05.09.20
ரேவா
வெடித்தது_புரட்சி_வீழ்ந்தது_ஆட்சி_22
திருவத்திபுர அரண்மனையில் நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அனைவரும் கலைந்த வேளையில் உதயச்சந்திரனது தோளின் மீது கைகளை வைத்து அவனைத் தடுத்து நிறுத்திய பல்லவ தேசத்து தளபதி பல்லவடி அரையன் , உதயச்சந்திரனை தனியாக அழைத்துக் கொண்டு சென்றதோடு,
"உதயச்சந்திரா , காம்புஜ தேசத்திலிருந்து பல்லவ மல்லனோடு அழைத்து வந்திருக்கிறாயே ஒரு இளம்பெண் யாரவள்..? " என்றார் நெற்றியை சுருக்கியபடி.
" பியூஷாவைக் கேட்கிறீர்களா..? அவள் தாயற்றவள், தந்தை எனக் கூறிக் கொள்ள காம்புஜ தேசத்தில் ஒருவர் உண்டு, ஆனாலும் அவளுக்கு அவர் தந்தையாக இருக்க முடியாதென எனது உள்ளுணர்வு கூறுகிறது. காம்புஜ தேசத்தில் எனது உயிரைக் காத்தவள். எனவே இங்கு அழைத்து வந்து விட்டேன்.." என்றான் உதயச்சந்திரன்.
" அவளது தந்தை எனச் சொல்லிக் கொள்கிறாரே, அவரது அனுமதி பெற்று அழைத்து வந்தாயா..? "
" ஆம்..ஏன் கேட்கிறீர்கள்..? "
" பல்லவ தேசத்திற்கு ஒரு வாரிசை நாம் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவிருக்கிறோம்..
நமது ஒழுக்கம் குறித்த பல வினாக்கள் மக்கள் முன் வைக்கப் படும், எனவே தான் தெளிவு படுத்திக் கொள்ளக் கேட்டேன்.. பியூஷாவை நீ விரும்புகிறாயா..? " என்றார் திடுமென.
" ஆம்..அவளை விரும்பியதனால் தான் இங்கு அழைத்து வந்துள்ளேன்.."
" அப்படியெனில் அவளை நீ ஏன் காந்தர்வ மணம் புரிந்து கொள்ளக் கூடாது..? வீரர்கள் வாழ்க்கையில் காந்தர்வம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தானே..?! " என்றார் பல்லவடி அரையன்.
" தளபதியாரே..அவளை நான் மணந்து கொள்ளப் போவது உறுதி..ஆனால் அது இப்போது இல்லை..காலம் கனிய வேண்டும்.." என்றான் உதயச்சந்திரன் ஏதோ யோசனையுடன்.
" ம்..நான் கூற வேண்டியதை கூறி விட்டேன்..இனி உன் விருப்பம்."
பல்லவடி அரையன் விடைபெற்று அகல, திருவத்திப்புர அரண்மனையின் அறைகளில் ஒன்றில் தங்கியிருந்த பல்லவ மல்லனையும், பியூஷாவையும் காண உதயச்சந்திரன் அங்கிருந்து நகன்றான்.
காஞ்சியின் புறநகர் பகுதி ஒன்றில் விளைந்த நெல்லினை பல பொதிகளாகக் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த ஒரு விவசாயியிடம், அக்கிராம ஆளுங்கணத்தாராக இருந்தவர், விளைந்த நெல்லில் நான்கில் ஒரு பங்கினை "காணமாக" அரசுக்கு தரும்படிக் கேட்க, விவசாயியோ வெகுண்டெழுந்தான், " ஐயா இதென்ன கொடுமை எட்டிலொரு பங்கினை தானே காணமாக இதுவரை வழங்கி வந்திருக்கிறேன். தற்போது கேட்பது அநியாயமாகத் தெரிகிறதே..? இப்போது திடீரென்று நான்கில் ஒன்று எனக் கேட்பது சரிதானா..? நியாயந்தானா..? " என்றபடி புலம்பத் துவங்கினான்.
" இதோ பார்..அரசாங்கம் வசூலிக்கச் சொன்ன அளவை தான் அது..உன்னிடம் பெற்று எனது வீட்டிற்கா கொண்டு போகப் போகிறேன்..நமது காஞ்சி மன்னர் பிரானின் உத்தரவு அது, மரியாதையாக அளந்து போடு, இல்லையென்றால் மொத்தமும் பறிமுதல் செய்து உன்னை கிராமச் சாவடிக்கு அலைய வைப்போம்.." என்றான் அந்த அரசு ஊழியன் அவனது கையாட்களுடன் வந்து நின்றபடி.
கண்களில் நீர்வடிய, புலம்பிக் கொண்டே அவன் கேட்ட அளவினை அளந்து போட்டவன், வழிநெடுக அரசாங்கத்தை வசைபாடிக் கொண்டே , அரைவண்டி பாரத்துடன் எருதினை ஓட்டிச்சென்றான்.
விவசாயி வீடு வந்து சேர்ந்த சற்று நேரத்தில் , மற்றொரு வண்டி வீட்டு வாசலில் வந்து நிற்க..அதில் அரசுக்குரிய நெல் பொதிகள் போக விவசாயிக்கு உரிய மீதி மூடைகள் இருந்தன..புரவியில் கம்பீரமாக அமர்ந்திருந்த உதயச்சந்திரன், " ஐயா..அரசுக்கு நீவிர் செலுத்த வேண்டியது போக மீதமுள்ளது சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு , இனி ஏதாவது பிரச்சனை என்றாலும் என்னை அணுகுங்கள்" என்றான் கம்பீரமாக.
கையெடுத்து வணங்கிய விவசாயி கண்களிலோ கண்ணீரோடு, மகிழ்ச்சியும் நன்றியும் சேர்ந்தே பெருக்கெடுத்தது.
காஞ்சி நகர் வீதிகளில் வணிகரது தெருக்களில் பரபரப்பாய் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென நான்கைந்து புரவிகளில் வந்தவர்கள் , வணிகர்களின் கடைகளில் நுழைந்ததோடு, அங்கிருந்த பொருட்களை வாரியெடுத்துக் கொண்டு புரவிகளில் சட்டென மறைந்தார்கள். வணிகர்களோ, அவர்களை விரட்டிச் சென்றும் மறைந்து போய் விட்டார்கள். அப்போது புரவிகளில் வந்த உதயச்சந்திரனும் அவனது படைவீரர்களும் நடந்த விபரங்களை கேட்டு, கொள்ளையடித்துச் சென்றவர்களை தேடிப் பிடித்து வருவதாக கூறிவிட்டு சென்றார்கள். சிறிது நாழிகைகளில் வணிகர்களுக்கு உரிய பொருட்கள் அவரவர் கடைகளுக்குச் சரியாக வந்து சேர்ந்தது.
அது மட்டுமின்றி இரவு வேளைகளில் சில கடைகளில் திடீரென நெருப்பு பற்றி எரிகிறது, நெருப்பினை வைத்தது யார்..? எப்படி நெருப்பு பற்றியது என்ற விபரங்களும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இது போன்ற பல செயல்கள் கடந்த நான்கைந்து நாட்களாகத் தொடர, மக்களுக்கு அச்சமும் பயமும் தொற்றிக் கொண்டது.வணிகர்களால் நிம்மதியாக வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை.. விவசாயிகளுக்கோ விளைந்த பொருளுக்குரிய மதிப்பினைப் பெற முடியவில்லை..மக்களின் குடியிருப்புகளும், வணிகர்களின் கடைகள் தீக்கிரையாக்கப் படுவதும், பொருள்கள் கொள்ளை போவதுமாய் இருக்க பல்லவ தேசத்து மக்களது நிலையோ சொல்லவொண்ணா துயராய் இருந்தது. ஆங்காங்கு உதயச்சந்திரன் திடீரெனத் தோன்றி பாதிக்கப் பட்ட பலருக்கும் பல உதவிகளை செய்து தந்துகொண்டிருந்த காரணத்தால், புகார்கள் எதுவும் நேரடியாக அரசின் கவனத்திற்கும் செல்லவில்லை.
இந்நிகழ்வுகள் காஞ்சியின் அரண்மனைக்குள்ளும் சித்ரமாயன் மற்றும் வீரமல்லனின் செவிக்கும் மெல்ல எட்டவே செய்தது. காஞ்சி நகரிலும் , புற நகர் பகுதிகளிலும் நடைபெறும் இது போன்ற செயல்கள் எவரால் நடத்தப் படுகின்றன என்பதும் புரியவில்லை..அரசு அலுவலரின் பேரில் குற்றம் சாட்டப் பட்டாலும், நேரடியாக வந்து புகார் தர , எவரும் வர மறுக்கிறார்கள்..பயத்தால் வர மறுக்கிறார்களா..?! இல்லை அவர்களை எவரும் அச்சுறுத்தி புகார் தரவிடாமல் செய்கிறார்களா என்பதும் புரியவில்லை.
குற்றங்களை எவராவது வந்து புகாராக தந்தால் அல்லவா , அரசு நடவடிக்கை எடுக்க இயலும்..?
இதைத் தவிர்த்து, காஞ்சி நகரெங்கும் உதயச் சந்திரனது தலைமையில் , அரசினை எதிர்த்து திடீரெனப் புரட்சி வேறு வெடித்து விட்டது. அரசாங்கம் அநியாயமாக மக்களை இம்சிக்கிறது, வணிகர்களையும், விவசாயிகளையும் அதிக காணம் தருமாறு கட்டாயப்படுத்தி துன்பத்திற்கு ஆளாக்குகிறது. மதுவின் மயக்கத்தில் சித்ரமாயன் பிறப்பிக்கும் கட்டளைகள் மக்களை பலவித இன்னல்களுக்கு ஆளாக்குகிறது. அது மட்டுமின்றி மதுமயக்கத்தில் சித்ரமாயன் பல தகாத செயல்களைச் செய்து கொண்டிருக்கிறான் என்ற தகவலும் நகருக்குள் பரவத் தொடங்கியிருக்க, கூடவே ஆங்காங்கே குளக்கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் தகராறு செய்ததாகவும், பெண்கள் சித்ரமாயனை அடித்து விரட்டியதாகவும் மக்கள் ஊரெங்கும் தெருவெங்கும் பேசத் துவங்கினார்கள்.
உடனே, பதில் எழுந்தது அவர்களுக்கு, உதயச்சந்திரன் மட்டும் என்னவாம்..? காம்புஜ தேசத்திலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறான், மணமும் செய்து கொள்ளவில்லை..இது மட்டும் சரியான செயலா..?!" என்றான் ஒருவன்.
அது மட்டுமல்ல, நமது தளபதி மற்றும் முதலமைச்சர், உதயச்சந்திரன் மூவரும் சேர்ந்து கொண்டு ஒரு சிறுவனை காஞ்சிக்கு அழைத்து வந்திருக்கிறார்களாம்..அவனையே காஞ்சி அரியணையில் அமர்த்தவும் போகிறார்களாம்..அது தெரியுமா உங்களுக்கு..? என்றான் ஒருவன்.
" சிறுவனை முன்னிறுத்தி அவர்கள் நாட்டை ஆள நினைக்கிறார்களோ என்னவோ..? பெரிய இடத்து சங்கதி நமக்கென்ன தெரியும்..?" என்றான் வேறொருவன்.
காஞ்சி நகரின் தெருக்களில் எல்லாம், இரண்டு மாறுபட்ட கருத்துகளும் நிலவத் தொடங்கியது.
இரண்டு கருத்துக்கள் நிலவினாலும், சித்ரமாயன் குடிகாரன் என்பதும், பெண் பித்தன் என்பதும் பலருக்கும் தெரியுமாதலால், அவர்கள் உதயச்சந்திரன் மீதான குற்றச்சாட்டினை அசட்டையே செய்தனர். அது மட்டுமல்லாது தளபதியும், முதலைமைச்சரும், உதயச் சந்திரனும் பல்லவ தேசத்திற்காக செய்திருக்கும் தியாகங்களை எடுத்துரைக்கவும் ஒரு சிலர் செய்ததோடு, சாளுக்கியனோடு இணைந்து கொண்டு பல்லவ தேசத்திற்கே அவமானத்தை விளைவித்தவன் சித்ரமாயனும், அவனது மாமனும் தான்..அதனால் தான் அவனை அரியணையில் இருந்து அப்புறப் படுத்தி விட்டு, காம்புஜத்தை சேர்ந்த பீமவர்மனது வாரிசான சிறுவன் பல்லவ மல்லனை உதயச்சந்திரன் அழைத்து வந்திருக்கிறான்..சித்ரமாயன் தரமானவன் என்றால் இவர்கள் ஏன் பல்லவ மல்லனை அழைத்து வரப் போகிறார்கள்..! " என்ற பேச்சுக்களும் மக்களிடம் பொதுவாக புழங்கத் துவங்கி விட்டது.
மக்களின் மனநிலை கடந்த ஒரு பட்ச காலமாக இது போன்று இரு நிலைகளில் இருந்து வர..
உதயச்சந்திரன் நடத்திக் கொண்டிருந்த சித்ரமாயனுக்கு எதிரான புரட்சியும் தீவிரமடைந்தது. சித்ரமாயனும், வீரமல்லனும் எவ்வளவோ முயற்சித்தும் உதயச்சந்திரனைப் பிடிக்க முடியவில்லை.
அவ்வாறான சூழலில் ஒரு நாள் இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் துவங்கப் போவதைக் காஞ்சி கைலாசநாதர் ஆலய மணி அறிவித்து ஒலித்து அடங்க. அரண்மனையின் வெளிச்சுவர்களை ஒட்டி அமைந்திருந்த பெரிய மரங்களில் தொற்றிக் கொண்டு ஏறிய பலர், ஓசைப் படாமல் அரண்மனைச் சுவரினை தாவி குதித்ததோடு, காவலுக்கு நின்றிருந்த ஒரு சில காவலரை அப்புறப் படுத்தியதோடல்லாமல், அரண்மனை வாயிற் கதவை திறந்தும் விட்டனர். மறுகணம் இருபதுக்கும் மேற்பட்ட புரவிகள் அதி வேகமாய் அரண்மனை வாசலைக் கடந்து , உள்ளுக்குள் புக, புரவியில் தலைமையேற்று வந்திறங்கிய உதயச்சந்திரனோடு, புரவிகளில் வந்திறங்கிய வீரர்களும் சேர்ந்து கொள்ள, திடுதிடுவென அரண்மனையின் பலக் கட்டுக்களைக் கடந்து சித்ரமாயனது அறையை அடைந்த உதயச் சந்திரன் , கதவினைத் தாளிடாமல் மதுவின் மயக்கத்தில் மஞ்சத்தில் நித்திரையில் இருந்த சித்ரமாயனை வாளின் முனையால் தட்டி எழுப்பினான்..மது மயக்கத்தோடு ஆழ்ந்த
நித்திரையில் இருந்த சித்ரமாயன் மலங்கமலங்க விழித்தபடி எழுந்திருக்க, என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுமுன் உதயச்சந்திரனால் சிறை செய்யப்பட்டான்..அதே போல் வேறொரு அறையில் நித்திரையில் இருந்த வீரமல்லனது அறைக் கதவும் தட்டப்பட்டு, எழுந்து வந்த வீரமல்லனும் உதயச் சந்திரனது ஆட்களால் சிறைசெய்யப்பட்டு இரவோடு இரவாகச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப் பட்டான். நான்காம் ஜாமம் முடியும் தருவாயில் உதயச்சந்திரனது கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்டது காஞ்சி நகர்.
நடந்து முடிந்த அதிசயத்தைக் காணும் ஆவலோடு, கீழ்வானில் மெல்ல எட்டிப் பார்த்தான் ஆதவன்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக