மலைச்சாமி
06.10.20
வரலாற்றில் இன்று 06.10.2020
October 6, 2020
என்றும்....
அன்புடன்......
என் இனிய காலை வணக்கங்கள்....
அக்டோபர் 6 (October 6) கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 ஜெர்மனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய ஜெர்மன் மக்களாவர்.
1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வேர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து பாரிஸ் திரும்பினான்.
1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1847 – சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.
1849 – ஹங்கேரிய விடுதாலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் “அராட்” (தற்போது ருமேனியாவில்) என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
1854 – இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்ஸ்ஹெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.
1870 – ரோம் இத்தாலியின் தலைநகரானது.
1889 – தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.
1889 – தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் திரைப்படத்தைக் காண்பித்தார்.
1890 – யாழ்ப்பாண நகரில் “சின்னக்கடை” எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
1903 – ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1908 – ஆஸ்திரியா தன்னுடன் பொஸ்னியா ஹெர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.
1923 – முதலாம் உலகப் போர்: இஸ்தான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
1927 – முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.
1955 – வயோமிங்கில் டிசி-4 விமானம் ஒன்று வீழ்ந்ததில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
1966 – எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1973 – 80,000 எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்து இஸ்ரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.
1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1977 – மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1981 – எகிப்திய அதிபர் அன்வர் சாதாத் கொலை செய்யப்பட்டார்.
1987 – பிஜி குடியரசாகியது.
1995 – சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.
2002 – பிரெஞ்சு எண்ணெய்த் தாங்கி யேமனில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – தமிழ் விக்கிப்பீடியாவில் 25,000 கட்டுரை இலக்கு எட்டப்பட்டது.
பிறப்புகள்
1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610)
1831 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமன் கணிதவியலாளர் (இ. 1916)
1887 – லெ கொபூசியே, கட்டிடக் கலைஞர் (இ. 1965)
1893 – மேகநாத சாஃகா, இந்திய வானியற்பியலாளர் (இ. 1956)
1900 – ஸடான் நிக்கொலஸ், ஆங்கிலேயத் துடுப்பாட்டக்காரர் (இ. 1961)
1930 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், வர்ணனையாளர் (இ. 2015)
1940 – சுகுமாரி, தென் இந்திய திரைப்பட நடிகை (இ. 2013)
1946 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆங்கிலத் துடுப்பாட்டக் காரர் (இ. 2012)
1946 – வினோத் கண்ணா, இந்தி நடிகர்
1982 – சிபிராஜ், தமிழ் திரைப்பட நடிகர்
1984 – மோர்னி மோர்க்கல், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர்
1986 – முகம்மது சுக்ரி, மலேசியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
1905 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மானிய புவியியலாளர் (பி. 1833)
1951 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
1962 – ப. சுப்பராயன், சென்னை மாகாணத்தின் முதல்வர் (பி. 1889)
1981 – அன்வர் சாதாத், எகிப்திய அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
2008 – ஜானக பெரேரா, இலங்கை இராணுவத் தளபதி (பி. 1946)
சிறப்பு நாள்
எகிப்து – ராணுவ படை தினம் (1973 அக்டோபர் போர் நினைவாக)
ஆசிரியர் தினம் – இலங்கையில்
சுதந்திரப் போரின் 'முதல் பெண்மணி' ருக்மிணி லட்சுபதி!
பல்வேறு சாதனைகள் படைத்த இவர், ஆகஸ்ட் 6, 1951-இல் மரணமடைந்தார்.
சாதனைப் பெண்மணிகள்: ருக்மணி லட்சுமிபதி!
சுதந்திரப் போராட்ட வீராங்கனை. தமிழகத்தின் பெண் தலைவர்களில் முக்கியமானவர்.
இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார்.
ருக்மிணி 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1930ல் வேதாரண்யத்தில்நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில்கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான். 1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் . சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின்அமைச்சரவையில்) பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த பெண் இவர் மட்டும் தான்.. சென்னை எழும்பூரிலுள்ளமார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
மகாத்மா காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாதர்களுக்கு என அழைப்பு விடுத்தார்! ஆம் பெண்களும் அதிக அளவில் கள்ளுக்கடை மறியல் , அன்னியத் துணிக் கடைகள் முன்பு மறியல், நூல் நூற்றல் வேள்வி, முதலியவற்றில் ஈடுபட வேண்டுமென்று, ‘யங் இந்தியா'இதழ் மூலம் அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பு வெளியாகு முன்னரே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் ‘பெண் போராளி’ ருக்மணி லட்சுமிபதி !
சீனிவாசராவ் -சூடாமணி தம்பதியினருக்கு , மகளாக ருக்மணி 06.12.11892 ஆம் நாள் பிறந்தார். அக்காலத்தில் பால்ய விவாகம் எனும் குழந்தைத் திருமணம் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ருக்மணியின் தந்தையும் தமது மகளுக்கு பால்ய விவாகம் செய்திட மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, வீரேசலிங்கம் பந்தலு, ருக்மணியின் தந்தையிடம் பால்ய விவாகத்தினால் ஏற்படும் சமூகத்தீமைகளை எடுத்துக் கூறியதுடன். ருக்மணியை, தமது மருமகள் ராஜாமணியுடன் பள்ளிக்கு அனுப்பினார். இதனால் இவருடைய உறவினர்கள் இவரது குடும்பத்தை 'ஒதுக்கி' வைத்தனர்!
பின்னாளில் , ருக்மணி லட்சுமிபதி விடுதலைப் போராட்ட வீராங்கனையாக உருவாவதற்கு அடித்தளமிட்டவர் வீரேசலிங்கம் பந்தலு என்பது குறிப்பிடத்தக்கது.
ருக்மணி நோய்வாய்பட்டிருந்த போது, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் லட்சுமிபதிக்கும், ருக்மணிக்கும் காதல் உருவானது. இவர்களது காதலுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்து 1911 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். டாக்டர் லட்சுமிபதி , தமது மனைவி ருக்மணியின் விருப்பப்படி கல்லூரியில் சேர்த்தார்.
ருக்மணி-லட்சுமிபதி தம்பதியினரின் காதல் திருமணம் ஏற்படுத்திய பரபரப்பின் விளைவாகத் தெலுங்குக் கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். கோதாவரியைச் சேர்ந்த சத்தியநாராய கவி என்பவர் ‘ருக்மணி சுயம்வரம்’ என்கிற நவீன நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், குழந்தை பிறந்ததால் மருத்துவப் படிப்பு பயில இயலவில்லை.
ருக்மணி இந்திய விடுதலையில் நாட்டம் கொண்டார். தாமும், தமது குழந்தைகளும், கணவரும் கதராடையே அணிந்தனர். இவரது மகள் இந்திரா. மகள் இந்திராவை நரம்பியல் நிபுணர் டார்டர் ராமமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தார்.
மார்க்ரெட் சமிகாதிரிகள் ராதாபாய் சுப்பராயன், கமலாபாய் சட்டோபாத்தியாயா முதலியவர்களுடன் இணைந்து சமூகத் தொண்டில் ஈடுபட்டார். இவர்கள் இணைந்து அமைத்த 'பாரதி மகளிர் மகா மண்டல்' எனும் அமைப்பின் சென்னைக் கிளையின் செயலாராக ருக்மிணி பணியாற்றினார்.
சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்தவர் ருக்மணி, முற்போக்கு எண்ணங்கள் கொண்டவராகத் திகழ்ந்தார். இஸ்லாமியப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். குடிகாரக் கணவன்மார்களால் பெண்களுக்கு விளையும் தொல்லைகள் இவரது மனதை பெரிதும் பாதித்தது. இதனால், மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ருக்மணி ஈடுபட்டார். கடவுளின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுள் ஒன்றான 'தேவதாசி' முறைக்கு எதிராக பரப்புரைகளில் ஈடுபட்டார். மேலும், பால்யத் திருமணம் ஓழிக்கப்பட வேண்டும். பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடினார். சாதிவேறுபாடுகளை ஓழிப்பதிலும் முன்னின்று செயல்பட்டார்.
பாரீசில் நடைபெற்ற அனைத்துலகப் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் ருக்மணி !
“நாட்டுப்பணி என்பது நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருதல் மட்டுமன்று ; நாட்டு மக்களுடைய மேம்பாட்டுக்கும் பாடுபடுவதாகும்" என்பதை மனதில் கொண்டு செயல்பட்டார்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், 1930 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது அவர் உப்புக் குவியலின் மீது படுத்துக் கொண்டு இம்மியளவு கூட அசையாமல் செய்த அறப்போர் அனைவரையும் வியப்படையச் செய்தது. உப்புச் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணி ருக்மணியே!
மேலும், ருக்மணி அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்த்திலும் கலந்து கொண்டு சிறைத்தண்டனையும் பெற்றார். அபராதமும் செலுத்தினார்.
காந்தியடிகள் 1933 ஆம் ஆண்டு சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, ருக்மணி தமது நகைகளை அரிசன சேவா நிதிக்காகக் காந்தியடிகள் ஆச்சரியத்தில் மூழ்கினார்!
ருக்மணி, சென்னை, மகாஐன சபைக்குத் துணைத் தலைவராக 1934 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்துக்கு 1936 ஆம் ஆண்டு தலைவராக விளங்கினார். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக 1937 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி, ருக்மணி ‘முதல்பெண்மணி’ என்று போற்றத்தக்க பல பதவிகள் வகித்து சிறப்பாகப் பணியாற்றினார்.
சென்னை மாநகராட்சி உறுப்பினராக இவர் செயலாற்றிய போது நகர சுத்தித் தொழிலாளர்கள் அடிக்கடி காலதாமதமாக வருவதைக் கவனித்தார். ஒரு நாள் நீண்ட தென்னந்துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தாமே துப்புரவு பணியில் இறங்கிவிட்டார். இதையறிந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் . ருக்மணி அம்மையாரிடம் மன்னிப்புக் கோரியதுடன், அன்றிலிருந்தே நேரந்தவறாமல் பணிக்கு வந்தனர்.
ஐப்பானுக்கு , 1938 ஆம் ஆண்டு சென்ற அமைதிக் குழுவில் ருக்மணியும் இடம் பெற்றிருந்தார். தனிநபர் சத்தியாக்கிரகப் போரில் 1940 ஆம் ஆண்டு கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டங்குமூரி பிரகாசம் தலைமையில் 1946 ஆம் ஆண்டு அமைந்த சென்னை ராஜதானியின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து சிறப்பாகப் பணியாற்றினார். இந்தப் பதவியையும் முதல் முதலாக வகித்த பெண்மணி ருக்மணியே ஆவார்!
அரசின் உயர் பதிவிகளில் வெள்ளையர்களையே அமர்த்துவது என்பது கர்ஸன் பிரபு காலத்திலிருந்தே நிலவி வந்தது. ருக்மணி, அமைச்சராக பதவியேற்றதும் இந்திய அரசுப்பணிகளில் , இந்தியர்கள் தான் பணி அமர்த்தப்படவேண்டுமென்பதைக் காங்கிரசின் கொள்கையாக மாற்றினார். மேலும், சர்ஜன் ஜெனரலாக இருந்த வெள்ளையரை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் இந்தியர் ஒருவரை நியமித்தார். இப்பிரச்கனையில், இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தத சென்னையே!
சென்னை ராஜதானி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ‘ராகுகாலம்’ பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, ருக்மணி, "ராகுகாலமாவது . கேதுகாலமாவது? எது வந்தால் என்ன? அது தான் நம் நாட்டையே சனியனே பிடித்திருக்கிறதே! அப்புறமென்ன?" என்று கூறி அனைவரையும் நகைக்க வைத்தார் ருக்மணி!
'முதல் பெண்மணி' என்கிற பட்டத்துக்குரிய பதவிகளை நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே பெற்ற பெருமைக்குரியவர் ருக்மணி! விடுதலைப் போரின் போது இந்தியாவின் பல்வேறு சமூக இயக்கங்களும், மறுமலர்ச்சி இயக்கங்களும் தோன்றி வளர்ந்தன. இவ்வியக்கங்களுடனும் ருக்மணி தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.
ஐவஹர்லால் நேரு வேண்டு கோளுக்கிணங்க ருக்மணி லட்சுமிபதி தமிழகத்தில் 'வானரப்படை' என்றழைக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசபக்த அமைப்பை 1931 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கினார்.
பெண்விடுதலைப் போராளியாக விளங்கி, இந்திய நாட்டுப் பெண் விடுதலைக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட ருக்மணி லட்சுமிபதி 06-08-1951 அம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது தொண்டும், தியாகமும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் !



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக