25.10.20-ரேவா : 72 : நகர்ந்தது_படை - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

25.10.20-ரேவா : 72 : நகர்ந்தது_படை



25.10.20


ரேவா


நகர்ந்தது_படை_72


நந்திபுரக் கோட்டையின் பாதுகாவலைப் பலவீனப் படுத்தி பத்து நாட்களுக்கு மேலாகியும் , பாண்டியன் கோட்டையை நெருங்கவோ, தாக்கவோ முற்படவில்லை. 


பல்லவ தளபதி பல்லவடி அரையனுக்கும், நந்திபுரக் கோட்டையின் காவலனுக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. பந்தங்களைக் கொளுத்திக் கட்டிடங்களைத் தகர்க்கும் பாரி விற்கழிகள் ஏற்றிய

எந்திர வண்டிகளைக் கொண்டோ, யானைகளைக் கொண்டோ கோட்டையைத் தகர்க்க வாய்ப்பிருந்தும், கோட்டைச் சுவரிலிருந்த வீரர்களை அப்புறப் படுத்தியும், வில், வேல் எறி இயந்திரங்களை உள்ளுக்கு இழுத்து முடக்கிப் போட்டிருந்தும், பாதுகாப்பற்ற ஒரு கோட்டையைத் தகர்க்க பாண்டியன் ஏன் வீணாகத் தாமதித்துக் கொண்டிருக்கிறான் என்பது இருவருக்கும் புரியவில்லை. இதை நந்திவர்மனிடமே கேட்டுத் தெளிவு பெற எண்ணினார்கள்.


ஆனால்..அவனோ , எவ்விதப்  பரபரப்புமின்றி உத்தியான வனத்தில் ரேவாவுடன் பொழுதைக் கழித்துக் கொண்டும், நந்திபுர விண்ணகரத்துப் பெருமாளைச் சென்று சேவிக்கவும், சிறிது நேரம் கோட்டைச் சுவரின் மேலேறி வடக்குத் திசையை நோக்குவதுமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.


பல்லவடி அரையருக்கோ, நந்திவர்மன் பொறுப்பற்று நடப்பது போல் தெரிய, அவனை நேரில் சந்தித்து இரண்டிலொன்று கேட்டுவிடுவது என்ற எண்ணங் கொண்டவராய் சீற்றத்துடன் அவனது அறையை அடைந்தார்.


அப்போது ரேவாவுடன் ஏதோ பேசிச் சிரித்த வண்ணம் இருந்தவன், கோபத்துடன் பல்லவடி அரையர் உள்ளே நுழையவும், ரேவாவை அவளது அறைக்கு அனுப்பியவனாய் அவரை ஏறெடுத்தான்.


" நந்திவர்மா..என்ன இது..! சூழ்நிலையின் ஆபத்தை உணராது உன் நடத்தை இருக்கிறது..? " கோபத்தில் அரசன் என்ற மரியாதை காற்றில் பறக்க, உரிமையைக் கையாண்டவராய் பெயர் சொல்லி அழைத்தார்.


" என் நடத்தைக்கு என்ன..!  எப்போதும் போல் தானே நடக்கிறேன்..?"  என்றான் திகைப்புடன்.


நந்திவர்மன் உணர்ந்து பேசுகிறானா..இல்லை உணராது பேசுகிறானா..! என்பது அவருக்குப் புரியவில்லை. இருப்பினும் கோபம் தணியாத குரலில் பேச முற்பட்டு, 


" கோட்டைக்கு வெளியே  பாண்டியன் காத்திருப்பதை மறந்து விட்டாயா..? "


" இல்லை.."


" அவன் ஏன் இன்னும் கோட்டையைத் தகர்க்க முற்படவில்லை..? "


" அது அவனை அல்லவா கேட்க வேண்டும்."


" காரணம் நீ அறிவாய் என எண்ணுகிறேன்."


" எந்த காரணத்தை..! "


" நந்திவர்மா, விளையாடுவதற்கு இது நேரமல்ல..! " முற்றிலும் பொறுமை இழந்தவராய் கத்தினார்.


அவ்வேளையில் கோட்டைத் தலைவனும் வந்து சேர, அறைக்குள் நடக்கும் காரசார விவாதத்தைக் கண்டு அறைக்குள் நுழையத் தயங்கியவனாய் வாசலிலேயே நின்று விட்டான். உள்ளே இருவர் பேசியதும் தெளிவாக அவனுக்கு கேட்டது.


" தளபதியாரே..காரியங்களை ஆற்றுபவர்களுக்கு

பொறுமை மிகமிக அவசியம். வெற்றி என்பது விரைந்தோடி வந்து விடாது. பொறுமையைத் தொலைத்த காரணத்தால் தான் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் சிறீபுருஷனோடு போரிட்டு சுவர்க்கலோகம்  சென்றடைந்தார். தாங்களும் சற்றே பொறுமையைக் கையாள்வது நல்லது..தற்போது தான் தங்களது உடல்நலமும் சற்றே தேறி வருகிறது." என்றான் விஷமம் தொனித்த குரலில்.


பரமேஸ்வரவர்மரை நந்திவர்மன் மேற்கோள் காட்டியதும் சட்டென அடங்கியவர்.


" நாம் நமது கோட்டையை பலவீனமாய் செய்து வைத்திருக்க, ஏன் இன்னும் காலதாமதம் செய்கிறான் பாண்டியன்.. அது தான் ஏனென்று புரியவில்லை.."


" தளபதியாரே, பலவீனமானவன் தனது பலவீனத்தை வெளிப்படையாக அறிவிப்பானா..? என்றொரு கேள்வியைக் கேட்டான்.


" அதெப்படி அறிவிப்பான்..? " பதிலும் கேள்வியாய் எழுந்தது தளபதியிடமிருந்து.


" நமது நிலை பலவீனமான நிலை தானே...? "


" ஆம்.."


" அப்படியிருக்க, நமது கோட்டையை மேலும் பலவீனமாக்கி எதிரியை தாக்கத் தூண்டுகிறோமே..! இது.." என்ன மெல்ல இழுத்தான்.


அப்போது தான் ..இதில் ஏதோ விசயம் இருப்பதாக பல்லவடி அரையரது மனதில் பட்டது. உடனே, " பலவீனமாய் நாம் இருப்பதை உணர்த்தினால் , பாண்டியன் மிரள்வதற்கு காரணம்..! "


" உண்மையின் வலிமை அது. சமணர்களது கல்வி முறையில் மானுடவியலும் உண்டு.

பொதுவில் பலவீனமானவன் எதிரிக்கு தனது நிலையை மறைக்க தன்னை பலமுள்ளவனாக காட்டிக் கொள்வதையே விரும்புவான் அல்லவா..? " 


" ஆம்.."


" ஆனால்..அதற்கு நேர்மாறாக பலவீனமானவன் தன்னை மேலும் பலவீனமுள்ளவனாக காட்ட முற்படும் போது மனித மனமானது எதிர்மறையாக சிந்திக்கத் துவங்கி விடுகிறது. நாம் கோட்டையின் காவலை அப்புறப்படுத்தியதும், எந்திரங்களை உள்ளிழுத்ததும் நாம் ஏதோ பயங்கரத் திட்டத்தை தயாரிப்பதாக எதிரியை எண்ண வைத்து விடுகிறது. அதனால் தான் நம்மை நெருங்க தயங்குகிறான்.ஆனாலும் அதிக நாட்கள் தயங்கப் போவதில்லை,  நம்மிடமுள்ள தானிய இருப்பு தீர்ந்ததும் நாம் கோட்டையைத் திறந்து தான் ஆகவேண்டுமென எண்ணுவான். இல்லையென்றாலும் விரைவில் தாக்குதல் நடத்தவும் துணிவான். இந்த இரண்டில் ஒன்று விரைவில் நடக்கவும் செய்யும். நாம் எதற்கும் தயாராகத் தான் இருக்க வேண்டும்."


" தயாராக இருக்க வேண்டுமென்கிறாய்..ஆனால் நடவடிக்கைகளில் அது தென்பட வில்லையே..? " என்று மெதுவாக இழுத்தார்.


" கோட்டைத் தலைவரை வரச் சொல்லுங்கள்.." என்றான் யோசனையுடன்.


" நான் இங்கு தான் இருக்கிறேன்.."என்றபடியே உள்ளே நுழைந்தான் அவன்.


"வாருங்கள்..கோட்டைச் சுவர் வரை போய்வரலாம் ." என்றவனாய் அவர்களை அழைத்துக் கொண்டு கோட்டைச் சுவருக்கு வந்தவன். அங்கிருந்த நிலைமைகளைக் காணும் படி செய்ய, பிரமித்துப் போனார்கள் இருவரும்.


உள்ளிழுக்கப் பட்ட நிலையிலும் , எப்போதும் ஆயுதங்களை வீச தயாராய் இருந்தது விற்பொறிகளும், வேல்பொறி எந்திரங்களும். அது மட்டுமின்றி வீரர்களை வெளியில் இருப்பவர்களின் பார்வைக்கு படாமல் மறைந்திருக்கும் படியான நிலையிலும் தயார் நிலையில் வைத்திருந்தான் நந்திவர்மன். கோட்டையில் ஏற முயற்சிப்பவர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றவும் பெரியபெரிய கொப்பரைகளில் எண்ணையும், எரிப்பதற்கு விறகும் தயாராக இருந்தது. 


" கோட்டைத் தலைவரே..கோட்டையைச் சுற்றியுள்ள மரங்களை வெட்டுவதற்கு தயங்கினீர்கள் அல்லவா..ஏன் வெட்டப் கூறினேன் என்பதற்கான காரணங்களை கூறுகிறேன்  கேளுங்கள். கோட்டையைத் தகர்க்க முற்படும் யானைகளுக்கு நாமே மரங்களை கொடுத்து உதவுதல்  தவறல்லவா..அது மட்டுமல்ல இதோ கோட்டைக்கு முன் எவ்வளவு வெற்றிடம். எந்த வீரர்களும் இந்த வெற்றிடத்தை கடக்காமல் கோட்டையை அணுக முடியாது. வெற்றிடத்தைக் கடக்க முற்படுபவர் எவராயினும் விற்பொறிகளுக்கும், வேல் பொறி எந்திரங்களுக்கும் பலியாவது உறுதி. மரங்கள் இருந்தால் நமது தாக்குதல் துல்லியமாக இருக்காது என்பதை நான் கூறத் தேவையில்லை.."


" உண்மை தான் அரசே..நான் இதை யோசித்துப் பார்க்கவில்லை.."


இருவரும் பிரமித்துப் போய் இருந்தார்கள். நந்திவர்மன் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்றதும்,  அவன் பேரில் தனித்த ஒரு மரியாதையும் மதிப்பும் இருவருக்கும் ஏற்பட்டது.


" தளபதியாரே, கோட்டைத் தலைவரே, முற்றுகைத் தொடங்கி பத்து தினங்களைக் கடந்து விட்டோம். இன்னும் பத்து தினங்களைக் கடந்து விட்டால் போதும் நமது படைகள் வந்து விடும். ஆனால் இடையில் ஒரு பிரச்சனை இருக்கிறது."


" உணவுப் பிரச்சனை தானே.." என்றார் சட்டென பல்லவடி அரையன்.


" ஆமாம்..நமக்கான உணவு பற்றாக்குறை எழவே செய்யும்..இதை தவிர்க்கவும் வழி இருக்கிறது. கோட்டைத் தலைவரே, நாளை முதல் கோட்டைக்குள் உள்ளவர்களுக்கு தினசரி மூன்றிலொரு பங்கு உணவினைக் குறைத்து விடுங்கள். உண்மையை உரைக்கவும் மறக்காதீர்கள். நாம் காலந்தாழ்த்துவது நமது சேனைகள் வந்தடைய வேண்டும் என்பதற்காகவே. அறுநூறு வீரர்களைக் கொண்டு பாண்டியரது சேனையை வெற்றி காணவியலாது என்பது தங்களுக்கே புரியும்.


" ஆம்..உண்மை தான்..தங்களது கருத்தினை ஏற்கிறேன். உணவு விசயத்தையும் நடைமுறைப் படுத்துகிறேன். " என்றவனாய் விடைபெற்றுச் சென்றான்.


" அரசே..நம்முடைய படைகள் விரைவில் வந்து விடும்அல்லவா..? அல்லது

அதற்குள்ளாக பாண்டியன் தனது  தாக்குதலைத் தொடங்கி விடுவானா..? " என்றார் கவலைத் தோய்ந்த முகத்துடன் பல்லவடி அரையன். கோபத்தில் கைவிட்ட மரியாதை இப்போது கைவரப் பெற்றிருந்தது அவரதுக் குரலில்.


" யார் அறிவார் ..? அனைத்தும் விதியின் வசம்..! " என்றான் நந்திவர்மன்.


ஆனால் விதியோ..நந்திவர்மனுக்கு எதிராக சதிசெய்ய, பாண்டியன் பராங்குச மாறவர்மன் தனது யானைப் படைத் தலைவன் சங்கரன் சீதரனை கோட்டையைத் தகர்க்க அனுப்பியதோடு, பாண்டியனது பாரி விற்கழிகள் பொருத்தப்பட்ட வண்டிகளை இழுத்துக் கொண்டு பெரிய எருதுகளும் கோட்டையை நோக்கி முன்னேறத் தொடங்கியது.


_ தொடரும்..


#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages