மலைச்சாமி
12.09.20
வரலாற்றில் இன்று 12.09.2020
September 12, 2020
என்றும்..
அன்புடன்....
என் இனிய காலை வணக்கங்கள்...
செப்டம்பர் 12 (September 12) கிரிகோரியன் ஆண்டின் 255 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 256 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 110 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 490 – கிரேக்கம் மரதன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்தது. பிடிப்பிடஸ் என்ற கிரேக்க வீரன் இவ்வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க நெடுந்தூரம் ஓடினான். மரதன் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
1609 – ஹென்றி ஹட்சன் ஹட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
1683 – ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.
1759 – பிரித்தானியப் படையினர் கியூபெக் நகரைக் கைப்பற்றினர்.
1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
1857 – வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426 பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13-15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
1890 – ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.
1933 – அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.
1940 – நியூ ஜேர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் ஜெர்மனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி “ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.
1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1974 – எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1977 – தென்னாபிரிக்காவின் நிறக்கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
1980 – துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் கருப்பு-அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2001 – ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான ஆன்செட் ஆஸ்திரேலியா மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.
2005 – இஸ்ரேல் காசாப் பகுதியில் இருந்து தனது படைகளை முற்றாக விலக்கியது.
2005 – ஹொங்கொங்கில் ஹொங்கொங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.
2006- திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது “தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்” என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.
பிறப்புக்கள்
1832 – சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி, (இ. 1901)
1913 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்க தட கள ஆட்டக்காரர் (இ. 1980)
1943 – மைக்கல் ஒண்டாச்சி, இலங்கையில் பிறந்த எழுத்தாளர்
1969 – கப்டன் மொறிஸ், விடுதலைப் புலிகளின் போராளி (இ. 1989)
1980 – யாவ் மிங், சீனக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1612 – நான்காம் வசீலி, ரஷ்யப் பேரரசன் (பி. 1552)
2009 – நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)
சிறப்பு நாள்
கேப் வேர்ட் – தேசிய நாள்
எதியோப்பியா – தேசியப் புரட்சி நாள் (1974)
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி .
சி. வை. தாமோதரம்பிள்ளை (C. W. Thamotharampillai, 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.
1857 வருடம் இரண்டு யாழ்ப்பாண இளைஞர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் B.A தேர்வு எழுதினர் .அந்த இரண்டு இளைஞர்களும் தேர்வில் வெற்றிபெற்றதால் அதிக மதிப்பெண்கள் பெற்ற C.W.தாமோதரம்பிள்ளை அவர்கள் சென்னைப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியாக அறிவிக்கப்பெற்றார் .
இரண்டாவது பட்டதாரியான வைரமுத்து விசுவநாதப்பிள்ளையைப்பற்றி அதிகம் தெரியவில்லை .இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து விசகணிதம் மற்றும் சுப்ரதீபம் போன்ற நூல்களை எழுதியதாகத் தெரிகிறது .
முதல் பட்டதாரியான திரு .C.W.தாமோதரம்பிள்ளை பற்றி மேலும் ........
தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு எளிதாய் கிடைக்கச் செய்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானோர் இப்பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
முறையாக பாதுகாக்கப்படாமல் நீர், நெருப்பு, கரையான் இவற்றால் அழிந்து வந்த தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்து புதுவாழ்வு தந்தவர் தாமோதரம்பிள்ளை. இன்று தமிழ்த்துறையில் ஆராய்ச்சி செய்வோருக்கு பெரும் துணையாக இருப்பவை இவர் பதிப்பித்த நூல்களே. தமிழ்நூல்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற நோக்கங்களால் தனது வாழ்நாள் முழுமையும் எழுதுவதிலும், பதிப்பிடுவதிலும் ஆர்வம் காட்டினார்.
தமிழகத்தில் இன்று பதிப்பாளர்கள் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பதிப்புத்துறையில் வணிகத்திற்காக அல்லாமல் தமிழ்மீது தான் கொண்ட அன்பால் தமிழ் நூல்களைப் பதிப்பித்த முதல்வர். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை என்றால் எத்துணையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால் இவரின் தொண்டு தமிழும், தமிழரும் இருக்கும் வரை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
சி.வை.தாமோதரம்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவிஅம்மாள் ஆகியோருக்கு மகனாக 1832-ல் பிறந்தார். பன்னிரண்டு வயதிலேயே தமிழில் சில இலக்கண, இலக்கிய நூல்களைத் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டார். பின்னர் கவிராயர் முத்துகுமாரரிடம் இலக்கண, இலக்கியங்களை முறையாக படித்தார். மொழிப்பற்று இல்லாத மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன என கேள்விகணைகளைத் தொடுத்தவர்.
1853-ல் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றிய போது, தனது இருபதாம் வயதிலேயே “நீதிநெறிவிளக்கம்” என்ற நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு தமிழ் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அதே ஆண்டு தினவர்த்தமானி என்ற தமிழ் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க தாமோதரம்பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்பிற்கு உடன்பட்டு சென்னை வந்தார். ஆங்கிலேயர் பலருக்கு தமிழ்மொழி கற்றுக்கொடுத்தார்.
ஏடுகளைத் தேடி இரவு பகல் பாராமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். தேடுதலில் கிடைக்கும் ஓலைச்சுவடிகள், எடுக்கும் போதே ஓரம் ஒடிந்து விழும்; கட்டைஅவிழ்க்கும் போதே துண்டு துண்டாய் கொட்டும்; இன்னும் எழுத்துக்கள் பாதி அழிந்தும் பாடல்கள் வரிசையின்றியும் இருக்கும். தமிழ் நம்தாய் அவள் உருக்குலைந்து அழிகின்ற போது நமக்கு என்ன என்று நாம் இருக்கமுடியாது என்றார். இப்படி சிதைவுற்ற ஓலைச்சுவடிகளைப் பிரித்து எடுத்து காகிதத்தில் அச்சிடுவது அவ்வளவு எளிமையாான செயல் இல்லை. முதலில் ஏடுகளை மிக கவனத்துடன் பிரித்தெடுக்க வேண்டும்; பின் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்கும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதற்கும் தனித்திறன் வேண்டும். அத்தகைய திறமையும், புலமையும் கொண்டிருந்தார் தாமோதரனார். 19-ம் நூற்றாண்டு ஐரோப்பியரின் தாக்கத்தால் உரைநடை வளர்ச்சிப் பெற்று செய்யுள் வடிவம் குறைந்திருந்த காலம். தமிழ் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறியாமல் இருந்த காலம் அது. அக்காலத்தில் செய்யுள் வடிவிலான ஏடுகளைப் படித்து ஆய்வு செய்யும் போது தாமோதரம் பிள்ளைக்கு சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அவற்றைத் தீர்க்கத் தக்கவர் இல்லாமல் வருந்தி மனஉளைச்சலால் உணவின்றி உறக்கமின்றி இருப்பாராம்.
சென்னை அரசினர் மாநில கல்லூரியில் தமிழ் அறிஞராக சிலகாலம் பணியாற்றினார். பின்னர் சென்னைப்பல்கலைக்கழகம் நிறுவப்பெற்று 1858-ல் நடத்திய பி.ஏ. தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவராக பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1868-ம் ஆண்டு தனது முப்பத்தாறாம் வயதில் தொல்காப்பியச் சொல்அதிகாரத்திற்கு சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். பாண்டிய மன்னன் கைகளுக்கு கிடைக்காமல் இழந்ததாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தனது கடும் உழைப்பினால் கண்டுபிடித்து, ஆராய்ந்து, பதிப்பித்து வெளியிட்டார். இவரின் இலக்கிய மீள்கண்டுபிடிப்புத் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வினை வழங்கியது. ஈழத்து ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால் தொடர்ந்து பதிப்புப்பணியைச் சிறப்புடன் செய்து வந்தார். வீரசோழியம் (1881), திருத்தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள், நச்சினார்க்கினியாரின் தொல்காப்பிய எழுத்து, பொருள் அதிகாரங்களுக்கான உரைகள், கலித்தொகை, இலக்கணவிளக்கம் ஆகிய பழமையான நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.
1871-ல் சட்டம் பயின்று கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 1884-ம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தொடங்கிய இப்பதிப்பு முயற்சியால் பண்டைய இலக்கியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணரப்பட்டன. 1887-ல் உ.வே.சாமிநாதையருக்கு சீவகசிந்தாமணி ஏடுகளைக்கொடுத்து பதிப்பிட உதவினார். பதிப்புத்துறையில் நாட்டம் செலுத்தியதோடு நூல்கள் பலவும் எழுதி வெளியிட்டார். கட்டளைக்கலித்துறை, சைவமகத்துவம், சூளாமணிவசனம், நட்சத்திரமாலை ஆகிய நூல்களையும். காந்தமலர் அல்லது கற்பின்மாட்சி என்ற நாவலையும் இயற்றி வெளியிட்டார்.
1896-ல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை என்ற இரண்டு நாடகங்களின் ஒரு பகுதியைச் சென்னை பல்கலைக்கழக பாடமாக அமைத்திட சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் அனுமதி பெற்றுத் தந்தார். தமிழ் நாடக நூல் ஒன்றைப் பல்கலைக்கழக பாடமாக வைத்தது அதுவே முதல்முறை. இவரின் அரும்பணியால் இலக்கியப்படைப்புகள் அழிக்கப்பட முடியாதவைகளாயின. தனது அரும் பெரும் தமிழ்த் தொண்டினால் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டினையும் பெற்றார். தமிழுக்கும், தமிழருக்கும் நலன்கள் பல செய்து பதிப்புத்துறைச் செம்மல் எனப்புகழ் பெற்ற தாமோதரம்பிள்ளை 1-1-1901 அன்று சென்னையில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் தமிழருக்கு அருளிச்சென்ற செல்வக்களஞ்சியங்களான இலக்கிய நூல்கள் என்றும் மறையாதவை.
இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல் இது .
நீடிய சீர்பெறு தமோதர மன்ன ,நீள்புவியில்
வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புறநீ
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்
கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறவரிதே
பரிதி மால் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்த்ரி அவர்களின் பாராட்டுரை .
காமோதி வண்டர் கடிமலர்ந்தேன் கூட்டுதல்போ
னாமோது செந்தமிழி னனூல் பலதொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றுவெவர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச் செந் நாப்புலவீர்
1896 ல் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் இயற்றிய லீலாவதி ,சுலோசனை நாடக நூல்களை வெளியிட்டபோது அவற்றிலிருந்து
ஐம்பது பக்கங்களை சென்னைப் பல்கலைக் கழக F.A தேர்வுக்கு பாடமாக வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார் .
இக்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றை பல்கலைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது இதுவே முதல் முறை என்று முதலியார் அவர்கள்
'யான் கண்ட புலவர்கள் " என்னும் நூலில் குறிப்பிட்டுஉள்ளார்கள் .
தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றிய இந்த மகனார் 01-01-1901அன்று மறைந்தார் .ஆனால் அவர் தமிழுக்கு செய்த தொண்டு இப்பூவுலகில் சந்திரன் சூரியன் உள்ளவரை மறையாது .
வட்டத்தொட்டி நாயகர் ரசிகமணி டி.கே.சி.
தமிழ் செய்த பாக்கியம்
செப்டம்பர் 11, 1882 - பெப்ரவரி 16, 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்.
“பூரண ஹரியும் பூரண ரசிகமணியும்” என்ற தலைப்பில் 1967ம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும், ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளாகும்.
1927 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பரிந்துரை செய்தார்
தமிழகத்தில் ஒரே ஆண்டில் பிறந்த இருவரில் ஒருவர் உணர்ச்சிக் கவிதைகளை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மற்றொருவர் கலைகளை ரசிப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் சிறந்தவராக விளங்கினார்.
ஆம், 1882-ம் ஆண்டில் பிறந்த அவர்களில் ஒருவர் எட்டையபுரம் தந்த சுப்பிரமணிய பாரதி. மற்றொருவர் ரசிகமணி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியார். பாரதியைவிட 4 மாதங்கள் வயதில் மூத்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தீத்தாரப்ப முதலியார்-மீனம்மாள் அண்ணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் டி.கே.சி. தென்காசியில் திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1905-ம் ஆண்டில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் மேல் பற்றுக்கொண்டு திருக்குறள், பெரியபுராணம், காஞ்சிப்புராணம் உள்ளிட்ட நூல்களைக் கற்று அதுகுறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கும் பழக்கத்தையும் டி.கே.சி. வைத்திருந்தார். 1908-ம் ஆண்டு பிச்சம்மாள் அண்ணியைத் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார்.
வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தாலும், அப் பணியைத் தொடராமல் தமிழுக்காகவே வாழ்ந்த டி.கே.சி. திருநெல்வேலியில் 1924-ம் ஆண்டு "இலக்கியச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புத்தான் பிற்காலத்தில் "வட்டத்தொட்டி' எனப் பெயர் பெற்றது.
இந்த வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பு 1924-ல் இருந்து 1927 வரையும், பின்னர் 1935-ல் இருந்து சில ஆண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.
இந்த அமைப்புக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், வித்வான் அருணாசலக் கவுண்டர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, மீ.ப. சோமு, தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான், ஆ. சீனிவாசராகவன் உள்ளிட்ட அறிஞர்கள் நிரந்தரமாக வரும் பழக்கம் உடையோராக இருந்திருக்கின்றனர்.
ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, அப்புசாமி ஐயர், பாலசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்டோர் வட்டத்தொட்டிக்கு அவ்வப்போது வந்து கலந்துகொள்வோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழால் அறிவியல் மட்டுமன்றி அனைத்துக் கலைகளையும், இயல்களையும் கற்க முடியும் என முழக்கமிட்ட டி.கே.சி. தமிழ்க் கவிதையில் மறைந்து கிடந்த கருத்துகளை எல்லாம் வெளிக்கொணர்ந்த காரணத்தால் "ரசிகமணி' என பெயர் சூட்டி அவரைத் தமிழுலகம் பாராட்டியது.
இலக்கியம் கூறுவதை நயம்பட விளக்கும் தன்மையுடைய டி.கே.சி.யால் தமிழின் சுவையை உணர்ந்தவர்கள் ஏராளம். உரைநடை மட்டுமல்லாது, கடிதங்கள் மூலமும் தமிழை உணர வைத்தவர் டி.கே.சி. கடிதத்தின் வாயிலாக தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழிசை உள்ளிட்டவற்றை வளர்த்தவர் அவர். "கடித இலக்கியம்' என்ற புதிய இலக்கியச் சுவையை அறிமுகப்படுத்தியவர்.
தமிழை முழுமையாக அனுபவித்த டி.கே.சி. தேவகோட்டையில் 1941-ம் ஆண்டு நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமையேற்று தமிழிசையின் மேன்மையை எடுத்துரைத்தார். இவ்வாறு அனைத்துக் கலைக்கும் தொண்டாற்றிய டி.கே.சி. 1927-ம் ஆண்டு சென்னை மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் அவர் சங்கத்தமிழ் குறித்து முழக்கமிட்டார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையப் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அவர், கோயில்களில் தமிழ்நாட்டு பழங்கலைகளை நிகழ்த்தி அக் கலைகளைச் செழிக்கச் செய்தார்.
டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது.
கோதை பிறந்த புனிதத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் கொல்லம் ஆண்டு 1057 ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் (18.08.1881) தமிழ் செய்த தவப்பயனாக அவதரித்தார்கள் ரசிகமணி டி.கே.சி. என்ற குறிப்பைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
டி.கே.சி.யின் தாயார் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். ரசிகமணி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பிச்சம்மாள் அண்ணி பிறந்த ஊரும் இதே ஸ்ரீவில்லிபுத்தூர்தான். தம் மாமன்மார் மற்றும் உறவினர் வாழும் ஊர் என்பதாலும் டி.கே.சி. அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மனத்துக்குப் பிடித்த ஊராக இருந்து வந்தது.
ராஜாஜி அவர்கள் சிரீஜயந்தி என்றே எழுதியிருக்கிறார். அதுபோல டி.கே.சி. அவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றுதான் எழுதியிருக்கிறார். அப்படியேதான் ஸ்ரீரங்கம் என்றும் எழுதினார். பெரியவர்களின் தனித்துவமான சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் எண்ணிப் பார்த்து மகிழலாம் நாம்.
1948-ஆம் ஆண்டில் (ஜஸ்டிஸ்) எஸ். மகராஜன் அவர்கள் அங்கு ஜில்லா முனிசீபாகப் பதவி வகித்தபோது டி.கே.சி. அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருடன் அதிகமான நெருக்கமும், ஈர்ப்பும் ஏற்பட்டது.
மகராஜன் அவர்கள் ரசிகமணி அவர்களின் சீடர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தவர். தம் கருத்துக்களோடு இணைந்து சிந்திக்கும் ஆற்றல் மிக்கவராக மகராஜன் இருக்கிறார் என்பதால் ரசிகமணி அவர்களுக்கு மகராஜன் அவர்களிடம் ஒரு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
வாய்ப்பு நேரும்போதெல்லாம் மகராஜன் அவர்களுடன் சில தினங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்குவதையும், தமிழ்க் கவிதையை அவரோடு சேர்ந்து அனுபவிப்பதையும் டி.கே.சி. அவர்கள் வழக்கப்படுத்திக் கொண்டார். அந்த சந்திப்புகள் எல்லாம் ரசிகமணி வாழ்க்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் ஆகும்.
அவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.கே.சி. தங்கியிருந்த சமயங்களில் அங்குள்ள பென்னிங்டன் நூலகம், புனித இருதயப் பள்ளிக்கூடம், காஸ்மோபாலிடன் கிளப் போன்ற அமைப்புகளில் டி.கே.சி. அவர்களைப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து மகிழ்ந்தார் மகராஜன் அவர்கள்.
இப்படி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், டி.கே.சி. அவர்களுக்கும் உள்ள உறவு இருந்திருக்கிறது. இதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் பேரில் ஒரு தனி அபிமானம் தோன்றுகிறது அல்லவா?
இதய ஒலி, கம்பர் யார் உள்ளிட்ட அவரின் நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகிய பதிப்புகளும் டி.கே.சி.யின் சிறப்பைத் தெளிவுபடுத்தும். வட்டத்தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர், ரசிகமணி, குற்றால முனிவர் எனப் பல்வேறு பெயர் பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியார் 1954-ம் ஆண்டு மறைந்தார்.
அவர் மறைந்தாலும் அவரது பணியை மறக்காது இன்றளவும் திருநெல்வேலி பகுதியில் ரசிகமணிக்கு விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாண வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவுகம், “இந்திய தேசிய காங்கிரஸ்” மற்றும் “சுயராஜ்ஜிய கட்சியின்” தலைவராகவும் பணியாற்றிய அவர், ‘தென்னாட்டு சிங்கம்’ என அனைவராலும் போற்றப்படுகிறார். வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று பல பணிகளை சிறப்பாக செய்த எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
ஸ்ரீனிவாச ஐயங்கார் சென்னை சட்டப்பேரவையில் இருந்து வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இளைய வக்கீல் ஆவார். ஸ்ரீனிவாச ஐயங்கார் சுதந்திர போராட்ட வீரர்களான யு. முத்துராமலிங்கம் தேவர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டியாகவும் இருந்தார். பின்னர் 1954 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார். மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றிய கே. காமராஜ் அவரது மிகப்பெரிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1939 இல் எழுதிய "மேனேஸ் ஹிண்டு லாஸ்" புத்தகம் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் நன்கு படிக்கப்பட்ட புத்தகம் ஆகும்.
பிறப்பு: செப்டம்பர் 11, 1874
பிறப்பிடம்: ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: வழக்கறிஞர், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி
இறப்பு: மே 19, 1941
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் என அழைக்கப்படும் சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மதுரையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் சென்னையிலுள்ள “ப்ரெசிடென்சி கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று, மிக விரைவில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பிறகு 1912ல், மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 1916 ஆம் ஆண்டு மிக இளம் வயதிலேயே சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுப்பேற்றார். மேலும் 1912 முதல் 1916 வரை சென்னை மாகாண செனட் உறுப்பினராகவும் பணியாற்றினார். பின்னர் 1916ல் “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீநிவாச அய்யங்கார் 1920 வரை பணியாற்றினார்.
விடுதலைப் போரில் அவரின் பங்கு
1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்தக் கொடூரமான படுகொலை, எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பதவியை ராஜனாமா செய்துவிட்டு, 1920 ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணையவும் செய்தது. மகாத்மா காந்தியின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிரித்தானிய இந்தியாவில் காலனி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.
அரசியல் வாழ்க்கை
1923 ஆம் ஆண்டு காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் காங்கிரஸில் இருந்தபடியே ஜவர்ஹலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள் தலைமையில் “சுயராஜ்யக் கட்சியினை” தொடங்கினார். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஸ்ரீநிவாச அய்யங்கார் நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை மாகாண “சுயராஜ்யக் கட்சியின்” தலைவராக பொறுப்பேற்றார். இக்கட்சி 1926 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாண்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்தது. பிறகு 1928 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த சைமன் குழுவை (சைமன் குழு என்பது 1919 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறிய ஆங்கில ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு) சுயராஜ்யக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் புறக்கணிக்க முடிவுசெய்தது. இது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்துப் போராட்டங்களும் நடத்தினர். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை நீக்குவதற்காக 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராகவும் சேர்ந்தார்.
இறுதிகாலம்
1930 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸில் பலபேர் “டொமினியன் அந்தஸ்து” (டொமினியன் அந்தஸ்து என்பது ஆங்கில மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுயாட்சி ஆகும்) பெற்றால் போதும் என எண்ணினார். ஆனால் முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என கொள்கையாகக் கொண்ட எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1930 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இறப்பு
இறுதிவரை சுயராஜ்யமே மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்த சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1941 ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் தன்னுடைய 66 வது வயதில் சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.
காலவரிசை
1874 – செப்டம்பர் 11 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் பிறந்தார்.
1912 – “மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக” நியமிக்கப்பட்டார்.
1916 – சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுபேற்றார்.
1912-16 – சென்னை மாகாண செனட் உறுப்பினராக பணியாற்றினார்.
1916-20 – “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராக பணியாற்றினார்.
1920 – இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
1928 – இந்தியா வந்த “சைமன் குழுவிற்கு” எதிர்ப்புத் தெரிவித்தார்.
1928 – “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.
1941 – மே 19ஆம் நாள் 66 வது வயதில் சென்னையில் காலமானார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக