18.10.20 - ரேவா : 65 : சபரி_தேசத்தில்_நிரஞ்சனா - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

18.10.20 - ரேவா : 65 : சபரி_தேசத்தில்_நிரஞ்சனா

 



18.10.20


ரேவா


சபரி_தேசத்தில்_நிரஞ்சனா_65


சபரி தேசத்தின் கோட்டைச்சுவர் உயரமாய் எழுந்திருந்தது. அதன்  மதிற் சுவர்களில் ஆங்காங்கே வீரர்கள்  காவற் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கோட்டைக்குள் நுழைபவரை நன்கு விசாரித்த பின்னே ஒவ்வொருவராக உள்ளே நுழைய அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.


தந்திதுர்க்கனும், உதயச்சந்திரனும் அப்பகுதி குடியானவர்களைப் போல வேடம் தரித்திருந்தார்கள். சில மூலிகைகளின் துணையால் இருவரது நிறமும் அடியோடு மாறிப் போயிருந்தது. தோளில் இருந்த ஒரு மூட்டையுடன் கோட்டை வாசலைச் சென்றடைந்தார்கள்.


" யார் நீங்கள்..? என்ன விசயமாய் வந்தீர்கள்..? " என்றான் கோட்டைக் காவலன் ஒருவன்.


" நாங்கள் துகில் வியாபாரிகள்..சீனத்து மென் துகிலை மொத்தமாய் வணிகம் செய்து , விற்பனை செய்கிறோம் ஐயா.."


" போர் நடைபெறப் போகும் வேளையில் துகில் வியாபாரம் செய்ய வந்து விட்டார்கள்..எங்கே மூட்டைகளை பிரித்துக் காட்டுங்கள்.." என்றான் சற்றே இகழ்ச்சியுடன் கோட்டைக் காவலன்.


இருவரும் தோள் சுமையை இறக்கியவர்களாய் , மூட்டைகளை அவிழ்த்துக் காட்டினார்கள். அதில் பல வகையான துணிகள் ஆண்களுக்கும், பெண்களுக்குமென பலவித வர்ணங்களில் அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது.


" ம்..மூட்டைகளை முடிந்து கொள்ளுங்கள்..அந்திசாய்வதற்குள்ளாக நீங்கள் வெளிவந்து விட வேண்டும்..இரவில் கோட்டைக்குள்ளோ, நகரத்திலோ வெளியாட்கள் தங்க அனுமதி இல்லை. புரிந்ததா..ம்..போங்கள் உள்ளே.." என்றான் பலத்த கெடுபிடியுடன்.


இருவரும் மூட்டைகளை வேகவேகமாய் முடிச்சிட்டுக் கொண்டவர்களாய், கோட்டைக்குள் நுழைந்தார்கள்.


உதயச்சந்திரனது பார்வை கோட்டையின் பலம் குறித்து எடை போட்டது. தமிழக கோட்டைகளைப் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனாலும்  கோட்டைக்குள் தங்கியபடியே போரை எதிர்கொள்ளும் வசதி கோட்டைக்கு இருந்தது. ஆங்காங்கு காணப்பட்ட மாடங்களில் வீரர்கள் வேலுடன் நின்று காவல் புரிந்து கொண்டிருந்தனர். சில எந்திரங்களும் கோட்டைகளின் மதிற்சுவரில் மறைவாக பொருத்தப் பட்டிருந்ததை  உதயச்சந்திரனது கூர்மையான விழிகள் கண்டு வியந்தன.


கோட்டையைக் கடந்து நகருக்குள் நுழைந்தனர். பல வீதிகள் ஒழுங்கான முறையில் வடிவமைக்கப் பட்டு இருந்தன. அனைத்து வீதிகளுக்கும் இறுதியில் உதயணனது அரண்மனை இரண்டு மேல் தளங்களைக் கொண்டதாய் அழகுறக் காட்சி தந்து கொண்டிருந்தது.


பல வீதிகளிலும் போர் குறித்த அச்சம் ஏதுமின்றி மக்களின் நடமாட்டம் காணப்பட, ஒவ்வொரு வீதியாக வேடிக்கைப் பார்த்தபடியே கடந்து கொண்டிருந்தார்கள். நகர் பெரிய விஸ்தீரணமாகவே காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் சற்றே இளைப்பாற ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார்கள். இருவரையும் சற்றே திடுக்கிட வைத்தது உள்ளிருந்து வந்த பேச்சுக் குரல்.


" கோதாவரிக் கரையில் பல்லவ தேசத்தைச் சேர்ந்தவர்களது பரிவேள்வி புரவி வந்துள்ளதாமே..பெரும்படையும் வந்திறங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறதே..தெற்கே செல்ல வேண்டிய நமது தேசத்தின் படைகள் ஏன் சில நாட்களுக்கு முன், மேற்கு நோக்கி நகர்ந்தன.."


" ஏய்..கிழவா..உனக்கு எதற்கு நாட்டு நடப்பு.. மேற்கு நோக்கி நகர்ந்தது ஏன் என்று எண்ணுகிறாய்..பல்லவர்களின் சேனையை பக்கவாட்டில் எதிர் கொள்வதற்குத் தான்..இன்னும் மூன்று தினங்களில் நமது ஒரு படையானது பக்கவாட்டுத் தாக்குதலை மேற்கொள்ளும், நாம் கோட்டையிலிருந்து நேரடியாக பல்லவருடன் மோதுவோம்..அவர்களுக்கு இரண்டு பக்கமும் நெருக்கடியைத் தர மன்னர் உத்தேசித்து இருக்கிறார். உனக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது.." என்றான் அவன்.


" நாங்கள் பார்க்காத யுத்தமா..? நீங்கள் செய்து விடப் போகிறீர்கள்..எனக்கு மட்டும் ஆண்டவன் கண்பார்வையை தெளிவாய் கொடுத்திருந்தால், நானே போருக்குப் போய் பலரை வெட்டிச் சாய்க்க கிளம்பியிருப்பேன்."


" ஆமா..இதிலொன்றும் குறைச்சல் இல்லை..கைகால் எல்லாம் டபடபன்னு ஆடுகிறது,  ஈட்டியை கையில் பிடிச்சா ஊன்றி கொண்டு தான் நடப்பாய்..உனது பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை.."


" அடப் போடா..நீங்க  போடப் போறச் சண்டையைப் பார்க்கத்தானே போகிறேன்." என்றான் கிழவன்.


" கண்ணு கெட்டாலும், பேச்சுக் கொன்றும் குறைவில்லை.." என்றபடியே  வெளியேறியவன் வாசல் திண்ணையில் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டவனாய்.


" யார் நீங்கள்..? " என்றான் சந்தேகத்தோடு.


" துகில் வணிகர்கள் ஐயா..வெயிலுக்காக ஒதுங்கியிருக்கிறோம்." என்றனர் இருவரும்.


" ம்..ம்.." என்றவனாய் அங்கிருந்து நகன்றான்.


முக்கியமான ஒரு விசயம் கிடைத்த மகிழ்ச்சியில்., அங்கிருந்து மெல்ல நகர்ந்தனர்.


அப்போது.. சற்றுத் தூரத்தில் ஒரு பெண்மணி பரிதாப கோலத்தில் விரைவாக நடந்து கொண்டிருப்பதைக் கண்ட தந்திதுர்க்கன், " நிரஞ்சனா" என்றான் தன்னையறியாமல்.


ஆனால் அதே வேளையில் உதயச்சந்திரனது பார்வை வேறு திக்கில் இருந்தது. அங்கே பியூஷாவின் தந்தையான காம்போஜ தேசத்து முதியவன் ஒருவனிடம் பேசி விட்டு சட்டென ஒரு சந்தில் நுழைந்தான்.


உதயச்சந்திரனது மனம் சற்றே பின்னோக்கி சிந்தித்தது. அன்று கோதாவரி நதிக்கரையில் இரவில் பியூஷாவோடு தனித்திருந்த போது படகில் இருந்து இறங்கியவன் இந்த முதியவன் தான். சற்றும் சந்தேகமில்லை..அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது. இவன் எதற்கு இங்கு வரப் போகிறான் என நினைத்தேன்..ஆனால்  இப்போது பகல் வேளையில் தெளிவாக அவனை கண்டு கொள்ள முடிந்ததனால் , காம்போஜத்திலிருந்து வந்திருப்பான் போலிருக்கிறது என மனதிற்குள் எண்ணியவனாய் ,  உடனே அவனைத் தொடர நினைத்தான்.


ஆனால் தந்திதுர்க்கனோ, நிரஞ்சனா என அழைத்தபடி ஒரு பெண்ணை நோக்கி நகர , வேறுவழியின்றி தந்திதுர்க்கனை தொடர்ந்தான் உதயச்சந்திரன்.


நிரஞ்சனா என அழைக்கப் பட்ட அப்பெண்ணோ, அழுக்கடைந்த ஆடைகளுடன் , மெலிந்த உடல் வாகுடன் காணப்பட்டாள். தலை ஒழுங்காகப் பின்னப்படாமல், முடிக்கற்றைகள் காற்றில் அலைய, வேகமான நடையில் அவள் சென்று கொண்டிருந்தாள். உதயச்சந்திரனுக்கு பியூஷாவின் தாயாக நிரஞ்சனா இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்ற எண்ணம் தந்திதுர்க்கன் தனது வாழ்க்கை கதையைக் கூறியபோதே உணர்ந்து கொண்டான். எனவே தான் காம்புஜ தேசத்து முதியவனை இப்போது தொடர்வதைக் காட்டிலும், இந்த நிரஞ்சனாவைத் தொடர்வதால் பியூஷா வின் தாயை முதலில் பியூஷாவிடம் சேர்க்கலாம் என்ற எண்ணம்  மேலோங்கியவனாய்  தந்திதுர்க்கனை தொடர்ந்தான். 


முன்னால் நடந்து போய் கொண்டிருந்த நிரஞ்சனா, ஒரு சத்திரத்திற்குள் நுழைந்தாள். அங்கு  காணப்பட்ட அனைவருமே பெண்களாகவே இருந்தார்கள். நிரஞ்சனாவைத் தொடர்ந்து வந்த இருவரையும் வாசலிலேயே தடுத்து நிறுத்திய சத்திரத்துப் பெண்மணி, " யார் நீங்கள்..இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.." என்றாள்.


தந்திதுர்க்கனோ துக்கம் நிரம்பியவனாய்,  " சற்று முன் உள்ளே சென்ற பெண் , எனது தங்கையைப் போலிருக்கிறாள்..அதனால் தான் அவளைத் தொடர்ந்து வந்தோம்.."


" தங்களது தங்கையா..யாரவள்..? பெயரென்ன..? "


" சற்று முன் அழுக்கான ஆடைகளுடன் உள்ளே வந்தாளே அவள் தான்..பெயர் நிரஞ்சனா தேவி."


" இங்கு நிரஞ்சனா என்ற பெயரில் யாருமில்லை..! நீங்கள் செல்லலாம். " என்றாள் கோபத்தோடு.


" அம்மா நாங்கள் வெகு தொலைவில் இருந்து என் தங்கையைத் தேடி வருகிறோம்....தயவு பண்ணுங்கள். அவள் இப்போது தான் இங்கு நுழைவதை என்னிரு கண்களால் கண்டேன்.." என்றான் துயரத்துடன் தந்திதுர்க்கன்.


இருவரது நிலையைக் கண்டு சற்றே மனமிரங்கியவளாய், சத்திரத்துப் பெண்மணி சற்றுமுன் உள்ளே நுழைந்தவள் இவள் தானென்று, ஒரு  பெண்ணை இருவரின் முன் அழைத்து வந்து காண்பித்தாள்.


அவள் நிரஞ்சனா அல்ல. ஆனால்..நிரஞ்சனா அணிந்திருந்த அதே ஆடையை இவளும் அணிந்திருந்தாள்.


_ தொடரும்..


அனுராஜ்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages