06.10.20 - ரேவா : 53 : பரிவேள்வி - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 6 அக்டோபர், 2020

06.10.20 - ரேவா : 53 : பரிவேள்வி



06.10.20



ரேவா


பரிவேள்வி_53


வைகுந்தப்  பெருமாள் ஆலயத் திருப்பணி நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நந்திவர்மனும், உதயச்சந்திரனும் தலைமைச் சிற்பியிடம் ஆலயத்தின் பணி குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது, ஒரு வீரன் ஓலையொன்றை கொண்டு வந்து தர, நந்திவர்மன் அதனை வாசித்து விட்டு உதயச்சந்திரனிடம் தருகிறான்.


அதில்.. அடுத்த நாள் திருமங்கை ஆழ்வார் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு மங்களாசாசனம் செய்ய வரவிருப்பதாகவும், அது சமயம் நந்திவர்மனை வந்து சந்திப்பதாகவும் " கண்டிருந்தது.


அதைக் கண்டதும்,  "ஆலயத்திற்கு வரும் போது தான் அவரை நினைத்தேன் , அவரே நாளை இங்கு வருவதாக கூறியிருக்கிறார். " என்றான் மகிழ்ச்சியுடன் நந்திவர்மன்.


" நல்ல செய்தி தான்.. ஆலயப் பணி பூர்த்தியானதும் அவரை மங்களாசாசனம் செய்ய அழைத்து சிறப்பிக்க வேண்டும்.." என்றான் உதயச்சந்திரன்.


" ஆம்..படைத்தலைவரே, எனது மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்.." என்றான் நந்திவர்மன்.


இருவரும் தலைமைச் சிற்பியிடம் விடைபெற்றவர்களாய் அரண்மனையை நோக்கி விரைந்தார்கள்.


                      *           *          *


உதயச் சந்திரன்  தனது அறையில்  தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பியூஷாவை நெருங்கித் தோளினைப் பற்றி தனது மார்பினில் சாய்த்துக் கொண்டவனாய், 


" பியூஷா..இந்த தந்திதுர்க்கரைப் பற்றி என்ன நினைக்கிறாய்..? " என்றான் ஆவலுடன்.


" யார்..இராஷ்டிர கூட மன்னரையா..சொல்கிறீர்கள்..? " வியப்பாய் எழுந்தது அவளிடமிருந்து கேள்வி.


" ஆம்..அவரைத் தான்.."


" அவரைப் பற்றி நான் ஒன்றும் அறிந்தவள் இல்லை..அவ்வாறிருக்க அவரைப் பற்றி நான் என்ன கருத்துக் கூறுவது..!" என்றாள் ஆச்சர்யம் சிறிதும் விலகாதவளாய்.


" பியூஷா..உன்னைக் கண்டதும் , ஆசனத்தை விட்டு எழுந்ததோடல்லாமல், உனது தோளினைப் பற்றி உலுக்கி எடுத்து விட்டார்..அவரைப் பற்றி என்ன சொல்வது என்கிறாயே..? " விஷமத்துடன் எழுந்தது உதயச்சந்திரனது கேள்வி.


" ஐயோ..பாவம்..! அவர் தான், யாரோ தனக்கு தெரிந்த ஒரு பெண் என என்னை நினைத்துக் கொண்டு நடந்து கொண்டதாக கூறியதோடு, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் அப்போது கேட்டு விட்டாரே , பின்  என்ன..?!" 


" பியூஷா..உனக்கொன்றும் புரிபட வில்லை. அவர் உன் விசயத்தில் நடந்து கொண்டதற்கு பின்னால் வலுவான காரணமொன்று இருக்க வேண்டும். நிரஞ்சனா என ஏன் உன்னை அழைக்க வேண்டும்..? உனக்கும் நிரஞ்சனாவிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும். நான் தான் முன்னரே உன்னிடம் தெரியப் படுத்தியிருக்கிறேன் அல்லவா..உன் பிறப்பில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டுமென்று..! " என்றான் பலத்த யோசனையுடன் உதயச்சந்திரன்.


" இதோ பாருங்கள்..என் பிறப்பில் உள்ள இரகசியத்தை நானே அறிந்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு இன்றைய வாழ்வு சிறப்பானதாக இருக்கிறது..இது போதும்..இதுவே என்றென்றும் தொடர வேண்டுமென்பதே நான் இறைவனிடம்  வேண்டும் பிரார்த்தனை..

போதுமா..ஆளை விடுங்கள்." என்றாள் சலிப்புடன்.


" உனக்கு  நீ யார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமல் இருக்கலாம்..நான் அவசியம் அதை கண்டு பிடித்தே தீர்வேன்.." என்றான் வைராக்கியத்தோடு உதயச்சந்திரன்.


அப்போது வீரனொருவன் வந்து வணங்கிவிட்டு, தளபதி பல்லவடி அரையரும், பிரம்மஸ்ரீ ராஜனும் வந்து காத்திருப்பதாக சொல்லவே, பியூஷாவிடம் விடைபெற்ற உதயச்சந்திரன் அறையை விட்டு வெளியேறினான்.


" வாருங்கள் தளபதியாரே..வாருங்கள் மந்திரியாரே..என்னைக் காண வந்த காரணம்..? "


" உதயச் சந்திரா..நாளை திருமங்கை ஆழ்வார் வரவிருக்கிறாராமே ..! அவரை நமது கோட்டை வாசலில் பூரணக் கும்ப மரியாதைகளுடன் வரவேற்பதற்கு  ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே..!விருந்தினர் மாளிகையில் வேறு இடம் ஒதுக்கித் தர வேண்டும்." என்றார் நிறைந்த அக்கறையுடன் பல்லவடி அரையன்.


" அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன் தளபதியாரே..நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.."


" நல்ல காரியம் செய்தாய்..அவர் வரதரின் ஆலயத்தில்  மங்களாசாசனம் செய்யவிருக்கிறாமே அதற்கு நமது விருந்தினரான இராஷ்டிர கூடத்தின் மன்னரை அழைப்பது முறையல்லவா.." என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.


" ஆம்..மந்திரியாரே  உண்மைதான். அவரையும் அவரது மகளையும் அழைக்க வேண்டும் தான், நான் இதை ஞாபகத்தில் கொள்ளவில்லை, நினைவு படுத்தினீர்கள். நன்றி." 


" உதயச் சந்திரா , நாம் சென்று மன்னர் சார்பாக அழைத்து விடலாம்." 


என்றபடியே எழுந்த இருவரும், உதயச்சந்திரனுடன் தந்திதுர்க்கனுக்காக ஒதுக்கப் பட்ட அறையை நோக்கி நடக்கத் துவங்கினர்.


மூவரும் தந்திதுர்க்கனுக்கென ஒதுக்கப்பட்ட அறையை நெருங்கிய போது உள்ளே பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, மூவரும் வியப்பின் வசப்பட்டவர்களாய் உள்ளே நுழைய, தந்திதுர்க்கன் ஒரு ஆசனத்தில்  அமர்ந்திருக்க , அவனுக்கு நேரெதிரே ஒரு ஆசனத்தில் அமர்ந்தபடி நந்திவர்மன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். நின்றபடியே இருவரது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தாள் ரேவா.


மூவரைக்  கண்டதும் முகமலர்ந்தனர் அறைக்குள் இருந்த இருவரும், நந்திவர்மனோ,   வாருங்கள் என வரவேற்றதோடு, மூவருக்கும் உரிய ஆசனத்தைக் காட்டி அமரச் சொன்னதோடு, 


" இராஷ்டிரகூட மன்னரை நாளை நடக்கவிருக்கும் வரதரின் மங்களாசாசன விழாவிற்கு அழைப்பதற்காக வந்தேன் " என்றான் புன்முறுவலுடன் நந்திவர்மன்.


மூவரும் தங்களுக்குள்ளாகவே இலேசாய் நகைத்துக் கொண்டார்கள்.


" தந்திதுர்க்கரே, தற்சமயம் தங்களது உடல்நலன் எவ்வாறு உள்ளது..? " என்றார் பல்லவடி அரையன்.


" இப்போது ஆரோக்கியமாகத் தான் இருக்கிறேன். ரதத்திலிருந்து விழுந்த காரணத்தால் இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன..இப்போது அவை நன்கு குணமாகி விட்டது. என்ன செய்வது பகைவர்களை கொண்டிருந்தால் , இது போன்ற ஆபத்துக்களை எதிர் கொள்ளத் தானே வேண்டும்..! " என்றார் தந்திதுர்க்கன்.


" உண்மைதான்.." என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.


" பகைவர்கள் இல்லாத அரசுகளா பாரதத்தில் இருக்கின்றன. எங்களுக்கும் சாளுக்கியர், கங்கர், பாண்டியர், சேரர், ஹொய்சளர் என்று பலத்தரப்பட்ட எதிர்ப்புகள் சூழவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.." என்றான் உதயச்சந்திரன்.


" பகைவர்களை அதிகமாக கொண்டிருக்கும் உங்களைப் போன்றோர், பகைவர்களைச்  சற்று அச்சப்படுத்தியே வைத்திருப்பது நல்லதல்லவா..! பல்லவரிடம் பகை கொள்வது தவறென்ற எண்ணத்தை அவர்களின் மனதில் விதைக்கும் படியான செயல்களில் ஈடுபடலாமே..? " என்றார் தந்திதுர்க்கன்.


" நல்ல யோசனை தான்..வரவேற்கிறேன்.."


"பகைவர்களை எச்சரிக்கும்  பொருட்டு,  சில செயல்களைச் செய்யத் தலைப்படலாமே..! பகைவர்களும் உங்களது வீரத்தினைக் கண்டு சற்று அச்சப்பட வாய்ப்புள்ளதே.." என்றார் தந்திதுர்க்கன்.


" வீரத்தை போரில் தானே நிரூபிக்க முடியும், அதை தவிர்த்து வேறெந்தவிதமான செயல்களின் வாயிலாக வீரத்தை நிரூபிக்கச் சொல்கிறீர்கள்..? " என்றார் பல்லவடி அரையன் புரியாமல்.


" தளபதியாரே, பகைவர்களை அதிகம் கொண்டிருப்பவர்கள் , தங்களது படைபலத்தையும், நாட்டின் நிதியையும் பெருக்குவது அவசியமான ஒன்றாகும் இல்லையா..? " என்றார் தந்திதுர்க்கன்.


" உண்மைதான்..எதிரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நமது படைபலம் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், வளமான நிதியும் இருப்பது அவசியமே.." என்றார் பல்லவடி அரையன்.


"படைபலமும், நிதி வளமும் கொண்டிருப்போரை நெருங்க எவருமே அச்சப்படத் தானே செய்வார்கள்..? " என்றொரு கேள்வியை விஷமம் கலந்த குரலில் கேட்டார் தந்திதுர்க்கன்.


" ஆம்..இதிலென்ன சந்தேகம்." என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.


"இரண்டையும் பெருக்கிக் கொள்ளும்படியான விசயத்திற்கு நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது..?" என்றார் தந்திதுர்க்கன்.


" தந்திதுர்க்கரே, என்ன சொல்கிறீர்..? படையும், நிதியும் பெருக்கிக் கொள்ள வேண்டுமெனில் ஏதாவது போரில் தான் ஈடுபட வேண்டும். ஒரு நாட்டினை தோல்வியுறச் செய்தால் அவர்களது படையை இணைப்பதன் வாயிலாகவும், அவர்களது செல்வத்தை  கவர்ந்து கொணர்வதன் வாயிலாக நிதியையும் பெருக்கிக் கொள்ள முடியும்..இதையா வலியுறுத்துகிறீர்கள்..! " என்றான் உதயச்சந்திரன்.


" போரில்  இரண்டும் பெருகவும் செய்யும், சமயத்தில் நமது படை தோல்வியுற்றால் நிலைமை தலைகீழாக மாறவும் செய்யும்." என்றார் இகழ்ச்சியுடன் பிரம்மஸ்ரீ ராஜன்.


" நீங்கள் இருவர் கூறியதும் சரியே..ஆனால் , நம்மை   அறியாதவராய் இருந்தால் , நமக்கு பணியச் செய்து விடலாமே..! " என்றார் தந்திதுர்க்கன்.


" காரணமின்றி அறியாதவரோடு போரா..! இது எந்த வகையில் தர்மமாகும்..! முரணாக உள்ளதே..! " என்றான்  இதுவரை பேச்சில் குறுக்கிடாது இருந்த நந்திவர்மன்.


" வலுவான காரணமும் இருக்கும், போரும் தர்மசாஸ்திரத்திற்கு புறம்பானதாக இருக்காது, முரணான செயலும் இல்லை என்றால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் தானே.." என்றார் குதர்க்கமாய்  தந்திதுர்க்கன்.


" சரியான முறை..தர்மத்தின் அடிப்படையில் என்றால் , அதை செய்ய என்ன தடை..! " என்றார் பல்லவடி அரையன் சற்றே குழப்பம் கலந்தவராய்.


" அப்படி என்ன வழிமுறை உள்ளது..? " என்றான் ஆவல் பொங்க நந்திவர்மன்.


#பரிவேள்வி.." என்றார் மெல்ல தந்திதுர்க்கன்.


" பரிவேள்வியா..?! " ஆச்சர்யத்தின் வசப்பட்டான் நந்திவர்மன்.


" ஆம்..பரிவேள்வி என்றும், அசுவமேதயாகம் என்றும் சொல்வர் அதனை.." என்றான் தந்திதுர்க்கன்.


அனைவரது கண்களிலும் புத்தொளி ஒன்று பிறப்பெடுத்தது.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : நந்திவர்மன் பரிவேள்வி நடத்தி பாரதத்தின் வடகிழக்குப் பகுதிகள் பலவற்றை வென்றதாக வரலாறு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages