மலைச்சாமி
14.10.20
வரலாற்றில் இன்று 14.10.20
October 14, 2020
அக்டோபர் 14 (October 14) கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1066 – இங்கிலாந்தில் “ஹாஸ்டிங்ஸ்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.
1322 – ஸ்கொட்லாந்தின் முதலாம் ரொபேர்ட் பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வேர்ட் மன்னனைத் தோற்கடித்தான். ஸ்கொட்லாந்தின் விடுதலையை எட்வேர்ட் ஏற்றுக் கொண்டான்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1586 – ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டாள்.
1758 – ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.
1773 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.
1806 – முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தான்.
1888 – Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.
1903 – யாழ்ப்பாணத்தின் SS Jaffna என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணித்தது.
1912 – முன்னாள் அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் வைத்து சுடப்பட்டார்.
1913 – ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கெதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று.
1926 – சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) வெளியிடப்பட்டது.
1933 – நாசி ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் “ரோயல் ஓக்” என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1943 – போலந்தில் நாசிகளின் “சோபிபோர்” வதைமுகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாசிகள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
1956 – இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
1962 – கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
1964 – லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1964 – ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1968 – விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
1973 – தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
1987 – டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
1643 – முதலாம் பகதூர் ஷா, இந்தியாவின் முகலாய மன்னன் (இ. 1712)
1873 – ஜூல்ஸ் ரிமெட், பிரெஞ்சுத் தொழிலதிபர் (இ. 1954)
1882 – சார்லி பார்க்கர், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1959)
1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், சட்டத்தரணி (இ. 1969)
1890 – டுவைட் டி. ஐசனாவர், ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1969)
1900 – வி எட்வர்ட் டெமிங், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1993)
1930 – மொபுட்டு செசெ செக்கோ, சயீர் நாட்டின் குடியரசுத் தலைவர் (இ. 1997)
1942 – சிவசங்கரி, தமிழக எழுத்தாளர்
1976 – திலகரத்ன டில்சான், இலங்கைத் துடுப்பாளர்
1977 – சயீத் அஜ்மல், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1978 – அஷர் ரேமண்ட், அமெரிக்கப் பாடகர், நடிகர்
1981 – கவுதம் கம்பீர், இந்தியத் துடுப்பாளர்
1990 – ஜோர்டன் கிளார்க், ஆங்கிலேயத் துடுப்பாளர்
இறப்புகள்
1803 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 17500)
1944 – இர்வின் ரோமெல், செருமானிய இராணுவத் தளபதி (பி. 1891)
1977 – பிங்கு கிராசுபி, அமெரிக்க நடிகர் (பி. 1903)
1981 – கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர் (பி. 1906)
2005 – சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)
2009 – சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (பி. 1924)
2014 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)
சிறப்பு நாள்
உலகத் தர நிர்ணய நாள்
இப்படித்தான் உருவானது தமிழ்நாடு!
தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர் நீத்த போராளி” சங்கரலிங்கனார் நினைவு நாள்.
ஆட்சி பலத்தால், அதிகார ஆணவத்தால் தமிழ்ப் போராளிகளை இகழ்ந்தனர். சட்டமன்றக் கூட்டங்கள் கூடின; கலைந்தன; ஆனால், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் மட்டும் நடைபெறவேயில்லை.
தியாகி சங்கரலிங்கனார், தென்பாண்டியின் வணிகக்களமான விருதுநகரில் 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி - வள்ளியம்மை ஆசியோர்க்கு மகனாகப் பிறந்தார். சங்கரலிங்கனார் 1900இல் திருமால் நாடார் ஓலைப்பள்ளிலும், 1901 இல் சுவீடிஷ் மிஷன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளிலும், 1902 இல் சச்திரிய வித்தியா கல்விச் சாலையிலும் பயின்றார். இவரது கல்வியானது எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது. 1908 ஆம் ஆண்டு ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். அப்போது பெருந்தலைவர் காமராசர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படித்தார்.
சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.
விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.
சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.
சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.
அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.
அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென 1922 ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926 இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.
காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.
காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.
திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.
அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!
தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.
12 அம்சக் கோரிக்கைகள்:
1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்.
உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார். “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.
அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்.ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இலட்சியப்பிடிப்புடன் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பைக் கைவிட மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 10.10.1956 அன்று, காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவச் சிகிச்சைக்கு சங்கரலிங்கனார் உடன்படவில்லை; 13.10.1956 அன்று சங்கரலிங்கனாரின் இன்னுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் “நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்” என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியது போலவே இரு தினங்களில் இறந்தார். அவர் வேண்டுகோளின்படியே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே தங்கமணி ஆகிய இருவரும் கையொப்பமிட்டு அன்னாரின் உடலைப் பெற்றனர்.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் ‘புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.
தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
ஒரு மனிதனுடைய பிறப்பு எவ்வாறு அமைந்தது என்பது முக்கியமல்ல; அவருடைய இறப்பு எவ்வாறு அமைகிறது என்பதே ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. துனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. தனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு தியாகி சங்கரலிங்கனார் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
சென்னை மாநில சட்டமன்றத்தில் சென்னை இராஜ்ஜியத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதா 24.11.1956 அன்று கொண்டு வரப்பட்டது. மசோதா விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் ஆர்.வெங்கடராமன்,
“புதிய நாடு (மாநிலம்) அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது விவாதிக்கலாம் என்றும், சென்னை என்ற பெயர் உலகப் பிரசித்தி பெற்றதால், அப்பெயர் நிலைத்திருக்க வேண்டும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முதல் பாரதி பாடிய கவிதை இலக்கியம் வரை யாவிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை போலும்.
‘தமிழ்நாடு’ – எனப்பெயர் மாற்றுவதற்கு ஆதிக்க சக்திகள் மறுத்தன. அதனைக் கண்டித்து தந்தை பெரியார் விடுதலை இதழில் (10.11.1956) “தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்க இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை……. நமது மொழி எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு, முளையிலேயே கிள்ளியெறியும்படியான முயற்சியில் ஈடுபடும்படி அனைத்து தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்”.
அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 16.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று சிலம்புச் செல்வர் தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர் மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையான ஆதரவை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறு வகைப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் ஒளிவீசும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.
'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ –என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடாந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். அறிஞர் அண்ணா “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்கு -கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968 அன்று நிறைவேறியது.
சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘பாலர் (கலைவாணர்) அரங்கில்’-சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
சங்கரலிங்கனார் உண்ணா நோன்பின் போது அறிஞர் அண்ணாவிடம் நேரில் கோரியபடி, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானவுடன் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்குச் சூட்டப்பட்டது.
‘தமிழ்நாடு’ – பெயர்
அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார். அப்போது, "எல்லையை வாங்க முடியாதா? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா? என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை. அப்போது ஜனசக்தி துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில், "காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை" என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். அவரின் போராட்டத்திற்கு ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி முழுமையாகத் துணை நின்றது.
நான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார். அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மதுரை எர்ஸ்கின் (அரசு இராசாசி மருத்துவனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் உண்ணாநிலையை தொடர்ந்தார். நாடி நரம்புகள் ஒடுங்கின. 79வது நாளில் அவர் உயிர் பிரிந்தது.
1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்து ஆந்திரா பெயரில் தனி மாகாணம் கண்டது. ஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின் 'திராவிட நாடு' குழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது.
1956இல் ஹைதரபாத் இதர பகுதிகள் ஆந்திராவானது. திருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளவானது. சென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாற வில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடானது.
தமிழர்கள் தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்க வில்லை. அதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிடவும் முன் வந்தனர். ஆந்திர அரசு ஹைதரபாத்தில் 'பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்' நிறுவியும், அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை 'பொட்டி சிறிராமுலு' மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.
இதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், "சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்" என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர். பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல. ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா? இல்லையே?
அவர் மறைந்து 59 ஆண்டுகள் கழித்து விருது நகரில் மூராண்டுக்கு முன்னர்தான் தான் அதுவும் ஒப்புக்காக காணொளி மூலம் செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.
சங்கரலிங்கனார் ; தமிழ்நாடு பெயர் சூட்டவும், தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை தமிழர்களாகிய நம்மைத் தவிர வேறு யாராலும் நினைக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக