25.09.20- ரேவா : 42 : காதல்_அரங்கேற்றம் - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 26 செப்டம்பர், 2020

25.09.20- ரேவா : 42 : காதல்_அரங்கேற்றம்

 



25.09.20


ரேவா


காதல்_அரங்கேற்றம்_42


வைகுண்டப்  பெருமாள் ஆலயத் திருப்பணியைப் பார்வையிட்ட பின் நந்திவர்மன் தனது படைத்தலைவன் உதயச்சந்திரனோடும், தலைமை ஒற்றன் சீராளனோடும் அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு வீதியில் இருந்த மண்டபத்தில் இருந்து மஹாபாரதக் கதையானது பாடலாக கணீரென்று  ஒலித்துக் கொண்டிருந்தது.


கௌரவரிடம், பாண்டவருக்காக கிருஷ்ணன் தூது சென்ற நிகழ்வினைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

அப் பாடலின் இனிமையிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்தவனாய் தனது புரவியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்திய நந்திவர்மன், வீதியில் அம்மண்டப வாசலிலேயே நின்று விட்டான்.


அவனைத் தொடர்ந்து இருவரும், தங்களது புரவியையும் சட்டென நிறுத்தியதோடு ஆச்சர்யமடைந்தவர்களாய்,  


"நந்திவர்மா..பாரதக் கதை அறிவாயா....?" என்றொரு கேள்வியையும் வீசினான் உதயச்சந்திரன்.


" ம்..அறிவேன்.என் தாய் எனக்கு மஹாபாரதக் கதையை போதித்திருக்கிறார்கள்." என்றான் பெருமை பொங்க. கூடவே..


" இங்கு பாரதம் கற்றுத் தருகிறார்களா..? " என்றான் ஆர்வம் பொங்க நந்திவர்மன்.


" கற்றுத் தரவில்லை..ஆனால் மக்களுக்கு பொழுது போக்கும் நிகழ்வாக #1பாரதம்_பாடுவது பல்லவ தேசத்தில் நடைபெறுவது உண்டு. பாரதம் பாடுவோருக்கு அரசிலிருந்து நிவந்தனமாக தானியங்கள் வழங்கப்படுகிறது." என்றான் சீராளன்.


" ஓ..புரிகிறது..அப்படியெனில் இவர்கள் மக்களை மகிழ்விக்க பாரதம் பாடுகிறார்கள்.." அப்படித்தானே.


" ஆம்..அப்படித்தான்.."


" அரசு இவர்களுக்கு தானியத்தை நிவந்தனமாக வழங்குவதை தவிர்த்து, இறையிலி நிலமாக வழங்க முற்படலாமே..தானியத்தை வழங்குவதனால் உழைப்பின் அருமை உணராது காலையில் பொழுதினை கழித்து விட்டு, மாலையில் பாரதம் படிக்கும் இவர்களுக்கு, நிலங்களை வழங்குவதன் மூலம் உழைப்பின் பெருமையையும் உணரச் செய்யலாம் ," என்றபடியே அம்மண்டபத்திற்குள் பிரவேசித்தான் நந்திவர்மன்.


மூவரும் அம்மண்டபத்திற்குள் நுழைய, அவர்களை வரவேற்று உபசரித்தவர்கள், அவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அமர செய்ததோடு, பாரதம் பாடுவதை கேட்கவும் வகை செய்தனர். ஒரு நாழிகைப் பொழுதினை அங்கு கழித்தவர்கள், கிளம்பும் போது பாரதம் பாடிய மறையவர்களை அழைத்தான் நந்திவர்மன். 


" வணக்கம் அரசே.."


" வணக்கம். நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன்..இனிமேல் அரசு உங்களுக்கு நிவந்தனமாக தரப்பட்ட தானியம் நிறுத்தப் படும்..." என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்ட மறையவர்களின் தலைவர்,


" ஐயோ..அரசே..எங்களுக்கு வாழ்வின் ஆதாரமே அது ஒன்று தானே..வேறு வரும்படி இல்லையே.." எனப் புலம்பினார்.


" அதற்கு பதிலாக அரசு உங்களுக்கு இறையிலி நிலங்கள் வழங்கும், அது மட்டுமின்றி உங்களது நிலங்களில் அமைந்துள்ள #2கூவல்களில் நீர் சேந்துவதற்காக இரண்டு இயந்திரங்களும் வழங்கப்படும் . மகிழ்ச்சி தானே.." என்றான் சிரித்தபடியே நந்திவர்மன்.


" அரசே..நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்..! உங்கள் கருணையே கருணை..! " என்று மகிழ்ச்சி கரைபுரள

பல்லவ மன்னன் நந்திவர்மன் வாழ்க..! என வாழ்த்தவும் செய்தனர்.


அதன்பின், அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டவர்களாய்..


" நல்லது..நாம் நமது பயணத்தைத்  தொடர்வோம் " என்றபடி மூவரும் வெளிக்கிளம்பி அரண்மனையைச் சென்றடைந்தார்கள்.


                       *             *              *


வானில் இரவின் குளுமையோடு, நிலவின் ஒளியும் குளுமையைத் தந்து கொண்டிருந்தது. காஞ்சி அரண்மனையின் நந்தவனத்தில் பொய்கையின் திட்டில் அமர்ந்தபடி, கண்சிமிட்டும் வானத்து தாரகைகளையும், பாலெனப் பொழிந்து பலரது 'மதி'மயக்கும்  நிலவினையும் கண்டு ரசித்தவளாய், தென்றலின் சுகமான தாலாட்டில் தன்னை மறந்து நந்தவனத்து நானாவித மலர்கள் எழுப்பிய சுகந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள் பியூஷா. ஆங்காங்கு விளக்குகளை பணிப் பெண்கள் ஏற்றி வைத்திருந்தாலும், அந்த ஒளியினை விட வானத்து நிலவின் ஒளி விஞ்சியதாய் இருந்தது. அல்லியும் பொய்கையில் தன் முகமலர்ந்து தாமரையின் வாட்டத்தைக் கண்டு எள்ளி நகையாடியது. நீரில் நீந்தித் திரிந்த ஒன்றிரண்டு பறவையினங்கள் , அவ்வப்போது தங்களது தலைகளை நீருக்குள் ஆழ்த்தி பின் மேலெழும்பி தங்களது தலைகளை உலுப்பிக் கொள்வதையும் , சிலிர்த்துக் கொள்வதையும்  காண்கையில் குளிருக்காக அவ்வாறு செய்கிறதோ என எண்ணத் தோன்றியது பியூஷாவிற்கு. தடாகத்தின் கரையில் தானும் ஒரு சிலையாக அமர்ந்தபடி இருந்தவள், தோள் மீது ஒரு மலரொன்று விழவும் சற்று திடுக்கிட்டவளாய் , திரும்பிப் பார்த்தாள்..அங்கு உதயச்சந்திரன் அவளைப் பார்த்து சிரித்தபடி வந்து கொண்டிருந்தான்.


" தேவியின் தவத்தை நான்  கலைத்து விட்டேனோ..!  " என்றான் குறும்பு தொனிக்கும் குரலில்.


" வேண்டியது கிட்டியபின் எதற்கு தவம்.. ! " என்றாள் அவள் ஓர விழியால்  அவனைப் பார்த்தபடி.


" உனக்குப் பரவாயில்லை, வேண்டியது கிட்டி விட்டது..எனக்கோ கிட்டியதை உடமையாக்கிக் கொள்ள நேரம் வரவில்லையே..! " என்றான் வருத்தமாய்.


" நேரம் வரவில்லையா...?இல்லை மனம் வரவில்லையா..? " என்றாள் சற்றே கோபமாக பியூஷா.


" மனமில்லாமலா பல காத தூரத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். காலம் கனியவே காத்திருக்கிறேன். " என்றான் ஏக்கமாய் உதயச்சந்திரன்.


" காலம் கனியட்டும் என்று காத்திருந்தால், கன்னியானவள் கிழவியாகி விடுவாள்.." என்று சொல்லி கலகலவென நகைத்தாள்.


அவளது சிரிப்பின் ஒலியைக் கேட்டு பொய்கை கரையில் இருந்த மரங்களில் தங்கியிருந்த பட்சிகள் படபடத்து பறக்கத் தலைப்பட்டன.


பியூஷாவை நெருங்கியிருந்த உதயச்சந்திரன் அவளது கரங்களை எடுத்து தன் கரங்களுடன் பிணைத்துக் கொண்டதோடு, மெல்ல நெறிக்கவும் செய்தான். அவளது கரங்களில் வலியை உணர்ந்தாலும், அந்த வலியானது அவளுக்கு தேவையாகவும் இருந்ததனால் , அவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவள் விடுவித்துக் கொள்ள விரும்பினாலும் அவன் விடுவதாகவும் இல்லை.

காதலர்களுக்குள் ஏற்படும் இந்த போட்டி தான் கூடலின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.


பியூஷா, மெல்ல உதயச்சந்திரனது மார்பில் சாய்ந்தவளாய், மெல்லத் திரும்பி அவனது முகத்தினைக் காண முற்பட்டாள். முன்னோக்கியிருந்த அவளது முகம் இந்த செய்கையினால் உதயச்சந்திரனது முகத்திற்கு நேராக வர, இருவரது விழிகளும் ஒன்றெனக் கலந்தது.. அவன் விழியின் தீட்சண்யத்தைத் தாங்காதவளாய் சட்டென தலைகவிழ்ந்தாள். அந்நிலை அவனுக்கோ பொய்கையில் தலைகவிழ்ந்திருந்த பங்கய மலரினை நினைவுபடுத்தியது. அவனது அருகாமையால் சிவந்து விட்ட அவளது கன்னக்கதுப்புகள் தாமரையின் நிறத்தை ஒட்டியே இருக்க, அவனின் கைகள் அவளது முதுகில் இருந்து வழுக்கியபடி அவளது இடையைத் தழுவ விரைந்தது. பெண்மைக்கே உரித்தான நாணம் தடுத்தாலும், மனமோ அதை ரசிக்கவும் செய்தது கண்டு சற்று எரிச்சலுற்றவளாய், " விவஸ்தை கெட்ட மனசு" என்று மெல்ல சபித்தாள்.


கனவுலகில் இருந்து விடுபட்டவனாய், " என்ன சொன்னாய்..? " என்றான் ஆவலுடன்.


" ஊஹூம்..ஒன்றுமில்லை"


அந்த ஒன்றுமில்லைக்குள் ஒளிந்திருந்தது ஆயிரத்தெட்டு அர்த்தங்கள். அவனா புரியாதவன்..! இல்லை அவள் தான் புரியாதவளா..!


இருவரும் பார்வையால் ஒருவரையொருவர் விழுங்கியபடி , பருவ நாடகத்தை மெல்ல அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.


இவர்களது செயல்களைக் கண்டு வெட்கப் பட்ட வானத்து நிலவு வேகமாய் மேகத்திற்குள் சென்று ஒளிந்து கொண்டதோடு, அவ்வப்போது தலைநீட்டி திருட்டுத்தனமாய் ரசித்துக் கொண்டிருந்தது.  நட்சத்திரங்களோ கண்சிமிட்டி ரசித்துக் கொண்டிருந்தன.

நந்தவனத்தின் நானாவித மலர் செடிகளில் இருந்து கிளம்பிய சுகந்தம் இருவரது நாசியையும் மனதையும் ஒருசேர மயக்கத்தில் ஆழ்த்தியது.


இந்த காதல் அரங்கேற்றத்தை வெகுநேரமாய் ஒரு மரத்தின் நிழலில் நின்றபடி  உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது ஒரு உருவம். அதன் விழிகளில் தான் எவ்வளவு பொறாமைத்தீ..


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : 1.பல்லவரது ஆட்சி காலத்தில் தான் பாரதம் பொதுவில் பாடப்படுவது அறிமுகப் படுத்தப் பட்டது. பாரதம் பாடுவோர் மறையவர்கள் என அழைக்கப்பட்டனர்.  இவர்கள் பரமேஸ்வரவர்மன் காலத்தில் இருந்து தங்களது சேவையை செய்து வந்துள்ளனர்.அவர்களுக்கு அரசின் சார்பாக தானியம் நிவந்தனமாகத் தரப்பட்டுள்ளது என்பதையும்., நிலம் வழங்கப் பட்டதையும் ' தண்டன் தோட்டத்துப் பட்டயம்' தெளிவு படுத்துகிறது.


2. கூவல் என்பது கிணறு. பல்லவரது தேசம் சோழ தேசத்தைப் போல நதிநீர் வசதியற்ற தேசம். அதனால் கோடைக் காலங்களில் கிணறுகளில் நீர் வற்றத் துவங்கி விடும் என்பதனாலும், கிணற்று நீரை இறைத்து பயன்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தியதையும் வரலாறு உணர்த்துகிறது.நதியற்ற நிலம் என்பதாலேயே ஏரிகள் பலவற்றை காஞ்சியைச் சுற்றி பல்லவ மன்னர்கள்  வெட்டுவித்தனர். நந்திவர்மன் காலத்தில் மறையவருக்கு இரண்டு இயந்திரங்களை வழங்கியதை 'உதயேந்திரப் பட்டயமும் ' விளக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages