10.09.20- ரேவா : 27 : அரிகேசரி_பராங்குச_மாறவர்மன் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 10 செப்டம்பர், 2020

10.09.20- ரேவா : 27 : அரிகேசரி_பராங்குச_மாறவர்மன்

 



10.09.20


ரேவா


அரிகேசரி_பராங்குச_மாறவர்மன்_27


மூவேந்தர்களில் பெருமை மிக்கவர்களும், தென்புலத்தை ஆண்டவர்களில் பழமையோடு, சிறப்பு வாய்ந்தவர்களும், முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென தமிழை வளர்த்தெடுத்தவர்களும், கடற்கோளினால் தங்களது கோ நகரங்களை மாற்றிக் கொண்டாலும், தொன்மையிலும், பழமையிலும் பெருமிதம் கொள்ளுமளவிற்கு நெடிய வரலாற்றுச்  சிறப்பு மிக்கவர்கள் பாண்டியர்களே.


கபாடபுரத்தினைக் கடற்கோளினுக்கு பலியிட்டவர்களாய், தங்களது தலைநகரை மிக வடக்கே நகர்த்தி  வையை நதிக் கரையோரம் கூடல் மாநகரை தலைநகராகவும், கொற்கையைத் துறைமுகப் பட்டினமாகவும் கொண்டு நல்லாட்சி புரிந்தவர்கள் பாண்டியர்கள்.


இக்கதை நிகழும் காலத்தில் , பாண்டியர்களின் தலைநகராய் கூடல் மாநகரே விளங்கியது.

நான்மாடக் கூடலென்றும், தூங்கா நகரென்றும் பெருமையுடன் விளங்கிய மதுரைக்கு உலகின் தொன்மையான நகர்களில் ஒன்று என்ற சிறப்புப் பெருமையும் உண்டு.


சித்ரமாயனும், வீரமல்லனும் வையை நதியினை கடந்து தென் கிழக்கில் சற்றே வரப் புலப்பட்டது , நெடிதுயர்ந்த கூடல் நகரின் கோட்டை மதிற் சுவர்கள். அகலமான மதிலும், ஆங்காங்கே வீரர்களின் காவலுடன் காணப்பட்ட வேலைப்பாடமைந்த மாட கோபுரங்களும், கோட்டை மதிற் புரத்தில்  நீட்டிக் கொண்டிருந்த விற்பொறிகளும், வேல் தாங்கிய யௌவன வீரர்களும், கோபுரத்தின் உச்சியில் படபடத்துக் கொண்டிருந்த கயற் கொடியானது மாலைக் கதிரவனின் பொற்கதிர்கள் பட்டு தகதகவென மின்னியபடி அசந்தாடிக் கொண்டிருந்த அழகும் காண்போரை கவருவதாய் அமைந்திருந்தது.


கோட்டையை நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் அதீத வியப்பை வழங்கியது சித்ரமாயனுக்கு, நாற்புற வாசல்களோடு சுற்றிலும் வெட்டப் பட்டிருந்த அகலமான அகழியும் , தாழிடப் படாத வாசல்களைக் கொண்ட மரக் கதவுகளும் கூடல் நகரை அனைவரும் விரும்பும் ஒரு நகராகச் செய்திருந்ததோடு மட்டுமல்லாது, கோட்டையைச் சுற்றி வளர்ந்திருந்த ஏராளமான கதம்ப வனக் காடுகளும் மனதிற்கும், கண்ணிற்கும் இனிமையை வாரி வழங்கிக் கொண்டிருந்ததெனலாம். 


வானுயர்ந்த வாசல்களைத் தாண்டி உள்நுழைந்த இருவரையும் வியப்பில் ஆழ்த்தியது, நகரின் நேர்த்தியான தெருக்களும், தெருக்களில் வலம் வந்து கொண்டிருந்த பல நாட்டு மக்களும். சீனர், சோனகர், யௌவனர், சாவகர், கடம்பர், வடவர், தெலுங்கர் , கீழ்திசை நாடுகளான சாவகம், ஸ்ரீவிஜயத்தை சேர்ந்தவர்களும் கூட்டம் கூட்டமாக கண்ணில் பட்டனர். நகரின் புகழை மேலும் கூட்டும் படியாக அன்னை மீனாட்சியின் ஆலயக் கோபுரமும் கண்ணுக்கு பலத்த விருந்தளித்துக் கொண்டிருந்தது. ஆலய கோபுரத்தில் தான் எத்தனை எத்தனை அழகிய சிற்பங்கள். கோபுரங்களை கண்ணுற்றதும் அதன் இடுக்குகளில்  குடியிருந்த பறவைகளும் பார்வையில் பட்டது. அப்பறவைகள் இணைஇணையாய் சிலைகளின் தோளிலும்  தலையிலும் அமர்ந்தபடி, தலையை அப்படியும் இப்படியும் திருப்பி அழகூட்டிக் கொண்டிருந்தன. இவையனைத்தையும் கண்ணுற்றவர்களாய் பல வீதிகளைக் கடந்து, அரண்மனையை அடைந்தார்கள். புகழாபரணம் எனப் புகழப்பட்ட அந்த அரண்மனையை அடைந்ததும், புரவிகளை விட்டிறங்கி அரண்மனை வாயிற் காவலனை அணுகிய இருவரும், அரண்மனை காரியதரிசியைக் காண வேண்டுமென்று விண்ணப்பிக்க, சற்று நேரத்தில் ஒரு நடுத்தர வயதுடையவர் இருவரையும் நோக்கி வந்தார்.


" வணக்கம்..நாங்கள் காஞ்சியிலிருந்து வருகிறோம். பாண்டிய தேசத்தின் மாமன்னர் அரிகேசரி பராங்குச மாறவர்மரைச் சந்திக்க விரும்புகிறோம்.." என்றான் வீரமல்லன்.


" நீங்கள் இருவரும் யார்..? உங்களது பெயர்கள் என்ன..? என்ன காரணத்திற்காக மன்னரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்..? " என  அடுக்கடுக்காய் பலக் கேள்விகளை எழுப்பினார் அரண்மனைக் காரியதரிசி.


" இதோ இவர் சித்ரமாயன் , பல்லவ தேசத்தின் மன்னன் . சமீபத்தில் கங்கருடன் நடந்தப் போரில் வீரசுவர்க்கம் அடைந்த பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனது புதல்வர், நான் அவருடைய தாய்மாமன் வீரமல்லன். அரசியல் காரணங்களுக்காக மன்னரது தரிசனம் நாடி வந்திருக்கிறோம் " என்றான் வினயமாக வீரமல்லன்.


" நல்லது..இதோ இந்த இருக்கையில் அமருங்கள், நான் போய் மன்னரின் அனுமதி பெற்று வந்து தங்களிருவரையும் அழைத்துச் செல்கிறேன்." என்று விட்டு அவர் அங்கிருந்து நகன்றார்.


ஆசனத்தில் அமர்ந்த இருவரும் , மதிற் சுவர்களில் காணப்பட்ட சிற்பங்களையும், ஓவியங்களையும் ரசித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே தென்பட்ட ஒரு சில  காவலரைத் தவிர பலமான காவலும் அங்கில்லாததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தான் சித்ரமாயன்.


அரை நாழிகையில் திரும்பி வந்த அரண்மனையின் காரியதரிசி, " என்னைத் தொடர்ந்து வாருங்கள்.." என்றபடியே பலக் கட்டுக்களையும், இடைக்கழிகளையும் தாண்டி அழைத்துச் சென்றவர் , ஒரு பெரிய அறையின் வாசலில் அவர்களை நிறுத்தியவராய் , அந்த அறைக்குள் செல்ல பணித்ததோடு, " உள்ளே சென்று அமருங்கள்..சற்று நேரத்தில் மாமன்னரை சந்திக்கலாம் " என்றுவிட்டு அங்கிருந்து நகன்றார்.


அறைக்குள் அமர்ந்திருந்த இருவரும், அறையினை நோட்டமிட்டனர். சுற்றுச் சுவரெங்கும் அழகிய வண்ணப் பூச்சுக்களுடன், ரம்மியமான இயற்கைக் காட்சிகள் வரையப் பட்டிருந்தன. மேல் விதானத்தைத் தாங்கி நிற்கும் அழகிய தூண்களிலும் சித்தி்ர வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டது.. மேலிருந்து தொங்கிய அழகிய யௌவன தகழி விளக்கும், ஆங்காங்கு மதிற் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த வெண்கல விளக்குகளும், அரேபிய தேசத்து கம்பளங்களும்,  சீன மென்துகிலால் செய்யப்பட்டு இருந்த தீரைச் சீலைகளும், மதிற் சுவரில் ஆங்காங்கு மாட்டப்பட்டிருந்த கேடயங்களும், வாட்களும், அறைகளில் காணப்பட்ட உயர்ரக ஆசனங்களும், அறைக்குள் நுழைபவரை வரவேற்கும் விதமாய் நின்று கொண்டிருந்த இரு  வெண்கலப்பாவை விளக்குகளும் , சாளரத்தின் வழியே மெல்ல ஊடுருவிக் கொண்டிருந்த மாலைக் கதிரவனின் ஒளிக்கீற்று ,அங்கிருந்த பொருள்களில் எல்லாம் பட்டு பலவித மாயாஜாலங்களை

வெளிப்படுத்திக் கொண்டிருக்க, ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பார்வையில் நுழைந்தான்.


உயரமான உருவத்துடன், அளவான தேகத்துடன், முழங்கால் வரை நீண்ட கைகளுடன், கரியநிற சுருண்ட கேசங்கள் தோளினில் விழ, காதினில் அசைந்த இரு குண்டலங்கள் மின்னிட, நெற்றியில் சந்தனக் கீற்றும் அதன் நடுவினில் செஞ்சாந்து பொட்டினைத் தீட்டியவனாய்,  மார்பினில் தவழும் பெரிதான முத்துச்சரங்களும்,  கயற் சின்னம் தாங்கிய நவரத்தின ஆரமும் அணிந்தவனாய், வெண்பட்டுத் தகடி ஒன்றினை தோளில் போர்த்திய படி, இடைக்கச்சையில் தொங்கிய நீண்ட அகலமான வாள் அவன் நடந்து வருகையில் அவனது வலது காலினைத் தழுவியபடி அசைந்து வர, கால்கள் இரண்டிலும் முத்துச் சரங்கள் பதித்த தண்டை அணிந்தவனாய், சிவந்த மேனியுடன் செவ்வரியோடிய கண்களில் மின்னிடும் ஒளியுடன் கம்பீரமாக அறைக்குள் நுழைந்தான் #ராஜசிம்மன்  என்றழைக்கப்படும் அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியன்.


_ தொடரும்..


#அனுராஜ்..


#குறிப்பு : பராங்குச பாண்டியன், ( முதலாம் ) ராஜசிம்மன் என்றும் சிறப்பிக்கப் பட்டதோடு, மாறவர்மன் எனும் சிறப்புப் பெயரையும் பெற்றிருந்தான். அத்தோடு அவனது பாட்டனின் அரிகேசரி பட்டத்தையும் பெற்றவனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages