22.10.20
ரேவா
பியூஷாவின்_பிறப்பின்_இரகசியம்_69
உதயணன் எறிந்த குறுவாளைத் தன் முதுகில் தாங்கியவனாய், கானகத்திற்குள் ஓடி வந்த முதியவனை , அங்கிருந்த மரங்களின் நிழலடர்ந்தப் பகுதியில் மறைந்திருந்த உதயச் சந்திரன் தனது வலுவானக் கரங்களினால் சட்டெனத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு, அவனது வாயையும் பொத்தினான்.
தன்னை ஒரு வலுவான கரம் பற்றி இழுத்ததும் பீதிக்கும், திகைப்பும் உள்ளான முதியவன் அலற வாயைத் திறக்கும் முன் அவனது வாயையும் பற்றி இழுத்த வலிமையான கரம் மூடி விட்ட காரணத்தாலும், திகைப்பில் ஆழ்ந்த முதியவன் தன்னை அவ்வாறு செய்தது யாரென மெல்ல ஏறெடுத்தான். முதுகில் இருந்து வழிந்த குருதியின் போக்கால் மயக்க நிலையை ஏற்கனவே அடைந்து கொண்டிருந்த நிலையில், இலேசாய் உதயச்சந்திரனது உருவத்தை காண்பதற்குள்ளாகவே ஆழ்ந்த மயக்கத்திற்கு உள்ளானான்.
" சேந்தா..இந்த முதியவனை நாம் பாதுகாப்பது அவசியம். உதயணனது படைவீரர்கள் கண்ணில் படாமல் சட்டென வேறிடத்திற்கு நகர்த்தி செல்." என்றவனாய், முதியவனைச் சேந்தனிடம் ஒப்படைத்தான் உதயச்சந்திரன்.
முதியவனைத் தோளில் போட்டுக் கொண்ட சேந்தனோ, தங்களது புரவிகளை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நகர்ந்தான். சேந்தனை முன்னே அனுப்பியவனாய், உதயணனது படைவீரர்கள் எவரேனும் தொடர்கிறார்களா என்று ஆராய்ந்தபடியே சேந்தனைப் பின் தொடர்ந்தான் உதயச்சந்திரன்.
உதயணனது படைவீரர்கள் தேடிக் கொண்டு இருந்த இடத்திற்கு எதிர்திசையை நோக்கி விரைவாக இருவரும் நகர்ந்து கொண்டிருந்தனர்.
இருவரது புரவிகளும் மரத்தில் கட்டப் பட்ட இடத்திற்கு வந்தவர்கள்..
முதியவனைக் குதிரையில் படுக்க வைத்தவனாய் , சேந்தன் தானும் அதிலேறி அமர்ந்து கொள்ளவும், உதயச்சந்திரனும் தனது புரவியில் ஏறவும், இருவரது புரவிகளும் விரைவாக அங்கிருந்து பறந்தது.
முதியவனைத் தேடிய வீரர்களோ, குறுவாளால் தாக்கப் பட்டவன் அதிக தூரம் சென்றிருக்க முடியாது என்ற காரணத்தினால் , அப்பகுதியில் காணப்பட்ட புதர்களையும், பாறைகளின் இடுக்குகளையும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர்.
வெகுநேரத்திற்குப் பின் கண்விழித்த முதியவன், தன் முதுகின் காயத்திற்கு கட்டுப் போடப் பட்டிருப்பதையும், பலர் தன்னைச் சுற்றிக் கவலையுடன் நின்றிருப்பதையும் கண்ணுற்றவன், யாரையோ பார்வையால் தேடவும் செய்தான். தன்னைச் சுற்றி நின்றிருந்த தந்திதுர்க்கன், காடவ முத்தரையர், சேந்தன், ஆகியோரைப் பார்த்து முதலில் விழித்தவன், உதயச்சந்திரனையும், பியூஷாவையும் பார்த்ததும் இலேசாய் முகம் மலர்ந்ததோடு, கண் கலங்கவும் செய்தான். பியூஷாவும் அவனைப் பார்த்ததும் கண்கலங்கினாள்.
" தந்தையே, காம்புஜத்திலிருந்து எப்போது வந்தீர்கள்..? " என்றாள் சோகம் தொனித்த குரலில்.
" நான் வந்து ஒரு திங்கள் ஆயிற்று மகளே.."
" பெரியவரே..தாங்கள் உண்மையில் யார்..? பியூஷா உங்களது மகளாக இருக்க வாய்ப்பில்லை என்பது ஏற்கனவே நான் ஊகித்து அறிந்த ஒன்று. பியூஷாவை நீங்கள் வளர்க்கும் படியான சூழல் எவ்வாறு உண்டாயிற்று..? " என்றான் சற்றே கோபமும், சீற்றமும் நிறைந்தவனாய் உதயச்சந்திரன்.
" படைத்தலைவரே..உதவி புரிந்தவனது உயிரையே பறிக்கத் துணிந்து விட்ட உதயணனை உலகிற்கு அடையாளம் காட்டும் வேளை வந்து விட்டது..
சொல்கிறேன்..அனைத்தையும் சொல்கிறேன்." என்றவனாய் சற்றே நீண்ட சுவாசத்தை இழுத்து விட்டதோடு அனைவரையும் ஏறெடுத்தவன், " நான் தேவசேனன். உதயணனது மெய்க்காவல் படையைச் சேர்ந்தவன்.
ஒரு நாள் அழகிய பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த உதயணன், அதை என்னிடம் கொடுத்ததோடு, அந்தக் குழந்தையைக் கொன்று விடும்படி பணித்தான். எனக்கோ குழந்தைப் பாக்கியம் இல்லை. என் மனைவியும் அழகிய அக் குழந்தையை நாமே வளர்க்கலாம் எனக் கூறினாள். ஆனால் உதயணனது பார்வையில் அக்குழந்தையை வளர்க்க இயலாது என உணர்ந்த நான், எனது மனைவி மற்றும் அந்தக் குழந்தையோடு காம்புஜ தேசத்திற்கு மரக்கலம் ஏறி விட்டோம். கடல் பயணம் ஒத்துக்கொள்ளாத எனது மனைவியோ, காம்புஜ தேசம் சென்றடைந்த சில மாதங்களில் மரணத்தைத் தழுவி விட்டாள். அழகிய குழந்தையை அவள் விரும்பிய வண்ணம் வளர்க்க எண்ணியே என் காலத்தை நானும் அங்கேயே கழித்து விட்டேன். என்னையும் எனது குடும்பத்தையும் தேடியலைந்து ஓய்ந்து விட்ட உதயணன் , இந்தக் குழந்தை குறித்து மறந்தே போய் விட்டான். காலங்களும் பல கடந்து விட்டன. நான் பாரத தேசத்திற்கு வர மிகுந்த விருப்பம் கொண்டிருந்தேன். உங்களை காம்புஜத்தில் பார்த்த பின், உங்களிடம் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி, உங்களது இலச்சினையைத் திருடி, அதை மீண்டும் உங்களிடமே ஒப்படைத்து நட்பைப் பெற எண்ணினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அது என்னிடத்தில் இருந்து களவு போய் விட்டது. ஆனாலும் பியூஷா வாயிலாக நீங்கள் நட்பாக, உங்களின் மூலம் பியூஷாவை பாரத தேசத்திற்கு அனுப்பி விட எண்ணினேன். பின் ஒரு சந்தர்ப்பத்தில் நானும் பாரத தேசம் வருவதோடு, பியூஷாவின் நிலை குறித்து சபர தேசத்து மன்னன் உதயணனிடம் பேச முயற்சி செய்ய முற்பட்டேன். அப்போது தான் பல்லவரது சேனைகள் பரிவேள்வி நடத்தி வந்திருப்பதையும், அதில் தாங்களும், பியூஷாவும் வந்திருப்பதையும் அறிந்து கொண்ட நான், கோதாவரிக் கரை வழியே சென்று ஒரு நாள் உதயணனது முகாம் இருக்குமிடத்தை அறிந்து வந்தேன். இன்று உதயணனைச் சந்தித்து, பியூஷா குறித்து பேசினேன். ஆனால் உதயணனோ என் மீது சீறி விழுந்தான். பியூஷாவின் மீது அவனுக்குத் துளியும் பாசமின்றி, அவளைக் கொன்று விட
பணமுடிப்பும் தந்தவன், என்ன காரணத்தாலோ குறுவாளை எறிந்து என்னையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறான். அவனது மகள் பற்றிய ரகசியத்தை அறிந்த நான் உயிருடன் இருப்பதை அவன் விரும்பவில்லையோ என எண்ணுகிறேன்." எனக் கூறி முடித்தான் தேவசேனன் என்ற அம்முதியவன்.
" தேவசேனரே, அந்தக் குழந்தை உதயணனின் குழந்தையா..அதை நீங்கள் அறிவீரா..? " என்றார் படபடப்புடன் தந்திதுர்க்கன்.
" ஆம்..அது உதயணனது குழந்தை தான். அச்சல்பூர் ராணி நிரஞ்சனா தேவி அந்தக் குழந்தையுடன் அரண்மனையில் உலவிக் கொண்டிருப்பதை, நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பிறகு நிரஞ்சனா தேவி ஏனோ எங்கோ போய் விட்டார். குழந்தையையும் தூக்கிப் போய் விட்டதாக பேசிக் கொண்டார்கள்.ஆனால் ஒரு நாள் திடீரெனக் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு வந்த அரசர் உதயணன் , என்னிடம் அக்குழந்தையை கொன்று விடும்படி பணித்தார். "
" பியூஷா..நிரஞ்சனாவின் மகளா நீ..! என்றபடியே கண்ணீரை உகுக்கத் துவங்கினார் தந்திதுர்க்கன்.
ஏற்கனவே, பியூஷாவின் பிறப்பின் இரகசியத்தை ஊகித்தறிந்த காரணத்தால் உதயச் சந்திரனோ பியூஷாவை கடைக்கண்ணால் பார்க்க, அவளோ திக்பிரமைப் பிடித்தவளாய் நின்றிருந்தாள்.
உதயச்சந்திரன் பலமுறை அவளது பிறப்பு குறித்துப் பேசியபோதெல்லாம் அது குறித்து யாதொரு முக்கியத்துவமும் பியூஷா எடுத்துக் கொண்டதில்லை. அவள் அறிந்த வரையில் சிறு வயது முதல் தேவசேனனே அவளது தந்தை. தாயின் முகம் கூட நினைவில் இல்லை. பியூஷாவை கண்கலங்க அம் முதியவன் விட்டதில்லை. காம்புஜ தேசத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு எப்படியோ பியூஷாவை வளர்த்து விட்டான். அவள் என்றால் அவனுக்கு உயிர். அவனது வாழ்வை வளமாக்க வந்த தேவதை . எனவே மனைவி மறைந்த பிறகும், பியூஷாவிற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன்.
காம்புஜ தேசத்தின் டோன்லே சாப் நதிக்கரையைக் கடக்க விரும்புபவர்களுக்கு, தனது சிறு படகின் வாயிலாக அக்கரைக்குச் சென்று விடுவதோடு அவர்கள் தரும் வருவாயே போதுமானதாக இருந்தது பியூஷாவிற்கு, எனவே உதயச்சந்திரன் அவளது பெற்றோரைப் பற்றி கூறியபோது கூட அதிக அக்கறைக் காட்டிக் கொள்ளவில்லை. முதியவனின் அன்பைப் பரிபூரணமாய் உணர்ந்தவள் அவள். அடிக்கடி அவனுடன் சண்டையும் போடுவாள். திருடிக் கொண்டு வருவதைக் கண்டு , ஆனாலும் முதியவனோ அதை ஒரு பொருட்டாக எந்நாளும் மதித்ததில்லை. அன்றொரு நாள் காஞ்சியில் பியூஷாவைப் பார்த்ததும், தந்திதுர்க்கன் " நிரஞ்சனா " என விளித்த போது கூட, அவளது பிறப்பைப் பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் அவளிடத்தில் இல்லை.
உலகில் ஒன்று போலவே பலர் இருப்பதாக அறிந்திருக்கிறாள். எனவே, தந்திதுர்க்கன் யாரையோ எண்ணிக் கொண்டு தன்னை நிரஞ்சனா என அழைத்ததாகவே அன்று எண்ணினாள்.
உதயச்சந்திரனுக்குத் தான் பியூஷாவின் வாழ்வில் ஒரு பெரும் ரகசியம் புதைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாய் இருந்தது. அதனால் தான் இந்த பயணத்திலும் அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
ஆனால்..இன்றோ தான் தந்தை என இதுவரை எண்ணிய தேவசேனன், உதயணன் தான் பியூஷாவின் தந்தை என்றும், நிரஞ்சனா தான் தாயென்றும் உரைத்த போது உண்மையில் , அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள்.
உதயணன் பேரில் பயங்கரமான கோபமும் ஆத்திரமும் எழுந்தது. சிறு குழந்தையான தன்னைக் கொலை செய்யும் படி பணித்தவன் அல்லவா..! எனவே அவனை வெறுக்கவே செய்தாள் பியூஷா. ஆனால் நிரஞ்சனாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் புதிதாய் கிளர்ந்தெழுந்தது. பாவம்..தனது தாய் தான் எவ்வளவு துன்பங்களை வாழ்வில் அடைந்திருக்கிறாள் என எண்ணிய பியூஷாவிற்கு தனது தாயின் மீது இனம் புரியாத பாசம் உள்ளூர உருவாகத் துவங்கியிருந்தது.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக