15.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 15 அக்டோபர், 2020

15.10.20



கிஷோர் கான்



15.10.2020


கிராமத்துப்_பெண்கள்


கிராமத்துப் பெண்கள் என்றதும் நம் மனக் கண்ணில் தேவதை போன்றதொரு பெண் தோன்றுகிறாள் இல்லையா? அதைத் தாண்டி நாம் சிந்திக்க மறுக்கிறோம். 


பெண்கள் என்றாலே அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதைப்பற்றி பேசாத நாளும் இல்லை, ஆளும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம். 


இதில் அதிகம் பேசப்படாதவர்கள் கிராமப்புற பெண்கள். கல்வி எவ்வளவோ வளர்ந்துவிட்ட பிறகும், இன்றும் பல பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது என்பதேஉண்மை. கல்வியைத் தாண்டிய பல பிரச்னைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். 


அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? எவ்வாறு ஒரு பிரச்னையை அணுகுகிறார்கள்? அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன? என்று கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன. 


இப்படியான பலகேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை காணும் பொருட்டே ‘சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்’ கொண்டாடப் படுகிறது. அம்மா, மனைவி, தோழி, மகள், சகோதரி என்று பெண்கள் என்றாலே கொண்டாடும் நாம், நமது கிராமப்புற பெண்களையும் கொண்டாட வேண்டுமே. 


மார்ச் மாதம் 8ஆம் தேதி ‘பெண்கள்தினம்’ஆக கொண்டடப்படுகிறது. 


அக்டோபர் 15ஆம் தேதி ‘கிராமப்புற பெண்கள் தினம்’ஆகக் கொண்டாடப்படுகிறது.


2008ஆம் ஆண்டு முதன்முதலில், ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் கொண்டாடப்பட்டது. மற்ற தினங்களைப் போலவே, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை மையமாக வைத்து செயல்படுகிறோம். 


இந்த ஆண்டிற்கான குறிக்கோள்: 


காலநிலை சார்ந்த வேளாண்மையில் பாலின சமத்துவம் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்; மற்றும் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் (Challenges and opportunities in climate-resilient agriculture for gender equality and the empowerment of rural women and girls). 


வீட்டிலும் சமுதாயத்திலும் பெரும் பங்காற்றுகிறார்கள் பெண்கள். ஒரு குடும்பத்தை சரியாகக் கொண்டு செல்வதிலும், குழந்தைகளைப் படிக்க வைப்பதிலும் என அனைத்து பொறுப்புகளும் அவர்களுடையதுதான். 


நாட்டிற்கான சிறந்த குடிமகன்களை உருவாக்குவதில் பெண்களின் பங்கு அதிகம். பெண்கள் கால்தடம் பதிக்காத தொழில்துறை ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு, அனைத்து துறைகளிலும் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர். 


மனிதனின் ஆதிகால முதன்மையான தொழிலான விவசாயத்தில், அன்று முதல் இன்று வரை பெண்களின் பங்கு அபாரமானது. உழுவதில் இருந்து அறுவடை செய்யும் வரைபெண்கள் இல்லாமல் எவ்வேலையும் நிறைவுறாது. 


பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறார்கள். இருந்தாலும், கிராமப்புற பெண்களின் வாழ்வியல் மிகவும் மோசமானதாகவே இருந்து வருகிறது. சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி என்று எல்லாமே அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. 


உலகளாவிய அளவில் வறுமை குறைந்தாலும், இப்போதும் ஏறத்தாழ 1 பில்லியன் மக்கள் கொடும் வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பங்கு மக்கள் வசிப்பது கிராமப்புறங்களில்தான். 


உலகளாவிய அளவில், ஆண்களுக்கு ஈடாக பெண்கள் உழைத்தாலும், அதற்குத்தகுந்த விலை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. சொந்தமில்லாத நிலம், பொருட்கள் கிடைப்பதில் பிரச்னை, விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்குவது என்று பிரச்னைகள் பல. 


கிராமப்புற குடும்ப அமைப்புகள், மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளால் பெண்களின் முடிவெடுக்கும் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுவதோடு, அவர்களின் அரசியல் பங்கேற்பும் தடை செய்யப்படுகிறது. 


கிராமப்புறங்களில்உள்ள பெண்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரம், உள்கட்டுமானம், நீர் மற்றும் சுகாதார வசதி உள்ளிட்ட பொது சேவைகளில் சமமான இடம் தரப்படுவதில்லை. 


உலக அளவில், கிராமப்புற ஆண்கள் மற்றும் நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்களின் நிலை மோசமானவையாக இருக்கின்றன என்பதைப் பலதரவுகள் வெளிப்படுத்துகின்றன. 


மேலும், வறுமை மற்றும் காலநிலை மாற்றத்தின் முழுமையான விளைவுகளை அதிகமாக சுமப்பது கிராமப்புற பெண்கள்தான். காலநிலை மாற்றம் பெண்கள் மற்றும்ஆண்கள் இருவரையும் பாதிக்கிறது. என்றாலும், விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், நீர் மற்றும் வளங்கள், காலநிலை தொடர்பான இயற்கை பேரழிவுகள் ஆகியவை பெண்களை மிக மோசமாகப்பாதிக்கிறது.


உலகளாவிய அளவில், விவசாயத்தில் மட்டும், பெண்களின் பங்கு 43%. இருந்தாலும், பாகுபாடான கொள்கை கட்டமைப்புகளாலும் சமமற்ற சமூக விதிமுறைகளாலும் பெண் விவசாயிகளுக்கு நிலப்பரப்பு,விவசாய இடுபொருட்கள், நிதி, நீர், பொருத்தமான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் விரிவாக்க சேவைகள் ஆகியவை ஆண்களைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகின்றன.


பெண்களுக்கும் ஆண்களுக்கும், விவசாயத்தில் சமமான பங்கு கொடுப்பதன் மூலம், பாலின சமத்துவம், உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மேலாண்மை ஆகிய மூன்று விஷயங்களை மேம்படுத்த முடியும்.


காலநிலை சார்ந்த விவசாய முறைகளால், பெண்களின் அதிகாரத்தைப் பின்வருமாறு மேம்படுத்தமுடியும்:


- காலநிலை சார்ந்த விவசாயக் கொள்கைகளை அறிமுகப் படுத்துவது.


- பெண்களுக்கான நிலத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.


- பெண் விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் முதலீடு செய்ய உதவுதல்.


- பெண் விவசாயிகள் தகவல் தரவுகளைப் பெறுவதை எளிமைப் படுத்துதல்.


- பெண் விவசாயிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.


வீட்டையும் சரி, நாட்டையும் சரி, மிகவும் நேர்த்தியாகக் கவனித்துக் கொள்வது பெண்கள்தான். கிராமப்புறபெண்களை படங்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் ரசித்துக் கொண்டு மட்டுமே இருக்காமல்,அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துக்கொண்டு, அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்தையும் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த முயற்சிப்போம்.


“பெண்கள் நம் கண்கள்”என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டு மட்டுமே வருகிறோம். ஆனால், அவர்கள் நம் கண்கள் அல்ல. நம் இருப்பிற்கு ஆதாரமான இதயமாக அவர்களைக் கருதுவோம். கிராமப்புற பெண்களை ரசிப்போம், கொண்டாடுவோம், மதிப்போம்!


- ந. ஆசிபா பாத்திமா பாவா


#கிராமப்புற_பெண்கள்_தினம்

#அக்டோபர்15


#எம்கே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages