05.10.20- பாப்பாத்தி பாட்டி - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 5 அக்டோபர், 2020

05.10.20- பாப்பாத்தி பாட்டி

கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு



05.10.20


பாப்பாத்தி பாட்டி


பாப்பாத்திப்பாட்டிக்கு நான் பாக்கையில அம்பது வயசிருக்கும். நான் அஞ்சாவது வரைக்கும் படிச்ச பஞ்சாயத்துப்போர்டு பள்ளிக்கொடத்துல ஆயா வேலபாத்துச்சு. அந்தப்பள்ளிக்கொடம் மசூதிக்கிப்பக்கத்துல இருக்கும். இடம் கொடுத்ததே மசூதிதான்.


அங்க அதுக்கு வேலை வாத்தியார் டீச்சர் களுக்கு டீ வடை வாங்கிட்டு வந்து குடுக்குறது. நோட்டு புத்தகம் டீச்சர்களுக்கு தூக்கிட்டு வாரது அப்புறம் பள்ளிக்கொடத்தை தொறந்து வைச்சி கூட்டிக்குப்பை அள்ளிப்போடுறது


பள்ளிக்கொடம் தொடங்க அப்புறம் பீரியடுமாத்த பள்ளிக்கொடம் முடியிறதுக்கு பெல் அடிக்கிறது.


பெல் அடிக்கிறதுக்குன்னு ஒரு பித்தளை மணி இருக்கும் அதைத்தான் தூக்கியாந்து வாசல்ல நின்னுக்கிட்டு கிணிங்கிணின்னு அடிக்கும் பள்ளிக்கொடத்துல உள்ளாற இருக்குபோது இந்த சத்தம்தான் விடுதலை ஒலியா இருக்கும் ஹோன்னு கத்திக்கிட்டு பைக்கட்டத்தூக்கிட்டு ஓடுவோம் வீட்டுக்கு அடிச்சிபிடிச்சிக்கிட்டு


இது இல்லாம ஆயாவுக்கு இன்னோரு வேலையும் இருக்கு. அது செல பிள்ளைக ஒண்ணாங்கிளாஸ்ல மூத்திரம் இல்ல சமத்துல கக்கா போயிடும். அதை சுத்தப்படுத்தனும்செலநேரம் அதுகளுக்கு பின்னாடி கழுவிவிடனும்


சில பிள்ளைக டீச்சர்கிட்ட சொல்லபயந்து வகுப்புலயே கழிஞ்சிடும். நாத்தம் வந்தவன்ன யார்றா அதுன்னு டீச்சர் கேட்டா சமபந்தப்பட்ட பிள்ளை திருதிருன்னு முழிக்கும் . பக்கத்துல இருக்குற பிள்ளைக மூக்கப்பிடிச்சிட்டி கத்தும் டீச்சர் இவன்/ இவள்தான் உள்ளயே போயிட்டான்/ள் -ந்னு சொன்னவன்ன டீச்சர் தேடுறது ஆயா பாப்பாத்திப்பாட்டியத்தான்


அதுமாதிரி பிள்ளைகளுக்கு ஒடம்பு பள்ளிக்கொடத்துல சரியில்லன்னா வீட்டுல கொண்டுபோயி சொல்லி விட்டுட்டு வரணும்


அப்புறம்தான் முக்கியமான வேலை. பிள்ளைகளுக்கு மதிய உணவு தயார் பண்ணனும். அதுக்கும் பாப்பாத்திப்பாட்டிதான் பண்ணனும்


என்கூட அக்பர்ன்னு ஒருத்தன் படிச்சான். அவன் வசதியான பயதான். ஆனா நோயாளி . அடிக்கடி ஒடம்பு சரியில்லாம்ப்போகும். பாப்பாத்திதான் எல்லாம் பாக்கனும். மேல சொன்ன எல்லாவேலையும் அவனுக்கு அடிக்கடி நடக்கும்


நாங்கல்லாம் படிச்சிட்டு ஆறாவதுக்கு வேறபள்ளிக்கொடத்துக்குப்போயிட்டோம் நான் ஊரு மாறி வந்துட்டேன் அது அம்மாயி ஊரு அதுனால அடிக்கடி போறதுண்டு. அப்பப்பாக்கையில பாப்பாத்தி ரிட்டயர்டு ஆகிடுச்சு.


அதோட மயன்கள் ரெண்டுபேரும் சரியில்ல. ஊதாரிப்பிள்ளைக. அதுக்கு வார பென்சனை புடிங்கித்திண்ணுட்டு இருந்தானுக அதுனால ரிட்டயர்டாகி அது பசியும் பட்டிணியுமா இருக்கும். நான் பாத்தா எதுனாசுச்சும் குடுத்துட்டு வருவேன். அது கொஞ்சநாளைக்கி வடசுட்டு வுத்துச்சு. அப்புறம் அதுவும் முடியல.


அந்தத்தடவ நான் அந்த ஊருக்குப் போயிருக் கையில சொன்னாக பாப்பாத்திக்கி நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்கி கொண்டு போயிருக்காகன்னு. அப்ப திடீருன்னு நான் அக்பரைப்பாத்தேன். அவன் பளபளப்பா இருந்தான். துபாயில வேலை செய்யிறதாவும் லீவுல வந்திருக்குறதாவும் சொன்னான்


அவனைப்பாத்ததும் எனக்கு அவன் வகுப்புல கழிஞ்சது நாவகம் வந்துச்சு. லேசாச்சிரிச்சேன் அவன் புரிஞ்சிக்கிட்டான். ஆமா அப்பயெல்லாம் பாப்பாத்திப்பாட்டிதான் எனக்கு கழுவிவிடும் ந்னான்.


அப்புறம் ஒருநாள் ஒடம்புக்கு முடியாது பாட்டி வீட்டுக்குக்கூட்டிட்டுப்போனப்ப எங்கவீட்டுல ஆரும் இல்ல. பாட்டி அவங்க வீட்டுக்குக்குக்கூட்டிட்டுப்போய் இருக்க சொல்லி  வயித்துப்போக்குக்கு ஓமவாட்டர் தேனும் வாங்கிக்குடுத்து பாத்துக்கிச்சு. அன்னிக்கிப்பூறாம் அதுக்கு எனக்கு கழுவிவிடுறதுதான் வேல ஆனா அந்த மருந்து வயத்துப்போக்க நிப்பாட்டிடுச்சு. நான் அதை மறக்கவே மாட்டேன்னான்.


நான் அது ஆஸ்பத்திரில இருக்குறவிசயத்தைச்சொன்னேன்


அவன் கண்ணு கலங்கிடுச்சு. அவன் சொன்னான் சின்ன வயசுல அம்மா போயிட்டதுனால அப்பாதான் பாத்துக்கிட்டாரு. சின்னம்மா அப்பாவோட சம்சாரம் என்னய கவனிக்காது அப்பயெல்லாம் பாப்பாத்திதான் பாத்துக்கிடும்ன்னான். போய் பாத்துட்டு வரலாம் வாரியான்னுகூப்புட்டான். சரி போகலாமுன்னு சொன்னேன்.


கொஞ்சம் இரு வாரேன்னு சொல்லிட்டு ப்போய் காரை எடுத்துட்டு வந்தான் போறவழில பழங்கள் கொஞ்சம் வாங்கிட்டுப்போனோம் காசு அவன் தான் குடுத்தான் . என்னை விடல.


ஆஸ்பத்திரில பாப்பாத்திய தேடிக்கண்டு புடிச்சிப்போய் பாத்தோம் . பாட்டி முழிச்சிருந்துச்சு. அகபர் கேட்டான் என்னைத்தெரியுதான்னு. பாட்டிக்கித்தெரியல அக்பர் சொன்னான் நாந்தான் அகபர் நீ பள்ளிக்கொடத்துல கழுவிவிடுவியே நாவகம் இருக்கான்னான். பாட்டி முடியாததோட லேசா சிரிச்சிச்சி.


அவன் பழங்களை எடுத்துக்குடுத்தான் அப்புறம் ஒரு பையக்குடுத்தான். பாட்டி என்னான்னு கேட்டுச்சு இருக்கடும் எங்கம்மா நெனவுநாள் இன்னிக்கி இப்போ இருக்குற எங்கம்மா நீங்கதான் . அதான் இதைக்கொண்டாதேன் . நீங்க கொணமாகி வரனும்ன்னு ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிடேன்னான்.


அவன் கண்ணு கலங்குச்சு. பாட்டி அழுதுருச்சு. பைக்குள்ள சேலையும் சாலவையும். கவர்ல கொஞ்சப்பணமும் இருந்துச்சு. பாட்டிக்கு அழுகை அடக்க முடியல. எதுக்குப்பா இதெல்லாம்முன்னு சொல்லிச்சி.


அப்ப அகபர் சொன்னான்.


அம்மாவுக்கு இந்த மகனால முடிஞ்சதுன்னு...... அங்க ரெண்டுபேராலயும் கண்ணீர் அடக்கமுடியல


. நானும் கண்ணத்தொடைச்சிக்கிட்டேன்.....


கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages