12.09.20
ரேவா
மனதின்_துயரம்_29
பல்லவத் தலைநகர் காஞ்சி அரண்மனை கடந்த சில தினங்களாகவே ஒரே பரபரப்பாகவே காணப்பட்டது. அதிகரணசபையினரின் தீர்ப்பினை அடுத்து, உதயச்சந்திரன் பல்லவ மல்லனை அரண்மனைக்கு அழைத்து வந்திருந்ததோடு, அரண்மனையின் அனைத்து பணியாளர்களுக்கு தனியாகவும், அரண்மனைக் காவலர்களுக்குத் தனியாகவும் பல்லவ மல்லனை அறிமுகப் படுத்தி வைத்தான். பல்லவ தேசத்தின் மன்னன் என்றும், மன்னரிடம் அனைவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
பல்லவ மல்லனுக்கு காஞ்சி அரண்மனையில் சகல சௌகரியங்களும் தடங்கலின்றி தடபுடலாக கிடைத்துக் கொண்டிருந்தது. பல்லவ மல்லனோடு வேறொரு தனியறை பியூஷாவிற்கும் அரண்மனையிலேயே ஒதுக்கப் பட்டிருந்த காரணத்தால் பல்லவ மல்லனது பெரும்பாலான பொழுதுகள் பியூஷாவுடனே கழிந்தது. அவள் தானே அவனுக்கு நன்கு பழக்கமானவள். "சகோதரி " என்றழைத்தபடி அவளையே அவன் சுற்றிச்சுற்றி பொழுதெல்லாம் வலம் வந்தான்.
இருவருக்குமிடையேயான அன்பிற்கு பஞ்சமில்லை. பல்லவ மல்லன்
உடனிருக்கும் வேளைகளில் பியூஷாவின் பொழுதுகள் சற்றே கலகலப்பாகக் கழிந்தாலும், உதயச்சந்திரனை அரண்மனையில் அதிகம் பார்க்கவோ, சரிவர பேசவோ இப்போதெல்லாம் முடிவதில்லை என்பதே பியூஷாவின் மனதிற்கு மிக அதிகத் துன்பத்தை விளைவித்தது.
உதயச்சந்திரன் பல்லவமல்லனது மகுடாபிஷேக விழாவிற்கான பணிகளில் ஆழ்ந்து கிடந்தான். அது மட்டுமின்றி அதிகரணசபையின் தீர்ப்பிற்குப் பின் திடீரென காணாமல் போய்விட்ட சித்ரமாயனும், வீரமல்லனும் இதுவரை கண்ணில் படாதது சற்றே கவலையைத் தந்தது. ஏனெனில் அவர்களின் குணம் உதயச்சந்திரன் அறிந்தது தான். எங்கு எந்த மாதிரியான சூழ்ச்சி வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறார்களோ என சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தான். அத்தோடு சாளுக்கியர்களின் தொல்லையும் எந்த நேரத்திலும் நிகழ வாய்ப்பிருப்பதை உணர்ந்தேயிருந்தான். சாளுக்கிய விக்கிரமாதித்தனின் கைப்பாவையாக செயல்பட்ட சித்ரமாயன் காஞ்சியின் மன்னனாய் செயல்பட்ட போது , சாளுக்கிய தேசத்தின் காஞ்சிப் பிரதிநிதியை அவமதித்து அனுப்பி விட்ட காரணத்தாலும், உரிய திறையினைச் செலுத்தத் தவறியதாலும் , சாளுக்கிய விக்கிரமாதித்தனின் கோபத்திற்கு ஆளாகியிருந்தான், அத்தகையச் சூழலில் உதயச்சந்திரன் வேறு திடீர் புரட்சி மூலம் சித்ரமாயனை அகற்றிவிட்டு ஆட்சியினை தங்கள் வசப் படுத்திக் கொண்டதும் சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்பதனால், சாளுக்கியரது தாக்குதலும் எப்போதும், எந்நேரமும் நேர்ந்திட வாய்ப்பிருந்த காரணத்தால் சற்றே கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்திட உதயச்சந்திரன் தலைப்பட்டான். தலைநகரினைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதும், கோட்டையின் பாதுகாப்பினை வலுப்படுத்தவுமே அவனுக்கு பொழுது சரியாக இருந்தது. அதனால் பியூஷாவிடம் கூட உதயச்சந்திரனால் மனம் விட்டுப் பேச வாய்ப்பில்லாமல் இருந்தது. அதனால் தானோ என்னவோ பியூஷா வெளித்தோற்றத்தில் கவலையற்று இருப்பவளைப் போல் காணப்பட்டாலும் , மனதிற்குள் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தாள். #நெட்டிச் செடியினைப் போலிருந்தது அவளது நிலைமை. மனதின் வெளிப்பாடு அவளது செய்கைகளிலும், அவள் ஆற்றிய பணிகளிலும் அப்பட்டமாய் தெரியவே செய்தது. எவரையாவது கண்ணுற்றதும் வலிந்து புன்னகைத்தாலும் அதில் ஜீவனிருப்பதில்லை என்பதை உணர்ந்தேயிருந்தாள். தனது துன்பத்தின் சுமையை தனிமையில் அரண்மனையின் நந்தவனத்திலும், அங்கிருந்த பொய்கைக் கரையிலும் அமர்ந்து போக்கிக் கொண்டவளாய், பொழுதினைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
அரண்மனை வாழ்க்கை பியூஷாவிற்கு கலகலப்பினைத் தருவதற்கு பதில் கலவரத்தையே தந்ததெனலாம்.
உதயச்சந்திரனது அருகாமையை எண்ணியும், அவனிடம் அடிக்கடி அளவளாவ தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணியவளுக்கு, அரண்மனைக்கு வந்து சேர்ந்த பின் உதயச்சந்திரனைக் காண்பதென்பதே பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இதெல்லாம் சேர்ந்து அவளை கவலையில் ஆழ்த்தி விட்டிருந்தது..பொய்கையின் கரையில் அமர்ந்தபடி சோகமாய் அமர்ந்திருந்தவள், குளத்தில் காணப்பட்ட அல்லியையும், தாமரையும் கண்டு சற்றே முகம் மலர்ந்தாள். ஒரு வண்டானது அங்கிருந்த ஒவ்வொரு மலரையும் முகர்ந்தபடி ரீங்காரமிட்டு குளத்தையே சுற்றி வந்ததையும், இரு பறவைகள் அங்கிருந்த மகிழ மரமொன்றில் அமர்ந்தபடி கொஞ்சி மகிழ்ந்ததைக் கண்டு , நாமும் அந்த வண்டினைப் போன்றோ, பறவையாகவோ பிறந்திருக்கலாம் என்று எண்ணினாள். நந்தவனத்தில் காணப்பட்ட நானாவித மலர்ச் செடிகளில் இருந்து நாசியை வந்தடைந்த மணம் அவளுக்குள் ஒரு புத்துணர்ச்சியை இப்போது தந்து கொண்டிருந்தது. இயற்கை ஒன்றுக்குத் தான் மனித மனதினை மாற்றும் வல்லமை இருப்பதை எண்ணி திகைப்பில் ஆழ்ந்தாள்.
பல நாழிகைகள் இவ்வாறே கழிந்து கொண்டிருக்க..பொய்கையின் நீரில் தோன்றிய இவளது எழிலார்ந்த பிம்பத்தினைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவளது தலைக்கு மேலே நீரில் வேறொரு பிம்பமும் தெரிய, திடுக்கிட்டவளாய் சட்டெனத் திரும்பினாள். இதழோரம் புன்னகை வழிய உதயச்சந்திரன் தான் நின்றிருந்தான்.
பொய்கையின் கரையில் இரு கால்களையும் நீட்டி, இடையை சற்றே ஒடித்து , இடதுகரத்தை பொய்கையின் கரையில் ஊன்றியவளாய், வலது கரத்தால் அப்பொய்கைக் கரையில் விளைந்திருந்த ஒரு செடியிலிருந்து பறித்த மலரொன்றை கைகளில் வைத்தபடி ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவளாய், கண்களில் தேக்கிய கவலையோடு காட்சி தந்த பியூஷா , உதயச்சந்திரனது கண்களுக்கு ஒரு சிலையெனத் தெரிந்தாள். இவன் அருகில் நெருங்கியதும் அந்தச் சிலை அசைந்து, மெல்ல பாவத்தினை மாற்றி பேசவும் செய்தது.
" படைத்தலைவருக்கு என்னோடு பேசவே இப்போதெல்லாம் நேரமிருப்பதில்லை..! " என்றாள் பெருமூச்சு விட்டபடி.
" என்ன செய்வது..பணி நிமித்தமாய் அலைந்து கொண்டிருக்கிறேன்..! "
" காம்புஜ தேசத்திலிருந்து மன்னரோடு, ஒரு மங்கையையும் அழைத்து வந்ததாவது நினைவிருக்கிறதா..? " அவளது குரலில் தெறித்தது கோபமா..? இகழ்ச்சியா..? புரியவில்லை.
" நினைவில்லாமல் என்ன..! மறக்கக் கூடிய மங்கையா அவள்.?.! " என்றான் குறும்பாய் உதயச்சந்திரன்.
" உம்.." என்று அவள் வெளிப்படுத்திய உம்காரத்தில் பலவித வெளிப்பாடுகள்.
" மறக்க கூடிய மங்கை இல்லை என்றால், அவளது மனதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை..? " என்றாள் கோபத்துடன்..இப்போது கோபம் நிஜமாய் அவளிடம் எழுந்தது.
" மங்கையரின் மனதினை முழுதும் புரிந்து கொண்டவர் தான் யார்..? " என்றான் விஷமம் கலந்த குரலில்
" ம்..இதற்கொன்றும் குறைச்சலில்லை.."
" வேறெதற்கு குறைச்சல் என்கிறாய்..? " என்றான் குறும்புடன்.
" தன்னை நம்பி வந்த பெண்ணிடம் தினமும் நாலு வார்த்தைகள் உரையாட வேண்டுமென்ற எண்ணம் எழவில்லையா உங்களுக்கு..? " சூடாக எழுந்தது அவளிடமிருந்து கேள்வி.
" நாலு வார்த்தை என்ன, நாற்பது வார்த்தைகள் கூட பேசலாம் தான்..ஆனால் கண்முன்னே இருக்கும் கடமை அதை செய்ய விடாமல் தடுக்கிறதே..! " என்றான் நகைத்தபடி.
" என்னிடம் தினமும் பேச வேண்டியதும் தங்களின் கடமை தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.."
" மறக்கவில்லையே நான்..இருப்பினும் காதலா..கடமையா..எனும் போது கடமைதானே முன் நிற்கிறது.." என்றான் முகத்தில் வருத்தத்தைக் காட்டியவனாய்.
" பிறகு ஏன்..? என்னை இங்கு அழைத்து வர வேண்டும்..காம்புஜத்திலேயே விட்டு வந்திருக்கலாமே..? " பியூஷாவின் குரலில் கோபத்துடன் சீற்றமும் கலந்தே வெளிப்பட்டது.
" உன் மீது காதல் இல்லாமலா, நான் இங்கு அழைத்து வந்தேன்..பியூஷா, உன்னை முதலில் கண்டவுடனேயே என் மனதினை ஆக்கிரமித்து விட்டவள் நீ.." என்று குழைந்தான் .
பெண்டிர் கோபத்தில் இருக்கும் போது, ஆடவர் சிரித்து மழுப்பியும், பணிந்தும் தான் போக வேண்டியிருக்கிறது. மாறாய் ஆடவனும் கோபத்தைக் காட்டினால் விளைவது அனர்த்தமே. அதை உதயச்சந்திரன் நன்கு உணர்ந்தேயிருந்தான்.அது அடுத்து அவன் சொன்ன வார்த்தைகளிலும் தென்பட்டது.
"பல்லவ மல்லனை இங்கு ஏன் அழைத்து வந்திருக்கிறோம் என்பதை நீயும் அறிவாய்..பல்லவ அரியணையில் அவனை அமர்த்தி விட்டால் எனது பணியின் பாரம் பெருமளவு குறைந்து விடும்..அதுவரையில் எனது சொந்த வாழ்வின் சுகங்களைக் கூட எண்ணிப் பார்க்க முடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கிறேன்." என்றான் கவலையுடன்.
" பல்லவ மல்லனை ஆட்சியில் அமர்த்திவிட்டால் இந்நிலை மாறி விடுமல்லவா..? " ஆவலுடன் கேட்ட அவளின் கண்களில் பளிச்சிட்டது மின்னல்.
ஆனால்..விதி..?
பல்லவ மல்லனை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பின்பும் உதயச்சந்திரனை ஆட்டிப் படைக்கவே செய்தது.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : # நெட்டிச் செடியானது நீருக்கு மேல் பசுமையாக இருப்பினும், நீருக்கடியில் பசுமை குறைந்து ஈரமற்று காணப்படும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக