26.09.20-ரேவா: : 43 : பாண்டியரின்_மந்திராலோசனை - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 26 செப்டம்பர், 2020

26.09.20-ரேவா: : 43 : பாண்டியரின்_மந்திராலோசனை

 



26.09.20


ரேவா


பாண்டியரின்_மந்திராலோசனை_43


இரவின் இரண்டாம் ஜாமம் துவங்கி இரண்டரை நாழிகை ஆனதும் தனக்கு நித்திரை வருவதாகக் கூறி வீரமல்லன் அவனது அறைக்கு அகன்றதும். தனது அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் விழுந்தவன் தூக்கம் வராதவனாய் புரண்டு கொண்டிருந்தான் சித்ரமாயன். அவனது சிந்தையில் , வாங்கி வைத்திருக்கும் நஞ்சினை எப்போது தருவது..?  எப்படித் தருவது..? அதற்கான சூழல் எப்போது உருவாகும்..! என்றெல்லாம் தனது  எண்ணவோட்டங்களை சுழற்றிக் கொண்டிருந்த காரணத்தால், நித்திரையானது சுலபத்தில்  வருவதாகத்  தெரியவில்லை.


 துன்பப் படும் மனதை தூக்கம் அரவணைப்பதில்லை என்பது சரியாகத் தான் இருக்கிறது, என முணுமுணுத்துக் கொண்டவன், சற்றே நந்தவனத்தில் உலவி வரலாம் என நினைத்து, நந்தவனத்தின் சோலைக்குள் புகுந்தான். பொய்கையின் கரையினை அடைந்த போது தான் உதயச்சந்திரனும், பியூஷாவும் அங்கே தனித்திருப்பதைக் கண்டதும், அவனுக்குள் கோபம் எழ,  இருவரையும் கண்ணுற்றவனின் விழிகளில் பொறாமை தீயும் கொளுந்து விட்டு எரிந்தாலும், அதையும் மீறி வெறுப்பும், விரோதமும் வெளிப்பட்டது. அங்கிருக்க பிடிக்காதவனாய் , தனது அறைக்கு திரும்பி விட்டான். ஆத்திரமும் எரிச்சலும் ஒன்று சேர மஞ்சத்தில் விழுந்தவன்,


" உதயச்சந்திரனுக்கு எவ்வளவு இறுமாப்பு.. நம் கண்ணெதிரிலேயே எவளையோ அழைத்துக் கொண்டு வந்து அரண்மனை நந்தவனத்தில் கூத்தடித்துக் கொண்டிருப்பான்.

நம் தந்தை மறைந்ததும் இவர்களுக்கு எல்லாம் துணிச்சல் பிறந்து விட்டது..ம்..இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கிறேன். என்னை பூனை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்..நான் பூனையல்ல புலி என்று காட்டுகிறேன். புலி பதுங்குவது பாய்வதற்கென்று தெரியாதவர்கள்..ம்..பாவம்..! "..என பலவாறு புலம்பியபடியே மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தவன்..இரவின் மூன்றாம் ஜாமம் முடிவில் தூக்கத்தைத் தழுவினான்.


காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் #உஷத் கால பூஜைக்கான ஆலயமணி ஒலிக்கத் துவங்கியது. சித்ரமாயன் குளித்து முடித்து புதிதான ஒரு ஆடையை அணிந்து கொண்டவனாய் வரதராஜப் பெருமாளை சந்திக்க கிளம்பி விட்டான். ஒருவேளை அவன் செய்யப் போகின்ற காரியம் வெற்றிகரமாக நடந்தேறிட வேண்டப் போகிறானோ என்னவோ..! யார் கண்டார்கள்..!


காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு பற்பல அபிசேகங்கள் அவ்வேளையில் நடந்தேறிக் கொண்டிருந்தன, ஆலயத்தினுள் கணிசமான கூட்டமும் காணப்பட்டது. அபிசேகங்கள் முடிந்து, சர்வ அலங்கார நாயகராய் வரதர் காட்சி தர சற்றேறக் குறைய  ஒரு முகூர்த்த நேரமாகலாம், என சலித்துக் கொண்டவன். அதுவரையில் ஆலயத்தின் பிரகாரங்களைச் சுற்றிவர எண்ணம் கொண்டு சுற்றி வரத் துவங்கினான். அவனது மனதில் நடத்தப்பட வேண்டிய காரியத்திற்கு ஒரு தெளிவான சிந்தனை உருவாகியிருக்க, மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. மனதின் வெளிப்பாடு அவனது முகத்திலும் பிரதிபலிக்க, வரதராஜப் பெருமாளை மனமுருகி  சேவித்தவனாய் அரண்மனையை நோக்கி நடையைக் கட்டினான்.


                      *              *               *


பாண்டியரது கூடல் மாநகர் அரண்மனை.

மந்திராலோசனை கூடத்தில் பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன்  ஆசனமொன்றில் வீற்றிருக்க, அவனது எதிரே இருந்த ஆசனங்களில் பாண்டியநாட்டு முதலமைச்சர் மூவேந்த மங்கலப் பேரரையன் என சிறப்புப் பட்டம் பெற்ற மாறன் காரி வீற்றிருந்தார். அடுத்தபடியாக பாண்டிய நாட்டு சேனாதிபதி அமிர்தலிங்க வரையன் எனும் பட்டம் பெற்ற சாத்தன் கணபதியும் வீற்றிருக்க, அவர்களது முகங்களை ஆவலோடு நோக்கியவனாய் பராங்குசன் மாறவர்மன், 


" மந்திரியாரே..மறைந்த பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனது மகன் சித்ரமாயன் நம்மிடம் உதவி கேட்டு வந்தானே.. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?" என்றான் .


" அரசே..பல்லவருக்கு சாளுக்கியரின் நட்பு துண்டாடப் பட்டு விட்டது. அது மட்டுமின்றி பல்லவ படைத்தலைவன் காம்புஜத்தில் இருந்து ஒரு சிறுவனை அழைத்து வந்து பல்லவ மன்னனாக முடிசூட்டியதாக வேறு கேள்விப் பட்டோம். எனவே பரமேஸ்வரவர்மனது மகனான சித்ரமாயனுக்கு வருத்தமும், கோபமும் எழுந்திருக்கலாம், பல்லவ அரசபீடத்தை மறுபடியும் அடைய சாளுக்கிய உதவி அற்றுப் போன நிலையில் , நமது உதவியை நாடி வந்திருப்பான்." என்றார்.


" அமைச்சரே, சரியாக கணித்து விட்டீர்கள்..அவர்களுக்கு நமது உதவி..." என இழுத்தான் பராங்குசன்.


" உதவி புரிவதாக வாக்களித்து விட்டுருப்பீர்களே.." என்றார் முதலமைச்சர் மாறன் காரி.


" உண்மை தான்..உதவுவதாக வாக்களித்துள்ளேன். " என்றான் பராங்குசன்.


" சித்ரமாயனுக்கு உதவுவதால் நமக்கு என்ன பயன்..? " என்றார்  யோசனையுடன் தளபதி சாத்தன் கணபதி.


" பயனில்லாமல் இல்லை..இப்போது பல்லவ அரியணையில் ஏறியிருப்பவனது நடமாட்டத்தை நாம் அறிய இயலும்..அத்தோடு நமது கொங்கு நாட்டுப் படையெடுப்பின் போது சித்ரமாயனது ஒத்துழைப்பு நன்மையை பயக்கும் என்பது எனது எண்ணம்." என்றான் ஆழ்ந்த யோசனையுடன் பராங்குச மாறவர்மன்.


" மன்னரது கருத்தில் தவறேதுமில்லை..ஆனால் சித்ரமாயனது செயல்பாடு திடமானது தானா என அறிந்து கொள்வது நமக்கு விவேகம் என்று எண்ணுகிறேன்." என்றார் சேனாதிபதி சாத்தன் கணபதி.


" இவ் விசயத்தில் தளபதியாரது கருத்தில் நானும் உடன் படுகிறேன் " என்றார் முதலமைச்சர் மாறன் காரி.


" தங்கள் இருவரின் கருத்தையும் ஏற்கிறேன். சித்ரமாயன் திடமில்லாதவன் தான், ஆனால் அவனது மாமன் வீரமல்லன் விவேகி. " என்றான் பராங்குசன்.


" நல்லதே நடக்க எண்ணுவோம்." என்றார் முதலமைச்சர் மாறன் காரி. 


" தங்களது தமையன் மாறன் எயினனை கடந்த சில தினங்களாக காணவில்லையே..எங்கு சென்றிருக்கிறான்.? " என்றான் பாண்டியன் பராங்குசன்.


" பொன்னமார்பதி வரை சென்றிருக்கிறான். நாளை திரும்புவதாக ஓலை அனுப்பி உள்ளான்." என்றார் முதலமைச்சர் மாறன் காரி.


" நமது கொங்கு நாட்டு படையெடுப்பினை நடத்தினால் கங்க நாட்டு மன்னன் சிறீபுருஷனை எதிர் கொள்ள வேண்டி வருமே, அவனது படைபலம் எப்படி..? சமீபத்தில் பல்லவ பரமேஸ்வரவர்மனை  போரில் வென்றதோடு, அவனது வெண்கொற்றகுடை, அரச இலச்சினைகளை பறிமுதல் செய்ததோடு, அவரை மாய்த்தும் விட்டான். அவனுக்கு உதவியாக சாளுக்கியரும் வரலாம். வெற்றி பெற்றவனது களிப்பு அடங்கும் வரை அவனுக்கு வேறொரு வாய்ப்பினை வழங்கக் கூடாது. எனவே நமது திட்டமிடலை கொஞ்சம் நிதானமாக செய்வதே சிறந்தது" என்றார் பழுத்த அனுபவம் வாய்ந்த முதலமைச்சர் மாறன் காரி.


 " தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை, நமது படையெடுப்பு உடனே நடைபெறப் போவதில்லை.ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம்..அதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே செயல் படுத்துங்கள்..சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது நமது படைகள் நகரலாம்." என்றான் பலத்த யோசனையுடன் பராங்குசன்.


" நாம் பல்லவ தேசத்திற்கு திறமையான ஒற்றன் ஒருவனை அனுப்ப வேண்டும், சித்ரமாயனின் நடவடிக்கைகளை அறிவதும் அவசியம்." என்றார் சேனாதிபதி சாத்தன் கணபதி.


" தீரகரனை வரச்சொல்லுங்கள். அவனை பல்லவ தேசத்திற்கு அனுப்பி வையுங்கள்."


"இத்துடன் நமது சபையை நிறைவு செய்யலாம்." என்றவனாய் எழுந்த பராங்குசன் அறையை விட்டு வெளியேறினான்.


சேனாதிபதி சாத்தன் கணபதி அங்கிருந்த ஒரு வீரனை அழைத்து , 


" தீரகரனை நான் அழைத்ததாக வரச்சொல்.." என்றார் கம்பீரமாய்.


இரண்டு நாழிகைப் பொழுதில் வந்து நின்றவன் இருபது வயது இளைஞனாய் இருந்தான்.அவனது கண்களில் உறுதியும் இருந்தது, கூடவே குறும்பும் துளிர்த்தது.


சேனாதிபதி அவனிடம் ஓதியதை முழுவதும் செவிமடுத்தவனாய், தலைவணங்கி விடைபெற்றுக் கொண்டவன், தனது புரவியில் ஏறி காஞ்சி செல்லும் பாதையில் விரைந்தான்.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : #உஷத் காலமென்பது பிரம்ம முகூர்த்த வேளையைக் குறிக்கும். சூரிய உதயத்திற்கு முன் செய்யப்படும் இந்த பூஜையினால் தேவர்களின் நல்லாசி கிடைப்பதாகவும் , மனம் தெளிவடைந்து நற்காரியங்கள் சித்தியடையும் என்பதும் ஐதீகம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages