகிறார்கள் என்றும், சிம்மவிஷ்ணுவின் பரம்பரையைச் சேர்ந்த மாமன்னர் பரமேஸ்வரவர்மனது புதல்வனாகிய சித்ரமாயன் இருக்கும் போது, தேவையில்லாமல் பீமவர்மனது வாரிசு இங்கு ஏன் வரவேண்டும்..? அது உதயச்சந்திரனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து நடத்தும் நாடகம்..
பல்லவ தேசத்தை ஆள்வதற்காக அவர்கள் செய்த திட்டமிட்ட சதி செயல் ..என்கிற ரீதியில் மக்களிடம் வதந்திகளைப் பரப்ப வேண்டும்..
இதனால் உதயச்சந்திரனையும் அவனது கூட்டாளிகளையும் மக்கள் வெறுக்கத் துவங்குவார்கள், நாம் எளிதாக உதயச் சந்திரனை வீழ்த்தி விடலாம்..புரிந்து கொண்டாயா..? " என்றான் வீரமல்லன் ஆவேசத்தோடு.
ஆனால்..அதே வேளையில் இவர்களை வீழ்த்த உதயச்சந்திரனும் ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வடிவமைத்து விட்டான் என்பதை இருவரும் உணர்ந்திருக்கவில்லை.
இருவரது பிரச்சாரங்களில் மக்களை சென்றடையப் போவது எது..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
_ தொடரும்..
# அனுராஜ்..
குறிப்பு : * புத்த விகாரை என்பது புத்தரது கோவிலும், புத்த பிட்சுக்களுக்கான மடமும் இணைந்தது. ஆனால் புத்த சைத்யம் என்பது புத்தரது கோவில் மட்டுமே. அங்கு புத்தருடைய விக்ரஹம் மட்டுமே ஆலயத்தில் பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப் பட்டிருக்கும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக