மலைச்சாமி
19.10.20
வரலாற்றில் இன்று 19.10.2020
October 19, 2020
என்றும்...
அன்புடன்.....
என் இனிய காலை வணக்கங்கள்....
அக்டோபர் 19 (October 19) கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1216 – இங்கிலாந்தின் ஜோன் மன்னன் இறக்க, அவனது ஒன்பது வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான்.
1453 – பிரெஞ்சு போர்டோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
1469 – அரகன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் ஸ்பெயின் நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
1813 – ஜெர்மனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.
1912 – லிபியாவின் திரிப்பொலி நகரை இத்தாலியப் படைகள் ஒட்டோமான் பேரரசிடம் இருந்து கைப்பற்றினர்.
1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
1943- காச நோய்க்கான Streptomycin என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.
1950 – சீன இராணுவம் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.
1960 – ஐக்கிய அமெரிக்க நாடுகள் கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
1974 – நியுயே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
1983 – கிரெனாடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிஷொப் படுகொலை செய்யப்பட்டார்.
1986 – மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
1991 – வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக 2000 பேர்வரை இறந்தனர்.
2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
2005 – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது.
2009 – தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.
பிறப்புக்கள்
1888 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972)
1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் விருது பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1995)
1976 – கோ சன், தென் கொரிய விண்வெளி வீரர்
1946 – ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)
இறப்புகள்
1937 – எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு, நியூசிலாந்து இயற்பியல் அறிஞர் (பி. 1871)
2000 – நிமலராஜன், பிபிசியின் யாழ்ப்பாண நிருபர்
2006 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953)
சிறப்பு நாள்
அல்பேனியா: அன்னை தெரேசா நாள்
நியுயே: அரசியலமைப்பு நாள் (1974இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நம் தாய்மொழி தமிழ் வளர தமிழருடன் தமிழில் பேசுவோம்.வாழ்க தமிழ்!! வளர்க அதன் புகழ்!!
நம் தாய் மொழி தமிழ் என்றும் சிதைந்திடாமல், சிதறிடாமல் காத்திட
இந்த இணையதளத்தினை வடிவமைத்து, "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று கூறி உங்கள் அனைவரையும் ..
வணங்குகின்றேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932-இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. முத்தமிழிலும், ஓவியக் கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
புகழ்பெற்ற மேற்கோள்கள் :
1) ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’
2) தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு’
3) ‘தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’
4) ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
மொழிப்பற்று :
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ
நாமக்கல்லாரின் படைப்புகள் :
1) இசை நாவல்கள் – 3
2) கட்டுரைகள் – 12
3) தன் வரலாறு – 3
4) புதினங்கள் – 5
5) இலக்கிய திறனாய்வுகள் – 7
6) கவிதை தொகுப்புகள் – 10
7) சிறுகாப்பியங்கள் – 5
8) மொழிபெயர்ப்புகள் – 4
எழுதிய நூல்கள் :
1) மலைக்கள்ளன் (நாவல்)
2) காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
3) பிரார்த்தனை (கவிதை)
4) நாமக்கல் கவிஞர் பாடல்கள்
5) திருக்குறளும் பரிமேலழகரும்
6) திருவள்ளுவர் திடுக்கிடுவார்
7) திருக்குறள் புது உரை
8) கம்பனும் வால்மீகியும்
9) கம்பன் கவிதை இன்பக் குவியல்
10) என்கதை (சுயசரிதம்)
11) அவனும் அவளும் (கவிதை)
12) சங்கொலி (கவிதை)
13) மாமன் மகள் (நாடகம்)
14) அரவணை சுந்தரம் (நாடகம்)
மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு :
கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.
நினைவு இல்லம் :
தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
1) நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.
2) நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் 1906-ல் இணைந்தார்.
3) தலைமைக் காவலரான தந்தை வெங்கடராமன், இவரையும் காவல் துறையிலேயே சேர்த்துவிட பெருமுயற்சி எடுத்தார். இவருக்கு விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறினார். 15 நாட்கள் வெளியே சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.
4) அவரை மேலும் வற்புறுத்தாமல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கித் தந்தார் தந்தை. அதிலும் மனம் செல்லவில்லை. பணியை உதறினார். தந்தை முயற்சி எடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்றுத் தந்தார். இவர் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
5) திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டவர், முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பின்னர் காந்தியின் அகிம்சை, அறவழிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். அறப்போராட்டத்தால் மட்டுமே நாடு விடுதலை அடையும் என்ற முடிவுக்கு வந்தார். காங்கிரஸில் இணைந்தார்.
6) எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். தேசபக்திப் பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதிக் குவித்தார். ‘தேசியக் கவி’ என்று போற்றப்பட்டார்.
7) திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.
8) மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.
9) நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார்.
10) தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 84-வது வயதில் (1972) மறைந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக