கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு
04.10.20
வெள்ளச்சாமி
வெள்ளச்சாமிக்கு எத்தன வயசுன்னு ஆருக்கும் தெரியாது எலும்பும்தோளுமாத்தான் இருப்பாரு தட்டுத்தடுமாறி நடப்பாரு. அவரு இருந்த ஊரு புதுசா நகராட்சியில இருந்து மாநகராட்சியா மாத்துனாங்க. அப்ப சாக்கடை கக்கூஸ் எல்லாம் மாநகராட்சியில இருந்து கட்டுனாக. அப்ப வசதிப்பட்டவுக எல்லாம் வீட்டுக்குள்ள கக்கூஸ் கட்டிக்கிட்டாக வசதி இல்லாதவுகளுக்கு பொதுக்கக்கூஸ்தான்
காலையில அங்கெல்லாம் வரிசையில நிப்பாக
ஏழு பேரு போற மாதிரி கட்டிருப்பாக. ஆளாலுக்கு எடத்த பாத்து நின்னுக்கனும்
ஒருத்தரு முடிச்சத்துக்கு அப்புறம் அடுத்தவரு
இதுல செலபேரு உள்ளாறபோயி பீடி குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதுமுன்னாடி நிக்கிறவன் செத்தான் அவ்வளவு சீக்கிரமா வரமாட்டானுக சீக்கிரம் வாயான்னு கத்திக்கிட்டு கெடப்பானுக
இதுல நெருக்குவெட்டுல போய் நிக்கிரவுக நெளியிவானுக. போய் வெளிய வாரத்துக்குள்ள நரகத்துக்கே போய்ட்டு வந்தமாதிரி இருக்கும்
இப்ப வெள்ளச்சாமி விசத்துக்கு வருவோம்
வெள்ளச்சாமியோட வீடு ஒட்டுவீடு இருக்குறதுக்கே எடமில்ல. அப்புறம் எங்க கக்கூஸ் கட்ட அவருக்கும் பொதுக்கக்கூஸ்தான். என்னா இதுல பிரச்சனைன்னா வயசாயிட்டதால
அவரால அடக்க முடியாது
பாவம் செலநேரம் வழியில போயிடுவாரு செலநேரம் உள்ள வந்து போயிடுவாரு. அவ்வளவுதான் ஆரும் உள்ள நொழைய முடியாது. அப்புறம் மாநகராட்சி காரவுகவந்து கழுவி விட்டபின்னாடிதான் போகமுடியும்.
அப்புடிபோச்சுன்னா அவரு அழுவாரு. எல்லாருக்கும் தொல்லையா ஏன்என்னைஆண்டவன்வைச்சிருக்கானோன்னுபொலம்புவாரு.
அதுனால அவரு வந்தா அவருக்கு முன்னாடி விட்டுக்குடுத்துருவாக. தெனம் அவுகவீட்டுல போய் சொல்லுவாக செலநேரம்
அந்தபாட்டிவரும் பொதுக்கக்கூஸ்னால உள்ள போகமுடியாது அப்ப காவலுக்கு ஆள் போட்டுகழுவி விட்டுட்டுப்போகும்.அவரோட வீட்டுலயும் இப்புடி இருந்து உசுற வாங்குதேன்னு பொலம்புவாக . எல்லாருக்கும் இவர் எப்பபோயிச்சேருவாருன்னு நெனைக்க வைச்சிட்டாரு.
ஒருநா இப்புடி ஆனதுல அந்த ஊரு சண்டியரு அவர அடிச்சிப்புட்டான் .ஏன் போயிச்சாகவேண்டியதுதான் எதுக்கு இப்புடி எல்லார் உசுறயும் வாங்குறன்னு திட்டுனான் அவரு அழுக ஆரம்பிச்சிட்டாரு அவனுக்கே ஒருமாதிரியாப்போச்சு சரி சரி கொஞ்சம் முன்னாடியே வந்துருய்யான்னான்
அதுக்கபுறம் அவரு வாரதில்ல கக்கூசுக்கு. அவரு படுத்த படுக்கையா ஆயிட்டாரு. எதுவும் சாப்பிடாம பச்சத்தண்ணி மட்டும் குடிச்சிட்டு கெடந்தாரு. தன்னைத்தானே வருத்திக்கிட்டு எண்ணி மூனாம் நாளு
உசுறவிட்டுட்டாரு
அவரு போனது ஒருபக்கம் வருத்தமா இருந்தாலும் அப்பாடா இனி அந்த தொல்லையில்ல ந்னு பெருமூச்சு விட்டாக எல்லாரும்.
அவரு செத்து ஒருமாசம் கழிச்சிப்பாத்தா கக்கூசுக்குப்பக்கத்துல
கட்டட வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு
என்னான்னு கேட்டா வெள்ளச்சாமி உசுறோட இருக்கும்போது இன்சூரன்ஸ் பண்ணிருக்காரு அதுல வார பணத்தகக்கூஸாக்கட்டனும் நு எழுதிவைச்சிட்டுபோயிட்டாரு. இருக்குறதுக்குக்கூட வீடுல்ல மனுசன் பொதுக்கக்கூஸ் கட்ட பணத்த எழுதிவைச்சிப்புட்டாருன்னு அவுகவீட்டுல ஒரேசண்ட.
ஆனா அவரு பொண்டாட்டி கெளவி தீர்மானமா சொல்லிப்புட்டா அவரு கடைசி ஆசை அதுதான் அதுபடியே செய்யுங்கன்னு கட்டிமுடிச்சி
வார்டுமெம்பர்வந்துதிறந்துவைச்சாருஅந்தபுதுக்கக்க்கூஸப்பாக்குறவுகளுக்கு வெளில கல்வெட்டா இருந்த
”உபயம்வெள்ளச்சாமி” ன்ற வாசகம் நெகிழவைச்சிடும்
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக