30.09.20
ரேவா
சமணர்_கல்வி_47
பஞ்ச பாண்டவர் மலையில் நந்திவர்மனை நாகநந்திகுரவர் வசம் ஒப்புவித்தவனாய் விடைபெற்றான் உதயச்சந்திரன். அவ்வப்போது நந்திவர்மனை வந்து சந்திப்பதாகவும் கூறியவன், கல்வி, கேள்விகளிலும், ஆயுதப் பயிற்சிகளிலும் நன்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென நந்திவர்மனைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றான்.
நந்திவர்மனுக்கு காலையில் கல்வி, மாலையில் ஆயுதப்பயிற்சி என இரண்டும் சேர்ந்தாற்போல் அங்கு பயிற்றுவிக்கப் பட்டது.
நாகநந்திகுரவர் முன் அமைதியாக வீற்றிருந்தான் நந்திவர்மன். அவனை புன்னகை ததும்பும் முகத்தினராய், கருணை பொங்க பார்த்தவர்,
" நந்திவர்மா..ஒரு மனிதனுக்கு கல்வி என்பது ஏன் தேவைப்படுகிறது..? " என்றொரு கேள்வியைக் கேட்டார்.
" சுவாமி.. கல்வியறிவு பெற்ற மனிதனே முழு மனிதனாவான்..மனிதனுக்கு கல்வியானது வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கிறது " என்றான் நந்திவர்மன்.
" மிகச்சரியே..வாழ்வியலை கற்றுத்தர வேண்டியது தான் ஒரு நல்ல கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உதவாத விசயங்களைக் கற்பதனால் யாதொரு பயனுமில்லை. அதுமட்டுமின்றி கல்வி என்பதே ஒழுக்கத்தின் வெளிப்பாடாகும். ஒழுக்கமே ஒரு மனிதனை உயர்நிலைக்கு கொண்டு செல்கிறது. மனிதனது ஒழுக்கலாறுகளை வகைப்படுத்துவதும், போதிப்பதையுமே சமணர் கல்வி செய்கிறது.."
அவர் சொல்லச் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
" #சமணர் கல்வியில் அனைவரும் பத்துவகை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும், கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை, பொருள்வரையாமை, கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவு உண்ணாமை , பெரியோரை மதித்தல் போன்றவைகளை கடைபிடித்து ஒழுகும் போது தான் உன் நிலையில் உயர்வினைக் காண்பாய்."
" சுவாமி..இது அத்தனையும் மனிதர்கள் வாழ்வில் கடைப்பிடிப்பது சாத்தியந்தானா..? "
" ஞான மார்க்கத்தை விரும்பும் துறவிகள் இவையனைத்தையும் கடைபிடித்தல் நல்லது. குடும்ப வாழ்க்கையில் உள்ளோர் ஒன்றிரண்டை விலக்கி விடுகிறார்கள்."
" சுவாமி நாம் யாரை மதித்து வழிபடுவது நல்லது..? "
" அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் , துறவியர் இவர்களை மதித்து வழிபடுதல் வேண்டும். இதுவே பத்தாவது ஒழுக்கமாகவும் கொள்ளப்படுகிறது. " என்றார் நாகநந்திகுரவர்.
" நந்திவர்மா சமணக் கல்வி என்பது, வெறும் ஆன்மீகத்தை மட்டும் போதிக்கும் என்றெண்ணி விடக் கூடாது. ஆன்மீகக் கல்வியோடு, நுணுக்கக் கல்வி, மொழி, கணிதம், வானசாஸ்திரம், அறிவியல், வானியல், இயற்பியல், உளவியல், ஆய்வியல், வாழ்வியல், தர்க்கவியல் போன்றவைகளையும் கற்றுத் தரும்..நீ அவைகளை நன்கு கற்று உன்னை மேம்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட பாடங்களை நீ முழுதும் மனனம் செய்து தெளிவுபடக் கற்றுணர வேண்டும்.
உனக்கு அவையே இங்குள்ளவரை கற்றுத்தரப் படும். " என்றார் நாகநந்திகுரவர்.
" நல்லது சுவாமி..அப்படியே கற்றுக்கொள்கிறேன். "
"நந்திவர்மா, கல்வி நிலையிலும் ஐந்து படிகள் இருக்கின்றன. அதையும் தெரிந்து கொள்ள வேண்டும்..
சொல் பொருள் கேட்டறிதல், விவாதித்து ஐயம் தெளிவுறுதல், மனனம் _ பாராயணம் செய்தல் ஒப்புவித்தல் , நினைவு கூர்தல், பிறர்க்கு எடுத்துரைத்தல் என ஐந்து நிலைகளையும் நீ கடந்தேற வேண்டும்.
" அப்படியே சுவாமி.."
கடந்தவாரங்களில் அவன் கேட்டுணர்ந்த கல்வி முறை அது. காலையில் கல்வியும், மாலையில் நாகதேவரிடம் வாட்பயிற்சி, விற்பயிற்சி, வேல் பயிற்சி, ஈட்டி எறிதல் போன்ற ஆயுதப் பயிற்சிகளோடு, அதன் நுட்பங்கள் குறித்தும் கற்றுணரலானான்.
"நந்திவர்மா, எதிராளியின் வாளின் நீளம் உணர்வதும், நமது வாளின் நீளம் உணர்வதும் வாட்போரின் அவசியமாகும் , எதிராளியின் வாள் வீச்சினை நெருங்கி எதிர்கொள்வது தவறாகும்..நமது வாளால் தடுக்கவும் , எதிராளிக்கு காயத்தை உருவாக்கும் படியும் நாம் நின்று செயலாற்ற வேண்டும். வாள் வீச்சில் தடுப்பாட்டமும், தாக்குதல் பாணி ஆட்டமும் உண்டு. நாம் அதனை சமயத்திற்கு தகுந்தாற் போல் வாட்ப்போரில் பயன்படுத்தவும் அறிந்து கொள்வது அவசியமாகும்."
" நன்றி சுவாமி..அறிந்து கொள்கிறேன்."
" ஆயுதப் பயிற்சியில் நமது மனமானது ஒரு நிலைப் பட்டு, சலனமின்றி இருத்தல் நல்லது. மனதினை தியானத்தின் பால் செலுத்துவதனால் , மனதினை ஒரு நிலைப் படுத்தலாம். எந்த ஒரு ஆயுதத்தையும் கைகொள்ளும் போது எதிராளியின் மனநிலையையும் அறிந்து கொள்வது நல்லது."
" எதிராளியின் மனநிலையை நம்மால் அறிய முடியுமா சுவாமி..? "
" ஏன் முடியாது..ஒருவன் தனது ஆயுதத்தை கையாளும் முறையிலேயே அவனது மனதினை நாம் அறிந்து கொள்ள முடியும்..நீ இதனை நன்கு பயிற்சி பெற்ற பின் அறிவாய். குழப்பத்தின் வசப்பட்டவனால் சரியானபடி ஆயுதப் பிரயோகம் செய்ய இயலாது. ஆயுதப் பயிற்சிக்கு யோகப் பயிற்சியும் உறுதுணை செய்யும். மனநிலையையும், உடல் தகுதியையும் வளர்த்துக் கொள்ள நீ யோகப் பயிற்சியும் செய்ய வேண்டும். மனதினை ஒரு நிலைப் படுத்தி நீ தியானத்தில் ஈடுபடும் போது உனக்கானத் தெளிவு விளங்கும். உணர்ச்சிகளை அடக்கவும், எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுத்தலும் உனக்குப் பல நன்மைகளைப் பெற்றுத்தரும்.
" நல்லது சுவாமி..கவனத்தில் கொள்கிறேன்.." என்றான் பணிவுடன் நந்தி்வர்மன்.
* * *
பாண்டியரது தலைநகரான கூடல் நகரின் அரண்மனையில் தீரகரனைத் தனது தனியறையில் சந்தித்தான் பராங்குச மாறவர்மன்.
" தீரகரா..என்ன சொல்கிறாய்..? "
" வீரமல்லனை சித்ரமாயனே கொன்று விட்டானா..! " என்றான் ஆச்சர்யத்துடன் பராங்குச மாறவர்மன்.
" ஆம் ..அரசே..எதிர்பாராது நடந்து விட்ட நிகழ்வு. சித்ரமாயன் நந்திவர்மனுக்கு வைத்த பொறியில் தெரியாமல் சிக்கி பலியாகி விட்டான் வீரமல்லன். " என்றான் தீரகரன்.
" என்ன நடந்தது..? விளக்கமாகச் சொல்.." என்றான் திகைப்புடன் பராங்குசன்.
தீரகரன் காஞ்சி அரண்மனையில் நடந்த விபரங்களை முழுதும் ஆதியந்தமாக சொல்லி முடித்தான்.
" பாவம்..வீரமல்லன்..! சித்ரமாயனாவது தான் செய்யப் போகும் செயலை அவனது மாமனுக்கு தெரிவித்து விட்டு செய்திருக்கலாம். வீணில் வீரமல்லனது உயிர் போயிருக்காது.."
" வீரமல்லன் வந்து பாலை அருந்துவான் என்று இவன் என்ன கனவா கண்டான்..?! வீரமல்லன் குறிக்கிடாது இருந்தால் நந்திவர்மனது உயிர் எப்போதோ பறந்திருக்கும்.."
" நந்திவர்மன் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது..தீரகரா, நந்திவர்மனை எங்கு கல்வி பயில அனுப்பியிருக்கிறார்கள்.." என்றான் பலத்த யோசனையுடன் பராங்குச மாறவர்மன்.
" பல்லவர்கள் கல்வி கற்க வேறெங்கு அனுப்பப் போகிறார்கள், கடிகைக்குத் தான் அனுப்பியிருப்பார்கள். "
" நீ விசாரித்தவரையில் அரண்மனையில் எவரும் இல்லையா..? "
" ஆம்..அரண்மனையில் அரசக் குடும்பத்து ஆட்கள் எவருமில்லை. காவலும் ஏனோதானோ என்றுதானிருக்கிறது.. காவலர்களிடத்தில் அசட்டையும் மெத்தனமுமே தென்படுகிறது."
"அப்படியெனில் நாம் நமது கொங்கு நாட்டின் படையெடுப்பை தொடங்க ஆயத்தமாகலாமா..? மன்னன் இல்லாத பல்லவர் படை நம்மை எதிர்நின்று தாக்காது. அப்படியே அவர்கள் வந்தாலும் நாம் அவர்களை தேக்கி நிறுத்துவதோடு, வட கொங்குப் பகுதிகளை கைப்பற்றி கங்க மன்னன் சிறீபுருஷனை கதிகலங்க செய்து விடலாம் . #குவலாலபுரம் நமது கட்டுப் பாட்டில் வந்தால் கங்கனது கொட்டம் சற்றே அடங்கும்." என்றபடியே தீரகரனைப் பார்த்தான் பராங்குசன்.
" உண்மை தான் அரசே.."
" நல்லது..உடனே நமது மந்திரியாரையும், தளபதியையும் வரச்சொல் ..நமது படைகளை ஆயத்தப் படுத்துவோம். " என்றான் உற்சாகத்தோடு.
தீரகரன் நகன்ற சில நாழிகைகளில் உள்ளே நுழைந்தனர். முதலமைச்சர் மாறன் காரியும், தளபதி சாத்தன் கணபதியும்.
முகமன்கூறி அமர்ந்த இருவரையும் ஏறெடுத்த பாண்டிய மன்னன், " நமக்கு சாதகமான பொழுது இப்போது அமைந்திருக்கிறது. பல்லவ மன்னனாய் பொறுப்பேற்ற நந்திவர்மன் கல்விபயில கடிகைக்கு சென்று விட்டான். தலைநகரை விட்டு எழ முடியாத நிலையில் பல்லவரது படைகள் இருக்கின்றன. எனவே நாம் கொங்கு நாட்டின் மீது படையெடுக்க இதுவே சரியான தருணம், பல்லவனது தென்பகுதி கொங்கு நாட்டினை கைப்பற்றவும் முடியும் , கங்கனது கட்டுப் பாட்டில் உள்ள வட கொங்குப் பகுதிகளையும் கைப்பற்ற நல்லதொரு வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது. என்ன சொல்கிறீர்கள்..? உங்களது கருத்தினைத் தெரியப்படுத்தலாம்." என்றான் பராங்குசன்.
" அரசே..நீங்கள் குறிப்பிட்டது போல் இது நல்லதொரு சந்தர்ப்பம் தான். மன்னன் தலைநகரில் இல்லையெனில் தளபதி தலைநகரை விட்டு வெளிக்கிளம்ப மாட்டான். நமது பெரும்படை எளிதில் கங்கனை முறியடித்து விடும்." என்றார் மகிழ்ச்சியோடு மாறன் காரி.
" தளபதி அவர்களே..தங்களது கருத்து..! "
" மன்னர் விருப்பப்படி , நமது படைகளை நகர்த்திட வேண்டியது தான்..இது போன்ற வாய்ப்பு அமைவது பின் துர்லபம். "
" நல்லது..நமது நால் வகைப் படைகளையும் தயார் செய்யுங்கள். கங்கன் கஜங்களுடன் நன்கு பழகி அதன் ஆற்றல் உணர்ந்தவன் , யானைகளை வழி நடத்துவதில் சமர்த்தன். எனவே நம்முடைய படையில் அவனது யானைகளை எதிர்த்து நிற்க நமது யானைகளை தயார் படுத்தி விடுங்கள்."
" நல்லது அரசே.."
சபை இத்துடன் கலையலாம்.
என்றவனாய் எழுந்தான் பராங்குசன்.
பராங்குசனின் கொங்கு நாட்டு கனவும் ஈடேறியது..கூடவே கங்கன் மீது படையெடுத்துச் சென்று கங்க நாட்டு மன்னன் சிறீபுருஷனின் மருமகனாகும் பாக்கியமும் கிட்டியது.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : சமணக் கல்வி அந்நாளில் வாய்மொழிக் கல்வியாகத் தான் கற்பிக்கப் பட்டது. பாடநூல் வழிமுறைகள் இல்லை.
குவலாலபுரம் என்பது இன்றைய கோலார் தங்கச் சுரங்கம் உள்ள இடம்.இது கங்கர்களின் முதல் தலைநகராய் இருந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக