04.10.20
ரேவா
தந்திதுர்க்கனுக்கு_ஏற்பட்ட_அதிர்ச்சி_51
காஞ்சி அரண்மனையின் விஸ்தாரணமான அந்த அறையில் அமர்ந்திருந்த உதயச்சந்திரன், நந்திவர்மன், பல்லவடி அரையன், பிரம்மஸ்ரீராஜன் முதலானவர்கள் தங்கள் எதிரே சோகமே வடிவாக அமர்ந்திருந்த இராஷ்டிரகூடத்தின் மன்னன் தந்திதுர்க்கனையும், அவரது மகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
தந்திதுர்க்கனுக்கு அனைவரையும் அறிமுகம் செய்வித்ததோடு, அவனையும் அனைவருக்கும் அறிமுகம் செய்வித்தான் நந்திவர்மன்.
சிவந்த நிறத்தினனாய்,கூர்மையான நாசியோடு, அளவான உயரத்தில் , சற்றே வெளுத்த தலைமயிரோடு் , சோகத்தைப் பிரதிபலிக்கும் சோபையிழந்த கண்ணின் விழிகள் சூன்யத்தில் திளைத்திருக்க , குரலில் கம்பீரம் தொனித்தாலும் அதன் ஊடே ஒளிந்திருக்கும் விரக்தி எனத் துன்பத்தில் அடிபட்டவராய் காட்சி தந்து கொண்டிருந்த தந்திதுர்க்கன் , சிறுவயதில் அனைவரையும் அழகில் ஈர்க்கும் வண்ணம் இருந்திருப்பார் என்று எண்ணத்தோன்றியது. அவரது மகளோ..
பொன்னிறக் கூந்தல், சூடியிருந்த செண்பக மலரும் பொன்னிறமென்பதனால் கூந்தலும் மலரும் ஒன்றெனப் புலப்பட, நம் நாசியை நிறைத்த மலரின் சுகந்தமே அவள் மலர் சூடியிருப்பதை நினைவு படுத்த, அழகான நெற்றி, அதில் மெலிதாய் வரையப்பட்டது போன்ற புருவங்கள், நீலமணிக் கண்கள், எப்போதும் படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி சிறகென இமைகள், சங்கு கழுத்து, செந்தாமரையைப் பழிக்கும் நிறத்தினை அவளது தேகத்திற்கு இயற்கை வழங்கியிருக்க, எட்பூ நாசியோ பார்ப்பவர் இதயத்தைக் கிழிக்க, கனிரசம் மிகுந்த இதழ்களோ பவளத்தைப் பழித்தது. ஒடிசலான தேகத்தில் திரட்சியான மார்பு, இடையோ இல்லாததை போன்ற பிரமை, சேர நாட்டு தந்தங்களைப் போல வழவழத்த கைகால்கள் மொத்தத்தில் அவள் பாரதப் பெண்ணாயிராமல் யௌவனக் கலப்பில் காட்சி தந்து கொண்டிருந்தாள். அன்றைய பரபரப்பில் அவளைச் சரிவர கவனிக்காத நந்திவர்மனும், உதயச்சந்திரனும் இன்று அவளை கவனித்து ஆச்சர்யம் கொண்டவர்களாக,
" தந்திதுர்க்கரே, தங்களது மகளைக் கவனித்தால் , யௌவனச் சாயல் தெரிகிறதே..? " என்றான உதயச்சந்திரன்.
தான் கேட்க நினைத்த விசயத்தை படைத்தளபதி கேட்டதும், அதற்கான பதிலை எதிர் நோக்கியவனாய் தந்திதுர்க்கனின் முகத்தை ஏறெடுத்தான் நந்திவர்மன்.
" தங்களின் ஊகம் சரிதான் படைத்தலைவரே, அவள் யௌவனச் சாயல் கொண்டவளாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனெனில் அவளது தாய் யௌவன தேசத்தை சேர்ந்தவள்."
" ஓ.."
நர்மதை நதிக்கரையைச் சேர்ந்த நாட்டினைச் சேர்ந்த தாங்கள் , தங்கள் மகளுடன் இவ்வளவு தூரம் வந்ததன் காரணம்..? " சற்றே சந்தேகத்துடன் வினவினார் பிரம்மஸ்ரீ ராஜன்.
" எனது மகளின் கல்வியின் பொருட்டு #கடிகையில் சேர்த்திட அழைத்து வந்தேன்."
" சாளுக்கிய வீரர்களிடம் எவ்வாறு சிக்கினீர்கள்..? " பல்லவடி அரையன் பக்குவமாய் விசாரித்தார்.
" கங்கரது நாட்டின் எல்லை வரை அவர்களது கண்ணில் மண்ணைத் தூவி கடந்து வந்து விட்டேன். ஆனால் சமீபகாலமாய் காவிரி நதியின் தீரத்தில் சாளுக்கியரது படைப் பிரிவொன்று பாசறை அமைத்து தங்கியிருப்பதை நான் அறிந்திருக்க வில்லை. அவர்கள் என் ரதத்தை வழிமறித்ததோடு, என்னைத் தாக்கவும் முற்பட்டார்கள். நான் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து ஒருவழியாக தங்களது எல்கையில் நுழைந்து விட்டேன். இருப்பினும் எங்களைத் தொடர்ந்து வந்தனர். ஓரிடத்தில் எனது ரதமானது சாலையை விட்டு விலகி சாய்ந்து விட, நான் தூக்கி வீசப்பட்டேன். என் மகளோ என்னை எழுப்பியதோடு, அழைத்துச் சென்றுவிட முயற்சித்தாள்..ஆனால் என்னால் முடியாத காரணத்தால் அவளை மட்டும் தப்பி ஓடிவிடும் படி அறிவுறுத்தினேன்..அதற்குள் எங்களைத் துரத்தி வந்தவர்களது புரவிகள் நெருங்கி விட, என் மகள் ஓடத் துவங்கினாள்..
இதன் பின் நடந்தவைகளை தாங்கள் அறிவீர்கள் அல்லவா..! " என்றான் தந்திதுர்க்கன்.
" சாளுக்கியர் தங்களுக்கு எவ்வகையில் பகைவர்..? " கேட்டார் புருவத்தை உயர்த்தியபடி பல்லவடி அரையன்.
" இருவரது எல்கையும் ஒன்றே. தக்காணத்தை சேர்ந்த எங்கள் நாடு, நர்மதை நதிக்கரையில் தான் அமைந்திருக்கிறது.சாளுக்கிய இராஜ்ஜியமும் எனது நாடும் ஒரே எல்கை என்பதனால் அடிக்கடி எல்லையில் போரென்பது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். எனது நாட்டினை ஆக்கிரமிக்க பலமுறை முயற்சித்துள்ளான் சாளுக்கிய விக்கிரமாதித்தன். எனவே தான் ரதத்தில் செல்வது நான் என்பதை உணர்ந்த சாளுக்கிய விக்கிரமாதித்தனின் மகன் கீர்த்திவர்மன் எங்களை பிடித்து வர தன் வீரர்களை ஏவினான்."
" கங்கரது நாட்டின் எல்லையான காவிரி நதிக்கரை ஓரத்தில் பாசறை அமைத்து தங்கியிருப்பது சாளுக்கிய விக்கிரமாதித்தனின் புதல்வன் கீர்த்திவர்மனா..?" என்றார் திகைப்புடன் பல்லவடி அரையன்.
" ஆம்..அவனே தான்.." வெறுப்புடன் உதிர்ந்தன வார்த்தைகள்
தந்திதுர்க்கனிடமிருந்து.
அப்போது, கையில் பால் குவளைகளுடன் உள்ளே நுழைந்த பியூஷாவைக் கண்ணுற்றதும் திகைப்பிலும், ஆச்சர்யத்திலும் வசப்பட்டவனாய் தந்திதுர்க்கன் , தனது இருக்கையை விட்டு சட்டென எழுந்து விட்டதோடு, பியூஷாவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்ததோடு், அவளது தோளினைப் பற்றி உலுக்கியவனாய்,
"நிரஞ்சனா..நீ...எப்படி இங்கு...? இல்லை..இல்லை..! " என்றபடியே அவளது தோளைப் பிடித்திருந்த கைகளை உதறியதோடு, "நீ...நிரஞ்சனாவாக இருக்க வாய்ப்பில்லை..! நீ இங்கு எப்படி வந்திருக்க முடியும்..! அதுவும் இந்த இளமை..ஊஹூம் ...இருக்க முடியாது..! அவளுக்கு வயதாகி இருக்கும்..நீ அவளாய் இருக்க ...முடியாது..! " என்று பலவாறு புலம்பித் தடுமாறியவனாய் தனது ஆசனத்தில் தொப்பென்று அமர்ந்தான். அவனது முகமெங்கும் வியர்வை பூத்தது. உடலோ மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.
தந்திதுர்க்கனின் செயலைக் கண்டு திடுக்கிட்டு விட்ட அனைவரிலும், சட்டென சுதாரித்த உதயச்சந்திரன், மெல்ல தந்திதுர்க்கனை நெருங்கியவனாய், " தந்திதுர்க்கரே, இவளைப் பார்த்ததும் நிரஞ்சனா என அழைத்தீரே..யாரது..? " என்றான் சந்தேகம் பூரணமாய் தொனித்த குரலில்.
உதயச்சந்திரனுக்கு ஏற்கனவே பியூஷாவின் பிறப்பில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டுமென்றும், காம்போஜத்தில் சந்தித்த முதியவன் பியூஷாவின் தந்தையாக இருக்க முடியாது என்பதிலும் துவக்க காலம் முதலே மனதின் அடிக்கோடியில் எழுந்த சந்தேகம், தந்திதுர்க்கன் பியூஷாவை , நிரஞ்சனா என அழைத்ததும் , அந்த சந்தேகம் மீண்டும் மெல்ல மேலெழ, பியூஷாவைப் பற்றிய பிறப்பின் ரகசியமொன்றை தந்திதுர்க்கன் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என எண்ணியவனாய் தான், தந்திதுர்க்கனை அணுகியதோடு, " நிரஞ்சனா என அழைத்தீரே, யாரது..? என மெல்ல வினவினான்.
" படைத்தலைவரே..என்னை எதுவும் இப்போது கேட்காதீர்கள்..நான் மிகுந்த துயரிலும், குழப்பத்திலும் உள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் சாயலில் அவள் இருந்ததால் சற்றே உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றவனாய் , அனைவருக்கும் பால் குவளையை வழங்கிக் கொண்டிருந்த பியூஷாவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
அங்கிருந்த அனைவரோடு,
பியூஷாவும் தந்திதுர்க்கனது செயலைக் கண்டு சற்று திடுக்கிட்டாலும், துயருற்ற அவனது விழிகளைக் கண்டு, "ஐயோ ..பாவம்.." என மனதால் இரங்கினாள்.
" பரவாயில்லை..தங்களையும், தங்களது புதல்வியையும் காப்பாற்றும் வாய்ப்பு கிட்டியதற்கு மகிழ்கிறேன்.நன்கு ஓய்வெடுங்கள்.தங்களது காயத்திற்கு உரிய சிகிச்சையையும் மருத்துவரை விட்டு செய்யச் சொல்கிறேன்.உடல்நலம் தேறிய பின் கடிகையில் தங்களது புதல்வியைச் சேர்க்கலாம்.." என்றபடியே.
" யாரங்கே..நமது அரண்மனையின் அறையொன்றில் இவர்கள் தங்கிட ஏற்பாடு செய்யுங்கள்." என ஒரு காவலனை விளித்துப் பணித்தான் நந்திவர்மன்.
அனைவரிடமும் விடைபெற்ற இருவரும் காவலனைத் தொடர..ரேவா அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்று கொண்டிருந்தாள்.அவளது விழிகள் நன்றியை பகர்ந்ததை நந்திவர்மனால் தெளிவாக உணர முடிந்தது.
அவ்விழிகள் நன்றியை மட்டுமா பகர்ந்தன..!
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : கடிகை குறித்து வேலூர் பாளையப் பட்டயம் கூறும் தகவல். வட ஆற்காடு கோட்டத்தில் பாணபுரத்திற்கு ஏழு கல் தொலைவில் உள்ள கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரமே கடிகை ஆகும். இதனை திருமங்கையாழ்வாரும் தனது பதிகத்தில் உறுதிபடுத்தி இருக்கிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக