29.09.20-ரேவா : 46 : பாண்டியரின்_ஒற்றன்_தீரகரன் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

29.09.20-ரேவா : 46 : பாண்டியரின்_ஒற்றன்_தீரகரன்

 



29.09.20


ரேவா


பாண்டியரின்_ஒற்றன்_தீரகரன்_46


ஒற்றர்களின் பணி ஆபத்தோடு  சாகசமும், சாதுர்யமும் நிறைந்த பணி.

ஒவ்வொரு அரசும் பண்டைய காலம் முதல் இந்த நாள் வரை அண்டை நாடுகளின் நிலையினை அறிய ஒற்றர்களையே பெருமளவில் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் ஒற்றறிந்து தரும் விசயங்களின் அடிப்படையிலேயே அரசுகளின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. 

எவ்வித வசதிகளும் அற்ற அந்நாளில் ஒற்றர்களின் பணி என்பது அசாத்தியமான ஒன்று தான். எப்போதும் ஒற்றர்கள் விழிப்புடனே இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கான தகவலும், பணிக்கானச் சூழலும் எந்நேரமும் நிகழலாம். பாண்டிய நாட்டு ஒற்றன் தீரகரனுக்கும் காஞ்சிக்குள் நுழையுமுன்னே அவ்வாறான ஒரு வாய்ப்பு கிட்டியது.


காஞ்சி நகரின் புறநகர் பகுதியில் இருந்த சத்திரமொன்றில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர்   மிகுந்த சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க, அவர்களின் பேச்சில் சித்ரமாயன், வீரமல்லனது பெயர்கள் அடிபடவும், அவர்களின் அருகில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த பாண்டியரது ஒற்றன் தீரகரன், தனது பார்வையை உணவில் செலுத்தினாலும், காதின்  கவனத்தை அவர்கள் மீது திருப்பினான்.


" வீரமல்லன் தற்கொலை செய்து கொண்டாராமே..! " என்றான் ஒருவன்.


இதைக்கேட்டதும் சற்றே துணுக்குற்றான் தீரகரன், இருப்பினும் உணர்ச்சிகளை தன் முகத்தில் பிரதிபலிக்காதவனாய் அவர்களின் உரையாடலைத் தொடர்ந்து செவிமடு்க்கத் துவங்கினான்.


" அது தான் ஆச்சர்யமாக உள்ளது..சித்ரமாயனை தனியே விட்டு விட்டுப் போக அவருக்கு எப்படி மனது வந்தது..! நம்ப முடியவில்லை..! " என்றான் மற்றொருவன்.


" அரண்மனையெங்கும் ஒரே பரபரப்பு தான். வைத்தியரும் நாடியை பார்த்து விட்டு, கடுமையான நஞ்சினை அருந்தியிருப்பதாக தெரிவித்து விட்டார்."


" பாவம்..சித்ரமாயனது நிலைமை தான் சொல்லவொண்ணா தரமாய் போயிற்று..ஆறுதலாய் இருந்த மாமனையும் பறிகொடுத்து விட்டு பரிதாபமாய் நிற்கிறார் சித்ரமாயன்."


" அரண்மனையில் தான் அவருக்கு மதிப்பில்லையே..இன்னும் ஏன் அங்கேயே இருந்து கொண்டிருக்கிறார்."


" அட..நீ வேற..விசயம் தெரியாதா..? இப்போது அவர் அரண்மனையில் இல்லை. வீரமல்லன் இறந்தபின் இரண்டு நாளில் அரண்மனையை விட்டுப் போனவர் தான்..எங்கு இருக்கிறார்..? என்ன செய்கிறார் ..? என்ற ஒரு தகவலும் இல்லை."


"அப்படியா.."


" அது மட்டுமில்லை..அரண்மனையில் இருந்த நம் மன்னர் நந்திவர்மனையும் இப்போதெல்லாம் கண்ணில் காண முடியவில்லை..! "


" என்ன நம் மன்னரையுமா..? "


" ஆமாம் ..நம் மன்னரைத்தான். கல்வி கற்கச் சென்றிருப்பதாக  பேசிக் கொள்கிறார்கள்.உக்கிராணப் பணியாளன் அவ்விதம் தான் சொன்னான்.."


" கல்வி கற்க என்றால் ..கடிகைக்கு தான் போயிருப்பார்.."


" இருக்கலாம்..அரண்மனையில் வேலை செய்கிறோம் என்று தான் பெருமை அடித்துக் கொள்ள முடிகிறது..அங்கு நடக்கும் பல விசயங்கள் நமக்கே புரிபடுவதில்லை."


" நல்லது என நினைத்துக் கொள், பெரிய இடத்து விசயங்களை அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய்..! "


 " உண்மை தான்.."


இருவரும் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டவனாய், நிதானமாக தனது உணவினை உண்டு விட்டு எழுந்தான் பாண்டிய நாட்டு ஒற்றன் தீரகரன்.


சித்ரமாயன் இப்போது அரண்மனையில் இல்லையென்றால் , எங்கு இருக்கிறான்..? ஏன்  வீரமல்லன் தற்கொலை செய்து கொண்டான்..? நந்திவர்மன் உண்மையில் கல்வி கற்கத் தான் போனானா..? எங்கு போயிருக்கிறான்..? அவன் முன் பல கேள்விகள் தொக்கி நின்றன. இரண்டொரு நாள் காஞ்சியில் தங்கி இந்த கேள்விகளுக்கான விடையைக் கண்டு கொள்ள வேண்டும், என எண்ணமிட்டவனாய், பாண்டிய நாட்டு முத்து வணிகனாய் தன்னை உருமாற்றம் செய்து கொண்டவனாய், காஞ்சி நகரின் கோட்டையைக் கடந்தவன், அரண்மனைக்குள் நுழையவும் எண்ணமிட்டு, அரண்மனையின் வாயிற் காவலனிடம் வந்து நின்றவனாய், 


" நான் முத்து வணிகன். அரண்மனையில் என்னிடமுள்ள  முத்தினை விற்றுப் போகலாம் என வந்திருக்கிறேன்." என்றான் தீரகரன்.


" ஐயா..முத்து வணிகரே..உம்மிடமுள்ள முத்தினை வாங்கிட இங்கு அரண்மனையில் அரசிகள் யாருமில்லை..ஏன் அரசர் கூட இங்கில்லை..உங்களது முத்திற்கு இங்கு வேலையில்ல..நீங்கள் போய் வரலாம்.." என்றான் வாயிற் காவலன் முகத்தில் அடித்தாற்போல்.


" ஏனய்யா..அரண்மனை என்றால் அரசிகளோ, அரசரோ இல்லாமல் இருப்பார்களா..!  முத்து வணிகனான என்னை அனுமதிக்க முடியாது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..அதற்காக ஏனிந்த பொய்யினை உரைக்கிறீர்கள்..? " என்றான் சற்றே கோபத்துடன்.


" அட..இவனைப் பாரடா..!  உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான்.." என்றவனாய், " சரி..சரி..நீ சொன்னது போலவே இப்போது இங்கு முத்திற்கு வேலை இல்லை போய் வா.." என்றதோடு, அவனைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றினான்  வாயிற் காவலன்.


" நீ ஒன்றும் என்னை விரட்ட வேண்டாம்..நானே போய்க் கொள்கிறேன். எனக்கு வந்த வழி நன்றாகவே தெரியும்.." என்றவனாய் திரும்பி நடக்கத் துவங்கி விட்டான்.


அரண்மனையில் எவருமில்லை என்பது உறுதியாகி விட்டது. ஆனால் சித்ரமாயன் எங்கு இருக்கிறான்..? அவனை கண்டுபிடித்தால் அல்லவா மற்ற விபரங்களைத் தெளிவாக அறிய இயலும் என எண்ணிக் கொண்டவனாய் பலத்த யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவனை , 


" ஏனப்பா..நடுத்தெருவில் தான் நடந்து செல்வாயோ..? ஓரமாய் செல்வதில்லையா..? ம்..வீரமல்லனும், சித்ரமாயனும் இல்லாமல் காஞ்சி நகர மக்களுக்கெல்லாம் துணிவு அதிகமாகி விட்டது.." என்றான் குதிரையில் வந்தவன்.


கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல சித்ரமாயனைக் காணத் துடித்தவனுக்கு, சித்ரமாயனின் அபிமானியே ஒருவன் சிக்கியிருக்கிறானே..அவனிடம் விசயத்தை கறக்க வேண்டியது தான் என எண்ணமிட்ட தீரகரன்.


" ஐயா..நானும் நம் பழைய மன்னர்  சித்ரமாயனைத் தேடித் தான் வந்தேன்..அரண்மனையில் அவர் இல்லை எனத் தெரிந்தது. எங்கே அவரை சந்திப்பது என்ற யோசனையில் தான் நடந்து வந்து கொண்டிருந்தேன்.."


" நீ அவரை சந்திக்க வேண்டுமா..? என்ன காரியத்திற்காக சந்திக்க விரும்புகிறாய்..? "


" தெருவில் வருவோர், போவோரிடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா..? அவருக்கான தகவல் ஒன்று என்னிடமுள்ளது..அதை அவரிடம் தான் சொல்வேன்.." என்றான் பிடிவாதமாய் தீரகரன்.


தீரகரனை ஏற இறங்க ஒருமுறை பார்த்த பைரவன், " உன்னைப் பார்த்தால் காஞ்சியை சேர்ந்தவன் போலில்லையே..! உன்னிடம் எப்படி உண்மையைச் சொல்வது..? " என்றான் சந்தேகம் தொனித்த குரலில்.


"நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லத் தேவையில்லை..சித்ரமாயனிடம் அழைத்துச் சென்றால் போதும்.." என்றான் தீரகரன்.


"உனது பெயர்..?" 


" தீரகரன் "


தீரகரன் எனச் சொல்லிக் கொள்ளும் இவனைப் பார்த்தால் காஞ்சியை சேர்ந்தவன் போலில்லை..ஆனால் சித்ரமாயனை சந்திக்க வேண்டுமென்கிறான், அவரிடத்தில் சொல்வதற்கு முக்கிய தகவல் இருப்பதாக கூறுகிறானே..இவனை சித்ரமாயனிடம் அழைத்துச் செல்வதால் என்ன ஆபத்து வந்து விடப் போகிறது..ம்..பார்க்கலாம்.இவன் ஏதாவது அங்கு பிரச்சனை செய்தால் , குறுவாளால் குத்தி சாய்க்க வேண்டியது தான் , என்று பலவாறு யோசித்த பைரவன்.


" அவரைப் பார்க்க வேண்டுமெனில் நாம் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமே..! " என்றான் யோசனையுடன் பைரவன்.


" நான் தயாராகத்தான் உள்ளேன்.." 


" புரவி வேண்டுமே உங்களுக்கு.." என்றான் சந்தேகத்தோடு பைரவன்.


" அது குறித்து தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்..நான் வந்த புரவி சத்திரத்தில் தான் நிற்கிறது.." என்றான் தீரகரன்.


" அப்படியென்றால் சரி..வாருங்கள் செல்லலாம் " என்றவனாய் , புரவியில் இருந்து இறங்கியதோடு தீரகரனுடன் இணைந்து நடந்து வந்தான். 


சத்திரத்தை அடைந்ததும், தீரகரன் தனது புரவியை அவிழ்த்து  ஏறிக்கொண்டவன், பைரவனுடன் தனது பயணத்தைத் துவக்கினான்.


இருவரது புரவியும் திரையனேரியை நோக்கி விரைந்தது.


தன்முன் நின்றிருந்த தீரகரனை ஏறெடுத்த சித்ரமாயன், " தாங்கள் யார்.? " என்றான்.


" நான் பாண்டிய நாட்டு ஒற்றன் தீரகரன் " என்றதோடு, தனது இலச்சினையையும் எடுத்துக் காட்டி உண்மையை உரைத்த தீரகரன், காஞ்சியில் நடந்தவைகளை முழுவதும் சித்ரமாயன் வாயிலாகக்  கேட்டறிந்தான்.


தீரகரனுக்கு காஞ்சி வந்ததற்கான பலன் கிடைத்து விட்டது. கிடைத்த தகவலை பாண்டியன் பராங்குச மாறவர்மனிடம் தெரிவிக்க விரும்பியவனாய், சித்ரமாயனிடம் விடைபெற்றுக் கொண்டு திரையனேரியை விட்டு கூடல் நகர் நோக்கி தனது பயணத்தைத் துவக்கினான்.


_ தொடரும்..


#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages