14.10.20 - ரேவா : 61 : நந்திபுர_விண்ணகரத்தின்_ மங்களாசாசனம் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 14 அக்டோபர், 2020

14.10.20 - ரேவா : 61 : நந்திபுர_விண்ணகரத்தின்_ மங்களாசாசனம்



14.10.20


ரேவா..


நந்திபுர_விண்ணகரத்தின்_ #மங்களாசாசனம்_61


காவிரி பாயும் வளநாட்டில் குடந்தைக்கு தெற்கே சுமார் மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும் நந்திபுரம். 


 #நந்திபுரம் எனும்  பகைவர் தென்புறக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதப் பெருமாள் ஆலயத்தில் திருமங்கை ஆழ்வாரால்  நடத்தப்படவிருந்த மங்களாசாசன உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக, நந்திவர்மனுடன் ரேவாவும்,  பல்லவடி அரையனும் சுமார் ஐநூறு வீரர்கள் சகிதம் காஞ்சியிலிருந்துக் கிளம்பி நந்திபுரம் வந்தார்கள். வழியெங்கும் காவிரியின் கைங்கர்யத்தால் செழிப்புற்று இருந்த பூமி பச்சைக் கம்பளத்தை தன் மேனியெங்கும்  போர்த்தியிருந்தது. வயல்களும், கழனிகளும் செழிப்புடன் திகழ, வயலிலோ நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. காணுமிடமெங்கும் நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும், கரும்புக் கொல்லைகளும், வாழைத்தோப்புகளுமாய் காட்சி தந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே குளங்களிலும், ஆறுகளிலும் , கண்மாய்களிலும் நீர் தளும்பிக்  காணப்பட சோனாடு சோறுடைத்து என்பதற்கு ஏற்பவே செழித்துக் கிடந்தது.


நந்திவர்மனையும், பல்லவரது படைகளையும் குடந்தையிலேயே வந்து வரவேற்றார் தஞ்சை மற்றும் செந்தலையை ஆண்டு வந்த #பிடுகு சுவறன் மாறன் முத்தரையர். 


நந்திபுர விண்ணகரம்  அந்த நாளில் செண்பகக் காரண்யம் என்றே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மன்னார்குடியில் இருந்து நாதன் கோவில் வரை உள்ள இப்பகுதியில் செண்பக மரங்கள் செழித்து வளர்ந்த காரணத்தால் அந்நாளில் செண்பக காரண்யம் என அழைக்கப்பட்டது.


நந்திபுரத்தில் எழுந்தருளியிருந்த ஜெகந்நாதப் பெருமாளோ வீற்றிருந்த கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். கிழக்கு நோக்கி வீற்றிருந்த பெருமாளின் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்த தேவி, ஐயனின் மார்பழகைக் கண்டு மயங்கி அதில் நிரந்தரமாய்  வீற்றிருக்க விரும்பியதனால், கிழக்கு நோக்கிய பெருமாள் மேற்கே திரும்பி நோக்கியதாகவும், கூடவே புறாவிற்காக தனது சதையை வெட்டிக் கொடுத்த சிபி சக்கரவர்த்திக்கு அருள்புரிவதற்காக மேற்கு நோக்கி திரும்பியதாகவும் இங்கு வரலாறு உள்ளது. அது மட்டுமின்றி சிவனின் வாகனமான நந்திதேவர் ஸ்ரீவைகுண்டம் சென்றபோது துவாரபாலகர்களை மதியாமல் சென்றதனால் , அவர்களிட்ட சாபம் நீங்க இங்குள்ள இறைவனை வணங்கி தன் சாபத்தை தீர்த்துக் கொண்டதனாலேயே நந்திபுரம் என அவரது பெயரால் இத்தலம் அழைக்கப்படுகிறது என்ற புராண கால வரலாறும் இதற்குண்டு. இத்தனை சிறப்புக்களையும் பெற்றிருந்த நந்திபுரம் அழகிய கோட்டையும், அளவான மதிற்சுவர்களும், அகலமான அகழியும் கொண்ட ஒரு கோட்டையாகும்.

அதன் காரணத்தாலேயே அந்நாளில் இதற்கு பகைவர் தென்புறக் கோட்டை என்ற பெயரும் விளங்கியது.


பல்லவ நந்திவர்மனும் மற்றும் அனைவரும் நந்திபுரத்தின் கோட்டையை வந்தடைந்ததோடு, அந்நகரில் இருந்த சிறு அரண்மனையில் தங்கினார்கள். பழைய கோட்டையாக இருந்தாலும் , அது பலமான கோட்டையாகவே காணப்பட்டது. கோட்டையைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த செண்பகம், பூவரசு, வேம்பு, ஆலம், அரசு போன்ற மரங்கள் நிறைந்த கானகமே கோட்டைக்கு ஒரு பெரும் அரணாக விளங்கியது. தொலை தூரத்தில் இருந்து புதிதாய் வருபவர்களுக்கு கானகத்தின் அடர்த்தியினால் கானகத்தின் உள்ளே இது போன்றதொரு கோட்டை இருப்பதும்,  கோட்டைக்குள்ளே நந்திபுரமென்னும் நகரம் இருப்பதுமே கண்டறியப்பட முடியாத ஒன்றாக இருந்ததெனலாம்.


இத்தகைய ஒரு கோட்டையுடன் கூடிய நந்திபுர விண்ணகரத்தில் தான் நாளை நடைபெறப் போகும்  விழாவில் திருமங்கைஆழ்வார் கலந்து கொண்டு  ஜெகந்நாதப் பெருமாளும்,  செண்பகவல்லி தாயாரும் உடனுறையும் இத்திருத்தலத்தை சிறப்பித்து மங்களாசாசனம் செய்யவிருந்தார்.


அச்சிறு நகரே அன்று கோலாகலமாய் காட்சி தந்து கொண்டிருந்தது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும் எருதுகள் பூட்டிய கூட்டு வண்டிகளில்  கூட்டம் கூட்டமாய் மக்கள் அச்சிறு நகரை நோக்கி வந்த வண்ணமிருந்தனர். பாணர்களும், விறலியர்களும்  தங்களது கலையால் மக்களை மகிழ்வித்துக் கொண்டும் இருந்தனர். நகரமெங்கும் மங்கல வாத்தியங்களின் ஒலியே நிறைந்திருந்தது. விழா ஏற்பாடுகளை தஞ்சை செந்தலை மன்னர் பிடுகு சுவறன் மாறன் முத்தரையர் சிறப்பாக செய்திருந்தார்.


காலைக் கதிரவன் நந்திபுரத்தின் மங்கல ஒலியினைக் கேட்டு மெல்ல தன் தலையை நீட்டினான். நந்திபுர விண்ணகரம் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வீதிகள் தோறும் மாவிலைத் தோரணங்களும், வாழைமரங்களும் நடப்பட்டிருந்தன. வீடுகளில் மங்கையர் அதிகாலையே எழுந்து சாணம் தெளித்து அழகாய் வண்ணக்  கோலமிட்டிருந்தனர். கோலங்கள் பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நந்திபுரமெங்கும், சோழ முத்தரையரது மீன் கொடியும், பல்லவரது ரிஷபக் கொடியும் இணைந்தே பட்டொளி வீசி பறந்துக்  கொண்டிருந்தது. ஆலயத்தில் இறைவனுக்கு பலவித வாசனாதி திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டதோடு, சிறப்பான அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.திருக்கோவிலில் மங்கல இசை முழங்க, வேதபாராயணங்கள் வாசிக்கப் பட்டன. இறைவனது கருவறையின் முன் பயபக்தியோடு கைகூப்பியபடி நின்றிருந்தார் திருமங்கை ஆழ்வார், அவரைத் தொடர்ந்து சோழ மன்னன் பிடுகு சுவறன் மாறன், பல்லவ வேந்தன் நந்திவர்மன், பல்லவ தளபதி பல்லவடி அரையன் மற்றும் சோழ, பல்லவ அரச பிரதானிகளும் , மங்கையர் கூட்டத்தில் சோழமன்னரது பட்டமகிஷியுடன், ரேவாவும் நின்றிருக்க..கணீரென்ற குரலால் திருமங்கை ஆழ்வார் பாடத் துவங்கினார்.


செல்வம் மல்குதென் திருக்குடந்தை

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க

ஆடுஅரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த

பரம ! நின் அடியினைப் பணிவன்

வரும் இடர் அகல_ மாற்றோ வினையே..!


_ _ _


திருமங்கை ஆழ்வாரின் பாடல் ஆலயத்தின் அமைதியை ஊடுருவி கணீரென்று ஒலிக்க நந்திபுர விண்ணகரத்தின் மங்களாசாசன விழா நிறைவுற்றது.


திருக்கோவில் மண்டபத்தில் மக்கள் அனைவருக்கும் அன்னதானமும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்க, பிரகார மண்டபமொன்றில் அமர்ந்திருந்த ஆழ்வாரைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.


 பிடுகு சுவறன் மாறன் முத்தரையர் தனது பட்டமகிஷியை அழைத்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றவராய் செந்தலையை நோக்கி விரைந்தார்.


ஆழ்வாரோ, நந்திவர்மனை நோக்கி புன்னகைத்த படி, " பல்லவ வேந்தரே, தங்களது சேனை பரிவேள்வி நடத்தி போயிருப்பதாக அறிந்தேன்.எனது வேண்டுகோளினை ஏற்று நடந்தமைக்கு உள்ளம் உவகை கொள்கிறேன்.."


" நாங்களும் மகிழ்கிறோம் அடிகளாரே..தங்கள் ஆசியினால் தான் வடதிசையில் நமது படை வெற்றியை குவித்து வருகிறது.."


" நந்திவர்மா..நான் நாளை சூரிய உதயத்தில் வடபாரத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்கிறேன்..

நைமிசாரண்யமும், திருப்பிருதியும் செல்ல வேண்டுமென்பது எனது அவா. வைகுண்டனது அழகிய திருமுகத்தை எங்கெங்கு காணினும் என்னுள் பேரானந்தமே முகிழ்கிறது. உன்னிடம் சொல்லிச் செல்ல வேண்டுமென்று எண்ணினேன். அதனால் தான் இங்கு வரும்படி அழைத்தேன். இங்கு வந்ததில் உனக்கொன்றும் சிரமம் இல்லையே.." என்றார் தன் குரலில் அன்பொழுக.


" தாங்கள் என் மீது கொண்ட அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்..உண்மையில் தங்களது சிநேகிதம் என் வாழ்வில் கிடைத்ததே பெரும் பேறு என்பேன். இங்கு வந்து இந்நிகழ்வில் கலந்ததோ கிடைப்பதற்கரிய பெரும்பேறல்லவா..!" என்றான் அரி சரணபரன் எனப் புகழப்பட்ட நந்திவர்மன்.


" அனைத்தும் அவனது சித்தம்..வாழிய நீ..வளர்க நின் புகழ்..! " என்றவராய் ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.


நந்திபுர விண்ணகரத்திற்கு வருகை தந்ததால் சிரமம் ஏதுமில்லையே என வினவினார் ஆழ்வார் ..ஆனால்  நந்திவர்மனது வாழ்வில் அவனது நந்திபுர வருகையால் விளைந்த சிரமமோ சொல்லவொண்ணாத்  துயரை ஏற்படுத்தப் போவதை அப்போது இருவருமே உணரவில்லை.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : #நந்திபுரம் இவ்வூரில் தான் காளமேகப் புலவரும் பிறந்தார்.


#பிடுகு சுவறன் மாறன் முத்தரையர் இவருக்கு 1996 இல் திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சிலை நிறுவப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages