13.10.20 - ரேவா : 60 : காதல்_படுத்தும்_பாடு - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

13.10.20 - ரேவா : 60 : காதல்_படுத்தும்_பாடு

 



13.10.20


ரேவா


காதல்_படுத்தும்_பாடு_60


கோதாவரி நதிக்கரையினில் பல்லவரது படையானது பாசறை அமைத்து தங்கியிருந்தது. இரவின் நிசப்தமும், நிலவின் தண்ணொளியும், கானகப் பெருவெளியின் ஏகாந்தமும் உதயச்சந்திரனையும், பியூஷாவையும் இந்த உலகத்திலிருந்து விடுவித்து வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது. உதயச்சந்திரனது மார்பில் சாய்ந்தவளாய் கண்களை மூடியபடி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் பியூஷா. 


மோன நிலையிலிருந்த

இருவரிடத்தில் இருந்தும் வெளியாகிக் கொண்டிருந்தது சீரான மூச்சு. அங்கு கோதாவரி நீரின் சலசலப்போடு இணைந்த பூச்சிகளின் ரீங்காரம் அந்த இரவு வேளையில் அவர்களுக்கு இனிமை கூட்டிக் கொண்டிருந்தது. 


அவ்வேளையில் தான், சலசலத்து ஓடும் கோதாவரியின் நீரில் படகொன்று துடுப்பினை வலித்துக் கொண்டு போகும் ஓசை உதயச்சந்திரனது கவனத்தைக் கவர, சட்டென விழித்துப் பார்த்தவன் , எதிர் கரையில் படகொன்று கரைசேர, அதிலிருந்து இறங்கிய உருவத்தைக் கண்டதும் அதிர்ந்தான்.

" இவன் எப்படி..இங்கு..?" என்றெழுந்த சந்தேகம் வார்த்தையிலும் இலேசாக வெளிப்பட, கனவு கலைந்தவளாய் விழித்துப் பார்த்தவள், " என்ன சொன்னீர்கள்..? " என்று வினவவும் செய்தாள்.


" ஒன்றுமில்லை..அதோ பார் எதிர்கரையில் படகொன்று தெரிகிறதா..? அதிலிருந்து இறங்கிய மனிதன் வேகமாய் நடந்து அந்த தோப்பிற்குள் நுழைந்து விட்டான்..அவனை நான் ஏற்கனவே பார்த்ததைப் போன்ற பிரமை இருந்தது..அதான்.."


" ஆமாம்..இந்த சபரி தேசத்தில் உங்களுக்கு தெரிந்தவர் யார் இருக்கப் போகிறார்கள்.." என்றாள் குறும்பு தொனித்த குரலில் பியூஷா.


அவ்வேளையில் அவர்களை நோக்கி ஒருவன் பாசறையிலிருந்து வருவது தூரத்தில் தெரிய, இருவரும் சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தபடி, வருபவனை எதிர்கொண்டனர்.


 ஒற்றன் சேந்தன் தான் அவ்விடம் வந்தான்.


" படைத்தலைவரே, காடவ முத்தரையரும், தந்திதுர்க்கரும் தங்களை அவசரமாக அழைத்து வரக் கூறினார்கள்." 


" என்ன விசயமாய்..? "


" தெரியவில்லை.."


" சரி..பியூஷா எழுந்திரு செல்வோம். சேந்தா நீ முன்னே செல், நான் வந்து கொண்டிருப்பதாக சொல்." என்றான் உதயச்சந்திரன்.


உதயச்சந்திரனது வருகைக்காகவே காத்திருந்தனர் இருவரும், சேந்தன் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தான். அவர்களுக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தான் உதயச்சந்திரன்.


" படைத்தலைவரே, தந்திதுர்க்கரது படைகள் வந்து சேர இரண்டு தினங்களாகும். நாளை சேந்தனை கோட்டைக்குள் நிலவரம் அறிந்து வர அனுப்புவோம்." என்றார் காடவ முத்தரையர்.


" முத்தரையரே, சேந்தனும் செல்லட்டும், நானும் தந்திதுர்க்கரும் மாறுவேடமிட்டு கோட்டைக்குள் புகுவதற்கு தீர்மானித்து உள்ளோம். உதயணனை வெற்றிகரமாக முறியடிப்பதற்கான வழிகளை ஆராய வேண்டியது மிக அவசியம். நாம் இதுவரை கடந்து வந்த தேசங்களில் வெற்றியையே ஈட்டி வந்திருக்கிறோம் . எனவே இம்முறையும்  வெற்றியை அடைவதற்கான வழிகளை நன்கு வகுத்துக் கொண்டு களத்தில் இறங்குவது நல்லது." என்றான் பலத்த யோசனையுடன் உதயச்சந்திரன்.


" உண்மை தான் படைத்தலைவரே..ஏற்றுக் கொள்கிறேன். நாம் சபரி தேசத்திற்கு மிக அருகில் வந்து முகாமிட்டிருக்கிறோம், ஆனால் உதயணன் தரப்பில் இருந்து எவ்வித முன்னேற்பாடுகளும் செய்திருப்பதாக தெரியவில்லையே..ஒரே புதிராக அல்லவா இருக்கிறது." என்றார் குரலில் வியப்பினைக் காட்டியவராய் காடவ முத்தரையர்.


" காடவ முத்தரையரே, உதயணனை இலேசாக எண்ணி விடாதீர்கள்..

குள்ளநரி குணம் கொண்டவன். தந்திரசாலி மட்டுமல்ல, சமயோசிதமாய் செயல்படுவதில் வல்லவன். அவன் நம்மை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். நாம் விழிப்புடன் இருப்பதே நல்லது. அவனது நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை நான் அறிவேன்..ஏனெனில் எனது நண்பன் அல்லவா உதயணன்.


" என்ன உதயணன் தங்களது நண்பரா..! " ஆச்சர்யத்துடன், திகிலும் சேர்ந்து கொண்டது காடவ முத்தரையருக்கு.


அதே வியப்பும், திகைப்பும் உதயச்சந்திரனோடு, சேந்தனையும் விட்டு வைக்கவில்லை.


மூவரையும் பார்வையால் அளந்த, தந்திதுர்க்கனோ விஷமத்துடன் சிரித்தபடி, " என்னடா இவன்  உதயணனை நண்பன் என்கிறானே, இவனை நம்பி எப்படி உதயணனை எதிர்ப்பது என எண்ணுகிறீர்கள் அல்லவா..?  உங்கள் மூவரின் முகத்திலும் அந்தக்  கேள்வியே தொக்கி நிற்கிறது இல்லையா..!  உதயணன் முன்பொரு சமயத்தில் எனது நண்பன், ஆனால் இப்போது இல்லை, எனது எதிரிகளில் முதன்மையானவன் அவனே, அடுத்தபடியாக சாளுக்கியர்களைச் சொல்லலாம். எனவே என் மீது நீங்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை." என்றான் தந்திதுர்க்கன்.


" தந்திதுர்க்கரே, தங்கள் மீது ஐயம் எதுவும் எழவில்லை. ஆனால் நீங்கள் திடீரென சபரி தேசத்து அரசன் உதயணனை நண்பன் என்றதும் அனைவரும் திகைத்து விட்டோம்."


" புரிந்து கொண்டேன்..உங்களுக்கு எனது வாழ்க்கைக் கதையை உரைக்கும் வேளை வந்து விட்டது. அதை நீங்கள் தெரிந்து கொண்டால் , உங்களுக்கு என்னால் ஏற்பட்ட இந்த ஐயமும் , முழுதும் நீங்கி விடும்." என்றவராய் தந்திதுர்க்கன் தனது கதையைச் சொல்லத் துவங்கினார்.


                        *             *               *


காஞ்சி நகர அரண்மனை.


தனது அறையின் சாளரத்தின் வழி வெளியே பொழிந்துக் கொண்டிருந்த நிலவினைப் பார்த்தவனாய் ஏக்கப் பெருமூச்சினை விட்டான்  நந்திவர்மன்.

சாளரத்தின் வழி உள்நுழைந்த முல்லைக் கொடியொன்று காற்றினில் ஆடியதைக் கண்ட போது, இவனது நிலைகுறித்து பரிகசித்து  நகைப்பதைப் போலிருந்தது.


அவனது நினைவில் ரேவா தோன்றியதோடு, நந்தவனக் காட்சிகளும் நினைவிற்கு வந்தது. அவனை இம்சித்தன.  கடிகையில் என்ன செய்து கொண்டிருப்பாள்..?  காவியம் படிக்கிறாளா..இல்லை  காதல் படிக்கிறாளா..? என்னைப் போல் அவளும் பிதற்றித் திரிவாளா..? காதல் பொல்லாதது, வாழ்வில் எப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கிறது..!

அன்றாடப் பணிகளையே  ஸ்தம்பிக்கச் செய்து விடுகிறதே..! "என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். 


பல்லவரது படைகள் பரிவேள்வி செல்வதற்கு முதல்நாள் தந்திதுர்க்கன் அவனைச் சந்தித்துச் சொன்ன வார்த்தைகளை  நினைவு கூர்ந்தான்.


" பல்லவ வேந்தே, ரேவாவைச் சுற்றி அபாயங்கள் சூழ்ந்தே உள்ளது என்பதை  அறிவீர்கள்..தங்களை நம்பியே அவளை இங்கு விட்டுச் செல்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாங்கள் காஞ்சி நகரை விட்டு வெளியே எங்கு சென்றாலும் , அவளையும் தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்.  நீங்கள் காஞ்சியில் இல்லாத போது கடிகையில் அவள் இருப்பது உசிதமல்ல என்பது எனது கருத்து."  என்று கூறிய வார்த்தைகள் அவனது நினைவில் வந்து போனது.


வெளியே செல்ல எந்த சந்தர்ப்பம் வரப் போகிறது..! படைத்தலைவரும் நகரில்  இல்லை..!  காஞ்சி நகரை விட்டு வேறெங்கேனும் செல்லும் வாய்ப்பு அமைந்தால் ரேவாவையும் அழைத்துச் செல்லலாம்..ம்..என்ன செய்வது..என பலவாறான யோசனையில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.


அவ்வேளையில் , அவனது அறைக்குள் நுழைந்த சீராளன் , " அரசே..திருமங்கை ஆழ்வாரிடமிருந்து ஒரு ஓலை வந்துள்ளது.."


" ஆஹா..கொடு..சரி , நீ..செல்லலாம்.." என்றதோடு, அதனைக் குழலில் இருந்து வெளியே எடுத்துப் படித்தான் நந்திவர்மன்.


" மதிப்பிற்குரிய பல்லவ வேந்தருக்கு, திருமங்கையாரின் வேண்டுகோள். நந்திபுரத்தில் உள்ள விண்ணகரத்தில்  மங்களாசாசனம் செய்ய விருக்கிறேன்.அதனை முடித்த கையோடு வடதேசத்திற்கும்  யாத்திரை செல்ல விருக்கிறேன்.எனவே  நந்திபுர விழாவிற்கு தாங்கள் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்பது என் அவா. " எனக் கண்டிருந்தது.


நந்திவர்மனுக்கு உடனே பரபரப்பு ஏற்பட்டது. நந்திபுர விண்ணகரத்தைப் பற்றி கேள்வியுற்று இருக்கிறான்..அங்கு செல்லும் வாய்ப்பும் வந்திருப்பதோடு, காஞ்சியை விட்டுச் செல்லும் வாய்ப்பும் இணைந்தே வந்துள்ளது.  ரேவாவையும் அழைத்துச் செல்லக் கூடிய சந்தர்ப்பமும் சேர்ந்தே வாய்க்கிறது எனும் போது வாய்ப்பை நழுவ விடலாமா..! " மனதில் சந்தோசம் பெருக்கெடுக்க அன்றைய இரவில் எவ்வித தொந்தரவுமின்றி மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க  நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தான்.


_ தொடரும்..


#அனுராஜ்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages