08.10.20 - ரேவா : காதல்_பிறந்தால்_களவும்_பிறக்கும் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 8 அக்டோபர், 2020

08.10.20 - ரேவா : காதல்_பிறந்தால்_களவும்_பிறக்கும்

 



08.10.20


ரேவா


காதல்_பிறந்தால்_களவும்_பிறக்கும்_55


காஞ்சி அரண்மனையின் ஆலோசனை அறையில்  அமர்ந்திருந்த அனைவரது முகத்திலும் பலவித உணர்ச்சிகளே வியாபித்திருந்தது.


சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்தவராய், மெல்லத்  தனது கருத்தினை முன் வைத்தார் முதன் அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன்.


" இராஷ்டிரகூட மன்னர் பரிவேள்வியைப் பற்றி கூறும் போது, நமக்கு  இது சாத்தியம் தானா..! அவரும் இப்போது தான் நமக்கு அறிமுகமானவர், அவரது பேச்சினை நம்பி எவ்வாறு துணிந்து காரியத்தில் இறங்குவது போன்ற சந்தேகம் எனக்கு எழுந்தது..!  ஆனால் பெருமாளைக் கனவிலும், நேரிலும் சந்தித்ததாக கருதப்படும் பெரியவர் திருமங்கை ஆழ்வாரே  நம்மை பரிவேள்வி செய்ய தூண்டுகிறார் எனில் ,  நாம் அவரது சொல்லினை மதித்து நடப்பதே நல்லதாகும்..நீங்கள் அனைவரும் என்ன சொல்கிறீர்கள்..? " என்றார் பார்வையால் அனைவரையும் அளந்தபடி.


" மந்திரியாரே, நம் மீது தனிப்பட்ட அக்கறையுடையவர் ஆழ்வார் அவர்கள், அவர் ஒன்றை சொன்னாரென்றால்  அதனால் விளையக் கூடியது நன்மையே யாகும். எனவே நாம் அசுவமேத யாகத்தினை நடத்திட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாம். உதயச்சந்திரா உனது முடிவு என்ன..? " என்றார் பல்லவடி அரையன்.


" மந்திரியாரும், தளபதியாரும் முடிவெடுத்தால் நான் அதை நிறைவேற்றிட ஆயத்தமாக இருக்கிறேன். ஆழ்வாரின் கருத்திற்கு மாற்றுக் கருத்தேது..! " என்றான் உதயச்சந்திரன்.


நிமித்தகனைக் கேட்டு நல்ல நாளினை குறியுங்கள். தந்திதுர்க்கரையும் கலந்து ஆலோசித்து, அவரும் பரிவேள்வியில் கலந்து கொள்வதோடு, நம் படைகளுடன் இணைந்து வருகிறாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் வடகிழக்கு பாரதப் பகுதிகளில் இராஷ்ட்டிரகூட தந்திதுர்க்கருக்கு நன்கு பரிச்சயமுண்டு." என்றார் மூலப்பிரகிருதியார்.


பரிவேள்வி நடத்துவது என ஏகமனதாய் முடிவெடுக்கப் பட்டதோடு, பரியினைத் தொடர்ந்து செல்லும் படைக்கு உதயச்சந்திரன் தலைமை தாங்குவதென்றும், காஞ்சி நகரைக் காப்பதற்கு  ஐயாயிரம் வீரர்கள் அடங்கிய படை , தளபதி பல்லவடி அரையன் தலைமையில் காஞ்சியில் இருப்பதென்றும், மீதமுள்ள படைகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு உதயச்சந்திரன் அசுவத்தை தொடர்வது என்றும் முடிவெடுத்தவர்களாய் சபையைக் கலைத்தார்கள்.


                        *          *          *


வானில் நிலவு தன் நட்சத்திர சகாக்களுடன் பவனி வரத் துவங்கியிருந்தது. தென் திசைக் காற்று தென்றலென மேனியைத் தீண்டிட,  காஞ்சியின் அரண்மனை நந்தவனத்திற்குள் தேவதையாய் உள்ளே நுழைந்தாள் ரேவா.


நந்தவனத்தின் பெரும்பகுதி இருளில் கிடந்தாலும், ஆங்காங்கு எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சம் ரேவாவின் கூந்தலை தங்க மயமாய் ஜ்வலிக்கச் செய்திருந்தது. அவளோ வண்ணமயமாய் மின்னிக் கொண்டிருந்தாள். செந்தாமரையைப் பழித்த அவளது நிறத்தைக் கண்டு சற்றே பொறாமை கொண்டு விழித்துப் பார்த்தன  அல்லி மலர்கள். நந்தவனமெங்கும் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்த நானாவித மலர்களோ , புதுவித மலரோ இவளென பூரிப்பில் பொங்கியதனால் வியாபித்தது மனோகர மணம் அந்த நந்தவனமெங்கும்.  சிற்றிடை கொண்டு  மென்னுடல் அசைய நடந்த அழகினைக் கண்டு நாணிய நீர்ப்பறவைகள் வேகமாய் பொய்கையில் தாவி மறுகரை விரைந்தன.

பொய்கை நீரினில் இவளது பொன்னெழில் கண்ட நிலவோ நாணியே மறைந்தது மேகக்  கூட்டத்திற்குள்.


ரேவாவின் மனமோ நந்திவர்மனை நாடிச் சென்றிருந்தது அவ்வேளையில். அதனால் தானோ என்னவோ மனம் போன போக்கில் அலைந்து கொண்டிருந்தாள் அந்த மலர்ச் சோலையில்.

காலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் பேச வாய்ப்பே இல்லை. சுற்றிலும் பெரியவர்கள் சூழவே திண்டாடிக் கொண்டிருந்தான் அவனும், மன்னனாய் இருப்பதே தொல்லைகள் தானோ , எப்போதும் எவரேனும் அருகில் இருந்து கொண்டே இருக்கிறார்களே.! தனித்து பேச ஒரு வாய்ப்பு  அமையவில்லையே..! நந்திவர்மனிடத்தில் பேச நிறைய விசயங்கள் இருப்பது போல ஒருசமயம் உணர்வாள்..திடீரென அவரைச் சந்தித்தால் என்ன பேசுவது..? என்ற சந்தேகமும் அவளிடம் பெரிதாய் எழுந்து நிற்கும். ஆனால் எப்போது காஞ்சிக்கு வரும் வழியில் நதிக்கரையினில் அவனைச் சந்தித்தாளோ அன்றிலிருந்து அவளது மனம் அவனை நாடியே சுற்றிக் கொண்டிருந்தது. நந்திவர்மனது ஒளி பொருந்திய கண்களும், வசீகரிக்கும் முக அழகும் அவளை ஈர்த்ததெனில், அன்று நதிக்கரையில் கண்ணிமைக்கும் பொழுதில் சாளுக்கிய வீரர்களை மண்ணில் வீழ்த்திய வீரமும் அவளது மனக்கண்ணில் ஊசலாடியது.


பலவித எண்ணங்கள் மனதினில் எழுந்தோட, மலர்ச்சோலையில் நடைபயின்று கொண்டிருந்தவள் , எதிர்பட்டவர்  மீது இடித்துக் கொள்ள, திடுக்கிட்டவளாய் நிமிர்ந்து பார்த்தாள்.


எதிரே சிரித்தபடி நின்றிருந்தான். அவளது மனதினைக் கவர்ந்த நந்திவர்ம பல்லவன்.


நந்திவர்மனைக் கண்டதும், நாணம் சூழ மேனியெங்கும் தென்றலை மீறியும் வியர்க்கத் துவங்கியது. அப்போது வரை இல்லாத படபடப்பு வந்து தொற்றிக் கொண்டது. கைவிரல்களை முறித்தபடி சட்டென திரும்பி நின்று கொண்டாள்.


" ரேவா..நான் என்ன பார்க்க அவலட்சணமாகவா இருக்கிறேன்..சட்டெனத் திரும்பிக் கொண்டாயே..! " கேட்ட அவனது குரலில் குறும்பு கொப்பளித்தது.


" இல்லை...ஆனால் ...தங்களைப் பார்க்க.. எனது விழிகளுக்குத் தான் சக்தியில்லை.." 


ஒரு வழியாய் திக்கித் திணறி பேசி விட்டாள்.


இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன், அவளது தோளினை தொட்டுத் திருப்பினான்.


முதுகினைக் காட்டிக் கொண்டிருந்தவள் , முகத்திற்கு நேராகத் திருப்பப் பட்டதும் வளைந்து நிற்கும் தாமரையைப் போல் தனது முகத்தை கவிழ்ந்து கொண்டாள்.


" ரேவா.."


" ம்.."


" ம்..என்பது ஒரு மறுமொழியா..உன்னிடம் பேசலாம் என ஆவலுடன் வந்திருக்கிறேன்..நீயோ..! "


" எனக்கும் பேச வேண்டும் போல் தான் இருக்கிறது..ஆனால்.."


" ஆனால்.."


" உங்களது முகத்தைக் கண்டதும் பேச வேண்டியது மறந்து போய் விடுகிறது..!"


நந்திவர்மன் சிரித்தபடி கூறினான், 


" ரேவா..உனது இந்த நிலையைத் தான் எங்களது வள்ளுவப் பெருந்தகை தனது குறள் வெண்பாவில்  இவ்வாறு கூறியிருக்கிறார்.


கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.


" இதனுடைய பொருள்.."


" காதலர் இருவரது கண்ணும் கலந்து நிற்கும் போது வாய் வார்த்தைகளினால் எந்த பயனும் இல்லை ..என்று."


" ஆஹா.. உண்மை தான்..இது போன்ற தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளவே தான் நான் கடிகைக்கே வந்தேன்." என்றாள் மகிழ்ச்சியுடன் ரேவா.


" கடிகை என்றதும் தான் நினைவுக்கு வருகிறது. நாளை உன் தந்தையுடன் கடிகைக்கு உன்னை அழைத்துச் செல்ல எண்ணியிருக்கிறேன்." 


" கடிகைக்கு சென்று விட்டால், தங்களைச் சந்திப்பது ..." எனக் குரலை இழுத்தாள்.


" ஆம்..கடிகைக்குச் சென்று விட்டால் அடிக்கடி சந்திப்பதென்பது இயலாத ஒன்று தான்.." என்றான் அவளது முகத்தையே கூர்ந்து பார்த்தபடி.


நந்திவர்மனது வார்த்தைகளைக் கேட்ட அவளது முகம் சட்டென வாடியது கண்டு, 


" கவலைப் படாதே..அவ்வப்போது சந்திக்கலாம்.."


" ம்..சரி.." என்றாள் சோகம் கலந்த குரலில் ரேவா.


தனது அறையில்  குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த தந்திதுர்க்கன்  வெகுநேரமாய் ரேவா அறைக்கு திரும்பாத காரணத்தால் , அவளைத் தேடி தனது அறையை விட்டு வெளியேறியவர், எதிர்பட்ட காவலனிடம் விசாரித்தார். அவனோ சற்று முன் ரேவா நந்தவனத்திற்குள் நுழைந்ததைக் கண்டதாக கூறவே, தந்திதுர்க்கனும் நந்தவனத்திற்குள் நுழைய, அங்கு..

நந்திவர்மனோடு ரேவாவும்   பேசிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றதும் , சற்றே துணுக்குற்றார். பின் தன்னை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டதும் , வந்த வழியே திரும்பியவராய் தனது அறைக்குள் நுழைந்தார்.


சிறிது நேரத்தில்..அறைக்குள் நுழைந்தாள் ரேவா.


" ரேவா..எங்கே சென்றிருந்தாய்..? வெகுநேரமாகக்  காணவில்லையே..!  "


" பியூஷாவுடன் பேசிக் கொண்டிருந்தேன் தந்தையே.." 


சட்டென அவளது முகத்தை ஏறெடுத்த

தந்திதுர்க்கனது முகம் ஆச்சர்யத்தின்  வசம் போனதோடு, உதடு மெல்ல உச்சரித்தது " காதல் பிறந்தால் களவும் பிறக்கும் போல..! " , இவள் மட்டும் விதிவிலக்கா என்ன..! " என்றவராய் மெல்ல நகைத்துக் கொண்டார்.


தந்திதுர்க்கனின்  நினைவு மெல்லப் பின்னோக்கி  அவரது இளவயதின் ஞாபகத்திற்குப்  போனது.


_ தொடரும்..


#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages