16.10.20 - ரேவா : 63 : யவனப்_பேரழகி - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 16 அக்டோபர், 2020

16.10.20 - ரேவா : 63 : யவனப்_பேரழகி



16.10.20


ரேவா


யவனப்_பேரழகி_63


நர்மதை நதி காலைக் கதிரவனின் கதிர்களை உள்வாங்கி பொன்னெழில் பூத்து மின்னிக் கொண்டிருந்தது. அதிகாலை பூபாளத்தை அக்கானகப் பெருவெளிப் பட்சிகள் சப்தித்து மகிழ்விக்க , மேனியைத் தீண்டிய மென் தென்றலை அனுபவித்தபடி இரண்டு  புரவிகள் நர்மதை நதிக்கரையோரம் விரைந்து கொண்டிருந்தன. புரவிகளில் வீற்றிருந்த இருவருமே கட்டிளங்காளைகள். இருவரது முகத்திலும் ராஜக்களை படிந்தே காணப்பட்டது. இருவரும் ஒரே ஆசிரியரிடம்  தங்களது போர்க்கலைப் பயிற்சியை முடித்த மாணவர்கள். தங்களது பயிற்சியை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். தாங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டதன் அறிகுறியாக அவர்களது புரவியின் வேகத்தைக் குறைத்தவர்களாய், மெல்ல நடத்திக் கொண்டு போனார்கள். 


" உதயணா..இந்தப் பாதையில் திரும்பு நாம் செல்ல வேண்டிய இடத்தை விரைவிலேயே சென்றடையலாம்." 


" ம்.."


இருவரது புரவியும் சென்ற பாதையில் இருந்து விலகியதோடு,  வளைந்து திரும்பிய ஒரு ஒற்றையடிப் பாதையில் தங்களது புரவிகளைச் செலுத்தினார்கள். பாதையின் இருமருங்கிலும் செடி,கொடிகள், தாழ்வான மரக்கிளைகள் எட்டிப் பார்த்தன.  பாதையின் குறுகலான இடவசதியில் ஒருவர் பின் ஒருவராய் தான் செல்ல வேண்டியிருந்தது. அது மட்டுமின்றி அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளும் , காட்டுச் செடிகளின் கொடிகளும் பாதையில் மேலும் இடைஞ்சலை உண்டுபண்ணியிருந்தது , குறுக்கிட்ட கிளைகளை லாவகமாக ஒதுக்கியும், மரக்கிளைகள் வரும் போது குதிரையின் முதுகில் படுத்தபடியும், ஆங்காங்கே தலைசாய்த்தும் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒரு நாழிகைப் பொழுதில் தூரத்தில் தெரிந்தது #அச்சல்பூரின் கோட்டை.


" வைரமேகா..உனது நாடு வந்து விட்டது. அதிதியான என்னை வரவேற்க என்ன ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறாய் ..? " என்றான் உதயணன்.


" உதயணா, நண்பனை வரவேற்க எனது தேசம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். நீ உனது சபரி தேசத்தில் காட்டிய விருந்து உபசரிப்புகளை விட இங்கு அதிகம் காண்பாய்..! " என்றான் வைரமேகன் என அழைக்கப் பட்டவன்.


கோட்டையின் பிரம்மாண்டமான சுவர்களில் வீரர்கள் ஆங்காங்கு நின்று காவல் புரிந்தபடி இருக்க, இருவரையும் கண்டதும் கோட்டைத் தலைவன் ஓடி வந்தான்.


" இளவரசருக்கு வணக்கம்.."


" கோட்டைத் தலைவரே, இவர் எனது ஆருயிர் நண்பர் சபரி தேசத்து இளவரசர் உதயணன். இவரைச் சிறப்பான முறையில் வரவேற்க அரண்மனைக்கு சென்று ஆவனச் செய்." என கட்டளையிட்டான் அச்சல்பூரின் இளவரசன் வைரமேகன்.


வைரமேகனின் கட்டளையை ஏற்றவனாய் , அவன் நகரந்திற்குள் குதிரையில் விரைய, " நண்பா..வா நாம் நகரை அப்படியே சுற்றிப் பார்த்து விட்டு அரண்மனைக்குச் செல்லலாம்." என அழைத்தவனாய் தனது புரவியை மெல்ல முன்னே நடத்திக் கொண்டு போன வைரமேகனைப் பின் தொடர்ந்தான் உதயணன்.


சிறிய நகராக காட்சி தந்தாலும், செழிப்பான நகராக விளங்கியது அச்சல்பூர். விசாலமான வீதிகளில் ஒழுங்காக கட்டப்பட்டிருந்தன மாளிகைகள். வணிகம் நடக்கும் வீதிகளிலோ மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் வாசனைப் பொருட்களில் இருந்து, சீனத்து மென் துகில்களும், யவன தேசத்து பண்டங்களும் , அராபிய மற்றும் பாரசீக தேசத்தின் நறுமணப் பொருட்களும் காணக் கிடைத்தன. பல தேசத்து முகங்கள் அங்கு பார்வையில் பட்டது. இருவரது புரவியும் இணைந்தபடி அவ்வீதியில் பயணித்துக் கொண்டிருக்க, நகரத்தின் அழகையும், வணிகர்களின் சாமார்த்தியத்தையும், மக்களின் இயல்பையும் கண்டு இரசித்தபடி வந்து கொண்டிருந்த இருவரது புரவியும், ஒரு சாலையின் திருப்பத்தில் திரும்பியவுடன் வழி மறித்தது அழகிய ரதமொன்று. ரதசாரதியிடத்தில் ஒரு யவனன் அமர்ந்திருந்தான். ரதமானது வீதியை அடைத்தபடி நிற்க, இருவரது புரவிகளும் சற்றே பிரிந்து ஒன்றன் பின் ஒன்றாக செல்ல வேண்டிய நிலை உருவாகவே, உதயணன் சட்டென கோபத்தின் வசப்பட்டவனாய், " ரதசாரதியே, சற்று இவ்விதியின் திருப்பத்தில் நின்று வரலாம் அல்லவா, இப்படியா வந்து வழியை மறிப்பது...? " என்றான் எரிச்சலும் , கோபமும் கலந்தவனாய்.


" மன்னித்துக் கொள்ளுங்கள்..நீங்கள் இருவரும் வருவதை நான் கவனிக்க வில்லை..அத்தோடு இந்த வீதிக்குள் முதலில் என் ரதம் நுழைந்து விட்டது..நீங்கள் தான் இந்த திருப்பத்தில் திரும்பி இப்போது உள் நுழைந்தீர்கள்..சற்று நீங்கள் நிதானித்திருக்கலாம்." என்றான் அந்த யவனன்.


" என்ன சொன்னாய்..? எங்களை நிதானிக்கச் சொல்ல நீ யார்..? " என இரைந்தான் உதயணன்.


" உதயணா விடு..தவறு நம் பேரிலும் இருக்கிறது. நாம் தான் திருப்பத்தில் இருந்து திரும்பியிருக்கிறோம்..எனவே ரதத்தினை சட்டென மறிக்க வேண்டியதாகி விட்டது. சற்றே பின் நகர்ந்தால் ரதம் சென்று விடும்..பிறகு நாம் செல்லலாம்." என்றான் வைரமேகன்.


" என்னால் பின்னுக்கு நகர முடியாது. ரதத்தை பின்னே நகர்த்தச் சொல்.." என்றான் ஆத்திரத்தோடு.


அப்போது ரதத்தின் திரைச்சீலை விலக, உள்ளிருந்து ஒரு யவன ஸ்திரீ மெல்ல வெளியே எட்டிப் பார்த்தவளாய், 

" அண்ணா , என்ன பிரச்சனை..? " என்றாள் தன் செவ்விதழ் மலர்ந்து. வானத்து நிலவு தன்னை மறைத்திருந்த மேகத்தை விட்டு மெல்ல எட்டிப் பார்த்ததைப் போலிருந்தது ,  புரவியில் அமர்ந்து யவனனுடன் பேசிக் கொண்டிருந்த இருவருக்கும்.


" ஒன்றுமில்லை..செலீன்..நீ உள்ளே அமைதியாக அமர்ந்திரு.."


#செலீன்.." என்ன அழகான பெயர், அவளும் அழகாய் தான் இருக்கிறாள். பிறை நுதலும், கூரான நாசியும், பொன்னிற கூந்தலும், செந்தாமரை நிறமுமாய் யவனத்தின் ஒட்டுமொத்தப் பேரெழில் திரண்டு வந்த யௌவன சுந்தரியாக நண்பர்கள் இருவரின் பார்வையில் பட்டாள். இருவரையும் அவளது தீட்சண்யமான விழிகள் ஏறெடுத்துப் பார்த்ததோடல்லாமல் வைரமேகனிடம் வந்ததும் நிலைபெற்றதோடு, மெல்ல தன் புன்முறுவலையும் விகசித்தது.


இருவருமே அவளது அழகில் மயங்கியதோடல்லாமல், வேறு வார்த்தையின்றி தங்களது புரவிகளை பின்னுக்கு நகர்த்தியதோடு, ரதத்திற்கும் வழியேற்படுத்தினார்கள். ரதம் இவர்களை கடந்து சென்றது, ஆனால் இருவரது மனமோ ரதத்தின் பின் சென்றது. 


" ம்..என்று ஏக்கப் பெருமூச்சொன்றை உதிர்த்த உதயணன், நல்ல அழகி..இல்லையா நண்பனே.." என்றான்.


" யவனர்களுக்கே உரித்தான அழகு.." என்றான் வைரமேகன்.


இருவரது புரவிகளும் பல வீதிகளைக் கடந்து, அரண்மனையை வந்தடைந்திருந்தன. புரவிகளை விட்டிறங்கியதும் இரு காவலர்கள் வந்து அதனை கொட்டடியில் அடைக்க இழுத்துச் சென்றனர்.


அரண்மனைப் பெண்டிர் பலர் ஆரத்தி தட்டுடன் வாசலில் காத்திருக்க, முதியவள் ஒருவள் ஒரு பெரிய புஷ்பஹாரத்தை உதயணனுக்கு அணிவித்தாள்.அதைத் தொடர்ந்து, ஒரு அழகிய இளம் நங்கை ஆரத்தி தட்டுடன் வந்து ஆரத்தி எடுத்தவளாய், அந்த ஆரத்தி நீரினை எடுத்து அவனது நெற்றியில் திலகமாக இட்டாள். ஆரத்தி எடுத்தவளின் அழகு அபரிமிதமாய் இருக்க, அவளை சற்று நேரத்திற்கு முன் தான் கண்ட யவன ஸ்திரீயோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தான் உதயணன். அதைத் தொடர்ந்து நின்ற மகளிர் அனைவரும் பூக்களை இருவர் மீதும் தூவி வரவேற்றனர்.


" உதயணா..என்ன சிந்தனை..வா..வா..உள்ளே செல்லலாம்." என்றான் வைரமேகன்.


" நிரஞ்சனா..சபரி தேசத்து இளவரசனுக்கு நல்லதொரு அறையை ஒழித்துக் கொடு..எனது உயிர்த்தோழன் இவன், இங்கிருக்கும் வரை இவனது சௌகரியத்திற்கு எவ்வித குறைச்சலும் வரக் கூடாது..புரிந்ததா..?!" என அன்பாய் கட்டளையிட்டதோடு, " உதயணா, இவள் என் தங்கை , நிரஞ்சனா தேவி என்பது பெயர்." என அறிமுகமும் செய்வித்தான். 


அவளோ, அதை காதில் வாங்காதவளாய் நாணம்  மேலிட உள்ளே ஓடி விட்டாள்.


" ஓ..உன் தங்கையா..அழகாய் தான் இருக்கிறாள்." என்ற உதயணனின் பார்வையில் இலேசான முரண் தென்பட்டது.


அரண்மனைக்குள் இருந்த பல கட்டுக்களைக் கடந்து மேல்தளப் படிக்கட்டுக்களின் வழியாக உதயணனை அழைத்துக் கொண்டு போன வைரமேகன் தாழ்வரையில் நடந்து அங்கிருந்த விசாலமான ஒரு அறையில் அவனைத் தங்கும் படி பணித்தான்.

அறையின் விஸ்தாரமும், கலைநயமும் பிரமிப்பு ஊட்டும்படியிருந்தது. பெரிய மஞ்சமும், ஆசனங்களும் அழகான வேலைப்பாடுகளுடன் காணப்பட்டன.


" உதயணா, சற்றே நீராடிவிட்டு ஓய்வெடு. உனக்கான புதிய ஆடைகள் அதோ அந்த மரப்பேழையில் இருக்கிறது பயன்படுத்திக் கொள். உணவு உனது அறைக்கே வரும். நாமிருவரும் மாலை ஒரு நாட்டியச் சாலைக்குச் செல்வோம்." என்றவனாய் உதயணனிடம் விடைபெற்று வெளியேறினான் வைரமேகன்.


மாலைக் கதிரவன் மலைமுகட்டில் மெல்லக் கீழிறங்கிக் கொண்டிருக்க,  வானம் பல வர்ணஜாலங்களில் திளைத்துக் கொண்டிருந்தது. உதயணனது அறைக்குள் நுழைந்த அச்சல்பூரின் இளவரசன் வைரமேகன், 


"நண்பா, நாம் சற்றே வெளியே போய்வரலாம் " என உதயணனை அழைத்துக் கொண்டு அரண்மனையிலிருந்து வெளியேறி அச்சல்பூரின் அழகிய வணிக வீதிகளையும், நகரையும் சுற்றி வந்தவர்கள் , இறுதியாக ஒரு நாட்டியசாலைக்குள் நுழைந்தார்கள். நாட்டிய சாலை ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது. ஆங்காங்கு செருகப் பட்டிருந்த பந்தங்களின் வெளிச்சமானது அந்த அரங்கினை முழுதும் வெளிச்சப் படுத்தாமல் அரைகுறை இருட்டில் ஆழ்த்தி விட்டிருந்தது. ஆங்காங்கே போடப்பட்டிருந்த ஆசனங்களில் அந்நகர மக்கள் பலர் வீற்றிருந்தனர். நாட்டியசாலையின் தலைவன் வைரமேகனைக் கண்டதும் ஓடிவந்தான்.


" வரவேண்டும்..வரவேண்டும்.."என்ற அவனது தலையானது இடைவரை தாழ்ந்தது. பணிவுடன் வரவேற்றவனாய் இருவரையும் அரங்கத்தின் முதல் வரிசைக்கு அழைத்துச் சென்றதோடு, அங்கிருந்த ஆசனத்தில் அமர்த்திவிட்டு வணங்கி வெளியேறினான்.


சிறிது நேரத்தில் துவங்கியது பல நிகழ்ச்சிகள்..தீப்பற்றி எரிந்த வளையங்களை கைகளில் ஏந்தியவாறு நடனமாடுவது, வானிலிருந்து இறங்கி வருவது போன்ற காட்சியமைப்புடன் கூடிய நடனங்கள், தனி நபர் நடனங்கள், கூட்டத்தினரோடு ஆடிய நடனங்கள் என பலவகையான வீரதீர சாகசங்களோடு நாட்டிய  நிகழ்ச்சி அவ்வரங்கில் நடத்திக் காட்டப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் பரவசமடைந்தவர்களாய் கைகளைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இதனை சற்று அசுவாரஸ்யத்தோடு கவனித்துக் கொண்டிருந்த உதயணன், அதன் பின் வாட்களோடு வாட்களை மோதிக் கொண்டு நடத்திய ஒரு நடன வகையை விரும்பி ரசித்தான்.


இருவரும் அந்த நாட்டியசாலையை விட்டு வெளியேறியதோடு, வணிகர்கள் நிறைந்த வீதிகளில் புரவியில் வந்து கொண்டிருந்தார்கள். 


அப்போது, காலையில் ரதமொன்றில் கடந்து சென்ற யவன ஸ்திரீ , இவர்களது பார்வையில் பட்டவளாய் ஒரு வணிகரது கடையில் நுழைந்தாள்.


இருவரது புரவிகளும் அந்த வணிகரது கடையை நாடிச் சென்று நின்றது. உள்ளே நுழைந்ததோடு பார்வையை நாற்புறமும் சுழற்றிய இருவரது பார்வையும் அந்த யவன ஸ்திரீயைத் தேடியது.


" இப்போது தானே உள்ளே வந்தாள்..! அதற்குள்ளாக எப்படி மறைந்தாள்..! " ஆச்சர்யத்துடன் வினவினான் உதயணன்.


அப்போது, ஒரு அறையின் கதவினைத் திறந்து கொண்டு முதலில் காலையில் ரதமோட்டி வந்த யவனன் வெளியே வர, கூடவே வந்தாள் செலீன் என அழைக்கப்பட்ட அவள்.


உள்ளிருந்து ஒரு குரல், " போரஸ்..நாளை நமது வணிகத்திற்கான வெகுமதியைப் பெற்றுச் செல்லலாம்." என்று தெளிவாகக் கேட்டது.


" நல்லது..நாங்கள் நாளை காலையில்  வருகிறோம்." என்றவனாய் விடைபெற்றான் போரஸ் என அழைக்கப் பட்ட யவன வணிகன்.

அவனைத் தொடர்ந்த அந்த அழகியின் பார்வை வைரமேகனைக் கண்டதும் ஒரு க்ஷணம் மலர்ந்து மறைந்தது.


வைரமேகனும் அவளது கண்களைக் கண்டான், அதில் காணப்பட்ட உணர்ச்சி அவனுள் எழுந்து பலக் கிளர்ச்சியை உண்டு பண்ண, அவனது விழிகளில் பிறந்தது காதல். ஆனால் உதயணன் விழிகளிலோ பிறந்தது  காமம்.


நண்பர்களுக்குள் பிரிவினையை எதிர்வரும் காலங்களில் உருவாக்கப் போவதை அறியாத அவளோ , தன் இதழ்களில் குறுநகை விகசிக்க அவ்விடத்தை விட்டகன்றாள்.


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு : #அச்சல்பூர் மத்தியப் பிரதேசத்தில் இன்று எலிச்சப்பூர் என வழங்கப் படுகிறது.


#செலீன்  என்பதற்கு யவனர்களின் ரோமானிய பாஷையில் " நிலவு " என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages