ஆக்கம் : மலைச்சாமி
ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையின் உண்மை கதை தெரியுமா…?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். சிவயோகி போல தலையில் ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதலில் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சந்நதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருட்டான பகுதியில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இதுதவிர முருகன் சந்நதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சந்நதி இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். திருச்செந்தூரில் முருகன் சந்நதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.
முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப் பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது ஒரு நாள் நள்ளிரவில் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
ஆதிசங்கரருக்கு ஏற்பட்ட காச நோய் இத்தலத்தில் நீங்கியது. எனவே அவர் சுப்ரமண்ய புஜங்கம் எனும் துதியை இம்முருகனைக் குறித்துப் பாடியுள்ளார். அதில் இத்தலத்தில் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் விபூதியை தரிசித்த மாத்திரத்திலேயே அனைத்து நோய்களும், பில்லி, சூன்யங்களும் பறந்தோடும் எனக் குறிப்பிட்டுள்ளார். தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக் கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, ‘கங்கை பூஜை’ என்கின்றனர்.
இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப் பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனிச் சந்நதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை “மாப்பிள்ளை சுவாமி’’ என்றழைக்கின்றனர்.
திருச்செந்தூரில் முருகன் ‘ஞானகுரு’வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், குரு தலமாகக் கருதப்படுகிறது. பிராகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கின்றன. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, ஞானஸ்கந்த மூர்த்தி என்று அழைக்கிறார்கள்.
வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருப் பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும். தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் .
புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை ” ஸ்கந்த புஷ்கரணி” என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாசகர்
சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள். இந்த மண்டபத்திற்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். ( அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன் பிறகு அவருடைய அபார சக்தியை அறிந்து கொண்ட இடும்பன் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான். இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர் ஆறுபடை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.)
கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார். இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி,
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை.
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் – ஒரு கட்டிடக் கலை அதிசயம். கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்...
அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.
திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா
1. மௌனசுவாமி
2. காசிசுவாமி
3. ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்
4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
5. தேசியமூர்த்திசுவாமி.
எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்…
தரிசனம் செய்ய செல்லும் வழி :-
முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்
நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.
ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.
முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.
அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக