27.09.20
ரேவா
சீரழிந்தது_சித்ரமாயனது_திட்டம்_44
சித்ரமாயன் கடந்த சில தினங்களாகவே நந்திவர்மனது அன்றாட நடவடிக்கைகளை ஆராயத் துவங்கியிருந்தான். முக்கியமாக அவனது உணவு உட்கொள்ளும் நேரத்தினை துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அது மட்டுமின்றி இரவு உணவருந்திய பின் பால் அருந்தும் பழக்கமும் அவனுக்கு உண்டு என தெரிந்திருந்த காரணத்தால் தான் கார்க்கோடனை அணுகி நஞ்சினை வாங்கி வைத்திருந்தான். பணியாளன் நந்திவர்மனுக்கு கொண்டு செல்லும் பாலில் நஞ்சினை கலந்து தந்து விட்டால், விடியல் நமக்கு சாதகமாக அமைந்து விடும் என்பது சித்ரமாயனின் கணிப்பு.
வீரமல்லன் ஏதோ அலுவல் காரணமாய் அரண்மனையை விட்டு வெளியே சென்றிருந்தான் என்பதனால், தனது எண்ணத்தை செயல் படுத்திட உகந்தவேளை இதுவெனக் கருதியவனாய் சித்ரமாயன், இரவின் முதலாம் ஜாமம் முடிந்திருக்க தான் கார்க்கோடனிடம் வாங்கி வைத்திருந்த நஞ்சுக் குடுவையை எடுத்து தனது இடைக் கச்சையில் பத்திரமாகச் செருகிக் கொண்டவனாய், அரண்மனையின் உக்கிராண அறையை அடைந்தான். சித்ரமாயனைக் கண்டதும் பணியாளன் இரவு உணவினை அவனுக்கு வழங்க, அங்கேயே மெல்ல நிதானமாக உணவருந்தத் துவங்கினான். அதே வேளையில் நந்திவர்மனது அறைக்கு பால் கொண்டு செல்லும் நேரம் வந்து விட்டதை உணர்ந்த பணியாளன், பாலினை ஒரு குவளையில் ஊற்றியதோடு, ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்தான். அந்த வேளையை எதிர் நோக்கியிருந்த சித்ரமாயனோ, அப்பணியாளனை அழைத்து, தனக்கு நீர் எடுத்து வரும்படி கட்டளையிட்டான். அவன் நீரினை எடுப்பதற்காக உள்ளே சென்றிருந்த வேளையில் , சட்டென தனது இடைக்கச்சையில் வைத்திருந்த நஞ்சினை எடுத்துப் பாலில் கலந்த சித்ரமாயன் தான் உணவருந்துவதை விட்டு எழுந்தவனாய், எதிர்பட்டப் பணியாளனின் கையிலிருந்த நீரினை வாங்கி அருந்திவிட்டு அவ்விடம் விட்டு சட்டென அகன்று விட்டான்.
சித்ரமாயன் நகன்றதும், அவன் உணவருந்திய இடத்தில் வைத்திருந்த நந்திவர்மனது பால் குவளைத் தட்டினை எடுத்துக் கொண்டவனாய் நந்திவர்மனது அறையை நோக்கிச்செல்ல உக்கிராண அறையை விட்டு வெளியேறத் துவங்கினான் பணியாளன். அவ்வேளையில் அறைக்குள் நுழைந்த வீரமல்லன் வாயிற்படியிலேயே பணியாளனைத் தடுத்ததோடு,
" எனக்கு இரவு உணவுத் தேவையில்லை.. ஒரு குவளையில் பால் மட்டும் கொடு.." என்றான் வீரமல்லன்.
" இந்த பாலினை நான் மன்னருக்கு அளித்துவிட்டு வந்து உங்களுக்கு வேறு தருகிறேன்.." என்றான் பணியாளன்.
" இதை நான் எடுத்துக் கொள்கிறேன். நீ மன்னருக்கு வேறு ஒன்றை தயார் செய்து எடுத்துச் செல் " என்றவனாய் பணியாளனது பதிலையும் எதிர்பாராதவனாய் , பாலினைச் சட்டென எடுத்து அருந்தி விட்டுப் படிகளேறி தனது அறையை நோக்கி நடக்கத் துவங்கியவனுக்கு கண்கள் இலேசாய் இருண்டன. கழுத்தை ஏதோ ஒன்று இறுக்குவதைப் போலிருக்க..
சித்ரமாயனின் அறைக்குள் கதவை தள்ளியபடியே கீழே விழுந்தான்.
அறையின் உள்ளே, அப்போது தான் உணவருந்திவிட்டு வந்த சித்ரமாயன் மஞ்சத்தில் அமர்ந்திருக்க, தடுமாறி விழுந்த வீரமல்லனைத் தாங்கிப் பிடித்தான்.
" மாமா..என்னவாயிற்று..? ஏன் தடுமாறுகிறீர்கள்..? "
" ஒன்றுமில்லை..உக்கிராண அறையில் இப்போது தான் பாலை வாங்கி அருந்தினேன்..அதிலிருந்து கண்கள் இருள்கின்றன..கழுத்தை ஏதோ அறுப்பதை போன்று பிர...மை..."
" மாமா..எந்த பாலை அருந்தினீர்கள்..? பணியாளன் தட்டில் இருந்ததையா..? " என்றான் அதிர்ச்சியுடன்.
" ஆம்..அதனாலென்ன..? "
" ஐயோ..அதில் நான் நஞ்சினை கலந்திருந்தேன்..நந்திவர்மனை கொல்வதற்காக.."
" அடப்பாவி..என்னை கலந்து கொள்ளாமல் நீயாக ஏன் ? ... தனியாக முடிவெடுத்தாய்..இது உன்னை எங்கு கொண்டு போய்..வேண்டாம்..நான் சொல்வதைப் போல் செய்..பலமாக சத்தமிடு..மாமா..தற்கொலை செய்து கொள்ள நஞ்சினை அருந்தி விட்டாரென்ன..உம்..சீக்கிரம்..ம்..சற்றுப் பொறு, இனி நீ இங்கு அதிகநாள் தங்காதே..நமது திரையனேரி மாளிகைக்குச் சென்றுவிடு, காஞ்சியில் வைரவனை மட்டும் நிறுத்திக் கொள்..பாண்டியனுக்கு விசுவாசமாக நடந்து உன் காரியத்தை சாதித்துக் கொள்..." என்றான் குரல் நடுங்கியபடி வீரமல்லன்.
" மாமா..என்னை மன்னித்து விடுங்கள், உங்களது ஆலோசனையின்றி நான் இறங்கிய முதல் திட்டமே உங்களது உயிரை காவு வாங்கி விட்டது.." எனக் கூறிய படியே கண்ணீரை உகுத்தான்.
" இனி வருந்தி பயனில்லை..விதி வலிது..ம்..பலமாய் சத்தமிடு..என்னால் முடியவில்லை..தற்கொலை..
என்பதை சாதி..த்..து..விடு.."
சாகும் தருவாயிலும் மருமகனின் நலத்தை நாடியே தனது உயிரைப் போக்கி கொண்ட வீரமல்லனது உயிர், அவனது உடலை விட்டு மெல்லப் பிரிந்தது.
சித்ரமாயனின் கூச்சல் அந்த அரண்மனையையே உலுக்கியது.
காவலர்கள் பலரும் மேல்தளப் படிகளில் ஏறி, சித்ரமாயனது அறையை அடைய, அங்கு கண்கள் வெறிக்க வீரமல்லன் மேல்விதானத்தைப் பார்த்தவாறு விழுந்து கிடந்தான்.
காஞ்சி அரண்மனையே, அதன்பின் அல்லோகலப் படத் துவங்கியது.
* * *
காஞ்சி அரண்மனையின் மந்திராலோசனைக் கூடம் .
ஆசனங்களில் அமர்ந்திருந்த அனைவரது முகங்களிலும் கவலை என்பதை விட இருள் அப்பிப் போய் கிடந்தது எனலாம்.
அங்கு, பல்லவ தேசத்தின் முதலமைச்சர், பல்லவ நாட்டின் தளபதி, சீராளன் மூலப்பிரகிருதியார், கடிகையார், உதயச்சந்திரன் போன்ற பல்லவ அரசின் முக்கியமானவர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்.
உதயச்சந்திரன் பல்லவடி அரையரை ஏறெடுத்தவனாய், " தளபதியாரே, வீரமல்லன் திடீரென தற்கொலை செய்து கொள்ளும் படியான காரணம் என்னவாக இருக்கும்..? " என்றான் யோசனையுடன் உதயச்சந்திரன்.
" இது சோடிக்கப்பட்ட பொய் , வீரமல்லனாவது தற்கொலை செய்து கொள்வதாவது..நம்பவே முடியவில்லை..! " என்றார் ஆச்சர்யத்துடன் தளபதி பல்லவடி அரையன்.
" எப்படிச் சொல்கிறீர்கள்..? " என்றார் கடிகையார்.
" முதலில் வீரமல்லன் தற்கொலை செய்யுமளவிற்கு கோழையல்ல..இரண்டு அவனது மருமகன் சித்ரமாயன் நலனில் அக்கறை உள்ளவன் என்பதனால் அவனை தனியே விட்டுவிட்டு தற்கொலை செய்தும் அளவிற்கு வீரமல்லன் முட்டாளுமல்ல.." என்றார் குரலை உயர்த்தியவராய் பிரம்மஸ்ரீராஜன்.
"தாங்கள் கூறுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் முதலமைச்சரே.." என்றார் மூலப்பிரகிருதியார்.
" ஏதோ நடந்திருக்கிறது, சித்ரமாயனைக் கேட்டால் தெரியும்.." என்றார் கடிகையார்.
" அட..அவனா..தற்கொலைதான் என்று அன்றே அழுத்தமாய் சொல்லி விட்டானே..வீரமல்லன் கடுமையான விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக..வைத்தியரும் வீரமல்லனது நாடியைப் பரிசோதித்து அதைத் தானே சொன்னார்." என்றார் பல்லவடி அரையன்.
" சரி..கடந்த இரண்டு தினங்களாய் சித்ரமாயனை இங்கு காணவில்லையே..!எங்கு போயிருப்பான்..? " என்றார் பிரம்மஸ்ரீராஜன்.
" எங்காவது மாமன் இறந்ததை எண்ணி அழுது கொண்டிருப்பான்..ஆறுதலாய் இருந்த ஒரே மாமனையும் பறிகொடுத்தவனாய் யௌவனத் தேறலை நாடிப் போயிருப்பான்..
குடிகாரன்.." என்றார் கோபத்துடன் பல்லவடி அரையன்.
" எனக்கு இங்கு நடந்தவைகளைப் பார்க்கும் போது, சித்ரமாயன் மீது சந்தேகம் கொள்ளத் தூண்டுகிறது..
வீரமல்லன் இறந்த நாளன்று அவனிடம் காணப்பட்ட சோகம், அடுத்தடுத்த நாட்களில் இல்லை. மேலும் வீரமல்லன் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு பெரிதான காரணம் ஒன்றுமில்லை. சில விசயங்கள் சரிவர பிடிபடவில்லை..
அரண்மனையில் நந்திவர்மனது உயிருக்கும் ஊறு விளைவிக்க எவராவது எண்ணலாம். ஏற்கனவே அவனது பாதுகாப்பினை பலப் படுத்தி உள்ளேன்..இருப்பினும்..நந்திவர்மனை இங்கிருந்து யாருமறியாமல் அப்புறப் படுத்துவதும் நல்லது தான்.." என்றான் உதயச்சந்திரன்.
" நந்திவர்மனுக்கு ஆபத்தை விளைவிக்க எண்ணுபவன் உண்டென்றால் அது சித்ரமாயன் மட்டும் தான்." என்றார் மூலப்பிரகிருதியார்.
" நந்திவர்மனை அப்புறப் படுத்துவதாய் இருந்தால் எங்கு கொண்டு செல்வது..? " என்றார் கடிகையார்.
" என் மனதில் எழுந்தது இந்த யோசனை, நந்திவர்மனுக்கு பாடங்களை கற்பிக்கும் பொருட்டு கடிகைக்கு நாம்
அனுப்பியிருப்பதாக வெளி உலகை
நம்பச் செய்வோம். ஆனால் அவனை கடிகைக்கு அனுப்பாமல் #பஞ்ச பாண்டவர் மலைக்கு அனுப்பி வைப்போம்." என்றான் உதயச்சந்திரன்.
" சமணத்துறவி நாகநந்திகுரவரிடமா..? " என்றார் பல்லவடி அரையன்.
" ஆம்..அங்கு அவன் பல கலைகளில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. சமணத் துறவியின் மேற்பார்வையில் இயங்கும் படைக்கலச் சாலையிலும் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது, போர்க்கலையோடு இலக்கியங்களைக் கற்றுணரவும் முடியும்..சரியான இடம் தான்." என்றார் பிரம்மஸ்ரீராஜன்.
" சில வருடங்களுக்கு நந்திவர்மனை இங்கிருந்து அப்புறப் படுத்துவது அவசியமாகிறது.. நந்திவர்மன் செல்லப் போகின்ற இடம் இங்குள்ள நாம் மட்டுமே அறிந்திருக்க வேண்டும்." என்றான் உதயச்சந்திரன்.
" சரியான யோசனை.."
என்று ஆமோதித்தார் கடிகையார்.
" உதயச்சந்திரா..நந்திவர்மனை எவரும் அறியாது பஞ்ச பாண்டவர் மலைக்கு அழைத்துச் சென்று விடுவது உனது கடமையாகும். அதே போல் நாகநந்திகுரவரின் மேற்பார்வையில் அவனுக்கு பலக் கலைகளைக் கற்பிக்கவும் ஏற்பாடு செய்து விடு. நந்திவர்மன் இங்கில்லை என்றால் சித்ரமாயனும் பெரும்பாலும் நகர்ந்து விடுவான் என்றே எண்ணுகிறேன் " என்றார் தளபதி பல்லவடி அரையன்.
" ஆம் தளபதியாரே.. பஞ்ச பாண்டவர் மலையில் இருந்து வரும் போது நந்திவர்மன் பல கலைகளில் தேர்ந்தவனாக வருவான் என்பதில் ஐயமில்லை..ஏனெனில் அவன் செல்லுமிடம் சிறப்பானது." என்றான் உதயச்சந்திரன்.
அத்தோடு அவர்கள் அனைவரும் கலைய, உதயச்சந்திரன் நந்திவர்மனைக் காணச் சென்றான். நாளைய ஏற்பாட்டினை அவனுக்கு விளக்கிட அவனது அறையை நோக்கி நகர்ந்தான்.
மறுநாள் கீழ்வானில் வெள்ளி தோன்றிட இரு புரவிகள் காஞ்சியின் வடமேற்கு திசை நோக்கி வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. அதில் உதயச்சந்திரனும், நந்திவர்மனும் காஞ்சியின் குடியானவர்களைப் போல் வேடம் தரித்து தங்களதுப் பயணத்தைத் துவக்கினார்கள்.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : #பஞ்ச பாண்டவர் மலை , ஆர்காட்டில் உள்ள சமணர் படுகை.
சென்னைக்கு அருகில் பல்லவபுரத்திலும் ஒரு பஞ்ச பாண்டவர் மலை உண்டு.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக