07.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 7 அக்டோபர், 2020

07.10.20



மலைச்சாமி

07.10.20


இன்று அன்று| 7 அக்டோபர் 1806: கண்டுபிடிக்கப்பட்டது கார்பன் தாள்!


பிரதி எடுக்க உதவும் ‘கார்பன் பேப்பர்’ உருவான கதை எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.


1806-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது! 1806 அக்டோபர் 7-ல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.


இதே காலகட்டத்தில்தான் இத்தாலியைச் சேர்ந்த பெல்லகிரினோ டூரி என்பவரும் பார்வை அற்ற தன் காதலிக்காக கார்பன் பேப்பரை உருவாக்கினார். டூரியின் காதலி கவுண்ட்லெஸ் கரோலினா திடீரெனப் பார்வை இழந்தார். தன் காதலி தனக்குக் காதல் கடிதங்கள் அனுப்ப ஏதுவாக தட்டச்சு இயந்திரத்தில் தான் உருவாக்கிய கார்பன் தாளைப் பொருத்தி புதிய கருவியை 1808-ல் உருவாக்கினார் டூரி.


வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இருவர், ஒரே காலகட்டத்தில் ஒரு பொருளை உருவாக்கியிருப்பது வரலாற்று அதிசயமே!


இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink


அனைவருக்கும் வணக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..! 


மனிதனது நினைவாற்றலின் வலிமை குறிப்பிட்ட எல்லை கொண்டது. அந்த எல்லையையும் தாண்டி சில விசயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதேவை ஏற்பட்ட போது தோன்றியதுதான் எழுத்துக்கள். ஆரம்பத்தில் மனிதன் எழுதியது அல்லது செதுக்கியது (Carving) கற்களில் மீது தான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி (Pointed Rod) கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டது. நாளடைவில் மனிதன் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் இளைய தலைமுறைகளிடம் பரிமாறிக்கொள்ள களிமண்ணிலும் (Clay) தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.


இப்படி எழுத்துக்களை உருவாக்க கற்களிலும் மரத்திலும் துளையிட்டு துளையிட்டு சோர்ந்து போயிருந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கிய கண்டுபிடிப்புதான் இங்க் (Ink) என்று அழைக்கப்படும் மை. சீன (China) தத்துவவாதியான (Philosopher) டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black), புகைக்கரி (பைன் மர துண்டுகளை (Pine Wood) எரித்து கிடைக்கப்பெற்றது), ஊண் பசை (Gelatin Bone Clue-விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்டது), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் (Mortar and Pestle) இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும்.


உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா நண்பர்களே இந்தியா இங்க் (India Ink). ஒரு சீனமனிதரால் சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா அதருக்கு ஒரு காரணம் உண்டு அப்போது மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.


அப்போது வரை கற்களை குடைந்து குடைந்து எழுத்துக்களை செதுக்கிக் கொண்டிருந்த மனிதன், மை (Ink) கண்டறிந்த பின்பு பறவைகளின் இறகுகளை (Bird’s Feather) கொண்டு அதே கற்களின் மீது துளையிடாமலே எழுத ஆரம்பித்தான். கி.மு. ஆயிரத்தி இருநூறாம் நூற்றாண்டு வரை (1200 BC) எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் டியன் தயாரித்த அதே தொழில் நுட்பத்தை கொண்டுதான் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிரமிகளை கொண்டும் ஆங்காங்கே நிலத்தில் கிடைக்கும் தாதுக்களை கொண்டும் வெவ்வேறு வண்ணங்களில் இங்க் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.


இந்தியர்களை பொருத்தவரை சுமார் ரெண்டாயிரத்து நானூறு ஆண்டுகளாக (400 BC) மை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கார்பன் கரி, விலங்குகளின் எலும்புகளை எரித்துக் கிடைக்கும் கரி மற்றும் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட தார் (Tar) ஆகியவற்றுடன் மேலும் சில மூலப்பெருட்களை சேர்த்து மாசி (Masi) என்று அழைக்கப்பட்ட ஒருவித மையை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.


எப்போது பேப்பர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சீனர்கள் கண்டுபிடித்தார்களோ (கி.பி.105) அப்போது முதலே எழுதுவதற்கு பயன்படுத்தும் மை-யின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கினார்கள். இதன் விளைவாக கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பசை, Gallnuts, எண்ணெய், இரும்பு உப்புகள் (Iron Salts) போன்றவற்றை கொண்டு மேம்பட்ட மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனர்கள் கண்டறிந்தனர். இந்த தொழில்நுட்பம் தான் நவீன மை தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.


கி.பி. மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டியான அதாவது திடமான (Solid) இங்க் தயாரிப்பதில் சீனர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இந்த இங்க் குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் முக்கி நனைத்து பின் எழுதப்பட்டது. அதைதொடர்ந்து எட்டாம் நூற்றாண்டுகளில் ஹாவ்தொர்ன் (Hawthorn) என்ற மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மர பட்டைகளை தண்ணீரில் எட்டு நாள் ஊற வைத்து பின்பு அந்த தண்ணீருடன் ஒய்ன் (Wine) சேர்த்து நன்றாக வற்றும் வரை கொதிக்க வைக்கப்பட்டது. பின்பு அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தபட்டது. பின்பு மீண்டும் அதனுடன் ஒய்ன் மற்றும் இரும்பு உப்புக்கள் சேர்க்கப்பட்டு நீர்ம நிலைக்கு எட்டச்செய்து எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட மை முதலில் கரு நீல நிறத்திலும் காலப்போக்கில் அடர்த்தி குறைந்த நீல நிறத்திலும் இருந்தது.


மேலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மை தயாரிக்க தேவைப்படும் கார்பன் என்கிற முக்கிய நிறமிப்பொருள் சீனாவிற்கு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யபட்டுவந்தது. இந்நிலையில் சாங் வம்சத்தினர் (Song Dynasty) ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை (polymath) வல்லுனரான சென் கெள (Shen Kuo; 1031 - 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதன் பிறகு சீனாவிற்கு தேவைப்பட்ட கார்பன் என்ற நிறமிப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.


இரும்பு உப்புகள் (பெர்ரஸ் சல்பேட்), பசை, தண்ணீர், வால்நட் ஆயில் (Walnut Oil), மற்றும் புகைக்கரி ஆகியவற்றை கொண்டு அச்சகங்களுக்கு தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன இங்க் தயாரிக்கப்பட்டது. உலகில் மை கொண்டு எழுதும் எழுத்து முறைகள் சீனாவில் துவங்கி ஜப்பானில் பிரபலமாகி ஐரோப்பிய நாடுகளை எட்டி பின்பு உலகம் முழுவதும் பரவியது.


டியன் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் கண்டறிந்திருக்கவில்லை தான் ஆனால் மை கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கல்வியறிவு போதிக்கும் முறைகள் புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது என்றால் மிகையில்லை. கொஞ்சம் நினைத்து பாருங்கள் மை மட்டும் கண்டுபிடிக்கபடாமல் இருந்திருந்தால் இன்று நாம் பாடசாலைகளுக்கு புத்தகங்களுக்கு பதிலாக கற்களை தான் சுமந்து செல்ல வேண்டியதிருந்திருக்கும். ஆகையால் தான் பதிவின் துவக்கத்தில் மையை கணிப்பொறிக்கு ஈடான கண்டுபிடிப்பாக கூறினேன்.


சரி நண்பர்களே இன்றைய பதிவு உங்களக்கு சில பயனுள்ள தகவல்களை கொண்டு வந்திருக்கும் என்று நம்புகிறேன், மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் அது என்னை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். நன்றி., மீண்டும் சந்திப்போம்.., வணக்கம்...!



கம்பெனி பியர்ஸ் (Pears), சோப்பு பிறந்த கதை; History of Soap Making, Pears the World first Soap Company


எல்லோருக்கும் வணக்கம், இன்றைய நவீன காலகட்டங்களில் சோப்பை பயன்படுத்தாமல் குளிப்பது நூறு சதவீத முழுமையான குளியலாக இருக்காது என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளைக் குளிப்பாட்ட கூட இன்று நாம் சோப்பை பயன்படுத்துகிறோம் ஆனால் சென்ற தலைமுறை மக்களின் குளியலறையில் சோப்பு இந்த அளவிற்கு முக்கிய இடத்தை பெற்றிருந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். 


உதாரணத்திற்கு நமது தாத்தாவை எடுத்துக்கொள்வோம். நம்மை போல சிறு வயதிலிருந்தே அவர் சோப்புகளை பயன்படுத்தியிருப்பார் என்று எவரும் கூறிவிடயியலாது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், சோப்புகளை மனிதர்கள் எந்தனை ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று நினைகிறீர்கள் நண்பர்களே ஒரு நூறு இருநூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருவார்கள் என்று நீங்கள் நினைப்பீர்களா ம்ம்ஹீம் அதுதான் இல்லை சோப்புகளை சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை. பண்டைய பாபிலோனியர்கள் என்னும் தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகிலேயே முதன் முதலில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவர்.


மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.


இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.


அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை(alkali) சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர். காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.


சரி சோப்பு தயாரித்தாகிவிட்டது, இனி இந்த சோப்பிற்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்ததது என்று பார்ப்போமா? Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும். கி.மு.ஏழாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில் (தற்போது Rome, Italy) Sapo என்றொரு மலை இருந்ததாம். அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிகொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்து போன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கி.பி.78-ஆம் ஆண்டளவில் புகழ் பெற்று விளங்கிய ரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் (Pliny the Elder) ‘இயற்கையின் வரலாறு’ (Historia Naturalis)  என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில் Sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார், உச்சரிப்பதற்கு sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.


கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூனியனிலுள்ள பெரும்பாலான நாடுகள் சோப்புகளை இறக்குமதி செய்ததே தவிர தயாரிக்கும் முயற்ச்சியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை என்று தான் கூற வேண்டும், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஐரோப்பிய யூனியனின் தேவைக்கென்று பிரான்ஸிலுள்ள டௌலோன் மற்றும் மார்ஸிய்லீ (Toulon, Marseille) ஆகிய நகங்களில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது. பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்க்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். பிரான்ஸில் சோப்பு தயாரிக்கப்பட்ட சில காலங்களிலேயே அதாவது பதினாறாம் நூற்றாண்டில் துவக்கத்திலேயே மனிதர்கள் குளிப்பதற்க்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், மற்றும் சின்னம் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கி.பி.1788-ஆம் ஆண்டு வரை சோப்பு தயாரித்தல் என்பது ஒரு கடுமையான தொழிநுட்பமாகவும், அது ஒரு குடிசை தொழிலாகவும் தான் இருந்துவந்தது.


இந்நிலையில் 1789-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் (Andrew Pears) என்பவர் முதன் முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமனத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இவரது மருமகனான தாமஸ் ஜே. பார்ட் (Thomas J. Barratt) என்பவர் லண்டன் மாநகரில் உள்ள Isleworth என்ற இடத்தில் 1862-ஆம் அண்டு சோப்பு தயாரிக்கும் கம்பெனி ஒன்றை துவக்கினார். தயாரிக்கப்பட்ட சோப்பிற்க்கும் அந்த சோப்பு கம்பெனிக்கும் தனது மாமனாரின் நினைவாக பியர்ஸ் என்று பெயரிட்டார். இதுதான் உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட முதல் சோப்பு கம்பெனியாகும்.


தரமான சோப்பாக இருந்த காரணத்தினால் பியர்ஸ் சோப்பின் விலையும் சற்று அதிகமாகத்தான் இருந்தது இந்த காரணங்களால் சோப்புகளை அப்போது மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தரமான சோப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை வில்லியம் கோசேஸ் (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இதன்பிறகு தான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.


உலகில் அனைத்தும் நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடைய காரணமாக இருந்தவர்கள் வில்லியம் லீவர் மற்றும் ஜேம்ஸ் லீவர் என்ற இரு சகோதரர்கள் என்று சொன்னால் மிகையில்லை. ஒரு பொருளை தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல அதனை சந்தைப்படுத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே அப்பொருளை உலககெங்கும் வாழும் அனைத்து நாட்டுமக்களிடமும் கொண்டு போய் சேர்த்திட முடியும் என்ற உண்மையை இவர்கள் தான் உலகிற்கு தெரியச்செய்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து 1886-ல் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) என்ற பெயரில், பொருட்களை சந்தைப்படுத்தும் கம்பெனி ஒன்றை துவங்கினார்கள். இவர்களில் திறமையால் தான் சோப்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மிகக்குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது. லீவர் பிரதர்ஸ் என்ற கம்பெனி பின்னாளில் யுனிலீவர்ஸ் (Unilever) என்று பெயர் மாற்றம் அடைந்து மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவுசெய்து விட்டுச் செல்லுங்கள் நண்பர்களே அது என்னை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages